‘ஸ்டார் பிரசுரம்’ கண.இராமநாதன் நேர்காணல்
![]() |
80 வயது நிறைந்த இவர் தற்போது சிதம்பரத்தில் வசித்து வருகிறார். அவரை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தேன். அவரின் இனிய நினைவுகளை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.
சிவகங்கையிலிருந்து இரண்டு மைல் தொலைவில் ‘சக்கந்தி’ன்னு ஒரு பெரிய கிராமம். அந்தக் கிராமத்தில், ஜமீன் குடும்பத்தில் 1924-ல் பிறந்தேன். நானும், அண்ணன் கண.முத்தையாவும் (தமிழ்ப் புத்தகாலயம் நிறுவனர்) சின்ன வயசிலேயே தேசவிடுதலை இயக்கத்திலே ஈடுபட்டுட்டதால், அந்த நிலங்களைப் பற்றியெல்லாம் யோசிக்காமல், குடும்பத்திலேருந்து வெளியே வந்துட்டோம். இப்போ, பிள்ளைக்குட்டிகள், பேரன் பேத்திகள்னு ஆயிடுச்சு. என் பேரிலேயும் அண்ணன் பேரிலேயும் அங்கே சொத்துக்கள் இப்பவும் இருக்கு. சொந்தக்காரங்க வாழ்ந்துகிட்டிருக்காங்க.

அண்ணன் கண.முத்தையா இந்திய தேசிய இராணுவத்தில் கேர்னலா இருந்தார். நேதாஜியினுடைய நேரடி உதவியாளர். ஜான்சிராணி ரெஜ்மண்ட் ஆபீசர். அவ்வளவு உயர்ந்த பதவியிலே இருந்தார் அவர்.
சுதந்திரம் கிடைச்ச பிறகு “ஐ.என்.ஏ. ஆபீசர்ஸுக்கு பணம் தர்றோம்’’னு அரசாங்கத்திலே சொன்னாங்க. வேண்டான்னுட்டார். அதேபோல, ‘சுதந்திர போராட்ட தியாகி’ன்னு எனக்குப் பணம் தர்றேன்னாங்க. நானும் வாங்கிக்க மாட்டேன்னுட்டேன். மூப்பனாரே நேரில் பார்த்து, “நீங்க வாங்கிக்கலையா?’’ன்னு என்னிடம் கேட்டார். “இந்தப் பணத்துக்காகவா சுதந்திரப் போராட்டத்திலே ஈடுபட்டேன்’’னேன். சிரிச்சிட்டார்.
ஸ்டார் பிரசுரத்தை எப்போ ஆரம்பிச்சீங்க?
நான் பள்ளிக்கூடத்தில் படிக்கிற காலத்திலேயே, தேச விடுதலை இயக்கத்திலே ஈடுபட்டுட்டேன். முருகப்பான்னு ஒரு பெரிய ஆளு. சமூக சீர்திருத்தத்திலே ரொம்ப முக்கியமானவர். அவருடைய சிநேகிதம் ஹைஸ்கூல்ல படிக்கும்போதே எனக்குக் கிடைச்சுப் போச்சு. அவரு ‘குமரன்’னு ஒரு பத்திரிகை நடத்தி கிட்டிருந்தாரு. ரொம்ப பாப்புலரான பத்திரிகை. ஹைஸ்கூல் படிப்பு முடிஞ்சப்ப அந்தப் பத்திரிகை ஆபீசுக்கு வந்து உட்கார்ந்து பேசிகிட்டிருப்பேன். விடுமுறை நாட்களில் பத்திரிகையிலே வேலை பார்த்தேன். பிறகு வேலைக்கே சேர்ந்துட்டேன். அப்போதான் வி.ஆர்.எம்.செட்டியார் ‘ஸ்டார் பிரசுர’த்தை 1944ல் ஆரம்பிச்சார். முருகப்பாவுக்கு அவர் நண்பர். முருகப்பா மூலமா அவர் எனக்கு நண்பரானார். ஸ்டார் வெளியிடுற புத்தகங்களை எல்லாம் நான்தான் படிச்சுப் பார்த்து செலக்ட் பண்ணிக் கொடுப்பேன். கொஞ்ச நாளிலே வி.ஆர்.எம்.செட்டியார் பதிப்பகத்தை நடத்த முடியலேன்னு விடுபட்டார். பிறகு நான் எடுத்து நடத்த ஆரம்பிச்சேன். 1946ல் நானும் செல்லப்பன் என்பவரும் ‘ஸ்டார் பிரசுர’த்தைக் காரைக்குடியிலிருந்து மெட்ராசுக்கு கொண்டு வந்தோம். இந்தச் செல்லப்பன்தான் பின்னர் ‘மீனாட்சி புத்தக நிலை’யத்தை ஆரம்பிச்சவர்.
நீங்க ஸ்டார் பிரசுரத்தை ஆரம்பிச்சப்போ தமிழில் எந்தெந்த பதிப்பகங்கள் இருந்தன?
அல்லயன்ஸ், கலைமகள், சக்தி காரியாலயம், நவயுகப் பிரசுராலயம், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்- இப்படியான பதிப்பகங்கள்தான்...
அல்லயன்ஸ், கலைமகள், சக்தி, நவயுகம் இந்த நாலு பதிப்பகங் களும் இலக்கியப் புத்தகங்களை வெளியிட்டன. சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்துக்கு தேவாரம், திருவாசகம்தான் முக்கியமா இருந்தது. சைவத்தைப் பரப்புவதே அவங்களோட நோக்கம். சைவத்துடன் தமிழையும் பரப்பினார்கள்.

‘சக்தி காரியாலம்’ கோவிந்தன், தமிழில் புதுப்புது துறையிலே புத்தகங்களை வெளியிட்டார். வெ.சாமிநாத சர்மா புத்தகங்களை எல்லாம் அவர்தான் வெயியிட் டார். ரொம்ப குறைந்த விலைக்கு புத்தகங்களை வெளி யிடுவார். ஆனால், வியாபாரம் பண்ணத் தெரியாமல் ரொம்ப நஷ்டப்பட்டார்.
முதலில் பதிப்பகம் ஆரம்பித்தது யார்? நீங்களா? உங்கள் அண்ணன் கண.முத்தையா அவர்களா?
அவர் பர்மாவில் இருந்தபோதே நான் ‘ஸ்டார்’ ஆரம்பிச் சிட்டேன். அதன்பிறகுதான், அவர் சென்னைக்கு வந்து, ‘தமிழ்ப் புத்தகாலயம்’ ஆரம்பிச்சார். அவரும் நல்ல புத்தகங்களைத்தான் வெளியிட்டார். பணம் வருது என்கிறதுக்காக எதை வேணு மானாலும் நானும் வெளியிடமாட்டேன்; அண்ணனும் வெளியிட மாட்டார். இரண்டு பேருமே இலக்கியம், இடதுசாரி நூல்களைத் தான் வெளியிட்டோம்.
நீங்க பொறுப்பேற்றுக்கிறதுக்கு முன்னாடி வி.ஆர்.எம். செட்டியார் என்ன மாதிரி புத்தகங்களை ஸ்டார் பிரசுரத்திலிருந்து வெளியிட்டார்?
வி.ஆர்.எம்.செட்டியாருக்கு இன்ன மாதிரி புத்தகம் என்றில்லே. அவருக்கு இங்கிலீஸ் மோகம் அதிகம். அதனாலே இங்கிலீஸ் புத்தகம் மாதிரி வெளியிடணும்னு நினைச்சார், அவ்வளவுதான். அவர் விருப்பப்படி இருபது புத்தகம்தான் வெளியிட்டிருப்பார். அதுக்குப் பிறகு நானும் அவரும் பழக்கமாயிட்டோம். அதன்பிறகு, “என்ன மாதிரி புத்தகம் வெளியிடலாம்னு சொல்லுங்க’’ன்னு எங்கிட்ட கேட்டார். நான் செலக்ட் பண்ணிக் கொடுத்தேன். அதுக்குப் பிறகு என் விருப்பத்துக்குத்தான் அவர் புத்தகம் வெளியிட்டார். மொத்தத்திலே, அவர் பொறுப்புல இருந்தப்போ 90 புத்தகங்கள் வெளியிட்டிருப்பார். அதிலே அவர் விருப்பப்படி வெளியிட்டது 20தான் இருக்கும். மீதி 70 புத்தகங்கள் என் விருப்பப்படி வெளியிட்டதுதான்.
அந்தக் காலத்திலே ஆழமா ஒரிஜினல் ரைட்டிங் கிடையாது. வடுவூர் துரைசாமி ஐயங்கார், ஆரணி குப்புசாமி முதலியா£ர்... இந்த இரண்டு பேரும்தான் தமிழில் அப்போது ஏராளமான துப்பறியும் நாவல்களை எழுதிகிட்டிருந்தாங்க. அத்தனையும் இங்கிலீஸ் புத்தகத்தைப் படிச்சுட்டு அப்படியே எழுதுவது. அவர் களில், வடுவூர் துரைசாமி ஐயங்கார் நாவலாவது பரவாயில்லை. நடை ஒரு மாதிரி இருக்கும். ஆரணி குப்புசாமி முதலியார் நாவல், இங்கிலீஸை அப்படியே மொழிபெயர்த்தது மாதிரி இருக்கும். அந்தக் காலத்திலே இவங்கப் புத்தகத்தைப் படிச்சுத்தான் தமிழர்கள் படிக்கிற பழக்கத்தையே வளர்த்துக்க வேண்டியிருந்தது. அந்த நிலைமை மாறணும்கிறதுக்காக நான் ஒரிஜினல் தமிழ்ப் புத்த கங்களை வெளியிடணும்னு விருப்பப்பட்டேன். அதனாலே ஒரிஜனலா எழுதுறவங்க யாராவது வந்தாங்கன்னா அவங்களைப் பிடிச்சிக்குவேன்.
முன்னணி எழுத்தாளர்கள் பலருடைய முதல் புத்தகங்களை நீங்க வெளியிட்டிருக்கீங்க. யார் யாருடைய புத்தகங்கள்னு சொல்ல முடியுமா?

தொ.மு.சி. ரகுநாதன். அவருடைய முதல் நாவல் ‘புயல்’ வெளியிட்டேன். ரகுநாதனுடைய எழுத்து ரொம்ப வலுவா இருக்கும். ஒரு சொல்லை எடுத்து அடிச்சார்னா மண்டையிலே அடிச்ச மாதிரி இருக்கும்.
அருமையான ஆளு. அவருடைய கவிதைத் தொகுதியையும், ‘பஞ்சும் பசியும்’ நாவலையும் வெளியிட்டேன். அவர் ரொம்ப காலம் என்கூடவே இருந்தார். பிறகு, ‘சோவியத் நாடு’ பத்திரிகையில் வேலை கிடைத்துப் போயிட்டார். என்கூட இருக்கும்போது அவருக்கு நானூறு ரூபாய்கூட கொடுக்க முடியாது. இருநூறு ரூபாய் கொடுத்தாலே பெரிசு. பதிப்பகத் தொழில் ஒண்ணும் அவ்வளவு லாபகரமானதாக இல்ல. அங்கே பத்தாயிரம் ரூபாய் சம்பளம் கிடைச்சது. அவருக்கு பணம் வந்தாச்சு; எழுத்துப் போச்சே. எங்கூட இருந்திருந்தார்னா இன்னும் நிறைய நாவல் அவர்கிட்டே இருந்து வந்திருக்கும்.

ஜெயகாந்தனுடைய முதல் புத்தகத்தை நான்தான் வெளியிட்டேன். அவர் புரூப் பார்க்கறதுக்குத்தான் (பிழைதிருத்தம்) ‘ஸ்டார்’ பிரசுரத்துக்கு வந்தார். பிறகு, நண்பர்களாகிட்டோம். ஒரு நாவல் எழுதியிருக்கிறதா சொன்னார். படிச்சுப் பார்த்தேன். ஒரிஜினாலிடி இருந்தது. ‘வாழ்க்கை அழைக்கிறது’ என்கிற அந்த முதல் நாவலை வெளியிட்டேன்.
அந்தப் புத்தகத்தை வெளியிடும்போது, அவர் புது ஆளா இருக்காரே, அவரு புத்தகம் விற்குமா என்கிற சந்தேகத்திலே என்கூட இருந்தவங்களே போடக்கூடாதுன்னு தடுத்தாங்க. ஆனாலும், ஒரிஜினல் திங்கிங் கெபாசிட்டி ஜெயகாந்தன்கிட்டே இருக்குது. அதனாலே பிற்காலத்திலே பெரிய ஆளா வருவார்னு சொல்லி, வெளியிட்டேன்.
புதுமைப்பித்தன் புத்தகங்கள்...?

புதுமைப்பித்தன் புத்தகங்களை ஏற்கனவே நவயுக பிரசுராலயத்திலே வெளியிட்டிருந்தாங்க. அவர் கதைகளைச் சின்ன வயசிலேயே படிச்சி, அவர் மீது எனக்கு ஒரு ஈடுபாடு ஏற்பட்டுச்சு. அவர் ஒரு ஒரிஜினல் ரைட்டர். அவரோடு கொஞ்ச நாள் பழக்கமிருந்தது. பிறகு, பூனா போயிட்டார். அதன்பிறகு இறந்தும் போனார்.
அவருடைய படைப்புகள் எல்லாம் சிதறிக்கிடந்தன. அதை எல்லாம் தேடிப்பிடித்து தொகுத்து வெளியிட்டேன். கவிதைகளை எல்லாம் ரகுநாதனை தொகுக்கச் சொல்லி வெளியிட்டேன். கட்டுரைகளையும் வெளி யிட்டு, ஒரு ஒழுங்குக்குக் கொண்டு வந்தேன். புதுமைப்பித்தன் மனைவியும் பெண்ணும் ஊரிலே இருந்தாங்க.
ரகுநாதன், “அந்த அம்மாவை இங்கே கூட்டி வந்தா அவங்களுக்கு மாசம் 150 ரூபாய் கொடுக்க முடியுமா?’’ன்னு என்னிடம் கேட்டார். அப்போ 150 ரூபாய் என்பது பெரிய தொகை. பேங்குல வேலை செய்றவனுக்கே மாச சம்பளம் 120 ரூபாதான். மாதாமாதம் 150 ரூபாய் அவங்களுக்குக் கொடுத்தேன். புதுமைப்பித்தன் ஃபண்ட் சேர்த்து, அந்த ஃபண்டிலே ஒரு வீடும் வாங்கிக் கொடுத்து, பணத்தையும் கையிலே கொடுத்தேன். அதுலே அந்த அம்மா இருந்துகிட்டு, அந்தக் குழந்தையை காப்பாத்துச்சு. பிறகு, லாட்டரியிலே இரண்டு லட்ச ரூபாய் பணம் விழுந்தது. அதன் பிறகுதான் அந்த அம்மாவுக்கு கொஞ்சம் வசதியா வாழ்க்கைப் போச்சு. ரகுநாதன் சொல்லித்தான் இதெல்லாம் செஞ்சது. ரகுநாதன், புதுமைப்பித்தனின் தோஸ்து. ஏன், வாரிசுன்னே சொல்லலாம்.
முக்கியமான எழுத்தாளர்களில் யாராருடைய புத்தகங் களை எல்லாம் வெளியிட்டிருக்கீங்க?

கு.அழகிரிசாமியின் புத்தகங்களை எல்லாம் ‘தமிழ்ப் புத்தகாலயம்’ மூலமா வெளியிட்டேன். அவருக்கு உடல் நிலை சரியில்லாதபோது நான்தான் கூட இருந்து உதவியெல்லாம் செய்தேன்.
பிழைச்சிக்குவாருன்னு எதிர்பார்த்தேன். அவர் சீக்கிரமா இறந்து போனது ரொம்ப அநியாயம். அவர், அருமையான எழுத்தாளர்.

விந்தன் புத்தகங்கள் எல்லாத்தையும் நான்தான் வெளியிட்டேன். அவர் ஒருமுறை திடுதிப்புன்னு ‘கல்கி’யை விட்டுட்டு வந்துட்டார். பிறகு ராயல்டியிலே கழிச்சிக்கிறேன்னு சொல்லி 500 ரூபாய் கொடுத்தேன்.

மௌனியோட ஒரு புத்தகம், ந.பிச்சமூர்த்தி கதைகள்; கவிதைகள்.

சி.சு.செல்லப்பா ‘எழுத்து’ மூலமா அவரது புத்தகங் களை அவரே வெளியிட்டு வந்தார். அவரின் ‘சுதந்திர தாகம்’ புத்தகத்தை வெளியிடலாம்னு நான்தான் எழுதச் சொன்னேன். அது ரொம்ப நீளமா ஆயிரம் பக்கங்களுக்கு மேலே போச்சு. அது ‘ஸ்டார்’க்காக பிளான் பண்ணி எழுதுனது தான். பிறகு, பல பேரு உதவியோட அவரே வெளியிட்டார். அவர் இறந்த பிறகு அந்தப் புத்தகத்துக்கு ‘சாகித்ய அகாதமி’ விருது கொடுத்தாங்க.
இப்படி, ஒரிஜினல் தமிழ்ப் புத்தகங்கள் வரணும் என்பது என் முதல் விருப்பம்னா, தமிழில் விஞ்ஞான நூல்கள் வரணும் என்பது என்னோட இரண்டாவது விருப்பம்.
சுதந்திரம் வாங்குறதுக்கு 20 வருசத்துக்கு முன்னாலேயே, கராச்சி காங்கிரசில் நேரு பேசும்போது, “விஞ்ஞான மனப்பான் மையும் விஞ்ஞான உணர்வும் நமக்கு இப்போதே வரணும். இப்போதே வந்தால்தான் சுதந்திர இந்தியாவில் நாம் வளர முடியும்’’ன்னு சொன்னார். அது ரொம்ப சரின்னு எனக்கு மனசுல பட்டுச்சு. சுதந்திரமும் கிடைச்சாச்சு. 1960லிருந்து 70 வரைக்கும் விஞ்ஞான புத்தகங்களை நிறைய வெளியிட்டேன். அதுக்கு முன்னாடி தமிழில் விஞ்ஞான புத்தகங்கள் அதிகமா வரலே.
‘பண்பு புத்தக வரிசை’யில் 12 புத்தகங்களை வெளியிட்டேன் ‘மக்கள் விஞ்ஞானம்’னு ஒரு செட் 12 புத்தகங்கள் வெளிவந்தது.
தமிழ்ப் பதிப்புலகத்திலே ‘ஸ்டார்’ மூலமா இரண்டு மாற்றம் நடந்தது. ஒண்ணு, விஞ்ஞான புத்தகங்களை நான் போட்ட பிறகுதான் எல்லா பப்ளிஷரும் போட ஆரம்பிச்சாங்க. இரண் டாவது, செட் செட்டா புத்தகம் போடுறதுக்கும் ஸ்டார்தான் முன்னோடி. ஆட்சிக் கலை (Print Graft) ஐந்து புத்தகங்கள், இலக்கண விளக்கம் 6 புத்தகங்கள், தமிழ் கோட்பாடு வரிசை 7 புத்தகங்கள். இந்த வரிசையில் 20 புத்தகங்களாவது வந்திருக்கும்.
நீங்கள் கம்யூனிஸ்ட்டா...?
நான் காங்கிரஸ்காரன். இருந்தாலும், எனக்கு இடதுசாரி சிந்தனை இருந்தது. கம்யூனிஸ்ட்டுகளில் பெரும்பாலானவங்க காங்கிரசிலிருந்து போனவங்கதான். ஜீவா, ராமமூர்த்தி இவங்க ளெல்லாம் காங்கிரசில் இருந்தவங்கதான். அவங்க பிறகு கம்யூனிஸ்ட் ஆயிட்டாங்க. ஆனா, நான் அப்படி ஆகலே. ஆனா, கம்யூனிச சித்தாந்த ஈடுபாடு எனக்கு அதிகமா இருந்தது. அதனாலே, தமிழில் இடதுசாரி நூல்கள் நிறைய வரவேண்டும் என்கிற எண்ணமும் இருந்தது.
என்னுடைய நிர்வாகத்துக்கு ‘ஸ்டார்’ வந்த பிறகு நான் போட்ட முதல் புத்தகம் ‘போதும் முதலாளித்துவம்’(Goodby to Capitalism) என்பதுதான். இங்கிலீசிலிருந்து கா.அப்பாதுரை மொழிபெயர்த்தார்.
கம்யூனிஸ்ட் சித்தாந்த புத்தகங்களை நானும் (ஸ்டார்), அண் ணனும் (தமிழ்ப் புத்தகாலயம்) தான் அதிகமா வெளியிட்டோம். கம்யூனிஸ்ட் கட்சி வெளியிடுகிற புத்தகங்களை எங்ககிட்டே கொடுத்துதான் விற்றுத்தரச் சொல்வாங்க.
அப்போ, கம்யூனிஸ்ட் கட்சியிலே எழுதித்தர ஆள் இருந்தா நிறைய புத்தகங்களை வெளி யிட்டிருக்கலாம். ஜீவாகூட புத்தகம் எழுதலியே. பகத்சிங்கின் ‘நான் நாத்திகன் -ஏன்?’ என்கிற ஒரு புத்தகத்தை மட்டும்தான் மொழி பெயர்த்து வெளியிட்டார்.
தோழர் ஜீவாவுக்கும் உங்களுக்குமான நட்பு எந்த வகையில் இருந்தது?
அவர் காங்கிரஸ்காரராக இருக்கும்போதிருந்தே எனக்குப் பழக்கம். அப்போ அவர் பெரிய பேச்சாளர். அவர் ‘காந்தி பாடசாலை’ நடத்தினார். அதன் மூலமாகத்தான் பழக்கம் வந்துச்சு. 1935 தேர்தல்லே ரெண்டு பேரும் பேசிகிட்டுத் திரிஞ்சோம். எங்கிட்ட கார் இருந்துச்சு. அதை எடுத்துகிட்டு ரெண்டு பேரும் சுத்துவோம்.
ஜீவா நல்லா படிப்பாளி. திருக்குறள், கம்பராமாயணம், ஔவையார் பற்றியெல்லாம் ஆழமாகப் படிச்சவர். கம்யூனிஸ்ட் கட்சியிலேயே தமிழை ஆழமாக படிச்சவர் அவர்தான். அவருக்குப் பிறகு எஸ்.ஆர்.கே. (எஸ்.ராமகிருஷ்ணன்) படிச்சார். படிச்ச விசயங்களை கிரகிச்சு மேடையிலே சிறப்பா பேச ஜீவாவுக்கு மட்டும்தான் தெரிஞ்சது.
எனக்கு ‘இராமநாதன்’னு பேரு. எங்க குடும்பத்திலே ‘இராமையா’ன்னு கூப்பிடுவாங்க. குடும்பத்துக்கு வெளியிலே என்னை அப்படி கூப்பிடுறவுங்க மூணு பேரு. அதிலே ஒருத்தர் ஜீவானந்தம். இன்னொருத்தர் முதலமைச்சர் குமாரசாமி ராஜா. மூன்றாவமர் காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி. அந்த அளவுக்கு எனக்கும் ஜீவானந்தத்துக்கும் நெருக்கம். அரசியல்ரீதியா நிறைய விவாதிச்சிருக்கோம். கடைசி முறையா சந்திக்கும்போதுகூட, செவ்வாய்கிழமை வந்தார். “உங்ககிட்டே நிறைய விவாதிக்க வேண்டியிருக்கு. வெள்ளிக்கிழமை வர்ரேன்’’னு சொல்லிட்டுப் போனார். ஆனா, வியாழக்கிழமையே இறந்து போயிட்டார். அந்த அளவுக்கு கடைசி வரைக்கும் எங்க நட்பு நீடிச்சுது.
கம்யூனிஸ்டுகளின் தலைமறைவு வாழ்க்கை காலத்தில் அவர்களுக்கு நீங்கள் நிறைய உதவிகள் செய்ததாகக் கேள்விப்பட்டிருக்கேன்...
தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த தலைவர்களுக்காகவே ஆள்வார்பேட்டையிலே ஒரு வீடு பிடிச்சோம். காடு மாதிரி இருக்கும் அந்த வீடு. அங்கேதான் அவங்க தங்கியிருந்தாங்க. முதல மைச்சர் குமாரசாமி ராஜா என் நண்பர் என்கிறதாலே போலீஸ் காரங்க எங்க வீட்டுக்குள்ளே நுழையமாட்டாங்க.
கம்யூனிஸ்ட் கட்சியிலே சில புத்தகங்களை வெளியிட்டிருந் தாங்க. அதை ‘குடவுன்’ மாதிரி ஒரு இடத்திலே மறைச்சு வைச்சிருந் தாங்க. அது போலீஸ்காரனுக்குத் தெரிஞ்சு போச்சு. சீல் வைச் சுட்டான்.
நான், பின் பக்கமா திறந்துவிட்டு புத்தகங்களை கொஞ்சம் கொஞ்சமா எடுத்துக் கொடுத்தேன். அப்படியே முக்கால்வாசி புத்தகங்கள் விற்றுப் போச்சு. போலீஸ்காரனுக்குத் தெரியும், நான்தான் இந்த வேலையைப் பண்றன்னு. போலீஸ்காரங் களுக்கும் கம்யூனிஸ்ட்கள் மீது மரியாதை இருந்தது. கம்யூனிஸ்ட்கள் என்ன தப்பாவா செய்றாங்க என்கிற மாதிரியான எண்ணம்.
ஒரு முறை, ஒரு போலீஸ் ஸ்டேஷன்லே புகுந்து அங்கிருந்த துப்பாக்கிகளை கம்யூனிஸ்டுகள் எடுத்துகிட்டு போயிட்டாங்க.
முதலமைச்சர் குமாரசாமி ராஜா என்னைக் கூட்டிகிட்டுப் போயி காட்டி, “ஏன் இப்படி எல்லாம் பண்றாங்க’’ன்னு என்கிட்டே வருத்தப்பட்டார். நான் ஜீவாகிட்டே வருத்தப்பட்டேன். ஒண்ணு, ரெண்டு துப்பாக்கிய எடுத்துகிட்டுப் போயி புரட்சி பண்ணிட முடியுமா? அப்படி பண்றவங்க பெரிசா திட்டம் போட்டு, ஊரெல்லாம் சேர்ந்து பண்ணியிருக்கணும்.
ரஷ்ய இலக்கியங்களை முதல் முதலா நீங்கதான் தமிழில் வெளியிட்டிருக்கீங்க. குறிப்பா. மார்க்சிம் கார்க்கியின் ‘தாய்’...
நீங்க இப்போ படிக்கிற ‘தாய்’ தொ.மு.சி. ரகுநாதன் மொழிபெயர்த்தது. ஆனால், அதுக்கு முன்னாடியே வேறொவர் (நவயுக பிரசுராலயம் ஆரம்பிச்சவர்) மொழி பெயர்ப்பிலே ‘அன்னை’ என்ற பெயரில் வெளிவந்திருந்தது. அதை தொ.மு.சி. படிச்சுட்டு “நல்ல நாவல்; ஆனால் மொழிபெயர்ப்பு சரியில்லை’’ன்னு சொன்னார்.
அதனாலே தொ.மு.சி.யையே மொழிபெயர்க்கச் சொல்லி ‘தாய்’ நாவலை நாங்க கொண்டு வந்தோம்.
‘தாய்’ நாவலை சோவியத் யூனியன் உதவியோடு வெளியிட் டீங்களா?
‘தாய்’ ஸ்டார் பிரசுரம் சொந்தமா வெளியிட்ட புத்தகம். அந்தப் புத்தகத்தைப் பார்த்த சோவியத் தூதர் - அவர் எனக்கு நண்பராக இருந்தார். அவர் அந்தப் புத்தகத்தைப் பார்த்துட்டு, எங்க வீட்டுக்கு வந்து, மற்ற சோவியத் புத்தகங்களையும் வெளியிடச் சொன்னார். நான், நமக்குத் தேவையான புத்தகங்களை மட்டுமே தேர்வு பண்ணி அவங்களோடு இணைந்து ‘மூன்று தலை முறை’, ‘சக்ரவர்த்தி பீட்டர்’, ‘கேப்டன் மகள்’ இப்படி அற்புதமான பல புத்தகங்களை வெளியிட்டேன். நாங்கள் வெளியிட்ட புத்தகங்களை எல்லாம் நாங்களேதான் மொழிபெயர்த்தோம்.
சோவியத் யூனியனுக்கு ராயல்டி கொடுத்தீங்களாமே...?
அவங்க கேட்கலே. “எங்க நாட்டிலே ராயல்டி வாங்கிற பழக்கம் இல்லை’’ன்னாங்க. “உங்க நாட்டிலே இருக்கோ இல்லையோ, நாங்க கொடுக்க வேண்டியது கடமை’’ன்னுட்டு கொடுத்தோம்.
அவங் களும் நல்ல விதமா நடந்துகிட்டாங்க. புத்தகம் போட பணம் கொடுத்தாங்க. வட்டியில்லா கடன் மாதிரிதானே. கணக்குப் பார்த்து 36,000 ரூபாய்க்கு செக் அனுப்பினேன்.
தமிழ்ப் பதிப்புலகத்துக்கு எதாவது செய்திருக்கிறீங்களா?
நிறைய செய்திருக்கேன். தமிழ்ப் பதிப்பாளர்களுக்கு முதல் முதலா சங்கம் ஆரம்பிச்சது நான்தான். அதுபோல, தமிழ் எழுத்தாளர்களுக்கும் முதல் முதலா சங்கம் ஆரம்பிச்சது நான்தான். அந்தக் காலத்தில் இருந்த எழுத்தாளர்களில் பெரும்பகுதி எங்கள் வீட்டு மாடியிலே ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் கூடுவோம்.
க.நா.சு., சி.சு.செல்லப்பா, சிதம்பர சுப்பிரமணியன், புதுமைப் பித்தன், தொ.மு.சி.ரகுநாதன், கு.அழகிரிசாமி இவங்களெல்லாம் கலந்துக்குவாங்க. இலக்கியங்கள் பற்றியும், எழுத்தாளர்கள் பற்றியும் பேசிக்கொண்டிருப்போம். அவரு என்ன எழுதினாரு, இவரு என்ன எழுதினாரு என்கிற மாதிரி பேச்சு இருக்கும். அப்படி ஆரம்பிச்ச சந்திப்புதான் பிறகு ‘தமிழ் எழுத்தாளர் சங்க’மா ஆச்சு. கல்கி தலைவரா இருந்தாரே, அந்த சங்கம் ஸ்டார் பிரசுரத்திலேருந்து வளர்ந்ததுதான். அதேபோல, பதிப்பாளர்களெல்லாம் எங்க வீட்டிலே கூடிப் பேசுவோம். அப்போ, சிதம்பரம் செட்டியார் இருந்தார். அவரு வயசானவர் என்கிறதாலே அவரைத் தலைவரா வச்சு சங்கத்தை ஆரம்பிச்சு வைச்சேன். அதுதான் பிறகு பல மாதிரி படிப்படியா இப்போ வளர்ந்திருக்கு.
அப்போ வாசகர் தரம் எப்படி இருந்துச்சு...
அப்போதெல்லாம் பொதுவாவே புத்தகத்துக்கு மார்க்கெட் கிடையாது. 500 காப்பிதான் அச்சு போடுவோம். சில புத்தகங்கள் 300 காபிதான். மெட்ராசுக்கு வந்து நான் போட்ட முதல் புத்தகம் மட்டும்தான் 1000 காபி. 1000 புத்தகமும் விற்க ஐந்து, ஆறு வருடம் கூட ஆகும். ஆனால், வாங்குகிறவர்கள் புத்தகங்களைப் பற்றி பேசி, விவாதம் பண்ணி, ரொம்ப யோசிச்சிப் பார்த்துதான் வாங்கி கிட்டுப் போவாங்க. கமிஷன் கேட்கமாட்டாங்க.
இந்தப் பதிப்புலக வாழ்க்கை எந்த அளவுக்கு உங்களுக்குள் திருப்தி ஏற்படுத்தியிருக்கு?
நாம நல்ல காரியம் செய்கிறோம். அதிலே திருப்தி இருக்குமே தவிர மனச்சோர்வு இருக்காது. நான் வெளியிட்ட புத்தகங்கள் ஒவ்வொன்றையும் பார்க்கும்போது என் குழந்தையைப் பார்க்கிற மாதிரி இருக்கு. அந்தக் குழந்தைங்க செலவு வைச்சாலும் சந்தோசம் தானே.
சந்திப்பு : சூரியசந்திரன்
புதிய புத்தகம் பேசுது.
ஜூன் 2004
கருத்துகள்
கருத்துரையிடுக