எனது கதைகள் வரலாற்று ஆவணங்கள்: மேலாண்மை பொன்னுச்சாமி நேர்காணல்


த‌மி‌ழ் எழு‌த்தாள‌ர் மேலாண்மை ...


தமிழின் பிரபல எழுத்தாளர்களில் ஒருவரான மேலாண்மை பொன்னுச்சாமி, விருதுநகர் மாவட்டம் ‘மேலாண்மறைநாடு’ எனும் குக்கிராமத்தில் பிறந்தவர். கடந்த 32 ஆண்டுகால அயராத எழுத்துப் பணியின் மூலமாக ஏராளமான வாசகர்களையும் விருதுகளையும் பெற்றிருக்கிறார். ஐந்தாம் வகுப்பே படித்த இவரது எழுத்தை இன்று பல கல்லூரி மாணவர்கள் பாடமாக படித்துக்கொண்டிருக்கிறார்கள்.

இவரது படைப்புகளை ஆய்வு செய்து எட்டு மாணவர்கள் எம்.ஃபில் பட்டம் பெற்றிருக்கிறார்கள். இதுவரை 16 சிறுகதை நூல்களையும், 5 குறுநாவல் தொகுதிகளையும், 6 நாவல்களையும் எழுதி, தமிழ் நாட்டின் முக்கியமான பரிசுகளையும் விருதுகளையும் பெற்றிருப்பவர்.

எளிமையும் இனிமையும் நிரம்பிய கிராமத்து மனுசனாகவே தனது மேலாண்மறைநாடு கிராமத்தில், சிறிய பலசரக்குக் கடையும், விவசாயமும் செய்து வசித்து வருகிறார். வயது 54.
‘செம்மலர்’ இதழில் எழுதத் தொடங்கிய இவர், தற்போது அவ்விதழின் துணையாசிரியராகவும், ‘தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க’த்தின் மாநிலத் தலைவராகவும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் சென்னை வந்திருந்தபோது அவரை சி.பி.ஐ.(எம்) மாநிலக்குழு அலுவலகத்தில் சந்தித்தோம்...

மேலாண்மறைநாடு எனும் குக்கிராமத்திலே பிறந்த நீங்கள், எப்படி ஓர் எழுத்தாளராக பரிணமித்தீர்கள்...

விருதுநகர் மாவட்டமே ஒரு கந்தக பூமி. அங்கே மழை பெய்ந்து கெடுக்கும்; அல்லது காய்ந்து கெடுக்கும். மனித வாழ்க்கையே நசிந்து போன அந்தப் பூமியில்தான் பிறந்தேன், வளர்ந்தேன், வாழ்கிறேன். என் அய்யாப்பா, அப்பா... எல்லாரும் பலசரக்கு வியாபாரிகள். நான் இலக்கியத்துக்கு வந்ததுக்கு என் குடும்பச் சூழல்தான் முக்கியமான காரணம், என் பால்ய காலத்திலேயே அம்மாவும் அப்பாவும் இறந்துபோனதாலே நானும் என் தம்பியும் அநாதை களானோம். சொந்தபந்தம் இருந்தும், யாருடைய ஆதரவும் கிடைக் காமல், பசியும் பட்டினியும், துன்பமும் துயரமும் அனுபவித்த அந்தக் காலத்திலே இரத்த உறவுகளெல்லாம் உறவுகளல்; அதைத் தாண்டி உண்மையான மனித உறவு இருக்கிறது என்கிற அனுபவம் கிடைத்தது.

அப்போது கீழவெண்மணி சம்பவம் நடந்தது. அது என்னை ரொம்ப பாதித்தது. நான் மார்க்சியவாதி ஆனேன். மார்க்சிய இயக்கத்துக்கு வந்தபிறகு ஏழ்மை பற்றிய தத்துவார்த்த புரிதலைத் தரக்கூடிய புத்தகங்கள் எனக்குக் கிடைத்தன. ருஷ்ய இலக்கியங் களையும் தமிழ் இலக்கியங்களையும் வாசிக்கிற வாய்ப்பு கிடைத்தது. ஒரு தேர்ந்த வாசகன், ஆரம்பப் படைப்பாளன் ஆகமுடியும் என்பார்கள். அப்படியாகத்தான், ஐந்தாம் வகுப்பு வரையே படித்த கிராமத்து இளைஞனான நான் எழுத்தாளன் ஆனேன். வறுமையின் ஆழ்மட்டத் தீ என்னைச் சுட, அந்த அனுபவத்தில் தொடர்ந்து எழுதலானேன்.

என் ஆரம்பகால கதைகளிலிருந்து இப்போதைய கதைகள்வரை எல்லா கதைகளும் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, வறுமைப்பட்ட மக்களின் துன்ப துயரங்களை, அவமானங்களை போராட்டங்களை பிரதிபலிப்பவையாகவே உள்ளன.

நீங்கள் எழுதுவதற்கு உந்துதல் தந்த நீங்கள் வாசித்த புத்தகங்களைக் குறிப்பிட்டு சொல்ல இயலுமா?

1969இல் மார்க்சிய இயக்கத்தோடு எனக்குத் தொடர்பு ஏற்பட்ட பிறகு என் கைக்குக் கிடைத்த முதல் புத்தகம், நிக்கொலாய் ஒஸ்த்திரோவ்ஸ்க்கிய் எழுதிய ‘வீரம் விளைந்தது’ நாவல். அந்த நாவல், அதுவரை இருந்த பொன்னுச்சாமியை வேறொரு பொன்னுச்சாமியாக உழுது புரட்டிப் போட்டுவிட்டது. அதில் உள்ள ‘பாவெல் கார்ச்சாகின்’ ஏறக்குறைய என்னைப் போலவே இருந்தான். எட்டு வயதில் அநாதையாகி, பத்து வயதில் ஓட்டல் தொழிலாளியாக மாறுகிறான், பன்னிரண்டு வயதில் புரட்சிக்காரனுக்கு உதவி செய்ததாக சிறைக்குப் போய்விடுகிறான். பிறகு, இயக்கம், புரட்சி என போராடிக் கொண்டிருக்கிறான். அவனை என்னால் இன்றுவரை மறக்கமுடியவில்லை.

கார்க்கியின் தாய், பிரம்மச்சாரி, வாழ்விழந்தவன், மூவர்கள், ஷொலகோவின் டான் நதி அமைதியாக ஓடுகிறது... இப்படியான, தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட ருஷ்ய நாவல்கள்தான் என்னை மிகவும் பாதித்தன. அவை ருஷ்ய வாழ்க்கையை உண்மையாகவும் முழுமையாகவும் சொல்லின.

ஜெயகாந்தன் பார்வையில் ஆர்.எஸ்.எஸ் ...

அப்படி தமிழ் வாழ்க்கையை ஓரளவு உண்மையாகச் சொன்னவர் ஜெயகாந்தன். அவரது கதைகளும் என்னை பாதித்தன. இவைதான் என்னை எழுத்தாளனாக்கிய படைப்பிலக் கியங்கள்.

முதல் சிறுகதை எழுதிய அனுபவம்...?

1972இல் தஞ்சாவூருக்குப் பஞ்சம் பிழைக்கப்போய், அங்கே கஷ்டப்பட்டு வியாபாரம் செய்துகொண்டிருந்த நேரம். எனக்குக் கிடைத்த ஒரு சின்ன அனுபவத்தை எழுதி அது கதையா, கட்டுரையா என்று தெரியாமலே, அந்த ‘மேட்டரை’ அப்போது எனக்குத் தெரிந்த ஒரே பத்திரிகையான செம்மலருக்கு அனுப் பினேன். 1972 செப்டம்பர் இதழில் ‘பரிசு’ என்ற தலைப்பில், அது சிறுகதையாக அங்கீகரிக்கப்பட்டு வெளிவந்தது. செம்மலர் அதை சிறுகதை என்று அடையாளப்படுத்தியதாலே, எனக்குள்ளே இருக்கும் சிறுகதை எழுத்தாளனை என்னால் அடையாளம் காண முடிந்தது.

ஒரு விஷயத்தை உணர்வுபூர்வமாக சொல்கிறேன். என்னுடைய முதல் சிறுகதை வெளியான மகிழ்ச்சியைவிட செ.பொன்னுச்சாமி’ என்கிற என் பெயரை முதல் முதலாக அச்சில் பார்த்த சந்தோசம் தான் அப்போது எனக்கு அதிகமாக இருந்தது. அப்போது எனக்கு வயது 19.

என் கதை செம்மலரில் வந்திருப்பதை எனக்குத் தெரிந்த கடைக்காரர்களுக்கெல்லாம் காட்டினேன். யாரும் நம்பவில்லை. அப்படி நம்பிய சிலரும், “கதை எழுதுறதை விட்டுட்டு, ஏதாவது உருப்படியா தொழில் பண்ணி நாலு காசு பார்க்கிற வழியைப் பாரு’’ன்னு ‘டிஸ்கரேஜ்’ பண்ணாங்க, அதனாலேயே மல்லுக் கட்டணும், தொடர்ந்து எழுதணும் என்கிற பிடிவாதம் வந்தது.

முதல் கதையை தஞ்சாவூரில் இருந்தபோது எழுதியதாக சொல்கிறீர்கள். எவ்வளவு காலம் தஞ்சாவூரில் இருந்தீர்கள்? அங்கே எத்தனை கதைகள் எழுதினீர்கள்?

1972ல் தஞ்சாவூருக்குப் போனேன். 1973ல் திரும்பி விருதுநகர் வந்துட்டேன். இடைப்பட்ட அந்த ஒரு வருத்திலேதான் முதல் கதையை எழுதினது.

அதனாலேதான், “பொன்னுச்சாமியை பெற்றெடுத்தது விருதுநகர் மாவட்டம் என்றாலும், மேலாண்மையைப் பெற்றெடுத்தது தஞ்சாவூர் மாவட்டம்தான்’’ என்று பலமுறை சொல்லியிருக்கிறேன்.

விருதுநகர் வந்தபிறகு பலசரக்குக் கடை வைத்தேன். வியாபாரத்திலும் முன்னேறினேன், கதை எழுதுவதிலும் முன்னேறினேன்.

உங்கள் கதைகளில், பொதுவாக பெண் சார்ந்த பிரச்னைகளுக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுக்கிறீர்களே...?

எங்கள் கிராமத்தில் இப்போதும் பெண் குழந்தை பிறந்தால், அமைதியாக கமுக்கமாக இழவு வீடு மாதிரி இருப்பார்கள். ஆண் குழந்தை பிறந்தால் குலவையிட்டு மகிழ்ச்சியாகக் கொண்டாடுவார்கள். எனக்கு முதல் குழந்தை பெண்ணாகப் பிறந்தபோது, சந்தோசமாக மிட்டாய் வாங்கி வீடு வீடாக கொடுத்தேன். ஒரு சித்தி, “பொன்னுத்தாயி புள்ளை பெத்துட்டாளா?’’ என்று கேட்டுக் கொண்டே, மிட்டாயை வாங்கி வாயில் போட்டுக் கொண்டவர், நான் “பொம்பளை பிள்ளை பிறந்துருக்கு’’ என்று சொன்னவுடனே, “பொம்பளை பிள்ளை பிறந்ததுக்கா மிட்டாய் கொடுக்கறே, கூறு இல்லாத பிள்ளையா இருக்கியே’’ என்று சொல்லி, மிட்டாயை வாயிலிருந்து எடுத்து, எச்சிலோடு என் கையில் திணித்துவிட்டு போயிட்டாங்க.

பெண்பிள்ளை பிறந்தால் மகிழ்ச்சியடையக்கூடாது என்கிற மனப்பதிவு அங்கு பெண்களுக்கே இருக்கிறது. என் கிராமச் சூழல் இப்பவும் அப்படித்தான் இருக்கிறது.

இப்படியாக, பெண் சார்ந்த பிரச்னைகளை நான் நேரடியாக சந்திப்பதனாலும், கூடுதலாக கவனிப்பதனாலும், அந்தப் பிரச்னைகளை வாசகர்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புவதாலும்தான் என் கதைகளில் பெண் சார்ந்த பிரச்னைகள் கூடுதலாக இடம் பெறுகின்றன.

அவள் சாரதி, பூச்சுமை, பௌர்ணமி... இப்படியான பல கதைகளில் பெண்கள், ஆண்களை வழிநடத்துபவர்களாக வருகிறார்களே?

உழைக்கும் பெண்கள் தங்களின் கூறுகெட்ட கணவர்களை ஏசி, பேசி வசக்கி என் கதைகளில் சரி செய்வார்கள். இது கிராமத் தொன்மம் - ஏன், உலக சமூகத் தென்மமும்கூட. தாய்வழி சமூகத்தின் எச்சம் இன்றைக்கும் கிராமத்துப் பண்பாட்டிலே இருக்கு. அதுதான் என் கதைகளிலும் வெளிப்படுது. இந்தத் தன்மையை என் கிராமத்து பெண்களிடம் கற்றறிந்தே எழுதுகிறேன். ஆம்பளையிடம் அடிபட்டு சீரழிகிற பெண்களை விட ஆம்பளைங்களை சீர்திருத்துகிற பெண் களையே என் கதைகளில் முன்வைக்க விரும்புகிறேன்.

உங்கள் ‘காட்டு ருசி’ கதை, உழைப்பின் ருசியைச் சொல்லக் கூடியதாக இருக்கிறது. உங்கள் கதாமாந்தர்கள் பெரும்பாலும் கடுமையான உழைப்பாளிகளாகவும், உழைப்பின் ருசியை உணர்ந்தவர்களாகவுமே இருக்கிறார்கள். நிஜத்திலும் அப்படித்தானா...?

“நக்கிக் கண்ட நாயும், கொத்திக் கண்ட கோழியும் சும்மா இருக்காது’’ என்பார்கள். அதுபோல, உழைத்துச் சுகம் கண்ட மனுசன் உழைக்காமல் இருக்கமாட்டான். இது விவசாய குணம்.

மத்தியதர வர்க்கத்தினர் உழைக்கும் நேரத்தை கொடுமையான நேரமாகவும், ஓய்வு நேரத்தை மகிழ்ச்சிக்குரிய நேரமாகவும் கொண்டாடுவார்கள். ஆனால், கிராமப்புற விவசாயிகள் உழைப்பு நேரத்திலே ஓடி ஓடி உழைப்பார்கள். ஓய்வு நேரத்திலும் உட்கார்ந்தபடியே உழைத்துக் கொண்டிருப்பார்கள். இந்த உழைப்பு மனப்பான்மை யைத்தான் என் பல கதைகள் அழுத்தமாகப் பேசுகின்றன.

சாதி கலவரத்தை மையப்படுத்தி ‘இந்தியா டுடே’யில் ‘குற்றம்’ என்றொரு கதையை எழுதியிருந்தீர்கள். அந்தக் கதையில் உள்ளது போலத்தான் அங்கே, மக்களின் சாதிய மனோபாவம் இருந்து வருகிறதா...? பொதுவாக, தென் மாவட்டங்களில் சாதிய கலவரம் அதிகமாக நிகழக் காரணம் என்ன...?

வட மாவட்டங்களில் நிலம் சார்ந்து மட்டுமே வாழக் கூடிய வர்கள் தலித் மக்கள். அங்கே சாதிப் பிரச்னை வந்து, தலித் மக்களுக்கு வேலை கொடுக்கக்கூடாது என்று ஒரு தீர்மானம் போட்டு விட்டால், தலித் மக்கள் பண்ணையார்களுக்கு அடிபணிய வேண்டியிருக்கும். ஏனென்றால், அவர்களின் உயிர் வாழ்தலுக்கு நிலத்தைத் தவிர வேறு வழியில்லை. ஆனால், தென் மாவட்டங் களிலே - குறிப்பாக, விருதுநகர் மாவட்டத்தில், அப்படி ஒரு நிலைமை வந்தால், தலித்துகள் விவசாயத்தைத் தூக்கியெறிந்துவிட்டு ‘கருமருந்தைக் கரைச்சிக் குடிச்சாவது வாழ்ந்துக்கிருவோம்’ என்று விலகி வந்திடுவாங்க. சித்தாள் வேலை செய்தாவது பிழைச்சிக் கிடுவாங்க அந்த தைரியத்திலேதான் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிர்வினை பண்றாங்க, கலவரம் வருது. கலவரம் சரின்னு நான் சொல்லமாட்டேன். ஆனால், அதுதான் எங்க மாவட்டத்திலே நடக்குது. அதைத்தான் என் கதை களிலேயும் பதிவு செய்திருக்கிறேன்.

தலித் மக்கள் கலவரத்தில் முன்கை எடுத்து முன்னேறி வருகிற மாதிரியும், முன்பு வன்முறை செய்து, வீரஞ்செறிந்த பாரம்பரியத்தில் வந்த பிற்படுத்தப்பட்ட மக்கள், இன்றைக்கு வீரத்தைத் தொலைத்து விட்டதாகவும் ஒரு கருத்து இருக்கிறதே... அதுதான் என் மாவட் டத்தின் இப்போதைய மனோபாவம்.

சிறுகதைகளையே எழுதிக் கொண்டிருந்த நீங்கள், நாவல் என்கிற வடிவத்தில் கவனம் செலுத்த தொடங்கியது எப்போது?

சிறுகதைக்குள் சிக்காத, விரிந்த விசயங்களை சிறுகதைகளாக எழுதுகிறபோது அவை வெற்றியடையாமலே போகின்றன. உதாரணமாக, ‘சிதைந்துபோன அழகிய ஓவியம்’, ‘தண்டனை’ ஆகிய இரு கதைகளும் செம்மலரில் இரண்டு, இரண்டு இதழ்களில் வெளிவந்தன. ‘பரிணாம அலைகள்’ கதை 16 பக்கங்களில் வந்தது. ஆக, சிறுகதை வடிவத்துக்குள் சிக்காது திமிருகிற பரந்த வாழ்க்கையைச் சொல்லவேண்டிய நிலை எனக்கு ஏற்பட்டபோதுதான் நான் நாவல் எழுதத் தொடங்கினேன்.

முற்றுகை | Buy Tamil & English Books Online ...

என் முதல் நாவல் ‘முற்றுகை’, தீப்பெட்டித் தொழிற்சாலை அனுபவங்களையும், சிவகாசி, சாத்தூர் பகுதிகளில் கிடைத்த தொழிற்சங்கச் செய்திகளையும் இணைத்து அந்த நாவலை எழுதி னேன். ‘கல்கி’ நாவல் போட்டியில் முதல் பரிசு பெற்றது. அதன் மூலம் நாவலிலும் நான் பிரபலமானேன்.

ஆரம்பத்தில், செம்மலர் போன்ற இதழ்களில் எழுதிக் கொண்டிருந்த நீங்கள், வெகுஜன இதழ்களில் எழுதத் தொடங்கியது ஏன்? எப்படி?

செம்மலர், தாமரை, சிகரம், யுகவிழிப்பு, வெண்மணிப் புறாக்கள் இது மாதிரியான சிவப்பிலக்கிய இதழ்களில்தான் ஆரம்பத்தில் எழுதினேன். என் எழுத்தாற்றல் முழுக்க முழுக்க பாட்டாளி மக்களுக்குத்தான் பயன்படணும் என்கிற பார்வை அப்போது எனக்கு அழுத்தமாக இருந்தது. பிறகு வெகுமக்களுக்கான இதழ் களில் எழுதத் தொடங்கியதற்கு இரண்டு காரணங்கள். முதல் காரணம், ‘நம்முடைய இயக்கமே, வெளியே இருக்கிற மக்களை ஈர்ப்பதற்கான முயற்சியில் இறங்கும்போது நாம் ஏன் இறங்கக் கூடாது என்கிற பக்குவமும் முதிர்ச்சியும் எனக்கு ஏற்பட்டது.

இரண்டாவது காரணம், என்னைச் சுற்றியிருந்த சில நண்பர்கள், “இயக்கம் நடத்துகிற பத்திரிகைகளிலேதான் உன் சரக்கு எடுபடும். இயக்கத் துக்கு வெளியே எழுதிப்பார், உன் சரக்கு எடுபடாது’’ என்று என்னைச் சீண்டினார்கள். இந்த இரண்டு காரணங்களாலும்தான் நான் வெகுமக்களுக்கான பத்திரிகைகளில் எழுதத் தொடங்கினேன். அதன் பிறகுதான், ‘நாம் வென்றறெடுக்க வேண்டிய உலகமும் மனிதர்களும் வெளியே இருக்கிறார்கள்’ என்பது புரிந்தது. அவர்களோடு ஓர் உரையாடல் வைப்பதுதான் இயக்கத்துக்கான சரியான பயன்பாடு’ என்பதும் விளங்கியது. அதேசமயம், எந்தப் பத்திரிகையில் கதை வந்தாலும், அது அந்தப் பத்திரிகைக்கான கதையாக இல்லாமல், மேலாண்மையின் கதையாகவே இருக் கின்றன.

உங்கள் கதைகளின் தனித்துவமாக நீங்கள் எதைக் கருதுகிறீர்கள்...?

கடந்த 25 ஆண்டுகால விருதுநகர் மாவட்ட மக்களின் மனோபாவங்களை ஆராய்ச்சி செய்ய வேண்டுமானால், என் கதைகளை ஆய்வு செய்தாலே போதும். அப்படியான ஒரு வரலாற்று ஆவணமாக என் கதைகள் உள்ளன. என் மக்களின் வாழ்க்கையை, அவர் களது சலனங்களை, மாறுதல்களை, வளர்ச்சிகளை, அவர்களது மொழியிலேயே அவர்களது கதை சொல்லும் மரபிலேயே அந்தந்தக் காலங்களிலேயே உடனுக்குடன் என் கதைகளில் பதிவு செய்கிறேன்.

இதுவரை 27 தொகுப்புகள் வந்துவிட்டன. இன்னும் எழுதிக் கொண்டே இருக்கிறீர்களே என்று அதிர்ச்சியாகக் கேட்கிறார்கள். எப்படி இவ்வளவு காலம் தொடர்ச்சியாக எழுத முடியுதுன்னும் சிலர் கேட்கிறாங்க. ஆனால், சமீபத்தில் கி.ரா. எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில் “முன்பு ‘கரிசல் கதைகள்’ என்று 26 கரிசல் எழுத்தாளர்களின் கதைகளைத் தொகுத்து வெளியிட்டேன். அந்த 26 எழுத்தாளர்களில் இப்போதும் தொடர்ந்து கம்பு சுழற்றிக் கொண்டிருப்பவராக நீங்கள் மட்டும்தான் இருக்கிறீர்கள்’’ என்று குறிப்பிட்டிருந்தார். என் 32 ஆண்டுகால எழுத்து வாழ்க்கைக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் இது.

உங்கள் ஆரம்ப கால கதைகளைப் போலவே இப்போதும் எழுதிக் கொண்டிருக்கிறீர்கள். எந்தவித புதிய உத்திகளையும் இதுவரை மேற்கொள்ளவில்லையே. ஏன்?

எனக்கு கோட்பாட்டு ரீதியான எந்தச் சிக்கலும் வராததுதான் காரணம். இலக்கியத்தின் வடிவப் புனிதம் என்னுள் ரொம்ப அலை மோதவில்லை. உள்ளடக்கத்தை இங்கே வைத்துக்கொண்டு, வடிவத்தை வேறு ஒரு தேசத்திலிருந்து வேறொரு பண்பாட்டு பின்புலத்திலிருந்து இறக்குமதி செய்தால், அந்த வடிவத்துக்கும் உள்ளடக்கத்துக்கும் பொருந்தாமல் போகிற ஆபத்து இருக்கிறது.

இந்த மண்ணுக்கான வாழ்க்கையை, இந்த மண்ணுக்கான மொழியிலே நமது கதை சொல்லும் மரபிலேதான் கதை சொல்லணும் என்பதில் தெளிவாக இருக்கிறேன். ஒரு சம்பவத்தை நான் உங்களுக்கு குறிப்பிட விரும்புகிறேன்.

அளவளாவல் : எழுத்தாளர் அம்பை - அகர முதல

கி.ரா.வின் வீட்டில் ஒரு முறை எதேச்சையாக எழுத்தாளர் அம்பையைச் சந்தித்தேன். அவர் “மேலாண்மை உங்களுக்கு இருக்கும் அனுபவத்திற்கும் தேர்ச்சிக்கும் உங்களாலே இன்னும் நேர்த்தியாகவும் அழுத்தமாகவும் எழுத முடியும். ஆனால், நீங்கள் பழைய மாதிரியே எழுதிக் கொண்டிருக்கிறீர்களே’’ என்று கேட்டு விட்டு, “உங்கள் கதை எனக்குப் பிடிக்காது. ஆனால் எங்கள் அம்மா வுக்குப் பிடிக்கும். அவர் உங்கள் ரசிகர்’’ என்றார்.

ஆகவே, என் எழுத்துகள் எந்த மக்களுக்குப் போய்ச் சேர வேண்டுமோ அந்த மக்களிடம் சென்றடைந்து கொண்டுதானிருக் கின்றன. அவர்களுக்காகத்தான் நான் கதைகளை எழுதுகிறேன்ள.

நாவிதனின் வாழ்க்கையை மையமாகப் வைத்து ‘ஊர்ச்சோறு’ என்றொரு கதையை எழுதியிருந்தேன். அதைப் படித்துவிட்டு, அமெரிக்காவிலிருந்து ஒருவர், “விருதுநகர் மாவட்டத்தில் பஞ்சம், பசி, கஷ்டம் இருக்கும் என்று தெரியும். ஆனால் இட்லி தோசைக்கு ஏங்குகிற மனிதன் இருக்கிறான் என்பதையும், இவ்வளவு ஆழமான துயரம் அங்கே இருக்கிறது என்பதையும் உங்கள் கதைகளின் மூலமே உணர்ந்துகொண்டேன்’’ என்று எழுதியிருந்தார்.

இப்படி என் கதைகள் பரவலாக பாதிப்பை ஏற்படுத்தி இருக் கின்றன. அந்த வகையில் என் கதைகள் வெற்றி பெற்றிருக்கின்றன.

உங்கள் எழுத்துக்கு ஜெயகாந்தன் ஆதர்சமாக இருந்ததாக கூறினீர்கள். ஜெயகாந்தனைப் போலவே நீங்களும் இடதுசாரி இதழ்களில் எழுதத் தொடங்கி, பிறகு வெகுமக்களுக் கான இதழ்களில் தடம் பதித்திருக்கிறீர்கள். பரவலான வாசகர்களையும் பெற்றிருக்கிறீர்கள். உங்கள் எழுத்துகள் எத்தனை எழுத்தாளர்களுக்கு ஆதர்சமாக இருந்திருக்கின்றன?

ஜெயகாந்தன் ஒரு கட்டத்தில் அமைப்புக்குள் வைத்திருந்த காலை எடுத்துக் கொண்டுவிட்டார். நான் அமைப்புக்குள்ளேயே இருந்து கொண்டிருக்கிறேன். காரணம், என் காலம் போலல்ல ஜெயகாந்தன் காலம். ஆனந்த விகடனில் கதை வந்தால் பொதுவுடைமை இயக்கத் தோழர்கள் அப்போது சந்தேகமாகப் பார்த்தார்கள். இப்போது பொதுவுடைமை இயக்கம் ரொம்ப முதிர்ச்சி அடைந்திருக்கிறது. நம்முடைய எழுத்தாளர்கள் வெளி வட்டாரத்தில் அங்கீகாரம் பெறுவதை ஒரு சாதனையாகத்தான் இப்போது பார்க்கிறார்கள்.

அப்படி சந்தேகிக்காமல் சாதனையாகப் பார்ப்பதால்தான் என்னால் இயக்கத்திலே தொடர்ந்து இயங்கமுடிகிறது. ஜெயகாந்தன் ஓர் அமைப்புக்குள்ளிருந்து செயல்படாவிட்டாலும் ஓர் இலக்கிய அமைப்பு என்ன செய்யவேண்டுமோ அதையெல்லாம் செய்தார். ஓர் இலக்கிய அமைப்பு நிறைய எழுத்தாளர்களை உருவாக்கும். அதுபோல ஜெயகாந்தன் தன்னந்தனி மனிதனாக இயங்கியே இன்றைக்கு 200க்கும் மேற்பட்ட எழுத்தாளர்களுக்கு விதையாக இருந்திருக்கிறார். அதுபோல, நானும் சில எழுத்தாளர்களுக்கு விதையாகி இருக்கிறேன். என் எழுத்துகள் தொடர்நது செயல்பட்டுக் கொண்டுதானிருக்கின்றன. புத்தகமாய் முடங்கிவிடவில்லை.

அமைப்பு என்பது படைப்பாளிகளுக்குச் சிறைச்சாலையாகி விடும் என்று ஒரு கருத்து இருக்கிறதே?

என் சொந்த அனுபவத்தில், எனக்குக் கிடைத்த த.மு.எ.ச. அமைப்பும் மார்க்சிய இயக்கமும் எழுத்தாளனின் சுதந்திரத்தை மதிப்பவையாக உள்ளன. இந்த அமைப்புகளே எனக்கு சிறகு களாகவும் இருக்கின்றன. அதனால்தான் பரிபூரண சுதந்திரத்தோடு என்னால் இயங்க முடிகிறது.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலத் தலைவராக இருக்கிறீர்கள். அந்த இயக்கத்திற்கும் உங்க ளுக்குமான தொடர்பு, உங்களது பணி...?

‘செம்மலர்’ எழுத்தாளர்கள் 26 பேர், மதுரை திடீர் நகரில் கூடி ஆரம்பித்த இயக்கம்தான் ‘தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்’. அந்த 26 பேரில் நானும் ஒருவன். மாநில அளவிலான அமைப்பாளர் குழுவில் நானும் ஒருவன். முதல் மாநில மாநாட்டில் துணைச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப் பட்டேன். அதிலிருந்து இன்றுவரை த.மு.எ.ச.வின் முக்கியப் பொறுப்புகளில் செயல்படுபவனாக இருக்கிறேன். த.மு.எ.ச., ‘கலை இரவு’ போன்ற தனக்கான பல புதிய கலாசார வடிவங்களை கண்டுபிடித்துள்ளது. திருவண்ணாமலையில் நடந்த முதல் கலை இரவில் நான் கலந்து கொண்டிருக்கிறேன்.

அ‌‌ஜீத் படத்தில் ஜெயமோகன்?

வரலாற்றில் பல விநோதங்கள் நடந்திருக் கின்றன. இன்றைக்கு ஜெயமோகன் முற்போக்கு இயக்கத்தைத் தாக்கிக்கொண்டிருக்கிறார். இந்துத்துவாவின் முகமாக இருக்கிறார். ஆனால், அவரின் முதல் சிறுகதைத் தொகுப்பான ‘திசைகளின் நடுவே’ நூலினை திருவண்ணாமலை கலை இரவில் தமுஎச.வின் பொதுச்செயலாளர் பேராசிரியர் இரா.கதிரேசன் வெளியிட நான் பெற்றுக்கொண்டேன். ஜெயமோகனின் முதல் நூலை தமுஎச தோழர்கள்தான் தோள்களில் சுமந்து விற்றார்கள்.

எஸ்.ராமகிருஷ்ணன்

இப்படி தமுஎச. எத்தனையோ படைப்பாளிகளை தன் தோளிலே சுமந்திருக்கிறது என்பதற்கு இது ஓர் உதாரணம். இன் றைக்கு மிகச்சிறந்த மதிப்புக்குரிய எழுத்தாளராக இருக்கிற எஸ்.ராமகிருஷ்ணனின் 16 சிறுகதைகள் ஆரம்ப காலத்தில் செம்மலர் இதழில்தான் வெளிவந்தன. செம்மலர்தான் அவர் வளர்வதற்கு நாற்றங்காலாய் இருந்தது. அவர் அதை எந்தப் பேட்டி யிலும் பகிர்ந்து கொண்டதாக எனக்கு ஞாபகம் இல்லை.

தமிழ் இலக்கியச் சூழலில் ஏராளமான பரிசுகளையும் விருதுகளையும் பெற்றிருக்கிறீர்கள். இந்த அங்கீகாரங்களை நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?

என் சமகால முற்போக்கு எழுத்தாளர்கள் யாருக்கும் கிடைக் காத பரிசுகளும், விருதுகளும், வெளிவட்டார பாராட்டுகளும் எனக்குக் கிடைத்திருக்கின்றன. எனக்கு முன்னோடியாக இருந்த கு.சின்னப்ப பாரதி, டி.செல்வராஜ்... இவர்களெல்லாம் மிகச்சிறந்த சாதனையாளர்கள். ஆனால், அவர்களுக்குக் கிடைத்த அங்கீகாரத்தைவிட கூடுதல் அங்கீகாரம் எனக்குக் கிடைத்திருக்கிறது. காரணம், எனது சிறகுகள் எல்லா மக்களையும் நோக்கி விரிந்தது தான் என்று நினைக்கிறேன். பரந்துபட்ட வாசகனைச் சென்ற டையக்கூடிய மொழிநடை எனக்கு வாய்த்ததும் இன்னொரு காரணம்.

கு.சி.பா., டி.செல்வராஜ் இவர்களைவிட மிகப்பெரிய அங்கீகாரம் உங்களுக்குக் கிடைத்திருப்பதாகச் சொல்கிறீர்கள். ஆனால், கு.சி.பா.வின் ‘சங்கம்’, டி.செல்வராஜின் ‘தேநீர்’... இப்படியான ஒரு படைப்பு உங்களிட மிருந்து வரவில்லையே... அப்படி வருவதற்கான முயற்சி இருக்கிறதா?

என் கிராமத்தின் பூர்வீக வரலாற்றை எழுதுகிற முயற்சி இருக்கிறது. அது எழுதப்பட்டால் நீங்கள் எதிர்பார்க்கிற அந்தப் படைப் பாக அது இருக்கலாம். கடந்த கால கிராமத்து வரலாறான அது ஒரு இனக்குழுவின் வரலாறாகவும் இருக்கும். அந்த நாவலை எழுதினாலும், அது வெகுமக்களுக்கான நாவலாகவே இருக்கும்.

சந்திப்பு : சூரியசந்திரன்

புதிய புத்தகம் பேசுது 
பிப்ரவரி 2005

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிஞர் அறிவுமதி பாடலாசிரியரான கதை

அடுத்த ஆண்டும் வசந்தம் ஆர்ப்பாட்டமாய் வரும் - அ.வெண்ணிலா