எனது படைப்புகள் தேடுவது மனித சுதந்திரத்தை மட்டுமே!

 தமிழில் வெளிவந்த இமையத்தின் முதல் நேர்காணல்

‘கோவேறுக் கழுதைகள்’ நாவலின் மூலமாக தமிழ் இலக்கிய உலகுக்கு அறிமுகமானவர் எழுத்தாளர் இமையம். ‘ஆரோக்கியம்’ என்னும் ஒடுக்கப்பட்ட சமூகத்து பெண் பாத்திரத்தை அந்நாவலில் அழுத்தமாகப் பதிவு செய்திருந்தார். அடுத்ததாக ‘ஆறுமுகம்’ நாவலில் பாலியல் தொழிலாளரின் பிரச்சினைகளை பேசியிருந்தார். இப்போது ‘செடல்’ நாவலின் மூலமாக கோயிலுக்குப் பொட்டுக் கட்டி விடப்பட்ட ஒரு பெண் கூத்துக் கலைஞரின் அவல வாழ்க்கையை இலக்கியமாக்கி இருக்கிறார்.

தமிழ்ச் சமூகத்தின் மிகமிக அடித்தட்டில் வாழ்கிற மக்களை  இலக்கியப்படுத்திக் கொண்டிருக்கும் திரு. இமையம் அவர்களை விருத்தாசலத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினேன்...


உங்கள் குடும்பப் பின்னணி, நீங்கள் கதாசிரியரான சூழல், அது பற்றி கூறுங்கள்...

கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், மேல் ஆதனூர்ங்கிற ஊரில், விவசாயக் குடும்பத்தில் பிறந்தேன். அம்மா பேரு சின்னம்மாள், அப்பா வெங்கட்டன். ஆறு பேர் பிறந்தோம். நாலு பேர் இருக்கிறோம். என் பத்து வயசு வரைக்கும் மேல் ஆதனூர்லதான் இருந்தோம். பிறகு அம்மாவின் பிறந்த ஊரான கழுதூர்க்கு வந்தோம். ஆறு, ஏழு வயசு வரைக்கும் ஊமையா இருந்தேன். திருவண்ணா மலையில் முட்டிப் போட்டு, தவமிருந்து, உண்டியல்ல கொள்ளுகாசு போட்ட பிறகுதான் நான் பேச ஆரம்பிச்சதா எங்கம்மா இன்னைக்கும் சொல்லிக் கிட்டிருக்கு.  

முன்பு, எங்கள் வீட்டில் குதிரை வண்டி, நூறு காணிக்கு மேல நிலம், வெண்கல பாத்திரம் என வசதியா வாழ்ந்ததாக நிறைய கதைகள் அம்மா சொல்லும்; இப்பவும் சொல்லிகிட்டிருக்கு. அந்தக் கதைகள் உண்மையா, பொய்யாங்கிறது முக்கியமில்லே. ஆனா, எனக்கு நெனவு தெரிஞ்ச காலத்திலிருந்து நாங்க கஷ்டப்பட்டோம். நாங்க மட்டுமில்ல, எங்க ஊர்க்காரங்க எல்லாரும் கஷ்டப் பட்டாங்கன்னுதான் நெனக்கிறேன்.

பள்ளிப் படிப்பிலே எனக்கு விருப்பமில்லே. காட்டு வேலைக்குத்தான் போவேன்னு அழுதப்ப, என் அண்ணன்தான் அடித்து இழுத்துக் கொண்டுபோய் பள்ளிக்கூடத்தில் சேர்த்தது. முதல் வகுப்பிலிருந்து 12 வரை படித்தது எல்லாம் கனவு மாதிரிதான் இருக்கு.

திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரிதான் எனக்குத் திருப்புமுனையா அமைஞ்சது. அந்த நாட்களில் கற்பனையா கவிதைகள் எழுத ஆரம்பிச்சேன். நான் எழுதின ஒரு கவிதைக்கு கார்க்கியின் ‘தாய்’ நாவலைப் பரிசாக் கொடுத்தாங்க. அதுதான் நான் படித்த முதல் நாவல். 

அப்போது எஸ்.ஆல்பர்ட், க.பூரணசந்திரன் போன்ற பல நண்பர்கள் எனக்கு அறிமுகமானாங்க. அவங்கதான் எனக்குப் படிக்கிற, எழுதுற ஆர்வத்தைத் தூண்டினாங்க. என் கவிதைகளைப் படிச்ச நண்பர் ஆல்பர்ட், “இந்த மாதிரி கற்பனையா எழுதுறதை விட்டுட்டு, உங்க வாழ்க்கை சம்பந்தப்பட்ட விசயங்களை எழுதுங்க. அதுதான் எதார்த்தமா இருக்கும்’’னு சொன்னார். அது சரின்னு பட்டது.

பூமணியின் ‘பிறகு’, ஆர்.சண்முகசுந்தரத்தின் ‘நாகம்மாள்’, கு.சின்னப்ப பாரதியின் ‘தாகம்’, தி.ஜானகிராமனின் ‘செம்பருத்தி’... இப்படியான நாவல்கள் எனக்குள் இருந்த கிராம வாழ்வை ஞாபகப்படுத்திச்சு. என்னையும் என் கிராமம் சார்ந்த வாழ்வை எழுதத் தூண்டிச்சுன்னு சொல்லலாம். 

ஹெமிங்வேயின் ‘கடலும் கிழவனும்’ நாவல், அது உருவான விதம் பற்றி, சனங்களைப் பற்றி, முக்கியமா என்னைப் பற்றியே யோசிக்க வைச்சது.

அப்படியொரு மனநிலையில் நான் இருந்தப்ப ஒரு முறை, கல்லூரி விடுமுறையில் எங்க கழுதூர் கிராமத்துக்குப் போறேன். அங்கே, சாலை ஓரமா இருந்த வண்ணார் குடிசையிலிருந்து ஒரு அம்மா ஓங்கி ஒப்பாரி வைச்சு அழுகுது. அந்த அழுகை என்னை ரொம்ப துன்புறுத்துச்சு.

அவங்க குடியிருக்கிற அதே தெருவின் கடைசியிலேதான் எங்க வீடு. அவங்களோட வாழ்க்கை முழுவதும் எனக்குத் தெரியும். அவங்க வாழ்க்கையை ஒரு சிறுகதையா எழுதுனா என்னன்னு தோணுச்சு. அன்னிக்கு இரவே உட்கார்ந்து எழுத ஆரம்பிச்சேன். அப்படி நான் எழுத ஆரம்பிச்ச சிறுகதைதான் நாவலா உருமாறிச்சு. அதுதான் ‘கோவேறு கழுதைகள்’. அந்த அம்மாவின் பெயர் ஆரோக்கியம். அதே பெயரைத்தான் நாவலிலும் வைச்சிருப்பேன். அவங்க இப்பவும் வாழ்ந்துகிட்டிருக்காங்க.

கோவேறு கழுதைகள்’ நாவலில், ஒடுக்கப்பட்ட சமூகத்தை ஆதிக்க சக்தியாக முன்வைத்திருக்கிறீர்கள்... சாதிய உள்முரண்பாடுகளை எழுதியிருக்கிறீர்கள்... என்றெல்லாம் குற்றச்சாட்டு எழுந்ததே...

சமூகத்தின் மொத்த ஒடுக்குமுறைகளையும் எதிர் கொள்கிற பறையர் சமூகம், தனக்குக் கீழுள்ள வண்ணார், சக்கிலியர் இன சமூகங்களை ஒடுக்குகிற ஓர் ஆதிக்க சமூகமாகத்தான் இருக்கிறது என்பது உண்மை.

நான் ‘கோவேறு கழுதைகள்’ நாவலை எழுதும்போது ஆரோக்கியமும் அவரது வாழ்க்கையும்தான் எனக்குள் இருந்ததே தவிர, சாதிய உள்ளடுக்குகளின் முரண்பாடுகள் பற்றி அப்போது நான் யோசிக்கவே இல்லை. உண்மையில், நான் அப்போது எந்தக் கோட்பாடுகளையும் அறியாத வனாகவே இருந்தேன். நாவல் வெளிவந்தபோது அது கோட்பாட்டில் வைத்து பார்க்கப்பட்டது. நான் அதற்குப் பொறுப்பாளி அல்ல. ஒரு படைப்பை கோட்பாட்டின் அடிப்படையில் உருவாக்க முடியும் என்று எனக்குத் தோணல. அப்படி உருவாக்கப்படும் ஒரு படைப்பு சிறந்த இலக்கியப் படைப்பாக இருக்கும் என்கிற நம்பிக்கையும் எனக்கு இல்லை. 

ஒரு வாழ்க்கை முறைதான் ஒரு படைப்பை உருவாக்குமே தவிர, தத்துவமோ, கோட்பாடோ, கொள்கையோ அல்ல என்று நம்புகிறேன். அதனால் நான் என் அனுபவத்தை முன்னிறுத்தி எழுதுகிறேன். என் மனதின் உள்தளங்களில் உள்ள வாசகங்களுக்கு மொழியின் மூலம் ஒரு வடிவத்தை அளிக்க முயல்கிறேன்.

சாதிய உள்முரண்பாடுகளை எழுதியிருப்பதாக ஒரு குற்றச்சாட்டு வந்தாலும் கூட கோவேறு கழுதைகளை தூய இலக்கியவாதிகள், மார்க்சியவாதிகள் என இரண்டு தரப்பிலும் அங்கீகரித்து பரிசுகள் கொடுத்தார்கள்.

உங்களின் ‘ஆறுமுகம்’ எனும் இரண்டாவது நாவல், வேறு ஒரு தளத்தில் இயங்குகிறது. ஆறுமுகம் எனும் பாத்திரத்தின் வழியே சமூக ஒழுக்கங்களின் மீது பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக் கிறீர்களே...

கிராமத்து வறுமையை விட நகரத்து வறுமை கொடுமையானது என்பதைத்தான் ‘ஆறுமுகம்’ நாவலில் சொல்ல முனைந்துள்ளேன். விளிம்பு நிலையில் இருக்கக் கூடிய பாலியல் தொழிலாளர்கள் சமூகத்தில் எவ்வாறு உருவாகிறார்கள், சமூகம் அவர்களை எப்படி பார்க்கிறது, எப்படி நடத்துகிறது என்பதை அந்த நாவலில் அழுத்தமாக சொல்லியுள்ளேன். பொதுவாக, வாழ்க்கையின் விடை காண முடியாத புதிர்கள், குழப்பங்கள், வேதனை, விரக்தி, இயலாமை, இழப்பு... இப்படியான உணர்வுகளால் உருவானதுதான் என் எழுத்து. வாழ்வின் அச்சுறுத்தும் கணங்களை, நம்பிக்கை வறட்சியை, வாழ்க்கை நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கிற தற்கால மனசை படம் பிடிக்க முயன்றுள்ளேன்.

வாழ்க்கையைப் புரிஞ்சிக்க, அதை அணுகுவதற்கு இலக்கியம்  ஒரு வாசலா இருக்கு. வாழ்க்கை மீதான மிருகத்தனமான கவர்ச்சிதான் என்னை எழுதத் தூண்டுது. என் எழுத்தின் மூலம் வாழ்க்கைக்கு அர்த்தம் காண முயல்கிறேன்.

என் எழுத்துக்கான விசயங்களை என்னுடைய வாழ்க்கையிலிருந்துதான் எடுக்கிறேன். என் எழுத்துக்கும் என் வாழ்க்கைக்கும் நெருக்கமான - இணக்கமான உறவு இருக்கணும்னு நெனைக்கிறேன்.

‘ஆறுமுகம்’ நாவலில் தனபாக்கியத்தின் வழியே, கோவேறு கழுதைகள்’ நாவலில் ஆறுமுகத்தின் வழியே வாழ்க்கையை, அதன் மர்மங்களை, ரகசியங்களை, சமூகத்தை புரிந்துகொள்ள முயல்கிறேன். மற்றவர்களைக் காட்டிலும் கூடுதலான அக்கறையுடன் எழுத்தாளன்ங்கிற முறையில் புரிஞ்சிக்க முயற்சிப் பண்றேன். அப்படி முயலும்போது எனக்கும் சமூகத்துக்குமான உறவில் நிறைய முரண்பாடுகள் இருப்பது தெரியவருகிறது. இந்த முரண்பாடுகள் அளவற்றதாக மட்டுமல்ல, தொடர்ந்து அதிகரிக்கும் படியாகவும் இருக்கு. அதற்கான காரணத்தைக் கண்டறிய முற்படுவதுதான் என் எழுத்து.

எனது படைப்புகள் தேடுவது மனித சுதந்திரத்தை மட்டுமே. ‘ஆறுமுகம்’ நாவலில் வருகிற பாத்திரங்களின் முன் சமூக ஒழுக்கம், கட்டுப்பாடு, அற மதிப்பீடுகள், விதிகள் அனைத்துமே நிறமிழந்து போவதைக் காணலாம்.

‘செடல்’ நாவலில், பொட்டுக் கட்டுதல், கூத்துக்கலை இரண்டையும் செடல் பாத்திரத்தின் மூலமாக அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறீர்கள். செடல் பாத்திரம் உண்மையானதா?

செடல் நிஜம். சின்ன வயசிலேயே பொட்டுகட்டி விடப்பட்ட இவர், ஒரு கூத்துக் கலைஞராகவும் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

செடல் என் இளமைக் காலத்தில், மிக முக்கியமான ஆளா இருந்தவங்க. கூத்து நடக்கும்போது செடல் வேஷம் எப்போ வெளியே வரும்னு காத்திருந்தவங்கள்ல நானும் ஒருத்தன். அவங்களுக்குப் பொறி மாலை, சோளக்கதிர் மாலை நானும் போட்டிருக்கேன். தேவதாசி முறை பற்றி ஒரு நண்பரோடு பேசிக்கொண்டிருந்தபோதுதான் செடலைப் பற்றி எழுத வேண்டும் என்கிற எண்ணம் எனக்குத் தோன்றியது.

‘கோவேறு கழுதைகள்’ நாவலின் நாயகி ஆரோக்கியம் எங்கள் தெருவின் கிழக்கில் கடைசி வீட்டுக்காரர் என்றால், செடல் வடக்கில் கடைசி வீட்டுக்காரர். இவர்கள் இருவரும் பறையர்களுக்குக் கீழான சாதி என்பதால், கடைசி வீட்டுக்காரர்களாக இருக்கிறார்கள்.

உங்களின் ‘செடல்’ நாயகியைப் போன்ற கூத்தாடி சமூகத்தினர் பொட்டுகட்டி விடப்படுவதற்கும், தேவதாசிகள் வாழ்க்கை முறைக்குமான வித்தியாசம் என்ன?

நிறைய வித்தியாசம் இருக்கு. செடல் மாதிரியான பெண்கள் ஒரு ஐதீகத்திற்காக - கிராமப்புறத்தில் எந்த சொத்தும் இல்லாத சாதாரண கோயில்களுக்குப் பொட்டுக்கட்டி விடப்படுகிறார்கள். பறையர்களுக்குக் கீழான நிலையிலுள்ள கூத்தாடி இனத்தைச் சார்ந்தவர்களான இவர்களுக்குத் தேவதாசி இனத்தைச் சார்ந்தவர்களுக்கு இருப்பதுபோல, கோயிலைச் சார்ந்த வீடோ, நிலமோ, விருப்பப்பட்ட, விரும்பும் ஆண்களுடன் உறவு கொள்வதற்கான உரிமையோ கிடையாது. கடைசி வரை கன்னியாகத்தான் இருக்க வேண்டும்.

ஆரோக்கியம், செடல் இருவரும் இப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பதாகச் சொல்கிறீர்கள். சமகாலப் பிரச்சினைகளைத் தொட்டிருக்கிறீர்கள். அவர்களுக்கோ, அவர்களின் குடும்பத்தினருக்கோ, சமூகத்தினருக்கோ அவர்களின் வாழ்க்கை புத்தகமாக வந்திருக்கிறது என்கிற விசயம் தெரியுமா? அவர்கள் எப்படி உணர்ந்தார்கள்?

ஆரோக்கியம், செடல் குடும்பம் மட்டுமல்ல, என்னுடைய குடும்பத்தில்கூட என் மனைவியைத் தவிர வேறு யாரும் என் நாவல்களை படித்ததில்லை. படிக்க விருப்பப்பட்டதுமில்லை. அவர்களுக்கு என் எழுத்தின் மீது எந்தவிதமான ஈடுபாடும் கிடையாது. காரணம், “போயும் போயும் நம்ப ஊரு வண்ணாத்தியைப் பத்தியும், ஆட்டக்காரியைப் பத்தியும்தானா எழுதணும். அவங்களைப் பத்தி எழுதுறதுக்கு என்ன இருக்கு? எதுக்கு எழுதணும்?’’ என்கிற மாதிரி கேட்கிறார்கள்.

உங்களுடைய மூன்று நாவல்களிலுமே பெண்கள் மிக முக்கியமான பாத்திரங்களாக இருக்கிறார்கள். ஆரோக்கியம், சின்னப்பொண்ணு, தனபாக்கியம், செடல் மட்டுமல்ல ஏராளமான பெண் பாத்திரங்கள் ஒவ்வொன்றும் அழுத்தமாக எழுதப்பட்டுள்ளன. இவை இயல்பாக வெளிப் பட்டதா? அல்லது முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பதற்காக திட்டமிட்டு உருவாக்கியதா?

தேர்வு, திட்டமிடுதல் ஒரு படைப்பின் அடிப்படைதான் என்றாலும், பெண் பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பது என் நோக்கமல்ல. அவை அப்படி இயல்பாக அமைந்து விட்டன. அது தன்னியல்பாக நடந்த ஒன்று.

நம் பெண்கள், ஆண்களைவிட அதிகம் உழைப்பவர்களாகவும், அவஸ்தை களுக்கு உள்ளாக்கப் படுபவர்களாகவும் இருக்கிறார்கள். ஆரோக்கியமாக இருந்தாலும், செடலாக இருந்தாலும் அவர்கள் போக்கிலேயே நாவல் உருவாக்கப்பட்டுள்ளது என்பதுதான் உண்மை.

ஒரு படைப்பில் ஆசிரியனின் தலையீட்டுக்கு எவ்வளவு இடமுண்டு, எந்த அளவுக்குத் தலையீடு அவசியம் என்பதை ஓரளவு உணர்ந்திருக்கிறேன். ஆசிரியரின் குறுக்கீடு எவ்வளவு அதிகரிக்கிறதோ, அந்தளவுக்கு அந்தப் படைப்பு பலகீனப்படும் என்பது என் கருத்து. படைப்பாளி படைப்புக்கு வெளியே இருப்பதுதான் நல்லது.

நாவல்களில் பெரியவர்களின் வாழ்க்கையைச் சொல்கிற நீங்கள், சிறுகதை என்று வருகிறபோது மட்டும் சிறுவர்களின் மனஉலகத்தையே பெரும்பாலும் சித்தரித்திருக்கிறீர்கள். ஏன் அப்படி?

என்னுடைய சிறு வயது அனுபவங்களை - சிறுவர்களின் மன உலகத்தை சிறுகதைகளில் சொல்லி இருக்கிறேன் என்பது நிஜம்தான். அப்படி நடத்திருக்கு! சிறுவர்கள் பற்றி இன்னும் நிறைய கதைகள் எழுதணும்னு ஆசை இருக்கு. தமிழில் சிறுவர்களை மையமா வைச்சி எழுதப்பட்ட கதைகள் ரொம்ப குறைவாக இருக்கும்னுதான் நெனைக்கிறேன். சிறுவர்களுக்கான நிறைய கதைகள், நாவல்கள் தமிழில் வரணும்.

உங்களுடைய படைப்புகளில் பாதிரியார்களை தொடர்ந்து விமர்சனம் செய்கிறீர்களே...?

மிஷனரிகளைத் தாக்குவது என் நோக்கமல்ல. அவங்களோட சித்தாந்தத்துக்கு நான் எதிரியுமல்ல. சில பேரோட செயல்பாடுகள் அப்படித்தான் இருக்கும்னு விட்டுடுறதும், ஏன் அப்படி இருக்குன்னு கேக்குறதும்தான் என் வேலை. ‘கோவேறு கழுதைகள்’ நாவலில் வரும் சாமியாருக்கும், ‘செடல்’ நாவலில் வரும் சாமியாருக்கும் -  ஒலிப்பெருக்கியின் வழியாக வரும் சாமியாரின் குரலுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கிற மாதிரியே வேற்றுமைகளும் இருக்கு. அவை ஆரோக்கியத் திற்கும் சாமியாருக்கும், செடலுக்கும் சாமியாருக்குமான பிரச்சினைகளே தவிர, தனிப்பட்ட எனக்கும் சாமியாருக்கும் ஒரு பிரச்சினையும் இல்லை.

சமகால இலக்கியப் போக்குகள் பற்றி... ஓர் எழுத்தாளராக எப்படி உணர்றீங்க?

எப்போதுமில்லாத அளவுக்கு நிறைய பேர் எழுத வந்திருக்காங்க. இது 80கள் வரை சாத்தியப்படாத ஒன்றா இருந்துச்சி. சமூகத்தின் அனைத்து தரப்பிலிருந்தும் எழுத வந்திருப்பது நல்ல அறிகுறிதான். இதுவரை சமூகத்தின் பார்வைக்கு வராத அல்லது மட்டமானது என்று ஒதுக்கப்பட்ட வாழ்க்கை முறைகள் இன்று இலக்கியமாக்கப்பட்டு வருகின்றன.

இன்னும் சொல்லப்படாத, சமூகத்தினால் புறக்கணிக்கப்பட்ட எத்தனையோ வாழ்க்கைமுறைகள் தமிழகத்தில் இருக்கு. அவையெல்லாம் பதிவு செய்யப் படணும்.

புதிய புத்தகம் பேசுது, நவம்பர் 2006
சந்திப்பு : சூரியசந்திரன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எனது கதைகள் வரலாற்று ஆவணங்கள்: மேலாண்மை பொன்னுச்சாமி நேர்காணல்

சங்க இலக்கியம் முதல் பெண் கவிஞர்கள் : பத்மாவதி விவேகானந்தன் நேர்காணல்

கவிஞர் அறிவுமதி பாடலாசிரியரான கதை