எனது நாடகக் கலையை அடுத்தத் தலைமுறைக்குக் கற்றுத் தருகிறேன் : ‘தியேட்டர் லேப்’ ஜெயராவ்
தமிழில் தனிநபர் நாடகக் கலைஞராக தனி முத்திரைப் பதித்தவர் நடிகர் ‘கூத்துப்பட்டறை’ ஜெயராவ். இப்போது தனது ‘தியேட்டர் லேப்’ மூலமாக நடிகர்களுக்குப் பயிற்சிகளை வழங்கிக் கொண்டிருக்கிறார். சமீப காலமாக சினிமா நடிகராகவும் கவனிப்பைப் பெற்று வருகிறார்.
சென்னை, கே.கே.நகரில் உள்ள இவரது ‘தியேட்டர் லேப்’ ( நடிகர் பயிற்சி மையம் ) அரங்கத்தில், ஜூன் மாத மாலைப் பொழுதொன்றில் அவரைச் சந்தித்தேன்.
ஜெயராவ் என்கிற உங்கள் பெயரே வித்தியாசமாக இருக்கிறது. உங்கள் பூர்வீகம் பற்றியும், உங்கள் நடிப்புலக வாழ்வின் தொடக்க காலம் பற்றியும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்...
ஆந்திரா மாநிலம், நெல்லூர் மாவட்டத்தில் உள்ள தர்மரெட்டிபால்லே எனும் கிராமத்தில் பிறந்தேன். என் பள்ளி நாட்களில், நான் படித்த பள்ளிக்கூடத்திற்கு ‘மார்க்சிஸ்ட்’ கட்சியினர் அவ்வப்போது வந்து விழிப்புணர்வு வகுப்புகள் நடத்துவார்கள். ஆகவே, அப்போதே பொதுவுடைமைக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டேன். கல்லூரிக்குப் படிக்கச் சென்றபோது ‘இந்திய மாணவர் சங்க’த்தின் சார்பாக மாணவர் பேரவைக்குப் போட்டியிட்டு கல்லூரி மாணவர் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.
ஆந்திரா மார்க்சிய இயக்கத் தோழர்களின் வீதி நாடகங்களில்தான் எனது வீதி நாடக வாழ்க்கைத் தொடங்கியது. கத்தார் போன்ற மிகச்சிறந்த கலைஞர்களோடும் இணைந்து நடித்திருக்கிறேன். கிராமங்களுக்குச் சென்று ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் குடிசைப்பகுதியில் வீதி நாடகங்களை நடத்துவோம். அந்த வீதி நாடகங்களின் மூலமாக ஒடுக்கப்பட்ட மக்களிடம் விழிப்புணர்வு எண்ணங்களை ஏற்படுத்துவோம்.
1983ல் ஆந்திராவிலிருந்து சென்னைக்கு வந்தேன். சென்னையிலும் எனது நாடகப் பணி தொடர்ந்தது. வடசென்னை அயனாவரத்தில் தங்கியிருந்தேன். ஒரு சைக்கிளை எடுத்துக்கொண்டு தனியனாக அயனாவரம், பெரம்பூர், புளியந்தோப்பு, வியாசர்பாடி, அம்பத்தூர், தண்டையார்பேட்டை, புஷ்பா நகர், புதுப்பேட்டை போன்ற பகுதிகளில் உள்ள குடிசைப்பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள சிறுவர்களையும் இளைஞர்களையும் அழைத்து அவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கத் தொடங்கினேன். பிறகு ‘இரவு பாடசாலை’ தொடங்கினேன். பிறகு, அந்தப் பகுதி இளைஞர்களையும் சிறுவர்களையும் ஒருங்கிணைத்து வீதி நாடகம் நடத்தினேன். என்னுடைய இந்த சமூக விழிப்புணர்வு நடவடிக்கைகளை பிடிக்காத அந்தப் பகுதியில் வசிக்கிற சில பெரிய மனிதர்கள் என்னை மிரட்டினார்கள். அடி, உதை வாங்கியிருக்கிறேன். கல்லால் அடித்து துரத்தியிருக்கிறார்கள்...’’
மார்க்சிஸ்ட் இயக்கத் தோழர்களின் ஒத்துழைப்பை நீங்கள் பெறவில்லையா?
நான் ஆந்திராவில் வசித்த காலத்தில் மார்க்சிஸ்ட் இயக்கத் தோழர்களின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு, அவர்களின் நாடகக் குழுவில் இடம்பெற்றிருந்தேனே தவிர, அந்த கட்சிக்குள் நான் செல்லவில்லை. ஆகவே, நான் இங்கே அந்தக் கட்சியினரின் ஆதரவைப் பெறவில்லை. அந்த நேரத்தில் எனது இந்தப் பணியைக் கவனித்த ‘ஜனோதயம்’ என்ற அமைப்பினர் என்னை அணுகினார்கள். அந்த அமைப்பில் எனக்கு ஒரு பொறுப்பு கொடுத்து, உதவியாளர்களையும் அனுப்பி வைத்தார்கள். அவர்களின் துணையோடு தைரியமாக களம் இறங்கினேன். வியாசர்பாடி, அயனாவரம், சூளை, புல்லாரெட்டித் தோட்டம் போன்ற பகுதிகளில் மாணவர்களுக்கு இரவு பாடசாலை அமைத்து பாடம் சொல்லிக் கொடுப்பது, அவர்கள் மூலமாக பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளுக்கு பாடம் நடத்துவது போன்ற பணிகளைச் செய்தேன். அயனாவரம் பகுதியில் ‘இளைஞர் சங்கம்’ (youngster Association) உருவாக்கினேன். அதன் மூலமாக அந்தப் பகுதி இளைஞர்களையும், சிறுவர்களையும் கொண்டு வீதி நாடகம் நடத்தினேன். அவர்களின் பிரச்சினைகளை அவர்களையே கதையாக உருவாக்கச் செய்து, அவர்களையே நடிக்கச் செய்தேன். இது, அந்தப் பகுதி மக்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. தங்கள் குழந்தைகள் தமது குடும்பப் பிரச்சினைகளைத்தான் நாடகமாக நடிக்கிறார்கள் என்பதை பெரியோர்கள் அறிந்துகொண்டனர். ‘நாம் எப்படியெல்லாம் தவறு செய்துகொண்டிருக்கிறோம், இதனால் குழந்தைகள் எப்படியெல்லாம் துன்புறுத்தப்பட்டிருக்கிறார்கள்’ என்பதை அவர்கள் உணர்ந்துகொண்டனர். அந்த நாடகத்தைப் பார்த்த பிறகு அந்தப் பகுதி மக்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டதை நேரில் கண்டேன். காவல்துறை ஆணையர் தேவாரம் அவர்களும் எனது இந்தப் பணிக்கு உதவிகரமாக இருந்தார். அதன் விளைவாக, சமூக விரோதிகளாக குற்றஞ்சாட்டப்பட்ட பலரும் மனந்திருந்தினார்கள்.’’
'கூத்துப் பட்டறை’யில் எப்போது இணைந்தீர்கள். அந்த அனுபவங்கள்...

நாடகக் கலையை இன்னும் சிறப்பாகச் செய்யவேண்டும். நடிப்பை மேலும் நுட்பமாக கற்கவேண்டும் என்கிற உந்துதல் எனக்கு ஏற்பட்டது. அப்போது எனது நண்பர்கள் கூத்துப்பட்டறையை எனக்கு அடையாளம் காட்டினார்கள். 1988ல் அங்கு சேர்ந்தேன். அதன் நிறுவனர் நா.முத்துசாமி அவர்கள் ஓர் அற்புதமான மனிதர். சிறந்த கவிஞர். அவர் பிராமண சமூகத்தில் பிறந்தவரென்றாலும், ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வுகளை உணர்ந்துகொண்டவர். அவரது ‘பறை’ பற்றிய பாடல் உணர்ச்சிமயமானது. உண்மையானது. ‘மரபுக் கலையின் நவீன உத்திகள்’ எனும் வாசகத்தோடு அவர் தெருக்கூத்துக் கலைஞர்களைக் கொண்டுதான் கூத்துப்பட்டறையைத் தொடங்கினார். ஆரம்பத்தில், கூத்துக்கலைஞர்களுக்கான பயிற்சிக் களமாக அது இருந்தது. நமது மண்ணின் மைந்தர்களான தெருக்கூத்துக் கலைஞர்களால்தான் சிறந்த நடிப்பைக் கொடுக்கமுடியும் என்று அவர் நம்பினார். அதற்கான பல முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால், தெருக்கூத்துக் கலைஞர்களால் அவரது நவீன உத்திகளை கையாளச் சிரமமாக இருந்தது. ஆகவே, நகர்ப்புறக் கலைஞர்களை வைத்தே கூத்துப்பட்டறையை நடத்துவது என்கிற முடிவுக்கு வந்தார். அந்த காலகட்டத்தில்தான் நான் அங்கு போய் சேர்ந்தேன்.
கூத்துப்பட்டறை உங்களுக்கு எந்த வகையில் பயன்பட்டது?
நான் தெலுங்கை தாய்மொழியாகக் கொண்டவன். அப்போது எனக்குத் தமிழ் சரியாகப் பேசத் தெரியாது. இன்று என்னால் சிறப்பாகப் பேசமுடிகிறது என்றால் அதற்குக் காரணம் முத்துசாமி அவர்கள்தான். அவரிடம்தான் தமிழைத் தெளிவாகப் பேசி நடிக்கக் கற்றுக்கொண்டேன். அவரது ஒரு 15 பக்க கவிதையை ‘அப்பாவும் பிள்ளையும்’ எனும் ஒன்றரை மணி நேர தனிநபர் கவிதை நாடகமாக உருவாக்கி நான் மட்டுமே நடித்தேன். அதைத் தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களிலும், 40க்கும் மேற்பட்ட விழிப்புணர்வு வீதி நாடகங்களிலும் நடித்திருக்கிறேன்.
2005ல் சொந்தமாக ‘நடிப்பு பயிற்சி மையம்’ (Theatre Lab) தொடங்கினேன்.
அதன் மூலமாக எனது நாடகக் குழுவினரைக் கொண்டு மகாத்மா காந்தியின் கடைசி ஐந்து விநாடிகள், நதி அறியாது, சங்கீத வைத்தியம், வைக்கம் முகமது பஷீரின் சப்தங்கள், எஸ்.ராமகிருஷ்ணனின் உற்று நோக்கு போன்ற நாடகங்களை அரங்கேற்றினேன். பாரதிமணி, தமிழச்சி தங்கபாண்டியன் போன்றவர்களோடு இணைந்து மேடை நாடகங்கள் நடித்திருக்கிறேன்.
எனது ‘மஹாவுடன் பத்து நாட்கள்’ நாடகம், சென்னை அல்லியன்ஸ் பிரான்சிஸில் நடைபெற்றது. கிராமத்தில் எதார்த்தமாக வாழ்ந்த ஒரு பெண், நகரத்து வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு வருகிறபோது, இங்கே பெண்களுக்குப் பாதுகாப்பற்ற சூழ்நிலையினால் எவ்வெறெல்லாம் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகிறாள் என்பதைச் சொல்கிற நாடகம் அது. அதை நிர்மலா மிகச்சிறப்பாக நடித்தார். அந்த நாடகம் நடக்கும்போது பார்வையாளர்கள் அனைவருமே கண் கலங்குவதையும், கண்ணீர் விடுவதையும் நான் பார்த்தேன். எனக்கே கூட கண்ணீர் வந்தது. 28 பத்திரிகைகள் அந்த நாடகத்தைப் பாராட்டி எழுதின. சில பத்திரிகைகள் அட்டைப்படக் கட்டுரைகள் (கவர் ஸ்டோரி) வெளியிட்டன. பொதுவாக, நகர வாழ்க்கை பெண்களுக்கு பாதகாப்பானது அல்ல. வக்கிரமானது. இங்கே பணக்காரர்களைப் பார்த்து ஏழைகளும் சூடு போட்டுக் கொள்கிறார்கள். கீழ்த்தரமாக வாழ்வது, புதுப்புது வடிவங்களில் மக்களை ஏமாற்றுவது போன்றவற்றை பணக்காரர்களைப் பார்த்து ஏழைகளும் கற்றுக் கொள்கிறார்கள். அவர்கள் தன்னை அறியாமலே நகரத்து வக்கிரங்களுக்கு ஆட்பட்டு விடுகிறார்கள்.’’
உங்கள் ‘நடிகர் பயிற்சி மையம்’ பற்றி...
இங்கே, நடிக்க விருப்பமுள்ள இளைஞர்களிடமிருந்து ஒரு குறிப்பட்ட தொகையைப் பெற்றுக்கொண்டு, அவர்களுக்கு நடிப்புக் கலையின் நுட்பங்களை கற்றுத் தருகிறேன். இங்கு பயிற்சிபெற்றவர்களைக் கொண்டு பல பள்ளிகளில் குழந்தைகளுக்கு நாடகப் பாடத்திட்டங்களை உருவாக்கி வகுப்புகளை நடத்தி வருகிறேன். மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு தனி பாடத் திட்டத்தை உருவாக்கி அவர்களுக்கேற்றவாறு நாடகங்களை சொல்லித் தருகிறேன்.
அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு நடிப்பின் மூலமாக தங்கள் பணியிட ஆற்றலை மேம்படுத்துவதற்கான பயிற்சியையும் வழங்கிவருகிறேன்.’’
எந்த மாதிரியான பயிற்சி...?

“உலகம் ஒரு நாடக மேடை. நாமெல்லாம் நடிகர்கள்’’ என்றார் ஷேக்ஸ்பியர். அந்த நடிப்பை நாம் சரியாகச் செய்கிறோமா? நாம் போடுகிற நாடகத்தில், பார்வையாளர்களுக்கு முன்பாக சிறப்பாக அக்கறையோடும் அர்ப்பணிப்போடும் நடித்து பார்வையாளர்களிடம் கைதட்டல் வாங்கி விடுகிறோம். ஆனால், வாழ்க்கை என்னும் நாடகத்தில் மட்டும் ஏன் நம்மால் சிறப்பாக நடிக்க முடிவதில்லை. நம் ஆற்றலை சரியாகப் பயன்படுத்த முடிவதில்லை. இதனால், குடும்பத்தில் வளர்ச்சி இல்லை. இயலாமை, சோர்வு, சோகம் ஆகியவை ஏற்படுகின்றன. வக்கிரங்கள் தலைதூக்குகின்றன. நாட்டில் வளர்ச்சி இல்லை என்று குற்றம் சாட்டுகிறோம். தனி மனிதரான நாம் வளர்ச்சி அடைந்திருக்கிறோமா என்று சிந்தித்து பார்க்கவேண்டும். நாம் நமது வாழ்க்கையில் சிறந்த கலைஞனாக நமக்கான பாத்திரத்தை சிறப்பாகச் செய்தோமானால், நம்மால் வளர்ச்சி அடையமுடியும். நம்மால் நாடும் வளர்ச்சி அடையும்.’’
‘கூத்துப்பட்டறை’யைத் தவிர வேறு எந்தெந்த குழுக்களுடன் நடித்திருக்கிறீர்கள்?’’
இந்திர கடம்பியின் ‘இ அம்பலம்’ குழுவுடன் இணைந்து கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்றியிருக்கிறேன். நிஜந்தன் கலைக்குழுலும் நடித்திருக்கிறேன்.

பிரளயனின் ‘சென்னை கலைக்குழு’ உபகதை நாடகத்தில் தொடர்ந்து நான்கு வருடங்கள் பயணித்திருக்கிறேன். அது அரசியல் சார்ந்த முற்போக்கு எழுத்தாளர் குழுவாக இருப்பதால் அரசியலிலும் அரசாங்கத்திலும் நடக்கும் தவறுகளை தைரியமாக எடுத்துக்கூறும் குழு. புராணங்களை புதிய கோணத்தில் என்னை சிந்திக்க வைத்தது. அந்த குழுவில் நான் பணியாற்றியதற்காக பெருமைப்படுகிறேன்.
இன்றைய நாடகத் துறையின் நிலை எப்படி உள்ளது?
இப்போது நாடகத்தில் போலித்தன்மை அதிகரித்துவிட்டது. நாடகங்கள் எதார்த்தமாக இருக்கவேண்டும். ‘ஃபேன்டசி’ என்ற எண்ணத்தில் கற்பனைகளையும், பொய்களையும் நாடகங்களுக்குள் கொண்டு வருவதால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. ஆகவே, உண்மையைக் கொடுத்தால் அது மக்களிடம் பாதிப்பை உண்டாக்கும். தொலைக்காட்சி வந்து விட்டபிறகு நிறைய நாடக உத்திகள் நம்மைவிட அதிகமாகவே அவர்களால் செய்துவிட முடிகிறது. ஆகவே, நாடகக் கலையானது அதையும் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது. நாம் இப்போது நடத்திக் கொண்டிருக்கிற நாடகங்கள் எல்லாம் ரொம்ப பழையது. 40 வயதைக் கடந்தவர்கள் ஏற்கெனவே பார்த்து சலித்த வடிவம். அதையே திரும்பத் திரும்பச் செய்துகொண்டிருக்கிறோம். இன்றைய புதிய தலைமுறை சிறுவர்களுக்கான, இளைஞர்களுக்கான நாடகங்களை இன்னும் நாம் உருவாக்கவே இல்லை.
ரஷ்யாவில், சீனாவில், மெக்சிகோவில், ஃப்ரான்சில் நாடகம் மூலம் பெரிய புரட்சியே நடைபெற்றது. இன்று இங்கே நாடகத் துறையில் இயங்கும் பலரும் நாடகத்தை பகுதி நேரமாக வைத்துக் கொள்கிறார்கள். அவர்களுக்கு ஒரு நல்ல அறிமுகம் கிடைத்தவுடன், நாடகம் மூலமாகவோ, அல்லது கல்வியின் மூலமாகவோ வேலை கிடைத்தவுடன் அமைதியாகி விடுகிறார்கள். சிலர் ஆர்வக் கோளாறு காரணமாக நாடகம் என்று எதை எதையோ நடத்திக் கொண்டிருக்கிறார்கள். முழுநேர நாடகக் கலைஞனாக என்னைப் போன்ற ஒரு சிலர்தான் இருக்கிறார்கள்.’’
கிராமப்புறங்களில் நாடகக் கலைஞர்கள், கூத்துக் கலைஞர்கள் நலிந்து போயிருக்கிறார்களே...
அதற்குக் காரணம் அவர்கள்தான். கூத்துக் கலைஞர்களுக்கும் நாடகக் கலைஞர்களுக்கும் தங்கள் கலையின் மீது அவர்களுக்கு முழு நம்பிக்கை இருக்கவேண்டும். அதற்கான ஆற்றலை பெருக்கிக் கொள்ள வேண்டும். அந்தக் கலைக்காகப் போராட வேண்டும். ஆனால், அவர்களும் கூத்தை, நாடகத்தை பகுதி நேர வேலையாக வைத்துக்கொண்டு வேறு ஏதாவது வேலைகளுக்குப் போய்க்கொண்டிருக்கிறார்கள். தங்கள் கலையின் மீது அவர்களுக்கே ஒரு அதிருப்தி வந்துவிட்ட பிறகு அந்தக் கலை நலிந்துபோகாமல் என்ன செய்யும்? அரசின் கலை பண்பாட்டுத் துறை, நலிந்த கலைஞர்களின் வாழ்வாதாரத்திற்கு ஏற்பாடு செய்யவேண்டும். கிராமப்புற ஏழைகளுக்கு 100 நாள் வேலைத் திட்டம் போல, கலைஞர்களுக்கு மாதம் 3000 ரூபாய் வருமானத்திற்கான பணியை அவர்களுக்கு வழங்கலாம்.
நீங்கள் இப்போது சினிமாவிலும் நடிக்கத் தொடங்கியிருக்கிறீர்கள்...
2004ஆம் ஆண்டு, மலையாளத்தில், டி.வி.சந்திரன் இயக்கத்தில் ‘கதாபிஷேகம்’ என்ற திரைப்படத்திலும், தமிழில் ‘அவள் பெயர் தமிழச்சி’யிலும் அறிமுகமானேன்.
தொடர்ந்து ஆடும் கூத்து, துரோகி, கடல், மெட்ராஸ், முந்திரிக்காடு, அப்பத்தாவ ஆட்டய போட்டாங்க போன்ற படங்களில் நடித்திருக்கிறேன். விரைவில் எனது மகனை கதாநாயகனாக நடிக்க வைத்து ஒரு சினிமாவை இயக்க இருக்கிறேன்.
எனது நடிகர் பயிற்சி மையத்திற்கு எடிட்டர் லெனின் சில உதவிகளைச் செய்து வருவதுடன் பயிற்சிகளையும் வழங்கி வருகிறார். நடிகை ரோஹிணி ஓர் அங்கத்தினராக இருக்கிறார். நடிகை ரேவதி, இயக்குநர் மு.களஞ்சியம், தொலைக்காட்சித் தொடர் இயக்குநர் திருச்செல்வம், இயக்குநர் மீரா கதிரவன், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், கவிஞர் மனுஷ்யபுத்திரன் ஆகியோர் பல்வேறு வகைகளில் தங்கள் பங்களிப்பை செய்து வருகிறார்கள்.
நான் நாடகத்தை - நடிப்புக் கலையை முழுமையாக நம்பி வாழ்கிறேன். நாடகக் கலை எனக்குச் சோறு போடுகிறது. நான் எனது நாடகக் கலை மூலமாக பலருக்கு உதவி செய்து வருகிறேன். எனது நாடகக் கலையை அடுத்தத் தலைமுறைக்குக் கற்றுத் தருகிறேன்.
உங்களை சந்தித்து உரையாடியதற்கு மகிழ்ச்சி...
நன்றி. வணக்கம்
சந்திப்பு : சூரியசந்திரன்
மக்கள் வீதி ஜூலை 2017
கருத்துகள்
கருத்துரையிடுக