ஆழி சூல் உலகு : ஜோ டி குருஸ் நேர்காணல்

ஜோ டி குரூஸ் – காத்திருக்கும் பணிகள்

மிழில், வெளிவந்துள்ள நாவல்களில் மிகமுக்கியமானது ‘ஆழி சூல் உலகு’. மீனவ சமூக மக்களின் வாழ்க்கையை இரத்தமும் சதையுமாக இந்நாவலில் பதிவு செய்திருக்கிறார், இதே சமூகத்தில் பிறந்த ஜோ டி குருஸ். தமிழ் இலக்கிய உலகில் இதுவரை தொடப்படாதிருந்த மீனவர்களின் உள்உலகத்தை முதல்முதலாக இந்நாவலில் அறிமுகப்படுத்துகிறார். கண்ணீரும் குருதியும், காதலும் குரோதமுமாக வாழும் இம்மக்களையும், கடலையும் கடல்சார் உலகையும் 550க்கும் மேற்பட்ட பக்கங்களில் அள்ளி அள்ளித் தந்திருக்கிறார். அவ்வளவு தகவல்கள்! முதல் நாவல் என்று நம்ப முடியாத அளவிற்கு இந்நாவலை உருவாக்கி இருக்கிறார்.
சென்னையில் கப்பல் போக்குவரத்துத் துறையில் தனியார் நிறுவனமொன்றில் பணிபுரியும் ஜோ டி குருஸை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினேன்...

உங்கள் குடும்பப் பின்னணியிலிருந்து தொடங்கலாம்...

எனது சொந்த ஊர் உவரி கிராமம். நெல்லை மாவட்டத்தின் தெற்குக் கடற்கரைப் பகுதியில் இருக்கிறது. அம்மா ஆரம்பப் பள்ளி ஆசிரியர். அப்பா கடலோடி. எட்டாம் வகுப்பு வரை எங்கள் ஊரில் படித்தேன். ஒன்பதாம் வகுப்பு தூத்துக்குடி சவேரியார் மேல்நிலைப் பள்ளியிலும், பத்தாம் வகுப்பு பாளையங்கோட்டை புனித சவேரியார் பள்ளியிலும், இடையன்குடி கால்டுவெல் மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலைக் கல்வியும் படித்தேன். திருநெல்வேலியில் பி.ஏ., பொருளியல், சென்னை லயோலா கல்லூரியில் எம்.ஏ., புனித சேவியர் கல்லூரியில் எம்.ஃபில் படித்தேன். ‘கோல்டு மெடல்’ கிடைத்தது. சென்னைப் பல்கலைக் கழகத்தில் அவர்களே அழைத்து பி.எச்.டி., படிக்க வாய்ப்பு கொடுத்தார்கள். ஒன்றரை ஆண்டு காலம்தான் படித்தேன். பாம்பேயில் வேலை கிடைத்து போய்விட்டேன். இப்போது சென்னையில் இருக்கிறேன்.
எனது சமுதாய மக்கள் அறியாமையில் ஊறிக்கிடக்கிறார்களே என்கிற ஆதங்கம் எனக்கு சிறுவயதிலேயே உண்டு. இந்த சமுதாயத்துக்கு ஏதாவது செய்யணும் என்கிற வைராக்கியம் இருந்தது. இப்போதும் இருக்கிறது. இவர்களுக்கு நான் என்ன செய்யப்போகிறோன் என்று இன்றுவரை எனக்குத் தெரியவில்லை. பெரிதாக ஏதாவது செய்யணும் என்கிற ஆசை இருக்கிறது.

‘ஆழி சூழ் உலகு’க்கு முன்பு ‘புலம்பல்’ என்றொரு கவிதைத் தொகுப்பை எழுதி வெளியிட்டிருந்தீர்கள். அதுதான் உங்கள் முதல் நூலென்று நினைக்கிறேன். அடிப்படையில் நீங்கள் ஒரு கவிஞரா?

அடிப்படையில் நான் கவிஞரும் இல்லை; எழுத்தாளரும் இல்லை. என்னுடைய வாழ்க்கையில் நடந்த ஒரு சோகமான நிகழ்ச்சியின் காரணமாக நான் அழுதேன். அழுததை ஒரு நண்பரிடம் சொல்லிக் கொண்டிருந்தபோது, இதை நீங்கள் கவிதையாக எழுதலாமே என்றார். எனக்கு கவிதை பற்றியெல்லாம் எதுவும் தெரியாது.

சின்ன வயதிலே வலம்புரி ஜான்தான் இலக்கிய மேதை என்கிற எண்ணத்தில் இருந்தேன் - எனது சமூகத்தில் பிறந்தவர் என்பதனால். அதன்பிறகு கண்ணதாசன், வைரமுத்து பாடல்களை யெல்லாம் கேட்டு ரசிப்பதோடு சரி, அவர்களது கவிதைகளைக் கூட ஈர்ப்போடு ரசித்து வாசித்தது கிடையாது.

கல்லூரி காலத்தில் சாண்டில்யனின் ‘கடல்புறா’ நாவலை மட்டும் படித்திருக்கிறேன் - கடல் சம்பந்தப்பட்ட தலைப்பில் அது இருந்ததால்.

இலக்கியப் பின்புலமோ, இலக்கிய வாசிப்போ இல்லாமல் கவிதை என்றால் என்ன என்று தெரியாமலே ஒரு நீண்ட கவிதை எழுதி ‘தமிழினி’ வசந்தகுமாரிடம் கொடுத்தேன். அவர் வெளியிட மறுத்துவிட்டார். அது கவிதையாக இருந்தால்தானே! பிறகு, நானே சொந்த செலவில் அந்தப் புத்தகத்தை வெளியிட்டேன்.

ஆழி சூழ் உலகு - Aazhi Sool Ulagu - Panuval.com - Online ...



அப்படியானால், ஆழி சூழ் உலகை எந்தச் சூழலில் எழுதினீர்கள்?

நானும் ‘தமிழினி’ வசந்தகுமாரும் தொடர்ந்து சந்தித்துப் பேசுவோம். அப்போது எனது மீனவ சமூக விசயங்களை அவரிடம் சொல்லிக் கொண்டிருப்பேன். ஒரு நாள் அவர், “நீங்கள் உங்கள் சமூகத்தை ஆழ்ந்து ஊடுருவி நோக்கியிருக்கிறீர்கள். கருத்துச்செறிவு உங்கள் சொற்களில் இருக்கிறது. நீங்கள் இந்த விசயங்களை ஒரு நூறு பக்கத்தில் நாவலாக எழுதலாமே’’ என்றார். எனக்கு அது சரியெனவே பட்டது. ஆனால் நான் கடல்புறாவைத் தவிர வேறு எந்த நாவலையும் படித்ததில்லை. ஒரு நாவலை எப்படி எழுத வேண்டும் என்கிற விசயமும் எனக்குத் தெரியாது. அதை அவரிடம் சொன்னேன். அவர், ப.சிங்காரத்தின் ‘புயலிலே ஒரு தோணி’ புத்தகத்தைப் படிக்கக் கொடுத்தார். படித்தேன். படித்துக் கொண்டிருக்கும்போதே எனக்கு நாவல் எழுதுவதற்கான வடிவம் கிடைத்து விட்டது. ஐம்பது பக்கங்களை எழுதிக் கொண்டுவந்து காட்டினேன். ரொம்ப சிறப்பாக வந்திருப்பதாகச் சொன்னார். அதன்பிறகு உற்சாகமாக எழுதத் தொடங்கினேன். தினமும் இரவு பதினொன் றரைக்கு ஏழுத ஆரம்பித்தால் அதிகாலை நாலு மணிவரை  எழுது வேன். இப்படி மூன்று மாதத்தில் இந்த நாவலை எழுதி முடித்தேன்.

என் சமூகத்தைப் பற்றி தமிழ்ச் சமூகத்துக்குச் சொல்வதற்குக் கிடைத்த அரிய வாய்ப்பாகத்தான் இதை நினைக்கிறேன். அதனாலே நிறைய பொறுப்புணர்வோடும், கடமை உணர்ச்சியோடும் செயல்பட்டேன். நான் சொல்ல வந்த விசயத்தை தெளிவாக, எதார்த்தமாக அதற்குண்டான நடைமுறையோடு சொல்லணும் என்று நினைத்தேனே தவிர, இவர்கள் சந்தோசப்படுவார்கள் என்பதற்காக எதையும் கூடுதலாகவோ, அவர்கள் கோபப்படுவார்கள் என்பதற்காக எதையும் மறைக்கவோ இல்லை. மதநல்லிணக்கம் என்கிற விசயத்தை அழுத்தமாக சொல்லி இருக்கிறேன். சமுதாய ஒற்றுமை என்பதற்காக சில விசயங்களை விட்டுக் கொடுத்திருக்கிறேன்.

மீனவர்களுக்கும் நாடார்களுக்கும் மிகப்பெரிய மோதல்கள் நடந்திருக்கின்றன. அவற்றை எல்லாம் நான் எழுதவில்லை.  மாறாக, இரு சமூகங்களுக்கிடையே உள்ள அன்பான, ஆத்மார்த்த மான உறவுமுறைகளை சகோதரத்துவத்தை நான் ரசித்து, அந்த உணர்வுகளை சொல்லி இருக்கிறேன்.

கடலைப் பற்றியும் மீன்களைப் பற்றியும் நிறைய தகவல்களைத் தந்திருக்கிறீர்கள். கடலிலேயே தன் வாழ்நாள் முழுவதையும் கழித்த ஒரு முதிய அனுபவஸ்தரைப் போல கதை சொல்லியிருக்கிறீர்கள். இந்தத் தகவல்கள் எல்லாம் உங்களுக்கு எப்படி கிடைத்தன?

சமஸ்: மொதல்ல இங்க ஒத்துமை ...

புத்தகம் எழுதுவதற்காகத் திரட்டப்பட்ட தகவல்கள் அல்ல இவை. வாழ்வின் போக்கில் எனக்குள்ளே இயல்பாகத் திரண்டிருந்த விசயங்கள்தான். உதாரணத்திற்கு, இந்நாவலில் வரிப்புலி மீனைப் பிடிக்கும்போது கால் கெண்டை நரம்பில் தூண்டில் மாட்டிக் கொள்வதாக ஒரு சம்பவம் வரும். இந்தச் சம்பவத்தை நான் எட்டு வயதில் பார்த்தேன். அந்தச் சம்பவத்தைத்தான் இப்போது வேறு சில விசயங்களோடு இணைத்து காட்சிப் படுத்தியிருக்கிறேன். இப்படியாகத்தான் ஒவ்வொரு சம்பவங்களையும் பாத்திரங் களையும் உருவாக்கியிருக்கிறேன்.

சின்ன வயதில் கடலுக்குள் நான் போகக்கூடாது என்று பெற் றோர் கட்டுப்பாடு விதித்திருந்தார்கள். மீறிப்போனால் அடி விழும். அடி விழுந்தாலும் பரவாயில்லை என்று வீட்டுக்குத் தெரியாமல் நண்பர்களோடு மீன் பிடிக்கக் கடலுக்குப் போயிருக்கிறேன்.

லயோலா கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்கூட விடுமுறைக்கு ஊருக்குப் போனால் நண்பர்களோடு வலைக்குப் போவேன். அந்த அனுபவமும் எனது நாவலுக்கு உதவி புரிந்தது.

நான் பிறந்து வளர்ந்த நடுத்தெருவில் மக்கள் படும் கஷ்டங்கள் எனக்குத் தெரியும். முதியவர்கள் மீன் சுமந்து காட்டுக்கு விற்கப் போவதும், வாலிபப் பெண்கள் தேரிக் காடுகளில் ஒடமுள் அடிக்கப் போவதும், கழிப்பிட வசதி இல்லாமல் ஊர்க்காடுகளில் ஒதுங்குவதும் அன்றாடம் நான் காண்கிற காட்சிகள்.

Andhimazhai - அந்திமழை - அமைதியாகவே ...

கடலில் கட்டுமரங்கள் பாய் விரித்துச் செல்லும் அழகை ரசித்திருக்கிறேன். கடலில் அடிபட்டு இறந்தோ, கை கால் முறிந்தோ வந்தவர்களைக் கண்டு நெஞ்சு கனத்து அழுதுமிருக்கிறேன்.

ஊர்க்கூட்டம் நடக்கும்போது ஓரமாக நின்று அவதானித்திருக்கிறேன். ஜெபம் முடிந்த பிறகு ‘ஆசிரியம்’ பாடுவார்கள். பெரும்பாலும் முதியவர்கள்தான் பாடுவார்கள். எந்த ஓர் இசைக் கருவியும் இல்லாமல் சிம்மக்குரல் எடுத்து அவர்கள் பாடும் பாடலில் பரதவர்களின் வாழ்க்கை அவர்களின் கடலாடும் தன்மை, வீரஞ்செறிந்த மீன் வேட்டைகள், கடலில் எதிர்கொள்ளும் காற்று, புயல், கடற்கரையில் வாடி நிற்கும் குடும்பத்தாரின் நிலை பரம்பரை பரம்பரையாக அவர்களுக்கு வரக்கூடிய ஞானம். இவை பத்தியெல்லாம் ஏராளமான தகவல்கள் அந்தப் பாடல்களில் இருக்கும். அவற்றை ரசித்துக் கேட்டுக்கொண்டிருப்பேன்.

படைப்பு வேறு, படைப்பாளி வேறா ...

கிழடு கட்டைகள் கடற்கரையில் உட்கார்ந்து ஏல் சொல்லும் போது (கரையிலிருந்தபடி, கடலில் திரியும் கட்டு மரங்களைப் பார்த்து யோசனை சொல்வது) முக்காடு போட்டுக் கொண்டு அவர்கள் பக்கத்திலே உட்கார்ந்து கேட்டுக்கொண்டிருப்பேன். அதில் ஏராளமான தகவல்கள் இருக்கும். “வரிப்புலின்னு ஒரு மீன் இருந்தது. அது இப்போ இல்லை. வெள்ளைக்குறி மீன் ரொம்ப ருசியா இருக்கும். கப்பல் வர்றதாலே இப்போ இல்லாம போச்சையா’’ என்று ஆதங்கப்பட்டுக் கொண்டிருப்பார்கள். இப்படியாகக் கிடைத்தவைதான் அந்தத் தகவல்களெல்லாம். இவை யெல்லாம் இயல்பாக எனக்குள் பதிவான விசயங்கள்தான். இப்போது நாவலாக வந்துவிட்டது. ஆனால், இப்படி ஒரு நாவல் எழுதுவோம் என்கிற எண்ணம் எனக்குள் இருந்ததில்லை.

அப்படியானால், நீங்கள் நாவலில் சொல்லி இருக்கிற தகவல்கள் பாத்திரங்கள் அனைத்தும் உண்மையானவையா?

தகவல்கள் அனைத்தும் உண்மை. கதாபாத்திரங்களிலும்கூட சில உண்மை. ஆனால், பல கதாபாத்திரங்கள் நானே உருவாக் கியவை. உதாரணமாக, காகு சாமியார் உண்மை. அவரை நான் எட்டு வயதில் பார்த்திருக்கிறேன். அவரது உருவப் படத்தை ரொம்ப சிரமப்பட்டுத் தேடி நூலிலும் வெளியிட்டிருக்கிறேன். ஆனால், கோத்ரா, சூசை போன்ற பாத்திரங்கள் நானே உருவாக்கியவை.

“பரம்பரை பரம்பரையாக மீனவர்களுக்கு வருகிற ஞானம்’’ என்று குறிப்பிட்டீர்கள். என்ன மாதிரி ஞானம்?

சாகித்ய அகாடமி விருது பெற்றவன் ...

மீனவர்கள் நட்சத்திரங்களைக் கொண்டே நாழிகை சொல் வார்கள். காற்றின் அசைவைக் கொண்டே கடலில் மாறுபடும் நீரோட்டங்களைச் சொல்வார்கள். குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட இன மீன்கள் குறிப்பிட்ட இடத்திலிருந்து குறிப்பிட்ட இடம் நோக்கி பாயும் என்பதும், அதற்குத் தகுதியான வலைகளை வடிவமைக்கவும் அவர்களுக்குத் தெரியும். இப்படியான பல விஷயங்களை  கடல் தொழிலை ஆரம்பிக்கும் சிறுவயதிலேயே அவர்களை அறியாமல் அறிந்து வருகிறார்கள்.

கடலிலே ஆண் கடல், பெண் கடல் என்று இருக்கிறதா?

குளம் போல் அமைதியாகக் கிடக்கும் கடலை பெண் கடல் என்பார்கள். அலைகளோடு ஆர்ப்பரிக்கும் கடலை ஆண் கடல் என்பார்கள். மடைகள் (மீன்கள் தங்கி இனப்பெருக்கம் செய்யும் இடங்கள்) உள்ள பகுதி ஆர்ப்பரிக்கும் கடலாக இருக்கும். இந்த மடைகளில் மீன் பிடிக்கத்தான் பழமையான மீனவர்களுக்கும், நாட்டுப்புற கட்டுமர மீனவர்களுக்கும், விசைப்படகு மீனவர்களுக்கு மிடையே எப்போதும் போட்டி வரும்.

காகு சாமியார் என்றொரு உன்னதமான பாதிரியாரை பாத்திரப்படுத்தி இருக்கிறீர்கள். அவர்  சிறந்த முற்போக்காள ராகவும், களப்பணியாளராகவும் மிகச்சிறந்த மனிதராகவும் இருக்கிறார். இப்படியொரு பாதிரியார் இருப்பது அபூர்வ மல்லவா?

எனது சிறுவயதில் நான் பார்த்து மரியாதை செய்த மிகத் தன்மையான ஒரு சாமியார் இந்தக் காகு சாமியார். அவர் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும் என்பது என் ஊகம். அல்லது பாதிரியார் என்பவர் இப்படித்தான் இருக்கவேண்டும் என்கிற என் நிலைப்பாடு. நான் சந்தித்த நல்ல சாமியார்களின் ஒட்டுமொத்த உருவம்.

நாவல் முழுவதும் மரணங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. தொம்மத்திரை, கோத்ரா, இருட்டியார், ஜஸ்டின், ஊமையன், சாரா, வியாகுலப் பிள்ளை, நோக்களத்தா, காகு சாமியார் என பலரும் நாவலுக்குள் மரணமடைகிறார்கள். ஒவ்வொரு மரணமும் ஒவ்வொரு விதமான தாக்கத்தை  ஏற்படுத்துகின்றன. கலவரங்களும் கொலைகளும் நிறைந்ததாக மீனவர் சமூக வாழ்வைச் சித்தரித்திருக்கிறீர்கள். உண்மையில் அப்படித்தானா?

எழுத்தாளர்+ஜோ+டி+குரூஸ்

வலுமுடுக்கு உள்ளவன் வாய் பேச்சுத்தான் அங்கு எடுபடும். அங்குள்ள எல்லாத் தலைவனும் அவனுக்குப் பின்னாலே கம்பெடுக்க நாலு பேரோ, நாற்பது பேரோ உள்ளவனாகத்தான் இருக்கிறான். ஊர்க்கூட்டம் நடக்கும்போதுகூட அரைக்குள் போட் டிருக்கிற அரிவாளை எடுத்து ஆவேசமாகப் பேசுகிற சூழல்தான் அங்கே இருக்கு. மீன் பிடிப்புக்காக வலை போடும்போது தகராறு ஏற்பட்டு உயிரிழப்புகள் நடக்கும். அது கரையிலும் எதிரொலிக்கும். அங்கேயும் வெட்டிக் கொண்டு சாவார்கள். பரம்பரைக் குடும்பப் பகையால் அவ்வப்போது கலகங்கள் நடக்கும்.

வீரம் என்ற பெயரில் தான் சார்ந்த அரசியல் கட்சியினுடைய வெற்றிக்காகத் தனது தங்கையின் கணவனையே வேலால் மார்பில் குத்தி முதுகில் உருவிய கொடூரத்தையும், பின் அவனே வருந்தி, அழுதபடி குத்தப்பட்டவரை மருத்துவரிடம் தூக்கிச் சென்றதையும் நானே நேரில் கண்டிருக்கிறேன்.

சாகித்ய அகாடமி விருது பெற்றவன் ...

மீனவர்களிடையே மூன்று விதமானவர்கள் உண்டு. முதலாவது, மீன் பிடிப்பதையே தொழிலாகக் கொண்ட கம்மரர்கள். இரண்டாவதாக, கம்மரர்களாக இருந்து சிறிய படிப்பறிவின் மூலம் அரசு அல்லது தனியார் உத்தியோகத்தில் அமர்ந்ததின் மூலம் கம்மரர்களையே மதிக்காத மெனக்கடர்கள். மூன்றாவது, ஒரு காலத்தில் கம்மரர்களாக இருந்து, பின் மெனக்கடர்கள் ஆகி, அதன்பின் மேசைக்காரர்களாக மாறியவர்கள். இந்த மேசைக் காரர்கள் தங்களை உயர்குடிப் பிறப்பார்களாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். மேசைக்காரர்களும் மெனக்கெடர்களும் தங்களின் சுயகௌரவம் காப்பாற்றப்படுவதற்காக கம்மரர்களை பலி கொடுத்து வருகிற கொடுமை அங்கே நடக்கிறது.

காற்றிலும் கடலிலும் கருகிச் சம்பாதிக்கும் பணத்தை நீதி மன்றங்களிலே தொலைக்கக்கூடிய அவலமும் அங்குள்ளது. இதனா லெல்லாம் அங்கே கணவனை இழந்த பெண்களே அதிகம்.

கலவரங்களுக்கு அடுத்தபடியாக அம்மக்களின் காமம் பற்றி நிறைய பேசியிருக்கிறீர்களே...?

இந்தப் பகுதியில் நடக்கிற பல மோதல்களின் நதிமூலத்தைத் தேடிப்போனால், அது காமம் என்கிற ஒரு புள்ளியிலிருந்துதான் தொடங்கும். இது அதிர்ச்சியும் வேதனையும் தரக்கூடிய விசயமாகத்தான் இருக்கிறது.

மந்திரவாதியாக ஒரே ஒரு அத்தியாயத்தில் வந்து மர்மமாக செத்துவிடுகிற இருட்டியாரும், அவரது மந்திர தந்திரங் களும் எந்த வகையில் இந்த நாவலுக்கு முக்கியன் என்று நினைக்கிறீர்கள்?

என் மக்களுக்கு மூடநம்பிக்கையும் உண்டு என்பதைச் சொல்லியாகவேண்டும் என்பதற்காகவே அவரை நாவலுக்குள் கொண்டு வந்திருக்கிறேன். மூடநம்பிக்கையை மென்மையாகச் சாடியுமிருக்கிறேன்.

‘வசந்தா’ என்கிற பெண் பாத்திரத்தை மிகச் சிறப்பாக சித்தரித்திருக்கிறீர்கள். தன்னை ஏமாற்றியவன் நெஞ்சு பிளந்து உயிருக்குப் போரடிக் கொண்டிருக்கும்போது அவனது பிளந்த நெஞ்சில் மண்ணை அள்ளிப் போடுகிற அவளின் கோபம், அதிர்ச்சியில் அவன் ஜீவன் கண்களில் வழிய, அதேகணத்தில், “இப்படி செய்ய வைச்சுட்டியே பாவி’’ என அவள் கதறுவது... ரொம்ப நுட்பமாக பதிவு செய்திருக்கிறீர்கள். இப்படியான பாத்திரம் தமிழக்குப் புதிது. வசந்தா உண்மையில் வாழ்ந்த அல்லது வாழ்ந்து கொண்டிருக்கிற பெண்ணா?

என்னில் தாக்கத்தை ஏற்படுத்திய பல பெண்களின் ஒருமை தான் வசந்தா. எத்தகைய கோபாவேசம் உள்ளவர்களாயினும் மரணத்தின் புள்ளியில் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள் கிறார்கள். காரணம், அந்தக் கணத்தில் கோபாவேசம் மூழ்கடிக்கப் பட்டு மனிதம் மிஞ்சி விடுகிறது.

மீனவ சமூகத்திலிருந்து படித்த தலைமுறை வந்திருக்கிறது. இந்நாவலை அவர்கள் படித்திருக்கலாம். அவர்களின் அபிப்ராயம் என்னவாக இருக்கிறது?

அவர்களிடமிருந்து நேரடியாக எந்த அபிப்ராயமும் என்னிடம் இதுவரை வரவில்லை. இனி வரலாம். அபிப்ராயம் என்பது, சில தனிநபர்கள் என் நாவலுக்குள் தாக்குதலுக்குள்ளாகி இருக் கிறார்கள் என்பதாகவோ, காம விரசங்களை அதிகமாக காட்டி யிருப்பதாகவோ கூறலாம். உண்மையில் இந்த நாவல் ஒரு மீனவ கிராமத்தின் குறுக்கு வெட்டுத் தோற்றம். விருப்பு வெறுப்பின்றி நான் அளித்திருப்பது ஒரு நிலைக்கண்ணாடி. அதில் உன் முகம் தெரிந்தால் அதற்கு நான் பொறுப்பாளி அல்ல.


சந்திப்பு: சூரியசந்திரன்

புதிய புத்தகம் பேசுது, ஜூன் 2005

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சங்க இலக்கியம் முதல் பெண் கவிஞர்கள் : பத்மாவதி விவேகானந்தன் நேர்காணல்

எனது கதைகள் வரலாற்று ஆவணங்கள்: மேலாண்மை பொன்னுச்சாமி நேர்காணல்

கவிஞர் அறிவுமதி பாடலாசிரியரான கதை