சங்க இலக்கியம் முதல் பெண் கவிஞர்கள் : பத்மாவதி விவேகானந்தன் நேர்காணல்

பெரியார் வலைக்காட்சி: 2011

பேரா. முனைவர் பத்மாவதி விவேகானந்தன் அவர்கள், தமிழின் மிகமுக்கியமான இலக்கிய விமர்சகர். மார்க்சியம், பெரியா ரியம், தலித்தியம், பெண்ணியம் ஆகிய அரசியலுக்குள் இயங்கி வருபவர். இவரை ‘புடவைக் கட்டிய பெரியார்’ என்றுகூட கூறுவதுண்டு. அத்தகைய கருத்தியல் செறிவோடு எழுதியும் பேசியும் வருகிறார். இவரது எழுத்துகள் தொகுக்கப்பட்டு இருபத்தைந்துக்கும் மேற்பட்ட நூல்களாக வெளிவந்துள்ளன. சிறுகதை எழுத்தாளரும் கூட. சென்னை, கோடம்பாக்கம், மீனாட்சி கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்று கிறார்.
இனி அவருடன்...

‘பெண் கவிதை மொழியும் பெண் கவிஞர்களும்’ என்றொரு ஆய்வு நூலை எழுதியிருக்கிறீர்கள். ‘பெண் கவிதை மொழி’ பற்றிய உங்கள் கருத்து?

உலகெங்கிலும் உள்ள பெண்ணிய ஆய் வாளர்கள், “ஆண்கள் உருவாக்கிக் கொடுத்த மொழியில்தான் பெண்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். பெண்களால் பெண்களுக்கான மொழி இனிமேல்தான் தோன்றவேண்டும்’’ என்று கூறி வருகிறார்கள். இது ஓரளவுக்கு உண்மைதான். இதற்கு கவிஞர் ஆர்.மீனாட்சி கூறிய பதில் எனக்குப் பொருத்தமானதாகத் தோன்றுகிறது. “மழலை மொழி என்று இருப்பதுபோல, பெரியவர்கள் மொழி என்று இருப்பதுபோல, பெண்ணுக்கென்று தனிமொழி இருக்கிறது’’ என் கிறார் அவர். பெண் தனது வலியை, வேதனைகளை தன்னுடைய மொழியில், எவ்வித பாசாங்குகளுக்கும் அஞ்சாமல் வெளிப்படுத்துவதை பெண்மொழி எனலாம்.

டோரதி சிச்சர்ட்சைன், “ஆண்களும் பெண்களும் வெவ்வேறு மொழியைப் பேசுகிறார்கள். பெண்களின் மொழியை ஆண்களால் புரிந்துகொள்ள இயலாமல் போவதால், பெண்கள் ஆண்களின் மொழியைப் பேசுகிறார்கள்’’ என்கிறார்.

பேராசிரியர் அ.மங்கை, “ஒரு தளத்தில் மொழியே இரு பாலருக்கும் சிறைச் சாலையாகிறது’’ என்கிறார். கூர்ந்து கவனித்தால் பெண் படைப்பு களில் பெண்ணின் மொழி வித்தியாசமாய் ஒலித்திருப் பதைக் காணமுடியும்.

அது தமிழில் எப்போது தொடங்கியது?

சங்க காலத்திலேயே தொடங்கிவிட்டது. சான்றாக, பூதப் பாண்டியன் மனைவி பெருங்கோப்பெண்டு எழுதிய ‘பல்சான்றீரே...’ பாடலைக் கூறலாம். கணவனை இழந்த பிறகு கைம்மை நோன்பை ஏற்று அக்காலகட்ட சமூக கட்டுத் திட்டங்களுக்குக் கட்டுப்பட்டு உயிருடன் சித்திரவதைகளை அனுபவிப்பதைவிட உடன்கட்டை ஏறி இறப்பது எவ்வளவோ மேல்’’ என்ற எதிர்ப்புக் குரலை அந்தக் காலத்திலேயே பிரதிபலிக்கிறார். அவரின் தொடர்ச்சியாக ஆண்டாளைக் கூறமுடியும். இக்கால கட்டத்தில், பெண்கள் தங்கள் வலிகளை, வேதனைகளை பெண் எனும் அடையாளத் தினால் அனுபவிக்க நேரும் அவமானங்களை, சமூகத்துடனான முரண்பாடுகளின் காரணமாக நிகழ்த்தும் போராட் டங்களை வெளிப்படையாகப் பதிவு செய்வதைக் காணமுடிகிறது,

அன்று முதல் இன்று வரை பெண் கவிஞர்கள்?

சங்க காலப் பெண் கவிஞர்களில் ஔவையார், நன்முல்லையார், நக்கண்ணையார், வெண்ணிக்குயத் தியார், ஒக்கூர் மாசாத்தியார்... இன்னும் பல கவிஞர்கள் காதல், வீரம் எனும் இரு தளங்களில் இயங்கியிருப்பதை பார்க்க முடிகிறது. அதேசமயம், அன்றைய சமூக வெளிப்பாட்டிலும் உணர்வு வெளிப்பாட்டிலும் அவர்கள் சிறப்பாகவே தங்களை வெளிப்படுத்தி இருந்தார்கள்.

இடைக்காலத்தில் காரைக்கால் அம்மையார், ஆண்டாள் குறிப்பிடத்தக்கவர்கள். முக்கியமாக, ஆண்டாள் பெண்நோக்கில் தனித்துவம் மிக்க கவிதைகளை எழுதியுள்ளார்.

பக்தி இலக்கிய காலகட்டத்திற்குப் பிறகு நாயக்கர் காலத்தில் குறிப்பிடத்தக்க பெண் கவிஞர்கள் உருவாகவில்லை என்றே நினைக் கிறேன். காரணம், வருணாசிரம படிநிலை வளர்ந்துவிட்ட சூழலில் நால் வர்ணத்துக்கும் கீழாக வைக்கப்பட்டிருந்த பெண்களுக்கு கல்வி அநேகமாக மறுக்கப்பட்டது. அது ஒரு முக்கிய காரணம். ஒரு சில பெண் படைப்பாளிகள் இருந்திருக்கலாம். ஆனால், அந்தக் காலகட்டத்தில் முக்கியமான பங்களிப்பு ஏதுமில்லை.

20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பண்டிதை அசலாம்கை அம்மையார், பாகிரதி அம்மாள், மாணிக்கவள்ளி போன்ற ஒரு சில பெண் கவிஞர்கள் சமூக அக்கறையுடன் கூடிய படைப் புகளைத் தந்திருக்கிறார்கள். 1939லேயே பாகிரதி அம்மாள் ‘ஆரிய எதிர்ப்பு கும்மிப் பாட்டு’ எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே காலகட்டத்தில் காந்தியம் சார்ந்து, சுயமரி யாதை இயக்கம் சார்ந்து பெண்கள் இயங்கி இருப் பதையும் காணமுடிகிறது.

மூவலூர் இராமாமிர்தம் - தமிழ் ...

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் ‘தாசிகளின் மோசவலை அல்லது மதி பெற்ற மைனர்’ என்றொரு நாவலை அந்தக் கால கட்டத் தில்தான் எழுதுகிறார். பொதுவாகவே இக்கால கட்டத்தில் நாவல், சிறுகதை போன்ற வடிவங்களில் பெண்கள் ஓரளவு பங்களிப்பை செய்திருக்கிறார்கள்.

சொன்னாங்க

சுதந்திரத்துக்குப் பிறகு, கல்வி கற்ற பெண்களின் எண்ணிக்கை அதிகமாகிறது. அதன் மூலமாக சௌந்தரா கைலாசம், சரளா ராஜகோபாலன் போன்ற பல பெண்கள் கவிதை எழுத ஆரம்பித்தார்கள்.

70களின் தொடக்கத்தில் ஆர்.மீனாட்சி, தேவமகள், திரிசடை, ரோகிணி போன்றவர்கள் காத்திரமான கவிதைகளை எழுதினார்கள்.

80களில் ஈழத்துப் பிரச்சினை புதிய உள்ளடக்கங்களுடன் பெண்கள் எழுதுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. ஈழத்துப் பெண் கவிஞர்களின் கவிதை தொகுப்பான ‘சொல்லாத சேதிகள்’ வெளிவந்தது.

இலங்கைப் பெண் கவிஞர்களில் ஆழியாள், ஔவை, சிவரமணி, அ.சங்கரி, சன்மார்க்கா, ஊர்வசி, சல்பிகா, மைத்ரேயி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

அண்மைக் காலத்தில் நிர்மலா சுரேஷ், ஆண்டாள் பிரியதர்ஷினி, பொன்மணி வைரமுத்து போன்றவர்களும், இப்போது குட்டி ரேவதி, மாலதி மைத்ரி, சல்மா, கனிமொழி, வெண்ணிலா, பிருந்தா, சுகிர்தராணி, மீனாமயில், தேன்மொழி, இளம்பிறை, தாமரை, தமிழச்சி, லீனா மணிமேகலை, திலகபாமா போன்ற ஏராளமான பெண் கவிஞர்கள் பெண்ணியக் கவிதைகளை எழுதிக் கொண்டிருப் பதைப் பார்க்க முடிகிறது. நிறைய பெண்களின் கவிதை நூல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பது மகிழ்ச்சியைத் தருகிறது.

தமிழ் நாவல்களில் பெண்கள் எவ்வாறு சித்திரிக்கப்பட் டிருக்கிறார்கள்?

இலக்கியச் சாரல்: நூல்களிலிருந்து – 17

தமிழின் முதல் நாவலான ‘பிரதாப முதலியார் சரித்திர’த்திலேயே வேதநாயகம் பிள்ளை பெண்மையை உயர்த்தி எழுதி யிருக்கிறார். அதன் தொடர்ச்சியாக ஆர்.சண்முகசுந்தரம் தனது மண்வாசனை நாவலான ‘நாகம்மாள்’ நாவலில் பெண்ணை ஒரு கலகப் பாத்திரமாகப் படைத்திருக்கிறார்.

நாகம்மாள் / Nagammal (Tamil Edition) eBook: ஆர் ...

1942ல் வெளிவந்த இந்நாவலில், கதைநாயகி நாகம்மாள், சொத்துரிமைக்காக போராடுவதைக் காணமுடிகிறது. இப்படி பல படைப் புகளைச் சொல்ல முடியும்.

ராஜம் கிருஷ்ணன் - தமிழ் ...

ராஜம் கிருஷ்ணன் உழைக்கும் பெண்களை நேரில் சந்தித்து பல படைப்புகளையும் தந்திருக்கிறார். அவரைத் தொடர்ந்து அனாமிகா, தமிழ்ச்செல்வி, சூடாமணி, ஜோதிர்லதா கிரிஜா, சிவகாமி, பாமா போன்றவர்களும் நாவல் வடிவத்தில் பெண்களின் பல்வேறு விசயங்களை பதிவு செய்திருக்கிறார்கள்.

Language in India

ஒரு பெண் தலைமையேற்-று தன் சமூகம் சார்ந்த நிகழ்வுகளுக்காக அனைவரையும் ஒன்று சேர்க்க வேண்டும் என்ற நோக்கத் தோடு புறப்படுவதை சிவகாமி யின் ‘பழையன கழிதலும்’ நாவலில் காணமுடிகிறது.

Bama Faustina profile Courtesy AFSF | Guftugu


பாமாவின் பெண்கள் முற்றிலும் புரட்சிக்காரர்கள். சமூக அடிமைத்தனத்தை எதிர்த்து அவர்கள் கலகம் செய்வதை ரசனையுடன் சொல்லி இருக்கிறார். வேலைக்குப் போகும் பெண்கள் எதிர் கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள், முதிர்கன்னிகள், வரதட்சணை, கணவன் குடுத்தினரின் கொடுமை போன்றவற்றை உள்ளடக் கமாகக் கொண்ட படைப்புகள் தற்போதும் வந்து கொண்டிருக்கின்றன.

மார்க்சியம், பெரியாரியம், தலித்தியம், பெண்ணியம் ஆகியவற்றறை மையமாக வைத்து இயங்குகிறீர்கள். பெண் விடுதலையில் மார்க்சியவாதிகள், பெரியாரிய வாதிகளின் பங்களிப்பு என்ன?

பெண்ணின் முழு விடுதலையை பெரியார் போல வேறு யாரும் வலியுறுத்தியதில்லை; மக்களிடம் கொண்டு சென்றதுமில்லை என்று துணிந்து கூறமுடியும். பெண் அடிமைத்தனத்தின் முக்கிய காரணமான கற்பு கோட்பாடுகளை கடுமையாகச் சாடிய பெரியார், ஆணுக்கு நிகரான அனைத்து உரிமைகளையும் பெண்ணுக்கும்
தரவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். ‘பெண் வெறும் அலங்காரப் பதுமை அல்ல; குழந்தை பெறும் எந்திரமுமல்ல; மனித இன மறுஉற்த்தியை தன்னகத்தே கொண்டிருக்கும் மிகப்பெரிய சக்தி’ என்று பிரச்சாரம் செய்ததிலும் பல்வேறு முற்போக்குக் கருத்து களையும் இடைவிடாமல் மக்களிடையே பிரச்சாரம் செய்ததிலும் பெரியாரின் பங்களிப்பு முக்கியமானது.

மார்க்சியத்தின் அடிப்படை கொள்கையே சமத்துவம்தான். ஆண் - பெண் சமத்துவத்திற்கும் இது பொருந்தும். மார்க்சிய இடதுசாரி படைப்பாளிகளும் பற்றாளர்களும் பெரியாரைப் போலவே பெண் விடுதலையிலும் சமத்துவத்திற்கானப் போராட் டங்களிலும் முக்கியப் பங்காற்றியிருக்கிறார்கள்.

பெண்ணை ஒடுக்குவதில் மதங்கள் முக்கிய பங்கு வகிப்பதாக நினைக்கிறேன்...

உண்மைதான். பெண்ணை எப்போதும் அடிமையாக வைத் திருப்பதில் மதங்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்பட்டு வருவதைக் காணமுடிகிறது. இதில் இந்து, இஸ்லாம், கிறித்துவம், புத்தம், சமணம், கன்பூசியம் என எதுவும் விதிவிலக்கல்ல.

நான் பிறந்த இந்து மதத்தில் இன்னும் பிற்போக்குத்தனம் அதிகம். இந்து மதம் வருணப் படிநிலையை பின்பற்றி, நால் வருணத்திற்கும் கீழ் பெண்களை வைத்திருக்கிறது. பெண்களை வீட்டு விலங்குகளாகவே கருதுகிறது. முரசு, முட்டாள், மிருகம், தொடக்கூடாதவர்கள்; பெண்கள் அடிபடவே பிறந்தவர்கள் என்கிறது மனுதர்மம். இந்து மதத்தில் ஒரு பெண் எக்காலத்திலும் ஆச்சார்யராக வர முடியாது. பிற மதங்களிலும் இதே நிலைதான்.

மத நிறுவனங்களை எதிர்த்து தமிழ்ப் பெண்களிடமிருந்து படைப்புகள் வந்திருக்கின்றன. பாமாவின் ‘கருக்கு’, ‘சங்கதி’ இந்த வகையில் முக்கியமானவை. நிறைய பேர் கவிதைகளில் பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால், தஸ்லிமாவைப் போல இங்கு யாரும் வரவில்லைதான்.

பெண்கள் எழுதுவதற்கு அவர்களது குடும்பமே இடை யூறாக இருப்பதாக குறிப்பாக, கணவர்கள் தடையாக இருப்பதாகக் கூறுகிறார்கள். உங்கள் அனுபவம் எப்படி?

ஆமாம். பல பெண்களுக்கும் இது பொருந்தும். “பொம்பள பேனாவும் கையுமா உட்கார்ந்துகிட்டு இருந்தா, குடும்பம் உருப்படுமா?’’ என பெண்கள் எழுதுவதையே குற்றமாகக் கருதும் சமுதாயம்தான் நம்முடையது. என் குடும்பத்தில் என் பிள்ளைகள் கோபியும், வெங்கடேசனும், ராஜுவும் மற்றவர்களும் என்னை எப்போதும் உற்சாகப்படுத்துவார்கள்.

விவேக் (கணவர் விவேகானந்தன்) என்னை எழுத வேண்டாம் எனக் கூறியதில்லை. ஆனால், அவர் இருந்தபோது ஒரு சராசரி பெண்ணாக அவருக்குப் பணிவிடை செய்வதற்கும், அவருக்கான நண்பர்களை உபசரிப்பதற்கும், அவருக்கு வரும் தொலைபேசி அழைப்புகளைக் கவனித்து குறித்து வைப்பதற்குமே பெரும்பாலான நேரம் சரியாக இருந்தது. இரவில் பத்து மணி முதல் இரண்டு மணி வரை எனது படிக்கும் பழக்கம் தொடர்ந்து கொண்டிருந்தது. அதேசமயம் விவேக் ஒரு நல்ல படிப்பாளியாக இருந்த காரணத்தால் பல்வேறு சிற்றிதழ்களையும், புதிய புத்தகங்களையும் வாங்கி வந்து பரிசளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அரிதாக கிடைக்கும் நேரங்களில் பல சமயங்களில் நல்ல புத்தகங்களைக் குறித்து இருவரும் விவாதித்துக் கொண்டிருப்போம்.

தொலைக்காட்சி, திரைப்படங்களில் பெண்களின் சித்திரிப்புகள் எவ்வாறு உள்ளன?

சராசரி தமிழ்ப் பெண்களுக்கும், தொலைக்காட்சி திரைப் படங்களில் சித்தரிக்கப்படும் பெண்களுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. ஆடை, அணிகலன், நடனங்கள்... இப்படியான விசயங்கள் சமூகத்«£டு எந்தவிதமான தொடர்பும் இல்லாத வகையில் இருக்கின்றன என்பது வருத்தத்தைத் தருகிறது.

இப்போது பெண்கள் தொலைக்காட்சி மற்றும் திரைப் படத் துறைகளில் நுழைந்திருக்கிறார்கள். அவர்களால் ஏதாவது சாதிக்க முடிந்திருக்கிறதா?

தாமரை, தேன்மொழி போன்ற கவிஞர்கள் திரைப்படத்தில் பாடல் எழுதுகிறார்கள். அதுபோல, ஒளிப்பதிவாளர்களாக, இசை
யமைப்பாளர்களாக, உதவி இயக்குநர்களாக சில பெண்கள் திரைத்துறையிலும், தொலைக்காட்சித் துறையிலும் நுழைந்திருக்கிறார்கள். ஆனாலும், திரைத் துறையில் பெண்கள் கதாநாயகனோடு நடனமாடுவதற் காகவும், தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சித் தொகுப்பாள ராகவுமே பெருமளவில் பயன்படுத்தப் படுகிறார்கள். அதனால், அவர்களால் அங்கே சுதந்திரமாக செயல்படக் கூடிய சூழல் இல்லை என்றே கூற வேண்டும்.

அதேநேரத்தில், லீனா மணிமகலை, குட்டி ரேவதி போன்ற வர்கள் குறும்படங்கள், ஆவணப்படங்கள் மூலமாக சாதித்து வருகி றார்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாக உள்ளது. அதே போல, நாடகத் துறையில் பேராசிரியர் அ.மங்கை போன்ற பெண்களின் பங்களிப்பையும்  முயற்சிகளையும் குறிப்பிட்டுச் சொல்லமுடியும்.

பத்திரிகை, கணினி என பல துறைகளிலும் பெண்கள் எண் ணிக்கை அதிகரித்திருக்கிறது. என்றாலும், அவர்கள் சாதிப்பதற்கான வாய்ப்பு குறைவாகத்தான் இருக்கிறது.

பெண்கள் முதல் அமைச்சர்களாக, காவல் துறை, மற்ற பிற முக்கியத் துறைகளிலும் அதிகாரிகளாக இருக் கிறார்கள். சில துறைகளில் இலக்கியவாதிகளேகூட அதி காரிகளாக இருக்கிறார்கள். இவர்கள் பெண் விடு தலைக்கு, பெண் முன்னேற்றத்திற்கு பாடுபட்டிருக்கிறார்களா?

Periyarum Naveena Penniyamum | Periyar Books

ஆணை முதன்மைப்படுத்துகிற சமூக அமைப்பில், ஆண் அதிகாரத்தின் மையமாக இருக்கிற சமுதாயத்தில் பெண்கள் குறைந்தபட்சம் நாடாளுமன்றம், சட்டமன்றம், நகராட்சி, ஊராட்சி ஆகியவற்றில் உறுப்பினர்களாக வருகிறார்கள் என்பதே பெரிய விசயமாக நினைக்கிறோம். வியன்னாவில் நடந்த மனித உரிமை மாநாட்டிலும் ஏனைய மாநாடுகளிலும் குறைந்தபட்சம் 30 சதவிகித உறுப்பினர்களாவது பெண்கள் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டது. ஆனால், பல்வேறு உலக நாடுகளில் (இந்தியா உட்பட) இதைக் கண்டுகொள்ளாமலே இருக்கிறார்கள். ஊராட்சி மன்றங்களில் மட்டும் 33 சதவீதம் என்று நடைமுறையில் கையாளப்பட்டு வருகிறது. நாடாளுமன்றம் மற்றும் சட்ட மன்றங்களில் பெண்களுக்கான 33 சதவிகித இடஒதுக்கீடு என்பது வெறும் தேர்தல் நேரத்து முழக்கமாகவே இருந்து வருகிறது. மக்கள் தொகையில் சரி பாதியாக இருக்கிற பெண்கள் அரசியல் அதிகாரத் தில் எந்த பங்கேற்பும் இல்லாமல் இருப்பது மிகப்பெரிய அதிகார துஷ்பிரயோகம் என்றுதான் தோன்றுகிறது.

நீங்கள் கல்வித் துறையில் செயல்பட்டுக் கொண்டிருக் கிறீர்கள். இன்றைய கல்விமுறை பெண்களுக்கு எந்த வகையில் சாதக, பாதகமாக இருக்கிறது? மாணவிகள் பள்ளிகளில் ஆசிரியர்களாலேயே பாலியல் துன்புறுத்தல் போன்ற பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளவதற்கு இன்றைய கல்வி அமைப்புதான் காரணமா?

கல்வி நிறுவனங்களில் மட்டும்தான் பெண்கள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகிறார்களா? எல்லா இடங்களிலும்தான். பள்ளி மாணவிகள் மட்டுமல்ல, சிறு குழந்தைகள்கூட கொடுமைப் படுத்தப்படுகிறார்கள். பெண்களை போதைப் பொருளாக - ஆண்களின் இன்பத்துக்கான ஒரு பொருளாக பார்க்கிற நிலை இங்கே இருக்கிறது.

பெண்ணை உடைமைப் பொருளாக பார்க்கிற போக்கு, பெண்ணை அடிமைநிலையில் வைத்து அவர்களை வன்முறைக்கு ஆளாக்குகிற நிலைதான் நடக்கிறது. பாலியல் வன்முறையில் ஈடுபடுகிற ஆணுக்கு - குறிப்பாக ஆசிரியர்களுக்கு அதிகபட்ச தண்டனை கொடுக்கப்பட வேண்டும். முக்கியமாக, பெண் குழந்தைகளுக்குப் பாலியல் சார்ந்த விசயங்களில் அறியாமை இருக்கிறது. குடும்பத்தில் பெண் குழந்தைகளிடம் பாலியல் விசயங்களை பேசுவது என்பது கலாச்சாரத்திற்கு முரணானது என்கிற கருத்து இருக்கிறது. அதனால், பாலியலை அறியாமல், தாம் கொடுமைப் படுத்தப்படுகிறோம் என்பதை அறியாமலே பல குழந்தைகளும், பெண்களும் துன்புறுத்தப்படுகிறார்கள். ஆகவே, எட்டு அல்லது ஒன்பதாம் வகுப்பிலிருந்தாவது பாலியல் கல்வியைப் பாடத் திட்டத்தில் கொண்டு வர வேண்டும். இத்தகைய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அரசு, சமூகத் தொண்டு நிறுவனங்கள், பெற்றோர், உறவினர்கள், ஊடகங்கள் ஆகிய அனைவரின் கடமை ஆகும்.

சந்திப்பு: சூரியசந்திரன்

புதிய புத்தகம் பேசுது, 
பிப்ரவரி 2007

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எனது கதைகள் வரலாற்று ஆவணங்கள்: மேலாண்மை பொன்னுச்சாமி நேர்காணல்

கவிஞர் அறிவுமதி பாடலாசிரியரான கதை