இலக்கியத்துக்கு ஆரவாரம் தேவையில்லை: பூமணி நேர்காணல்

Poomani (Author of வெக்கை)

கோவில்பட்டியில் இருந்து ஆறு மைல் தொலைவில் இருக்கிற ஆண்டிப்பட்டிதான் நான் பிறந்த கிராமம். ரொம்ப சின்ன கிராமம். நான் பிறந்த காலத்திலே மின்சாரம் என்பதே எட்டிப் பார்க்காத கிராமம். விளக்கு வெளிச்சத்திலே - அதன் குளிர்ச்சியான ஒளியிலே படிச்சவன் நான். விளக்கு வளைஞ்சு நெளிஞ்சு நாணி கோணி எரியும். அதைச் சீண்டி விட்டு கிட்டு, அதோட விளையாட்டே படிப்பேன். அப்போ, என் அம்மாவும் பாட்டியும்  ஊட்டிய நிலாச் சோறும், சொன்ன நிலாக் கதைகளும் எனக்கு ரெம்பப் பிடிச்சிருந்தது. தண்ணியிலே குதிச்சு விளையாடுறது, புழுதியிலே சடுகுடு விளையாடறது, கிள்ளித்தட்டு விளையாடுறது... இதெல்லாம் பழம் பெருமை பேசுற விசயம் இல்லே. மனசுக்குள்ளே உள்ள உணர்ச்சிகளை வெளிப்படுத்துற விசயமாத்தான் இந்த விளையாட்டுகள் இருக்கு.

1947ல் பிறந்தேன். 1963வரைதான் கிராமத்திலே இருந்தேன். அதுக்குப் பிறகு விருதுநகர் கல்லூரிக்குப் படிக்கப் போயிட் டேன். அதன் பிறகு ட்ரெயினிங், வேலைன்னு கிராமத்தைவிட்டே வெளியே வந்தாச்சு. தொப்புள் கொடி அறுந்த உணர்ச்சிதான் அது. அம்மா இருக்கும்வரைக்கும் போய்ட்டு வந்துகிட்டு இருந் தேன். அம்மாவின் அகால மரணத்துக்குப் பிறகு ஏனோ பழைய ஈர்ப்புஇல்ல.
எனக்கு மூன்றரை வயசிருக்கும்போதே அப்பா இறந்துட்டார். எனக்கு எல்லாமே அம்மாதான். அவுங்க கைநாட்டுதான் வைப்பாங்க. எனக்கு நாலு அக்காமாரு. ஒரு அண்ணன். நான் கடைசிப் பிள்ளை என்பதாலே எல்லாருடைய அன்பும் பரிவும் கிடைச்சது. எனக்கும் அண்ணனுக்கும் ஆறு வயசு வித்தியாசம். கொஞ்ச நாள் எனக்கு கல்லூரி வாத்தியாராக்கூட அவர் இருந்திருக்கிறார். மத்தவங்க எல்லாரும் படிப்பறிவு இல்லாதவங்க. அம்மா பாடுற தாலாட்டுல எனக்கு ரொம்ப ஈடுபாடு. இழவு வீட்டிலே தன் சோகங்களைச் சொல்லி அழுகிற ஒப்பாரியிலே கரைஞ்சுப் போவேன்.

நாய் வளர்ப்பேன், பூனை வளர்ப்பேன், கிளி வளர்ப்பேன். எனக்குச் சின்ன வயசிலேயே முரட்டுத்தனம் குறைஞ்சு போச்சு. அப்பா இருந்திருந்தா அவரோட முரட்டுத்தனம் எனக்கும் வந்திருக் கலாம். அப்பா, சுத்துப்பட்டியிலே ரொம்ப முக்கியமான ஆளா இருந்திருக்கார். கம்பீரமான - தாட்டிகமானவருன்னு சொல்லுவோ மில்லையா அப்படியான மனுசன். ஆனா, எனக்கு அவர் முகம்கூட சரியா புரிபடல.

இருக்கங்குடி மாரியம்மன் கோயிலுக்கும், திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கும் எங்க சனங்க காவடி எடுப்பாங்க. கூட்டமாச் சேந்து ஊர் ஊரா தங்கி ஊர் விளையாடி, கிடைக்கிற தானியங் களைச் சேகரிப்பாங்க. அப்போ, களைப்பை மறக்க காவடிப் பாட்டு பாடுவாங்க. அந்தக் காவடிச் சிந்தின் மீது அப்படி ஓர் ஈர்ப்பு எனக்கு. இப்பவும் தனிமையில் இருக்கும்போது, பஸ்ஸில் போகும்போது நினைவு வரும். அதிலே நடக்கிற சில நையாண்டிகளில், நையாண்டியான ஏசலான பாடல்களிலும் எனக்கு ரொம்ப ஈடுபாடு உண்டு.

எங்க கிராமத்திலிருந்து ரெண்டு மைல் தொலைவிலே ‘இளையரசனேந்தல்’னு ஒரு ஊர். என்னோட நைவேத்தியம், வரப்புகள், வாய்க்கால் நாவல்களில் அந்த ஊர் வரும். அது ஒரு ஜமீன்தார் ஊர். ஜமீன்தார் பையனும், பெண்ணும் என்னோட படிச்சாங்க. அந்த ஜமீன் அரண்மனையில் விசேஷ நாளிலே காருக்குறிச்சி அருணாசலம் நாதஸ்வரம் வாசிப்பார். அது என்ன ராகம் தாளம்னு எனக்குத் தெரியாது. ஆனா, அதிலே உள்ள ஈர்ப்புச் சக்தி எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

எங்க ஊரு திருமணங்களுக்கு, காரியங்களுக்கு ஒரு வாத்திய நிகழ்ச்சி இருக்கும். அதாவது, மேளம், முரசு, தவில், உறுமி, ஒத்து, நாதஸ்வரம் இப்படி எல்லாம் கலந்து ஒரு இசை. ஒவ்வொரு விசேஷத்துக்கும் ஒவ்வொரு மாதிரி வாசிப்பாங்க. அது என்னை ரொம்பப் பாதிச்சிருக்கு.

இதுபோக, சின்னச் சின்ன பெண்கள் நிலாக் காலங்களில் கும்மி அடிப்பாங்க. அது கேட்க ரொம்ப வித்தியாசமா இருக்கும். இப்ப நினைச்சுப் பாக்கும்போது, இந்த விசயங்களெல்லாம் எனக்குள்ளே கலையுணர்வு திரண்டு வர்றதுக்கு அடிஉரமா இருந்திருக்குன்னு தெரியுது.

இலக்கியம் படிக்கிற வாய்ப்பு எப்போ கிடைச்சது?

எனக்கு பனிரெண்டு வயசிருக்கும். அப்போதான் ‘கல்கி’ இதழ் படிக்க ஆரம்பிச்சேன். எங்க ஊரிலே பாலசுப்ரமணியம்னு ஒரு வாத்தியார். அவர் கல்கியை வாங்குவார். கல்கியைப் பத்திரிகை ஏஜென்ட் ஸ்கூல் பசங்ககிட்டேதான் கொடுத்து அனுப்புவார். அதை வாங்குறதுக்கு எங்களுக்குள்ளே போட்டி. பெரும்பாலும் நான்தான் வாங்கிக் கொண்டுபோய் கொடுப்பேன். அப்படி வாங்கிட்டுப் போகும்போதே பிரிச்சுப் படிப்பேன். பிறகு அவர் வீட்டுக்குப் போய், ராத்திரி ரெம்ப நேரம் விளக்கு வெளிச்சத்திலே படிப்பேன். அவர் சம்சாரமும் டீச்சர்தான். அதனாலே, அவங் களும் படிக்க அனுமதிப்பாங்க. ராத்திரி நான் படிச்சி முடிச்ச பிறகுதான் அவங்க காலையிலே படிப்பாங்க. அதிலேதான் ‘சந்திரனே சாட்சி’ன்னு ஒரு படக்கதை. கௌசிகன் எழுதினார். வினு படம் போட்டார். கோர்ட் சீன், அது இதுன்னு ரொம்ப விறுவிறுப்பாய் போகும். அதுதான் நான் படிச்ச முதல் கதை.

அகிலனின் ‘கயல்விழி’, ‘புதுவெள்ளம்’ ரெண்டும் கல்கி மூலமாத் தான் படிச்சேன்.  நா.பா.வின் ‘பொன்விலங்கு’ படிச்சேன். இப்படி, படக்கதை, தொடர்கதை படிக்கிறதுதான் என் ஆரம்பகால வாசிப்பு அனுபவமா இருந்தது. மத்தபடி, அம்புலிமாமா கிடைச்சா படிப்பேன்.


எப்போ எழுத ஆரம்பிச்சீங்க?

எழுத்தாளர் பூமணி நேர்க்காணல் - 1 ...

கல்லூரி நாட்களில் எனக்கு தமிழார்வம் நிறைய இருந்துச்சு. யாப்பெருங்கலக் காரிகை, யாப்பிலக்கணம் என யாப்பு சம்பந்தப் பட்ட நிறைய விசயங்களைப் படிச்சேன். அப்போ, கவிதை எழுத ணும்கிற ஆர்வம் வந்துச்சு. பெண்ணை வர்ணித்து ஒரு கவிதை எழுதினேன். சி.கனகசபாபதின்னு எங்க தமிழ்ப் பேராசிரியர். நவீன இலக்கியத்தில் புதுக்கவிதையில் ரொம்ப ஈடுபாடு உள்ளவர். நல்ல விமர்சகர். ‘எழுத்து’ செல்லப்பாவோட நண்பர். அவர் ‘தீபம்’, ‘எழுத்து’ பற்றியெல்லாம் எனக்குச் சொல்லியிருந்தார். ஒரு கவிதையை தீபத்துக்கு அனுப்பி வைச்சேன். அது ‘ஏனோ தெரிய வில்லை’ என்ற தலைப்பில் வந்தது. அதுதான் நான் எழுதிய, பத்திரிகையில் வெளிவந்த முதல் கவிதை. அந்தக் கவிதை வந்தபிறகு எல்லாரும் என்னை “கவிஞர், கவிஞர்’’னு பெரிசா பேச ஆரம்பிச் சிட்டாங்க. கவியரங்கத்தில் கலந்துகிட்டு கவிதைகள் வாசித்து பரிசெல்லாம் வாங்கியிருக்கேன்.

வால்ட் விட்மன், எஸ்ரா பவுண்ட், டி.எஸ்.எலியட், ந.பிச்ச மூர்த்தி இவங்களைப் பற்றியெல்லாம் கனகசபாபதி எனக்குச் சொல்வார். எனக்கு இன்னொரு ஆசிரியராக இருந்தவர் தி.சு.நட ராஜன். அவர் முற்போக்கு விசயங்களைச் சொல்வார். இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்தது.

கல்லூரி நூலகம் எனக்கு ரொம்ப உதவியா இருந்தது. நான் படிக்கிற நூல்கள், கேட்கிற எழுத்தாளர்கள் எல்லாத்தையும் கவனித்து நூலகர் என்னை ஒரு மாதிரி பார்ப்பார். அவர் ஒரு முறை தனது உதவியாளரிடம், “இவரை உள்ளே விட்டுவிடு. தூசு படிஞ்ச புத்தகங்களை எல்லாம் தூசு தட்டிக் கொடுத்துவிடுவார்’’ என்றார் கிண்டலாக. அங்கே ‘தீபம்’ வந்தது. அதில்தான் கி.ராஜநாராயணன் கதைகளைப் படிச்சேன். கதவு, மனிதம், கனா, கரண்டு இப்படி கி.ரா.வின் கதைகள் பலவற்றை தீபத்திலேதான் படிச்சேன்.

எஸ்.வைதீஸ்வரன், ந.பிச்சமூர்த்தி, சி.மணி கவிதைகளெல்லாம் ‘எழுத்து’ இதழில் வரும். ஒருநாள் திடீர்னு கனகசபாபதி, “நீ புதுக் கவிதை எழுதலாமே’’ன்னார். எனக்கும் எழுதலாம்னு தோணுச்சி. ரெண்டு கவிதைகள் எழுதினேன். ஒண்ணு ‘சிவன் துணை’. இன்னொன்னு தலைப்பு ஞாபகமில்லை. ரெண்டையும் ‘எழுத்து’க்கு அனுப்பினேன். ரெண்டுமே பிரசுரமாச்சு.

“ஏழ்மைப் புழுதியில்
கழுதைப் பெருமூச்சில்
புரண்டு உருண்டு
எழுந்த விளைவில்
சிவன் கோலம்
திருவோடு ஏந்தி...’’
என்று தொடங்கும் ஒரு கவிதை. இதுதான் நான் எழுதி பத்திரிகையில் வெளிவந்த முதல் புதுக்கவிதை. 1966ல் வெளிவந்ததாக ஞாபகம். நல்லா இருக்குன்னு எல்லாரும் சொன்னாங்க.

முதலில் யாப்புலே எழுதி, பிறகு, புதுக்கவிதைக்கு மாறியிருக்கீங்க. சிறுகதை எப்போ எழுத ஆரம்பிச்சீங்க?

யாப்பை விட்டுட்டு அப்படியே புதுக்கவிதைக்கு மாறிட்டேன்னு சொல்ல முடியாது. புதுக்கவிதை எழுதின பிறகும் யாப்பிலே கவிதை எழுதிகிட்டுத்தான் இருந்தேன். ‘சாந்தி’யிலே வண்டி இழுக்கிறவனைப் பற்றி எழுதின கவிதை மரபுக் கவிதை தான்.

கதை எப்போ எழுத ஆரம்பிச்சேன்னா... கல்லூரி படிப்பு முடிஞ்சு, வேலை இல்லாம வீட்டில் இருந்த ஒரு வருசத்திலே கி.ராஜநாராயணனோட எனக்குக் கடிதத் தொடர்பு ஏற்பட்டுச்சு. அவர் கதைகளை தீபத்திலே படிச்சிருக்கேனில்லையா. அதனால அவர் மீது எனக்கு நிறைய ஈடுபாடு இருந்தது. அவர் என்னை ரொம்ப உற்சாகப்படுத்தினார். “நல்லா கடிதம் எழுதினாலே நல்ல எழுத்தாளர்தான்’’ என்பார். அவரோட சிறுகதைகளைப் படிக்கப் படிக்க எனக்கும் கதை எழுதலாம்னு தோணுச்சு. ‘இவருக்கு (கி.ரா.வுக்கு) இருக்கிற அனுபவம் நமக்கும் இருக்கு. ஆனா, வித்தி யாசமான மக்களைப் பற்றி கதை சொல்வதற்கு நம்மிடம்தான் விசயம் இருக்கு’ன்னு நினைச்சு கதை எழுத ஆரம்பிச்சேன். நானே எழுதி எழுதிப் பார்த்தேன். போட்டு வச்சேன். பிறகு எடுத்து எழுதினேன். பிறகுதான் அந்தக் கதை முழுமை ஆச்சு. என் முதல் கதை ‘அறுப்பு’. வயலிலே நடக்கிற அறுப்புக்கும் பெண்களுக்கு நடக்கிற தாலி அறுப்புக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறதா நினைச்சேன். அது பற்றிய கதைதான் இது.

‘அறுப்பு’ கதையை எழுதிய அனுபவம்?

ஒருமுறை வயலிலே அறுப்பு அறுக்கிற பெண்களைப் பார்த்தேன். பெண்கள் குனிந்து நெல் அறுக்கும்போது கழுத்திலே இருந்து தாலி தொங்கும். ஆனா, ஒரு பெண்ணோட கழுத்து மட்டும் காலியா இருந்துச்சு. கதிரறுக்கிற அந்தப் பெண்ணோட தாலி அறுப்பு எப்படி நடந்திருக்கும்னு நினைச்சுப் பார்த்தேன். அப்படி உருவானதுதான் அந்தக் கதை. நனவோடை உத்தியிலே எழுதப் பட்டது. ‘எழுத்து’லேதான் வந்தது. ரொம்ப நல்ல கதைன்னு எல்லாரும் சொன்னாங்க.

தி.சு.நடராஜன் எனக்குத் தாமரையை அறிமுகப்படுத்தினார். அதன் மூலம் தி.க.சி.யோட கடிதத் தொடர்பு கிடைச்சுது. அவர் ‘தாமரை’க்கு எழுதச் சொல்லி கேட்டார். அப்போது ‘தாமரை’ கரிசல் மலர் தயாரானது. கி.ரா.தான் தயாரித்தார். அதுக்கு ஒரு கதை என்னிடம் கேட்டார். அதுக்காக, ‘பிஞ்சுப் பழம்’னு ஒரு கதை எழுதினேன். சின்ன வயசிலேயே பழுத்துப் போனவனைப் பற்றிய கதை அது. ‘கரிசலன்’ என்ற பெயரில் ஒரு கவிதையும் கவியரங்கக் கவிதை மாதிரி எழுதிக் கொடுத்தேன். இரண்டும் கரிசல் மலரில் வெளிவந்தன.

பூமணி

‘வயிறுகள்’ கதையும் தாமரையில் வந்ததுதான். அந்தக் கதை ‘தாமரை’ சார்ந்திருக்கும் இயக்கத்தினுடைய கொள்கைக்கு மாறுபட்டதாக இருந்தாலும், தி.க.சி. வெளியிட்டார். ரொம்ப விவாதிக் கப்பட்ட கதை அது. தி.க.சிக்கு எங்களை வளர்த்தெடுக்கணும் என்பதில் ரொம்ப ஆர்வம் இருந்தது.

செருப்புத் தைக்கும் சமூகத்தவரின் வாழ்க்கையை முதன்மைப்படுத்தி எழுதப்பட்ட உங்களின் முதல் நாவல் ‘பிறகு’, தமிழில் மிகமுக்கியமான நாவல்களில் ஒன்றாக இருக்கு. உங்க ளுடைய ‘மாஸ்டர் பீஸ்’ம் அதுதான்னு நினைக்கிறேன்...

வேலை இல்லாம இருந்த காலகட்டத்திலேதான் ‘பிறகு’ நாவலுக்கான கதைக்கரு உருவானது. என் இளமைக் காலத்தில், வயல் காட்டிலே, கதிரடிக்கிற வயலிலே... இப்படி பல்வேறு இடங் களிலே பல்வேறு மனுசங்களைப் பார்த்து தகவல்களா சேகரித்து வைச்சிருந்தேன். இதையெல்லாம் எப்படி நாவலா கொண்டு வர்றதுன்னு தவிச்சிக்கிட்டிருக்கையிலே, எங்க வீட்டு கேப்ப வெள்ளாம அடிச்சிட்டு இருக்காங்க, அப்போ ஒரு சின்னப்பையன் துரு துருன்னு விளையாடிகிட்டிருந்தான். அவனோட தாத்தாவும் பாட்டியும் கதிரடிச்சுகிட்டு இருக்காங்க. அம்மாவையும் அப்பா வையும் காணலே. இது ரெம்ப வித்தியாசமாப் பட்டது. மத்தியான நேரம். கடைக்குப் போன அந்தப் பையனைக் கூப்பிட்டு ரேடியோ ரூமுலே உட்கார வைச்சு, அவன் வாயைக் கிளறுறேன்.

“அது யாருடா?’’
“எங்க தாத்தா, பாட்டி.’’
“ஏன், தாத்தா பாட்டிகூட இருக்கே?’’
“எனக்கு அம்மா இல்லே.’’
“அப்பா எங்கடா?’’
“அப்பா மிலிட்டரிக்காரரு. எங்க அம்மாவை விட்டுட்டு மிலிட் டரிக்குப் போயிட்டாரு. எங்க அம்மா கிணத்துல விழுந்து செத்துப் போயிட்டா. தங்கச்சியும் கூடவே செத்துப் போயிட்டா’’ன்னு தன் கதையைச் சொல்றான்.

சக்கிலியக் குடும்பத்தோடு எங்க குடும்பத்துக்கு ஓர் இணக் கமான உறவு இருந்தது. எங்க வீட்டு சுபகாரியம் இழவு காரியம் எல்லாத்துக்கும் அவங்க வருவாங்க. ஒவ்வொரு விசயத்திலேயும் அவங்களுடைய வாழ்க்கை முறை, அவங்களின் எதிர்ப்புக் குணங்கள் அவங்களின் அனுபவங்கள், ஆசாபாசங்கள் எல்லாமே எனக்குத் தெரியும்.

கந்தையா நாயக்கருன்னு ஒருத்தர். நானறிய கம்பீரமா இருந்து வாழ்ந்து கெட்டவர். என் சின்ன வயசிலே என்னை “என்ன மாணிக்கம் எப்படிடா இருக்கே?’’ன்னு கேட்ட காலத்திலே இருந்து, நான் பெரியவனான பிறகு “என்னங்க மாணிக்கம், எப்படி இருக்கீங்க?’’ன்னு கேட்கிற காலம் வரை அவரு எனக்குப் பழக்கம். உயர் சமூகத்திலே இருந்தாகூட அவங்க தங்களுக்குன்னு ஒரு மதிப்பீடுகள் வைச்சுகிட்டிருந்தாங்க. அந்த மதிப்பீடுகளில் போற்றத் தக்க விசயங்கள் நிறைய இருக்கு. ஜாதி என்பதையெல்லாம் தாண்டி மனித உறவுகள்னு இருக்கிறதில்லையா, அது பெரிய வெசயம். அடுத்த தலைமுறை கையிலெடுத்துக் கொள்ளவேண்டிய முக்கியமான மதிப்பீடு.

இந்தச் சம்பவங்களை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா குறிப் பெடுத்து சேகரிச்சேன். கேவசதேவின் ‘அண்டை வீட்டார்’, நீல.பத்மநாபனின் ‘தலைமுறைகள்’, சிங்கிஸ் ஐத்மாத்தவின் ‘ஜமீலா’, சில ரஷ்ய நாவல்கள் இவற்றின் உந்துதலில்தான் அந்த நாவலை எழுத ஆரம்பிச்சேன். ட்ரெயினிங்க்காக 1969 பிப்ரவரியில் சென்னைக்கு வந்துட்டேன். இங்கே தாளமாட்டாத கஷ்டம். ஒரு வருசம் சோத்துக்கே வழியில்லாம கஷ்டப்பட்டேன். 1970இல் கோவில்பட்டியிலே வேலை கிடைச்சது. அப்போதான் நல்ல சோறு சாப்பிட முடிஞ்சது. 1971 செப்டம்பர் 15 கோவில்பட்டி செண்பக வல்லி கோயிலில் கல்யாணம். 1972இல் ஒரு பெண் குழந்தை பிறக்குது. குழந்தை பிறந்த 33ஆவது நாள் என் அம்மா இறந்து போறாங்க. ரொம்ப பெரிய பாதிப்பு. இடி இடின்னு இடி விழுந்த மாதிரி ஆயிட்டுது. 1975இல் பையன் பிறக்கிறான். அப்போதான் ‘பிறகு’ நாவலை முடிக்கிறேன். ஐந்து வருடம் எழுதியிருக்கேன். 1976இல் சென்னைக்கு வேலைக்கு வர்றேன். 1976, 77 இரண்டு வருடமும் அதை செழுமைப்படுத்தினேன். சென்னைக்கு வந்திருந்த கவிஞர் மீராவிடம் அதைக் கொடுத்தேன். அவர் படித்து பார்த்து விட்டு உடனே புத்தகமாக வெளியிட்டார்.

‘பிறகு’ நாவலுக்கு முன்னதாகவே, உங்கள் ‘வயிறுகள்’ சிறுகதைத் தொகுதி வெளிவந்துட்டதில்லையா? 

ஆமாம். கோவில்பட்டியில் இருக்கும்போதே ‘வயிறுகள்’ சிறுகதைத் தொகுதியை பிரபஞ்சனும் சேலம் தமிழ்நாடனும் சேர்ந்து தயாரித்தார்கள். என் மனைவியின் சங்கிலியை விற்று அந்தப் புத்தகத்தைக் கொண்டு வந்தேன்.

பிரபஞ்சன், தமிழ்நாடன் நட்பு உங்களுக்கு எப்படி கிடைச்சது?

நாங்கள் ‘தாமரை’ எழுத்தாளர்கள். பிரபஞ்சன், பா.செயப் பிரகாசம், கல்யாண்ஜி, வண்ணநிலவன், கோ.ராசாராம், சேலம் தமிழ்நாடன், ஆ.மாதவன், இப்படி ஒரு பெரிய ‘தாமரை’க் கூட்டம்.

தி.க.சி. வளர்த்துவிட்ட பிள்ளைகள் நாங்கள். தி.க.சி. தமிழ் இலக்கியத்துக்கு - அதுவும் இடதுசாரி இலக்கியத்துக்கு மிகப் பெரிய பங்களிப்பு செய்திருக்கிறார். அவர் இல்லையென்றால், இன்றைக்கு இருக்கும் எழுத்தாளர்களில் பலர் நமக்குக் கிடைத்திருக்க மாட்டார்கள். அவரை ‘போஸ்ட் கார்டு விமர்சகர்’ என்று கூறும் போது நமக்கு அருவெருப்பாக இருக்குது. தாமரையில் என்னோட பத்து கதைகளாவது வந்திருக்கும்.

கோவில்பட்டி பகுதியில்  ஏராளமான இலக்கியவாதிகள் இருக்கிறார்கள். அவங்களோடு உங்களுக்கு ஏற்பட்ட அனு பவம்...?

அது ரொம்ப மகிழ்ச்சியான அனுபவம். தேவதச்சன், கோணங்கி, கௌரிசங்கர், உதயசங்கர், வித்யாஷங்கர், பால் வண்ணம், நாறும்பூநாதன், ச.தமிழ்ச்செல்வன், ‘நீலக்குயில்’ அண்ணாமலை, பாலு நாங்களெல்லாம் செண்பகவல்லிக் கோயில் பின்புறமிருக்கிற காந்தி மைதானத்தில் உட்கார்ந்து இரவு இரண்டு, மூணு மணிவரைக்கும் இலக்கியம் பேசுவோம்.

அப்போ, ‘நீலக்குயில்’னு ஒரு பத்திரிகை நடத்தினோம். அண்ணாமலைதான் பொறுப்பு. நான், தேவதச்சன், கௌரிசங்கர் ஆசிரியர் குழு. தேவதச்சன் வீட்டு திண்ணையிலேதான் பத்திரிகைக் கான விசயங்களைப் பேசுவோம். பத்து இதழ்கள் வந்திருக்கும்.

அந்தக் காலகட்டத்திலேதான் பொன்னீலன், நவபாரதி, பரிணாமன், சந்திரபோஸ் மாதிரியான கலை இலக்கிய பெருமன்றத்தினரின் தொடர்பு கிடைச்சது. அவர்கள் நா.வானமாமலையின் அனுதாபிகளாக இருந்தாங்க. அப்போதான் பொன்னீலன் எனக்கு அறிமுகமானார். விளாத்திகுளம் அருகே ஆசிரியராக இருந்தார். அப்போதுதான் ‘கரிசல்’ நாவலை அவர் எழுதியிருந்தார். கையெழுத்துப் பிரதியாக இருந்த அந்த நாவலை எடுத்து வந்து, ஒரு ராத்திரி முழுவதும் என்னோடு தங்கியிருந்தார்.

கலை இலக்கியப் பெருமன்றத்திலே செயல்பட்டீங்களா?

இல்லை. கோவில்பட்டியில் இருந்த காலத்தில் நான், அக்கினிபுத்திரன், தமிழ்நாடன் போன்றவர்கள் மதுரையில் கூடி, “தென் தமிழக முற்போக்கு எழுத்தாளர் பேரவை’’ன்னு ஓர் அமைப்பை ஆரம்பிச்சோம். அப்போது சென்னையில் ‘மக்கள் எழுத்தாளர் சங்கம்’ உருவாகி இருந்தது. அதன் மாநாட்டுக்கு அங்கிருந்து வந்து கலந்துகிட்டிருக்கிறேன்.

உங்கள் அரசியல் ஈடுபாடு?

சின்ன வயசிலிருந்தே இடதுசாரி ஈடுபாடு எனக்கு உண்டு. நான் நாத்திகச் சிந்தனை உள்ளவன் என்பதாலும், மார்க்சிய நூல்களையும் ரஷ்ய இலக்கியங்களையும் படிச்சதாலும், இடதுசாரி சிந்தனையாளனானேன். சென்னைக்கு வந்த பிறகு பா.செயப்பிரகாசம், வீராசாமி இவங்களெல்லாம் சேர்ந்து மக்கள் கலாச்சாரக் கழகம்’ உருவாக்கினோம். பிறகு இலக்கியத்தின் முக்கியத்துவம் கருதி விலகிச் செயல்பட்டேன்.

‘வீதி’ நாடக அமைப்பை கொஞ்ச காலம் நடத்தினோம். அதில் நான் நடிச்சிருக்கேன். சாமிநாதன், பாரவி, ஞாநி, கே.வி.ராமசாமி, விவேகானந்தன், வீராசாமி இவங்களெல்லாம் ‘வீதி’ நாடக அமைப்பில் இருந்தாங்க. (இதிலிருந்து பிரிந்து போய்தான் ‘பரிக்ஷா’ தொடங்கினார் ஞாநி). பாதல் சர்க்காரை அழைத்து சோழ மண்டலத்திலே ‘நாடகப் பட்டறை’ நடத்தினோம். அது வித்தியாசமான விசயமாகவும் அனுபவமாகவும் இருந்தது.

‘வெக்கை’ நாவலில் உக்கிரமான ஒரு சிறுவனின் வாழ்க்கையைச் சொல்லியிருக்கீங்க. இந்தப் படைப்பு அனுபவம்?

முக்கியமான நாவல் !!! வெக்கை - பூமணி ...

கி.ராஜநாராயணனின் ‘பிஞ்சுகள்’ குறுநாவலைப் படிச்சேன். அதில் ஒரு சிறுவனுடைய விளையாட்டுத்தனமானப் பகுதியைப் பதிவு செய்திருந்தார். ஆனா, அந்தச் சிறுவனுக்குள்ளும் ஓர் உக்கிரமான பகுதி இருக்கு. அவனுக்குள்ளும் ஒரு வெக்கையான வாழ்க்கை இருக்கு. அந்தப் பகுதியை சொல்லணும்னு தோணுச்சு. நானறிய ஒரு சிறுவன் கொலை செய்துட்டு தலைமறைவாகிட்டான். சிதம்பரம் என்கிற அந்தச் சின்னப்பையனா என்னை உணர்ந்துகிட்டேன். அந்த மனநிலையை “கொலை செய்தது சிதம்பரம்; காடு கரைகளில் அலைஞ்சு திரிஞ்சது நான்’’ன்னு சொல்லி இருக்கேன். அந்தக் களங்கள், அந்த விசயங்கள், அனுபவங்கள் எல்லாமே எனக்கு அத்துப்படி.

‘நைவேத்யம்’ நாவலில் பிராமண வாழ்க்கையை பதிவு பண்ணியிருக்கீங்க. பிறப்பால் வேறுபட்ட உங்களுக்கு அவர் களின் வாழ்க்கையை எவ்வாறு பதிவு செய்ய முடிஞ்சது?

நான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள் ...



அக்ரகாரத்து வாழ்க்கை என்பது என்னைப் பொறுத்த வரையில் ரொம்ப உள்ளே போய் பிடிபடாத வாழ்க்கை. அது பெரிய அந்நியமும் இல்லை. என் கிராமத்துக்கும் அந்த அக்ரகாரத் துக்கும் சம்பந்தப்பட்ட ஒரு வாழ்க்கைதான் அதில் சொல்லப் பட்டிருக்கு. என் பள்ளிப் பருவத்திலே அந்த அக்ரகாரம் எப்படி இருந்தது. பின்னால் எப்படி அது சிதைஞ்சுப் போச்சு... என்கிற விஷயத்தை பிராமணரல்லாத ஒருத்தன் - அந்தச் சீரழிவை பார்க் கும்போது அதை எப்படி உணர்கிறான் என்பதுதான் நாவல்.

அக்ரகாரம் என்பது ரொம்ப சுகமான விசயமா இலக்கியங் களிலே சொல்லப்பட்டிருக்கு. வெற்றிலை போட்டுகிட்டு, ஆற்றங் கரையிலே உட்கார்ந்துகிட்டு -- சுகவாசிகளா காட்டப்பட்டிருக்கு. அது அல்ல இது. இங்கேயும் பிரச்சினைகள் இருக்குன்னு நினைக் கும்போது உறுத்தலா இருந்தது. அதைச் சொல்லணும்னு தோணுச்சு. அதுதான் ‘நைவேத்யம்’ நாவல்.

பிறகு, வெக்கை, நைவேத்யம் - இந்த மூன்று நாவல்களும் நீங்க நேரடியா புத்தகமா எழுதுனது. அதுக்குப் பிறகு வந்த வாய்க்கால், வரப்புகள் இரண்டு நாவல்களும் ‘சுபமங்களா’விலும், ‘புதிய பார்வை’யிலும் தொடராக வெளிவந்தவை. அந்த இரண்டு நாவல்களும் மற்ற மூன்று நாவல்கள் அளவுக்குப் பேசப்படலே. ஒரு குறிப்பிட்ட வாசகர்களுக்காக எழுதியதால் வீச்சு குறைந்திருக்கலாமில்லையா?


வாய்க்கால் | Buy Tamil & English Books Online | CommonFolks

கிராமத்துப் பள்ளிக்கூட வாத்தியார்களுக்கென்று ஒரு வாழ்க்கை இருக்கு.  வாய்க்கால் ஓடுது... வாய்க்கால்னா சின்னப் பசங்க - அந்த ஓட்டத்தைச் சரிப்படுத்தி விளைய வைக்க வேண்டியது வரப்புகளோட வேலை.

வரப்புகள்னா ஆசிரியர்கள். இந்த அடிப்படையில் வாத்தியார்களுடைய வாழ்க்கையை வைத்து எழுதப்பட்ட ஒரு சின்ன நாவல்தான் ‘வரப்புகள்’.

Amazon.in: Poomani: Books

‘வாய்க்கால்’ என்பது என் பள்ளிக்கூடத்து வாழ்க்கை. அதில் வேடிக்கை, விளையாட்டு, குறும்பு அத்தனையும் இருக்கும். அதீதமான கற்பனை; சினிமா பாதிப்பு; காதல் இதெல்லாம் இருக்கும். இதையெல்லாம் வைத்துதான் அந்தக் குறுநாவலை எழுதினேன். இதில் உள்ள பல அனுபவங்கள் என்னுடைய நேரடி அனுபவங்கள்தான். இந்த இரண்டையுமே முழுமையா எழுதின பிறகுதான் பத்திரிகைக்குக் கொடுத்தேன். அவர்கள் அத்தியாயம் அத்தியாய மாக வெளியிட்டார்கள். தொடர்கதையாக எழுதவில்லை.

இந்த இரண்டு நாவல்களுமே சின்னப் பையன்களின் வாழ்க்கைப் பற்றியவை என்பதால், குறைந்த அனுபவப் பரிமாணங் களைத்தான் கொண்டுவர முடிந்தது. என்னைப் பொறுத்தவரை நான் இன்னும் ஒரு நாவல்கூட எழுதவில்லை என்றே நினைக்கிறேன். எனக்குள் அப்படி ஒரு ஆதங்கம் இருக்கு.

ஐம்பது கதைகள் எழுதியிருப்பேன். ஆனால், ஒருசில கதைகள் மட்டுமே எனக்கு திருப்தியாக இருக்கு.

எந்தெந்த கதைகள்?

Amazon.in: Buy Poomani Short Stories / பூமணி ...

தொலைவு, தகனம், பேனாக்கள், நேரம், ரீதி, வெளியே இப்படி சில கதைகள்...

காவல்துறை சம்பந்தமாக நிறைய பதிவுகள் உங்க கதைகளில் இருக்கு. பொதுவா, காவல்துறை பற்றிய உங்கள் அபிப்ராயம் என்ன?

காவல் துறையில் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். என் உடன்பிறந்த சகோதரர் காவல் துறையில் உயர் அதிகாரியாக இருந்தார். அவர் வெள்ளைச் சட்டைப் போட்டால் அண்ணனாக இருப்பார், காக்கிச் சட்டை போட்டால் என்னமோ மாதிரி இருப்பார். அந்த அந்நியம் என்னை ரொம்ப உறுத்தும். அவங்களை யெல்லாம் நாம், அடக்குமுறை ஆட்களா பார்க்கிறோம். அவங்களுக்குள்ளேயும் சுரண்டல், ஒடுக்குமுறை, அடக்குமுறை இருக்கு. அவங்களுக்கும் அபிலாஷைகள் இருக்கு. அதையெல்லாம் நாம பதிவு செய்யணும். நானே ‘ஏட்டையா கதைகள்’னு தொடர்ச்சியா எழுதணும், இரண்டு மூணு தொகுப்பு கொண்டு வரணும்னு இருக்கேன். எழுதுவேன்.

நீங்க எழுதினதிலேயே நிறைவைத் தந்த கதாபாத்திரங்கள்...?

பூமணியின் 'பிறகு' | சொல் புதிது!

‘பிறகு’ நாவலில் வருகிற அழகிரி - கந்தையா இருவருக்குமான நட்பு எனக்கு ரொம்பப் பிடிக்கும். கந்தையா உயர்ந்த வகுப்பைச் சார்ந்தவர். அழகிரி தாழ்ந்த வகுப்பு. “சாதியைத் தூக்கி உடைப்புல போடு’’ என்கிற மாதிரியான இவர்களின் நட்பு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குது. அதேபோல், ‘நைவேத்தியம்’ நாவலில் வரும் சங்கரய்யர் -  சீதை இருவருக்குமான நட்பு “எல்லாம் அப்படித்தான் இருக்கு’’ என்கிற மாதிரி இருக்கும். இதுவும் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு.

சமீபத்தில் தினமணி ரம்ஜான் மலரில், அரசு ஊழியர்கள் பிரச்னையை மையமா வெச்சு ‘வெளியே’ன்னு ஒரு கதை எழுதியிருந்தீங்க. அதுக்கு முன்னாடி நீண்ட இடைவேளை இருந்ததே...?

சிறுகதைகளை ஒரே ஒரு நாளில் எழுதுறதும், ஒரு வாரம், ஒரு மாசம்னு எழுதுறதும் உண்டு. திட்டமிட்டு ஒரு சிறுகதையை எழுத முடியாது. உள்ளுக்குள் அந்த அனுபவம் எவ்வளவு உந்து தலோடு இருக்குதோ, அந்த அளவுக்கு சீக்கிரமா எழுத முடியும். ‘வெளியே’ எனக்கு நிறைவான சிறுகதை. பொதுவா சிறுகதை வடிவம் இப்போ எனக்கு மலைப்பாத்தான் இருக்கு.

உங்கள் மொழியை எல்லாரும் சிலாகிச்சு சொல்றாங்க. நறுக்கு தரித்த மாதிரி எழுதுறீங்களே, எப்படி...?

மொழி பற்றிய சரியான புரிதல் எனக்கு உண்டு. எழுத்துச் சிக்கனம் ரொம்ப தேவையாய்ப் படுது. எழுத்தைச் சிக்கனமா கையாளத் தெரியலேன்னா நான் என்னத்துக்கு எழுதணும்! மொழியை நிறைய பேர் மறந்துடுறாங்க. சொல்லப்படுகிற வாழ்க் கைக்கும் எழுதப்படுகிற மொழிக்கும் நிறைய இடைவெளி இருக்கு. இந்த இடைவெளியை குறுக்கினாலொழிய அந்தப் படைப்பில் வாசகனை ஒன்ற வைக்கிற உணர்வுநிலை எட்டாது. அதனால், மொழி என்பது இலக்கணத்தையெல்லாம் தாண்டி, அந்த வாழ்க்கை யோடு இயைந்த வெளிப்பாடாக வரும்போது அது வீச்சாக இருக்குது. மொழி என்பதை ஒரு கருவியாக மட்டுமே பார்க்காமல், வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த ஒரு கலாச்சார அம்சமாகத் தான் பார்க்கிறேன்.

இப்போ என்ன எழுதிகிட்டிருக்கீங்க?

A love for words: Writer Poomani on his books, translation, and ...

‘வெள்ளாவி’ன்னு ஒரு நாவல். சலவைத் தொழிலாளிகள் பற்றியது. அவர்களின் வாழ்க்கை, மொழி, கலாசாரம், பாடல், மற்றவர்களோடு அவர்களுக்குள்ள தொடர்பு இதையெல்லாம் இந்த நாவலில் பதிவு செய்கிறேன். சலவைத் தொழிலாளியின் வாழ்க்கையை இமையம் ‘கோவேறு கழுதை’களில் எழுதி இருக்கிறார். என்றாலும், அதில் ஒற்றைப் பரிமாணத்தோடுதான் எழுதி இருக்கிறார். ‘தலைமுறை தலைமுறையா சாதி, மதம் என்கிற விசயம் எவ்வளவுதான் வெள்ளாவியில் வைத்து அவித்தாலும் போக மாட்டேங்குதே, அழுக்கு சேர்ந்துகிட்டுத்தானே இருக்கு’ என்கிற உணர்வை ஏற்படுத்துகிற நாவலாக அது இருக்கும்.

சந்திப்பு: சூரியசந்திரன்

புதிய புத்தகம் பேசுது, 
ஏப்ரல் 2004

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சங்க இலக்கியம் முதல் பெண் கவிஞர்கள் : பத்மாவதி விவேகானந்தன் நேர்காணல்

எனது கதைகள் வரலாற்று ஆவணங்கள்: மேலாண்மை பொன்னுச்சாமி நேர்காணல்

கவிஞர் அறிவுமதி பாடலாசிரியரான கதை