தமிழ் அடையாளம் அதிக ஜனநாயகத் தன்மை கொண்டது: ஆ.இரா.வேங்கடாசலபதி நேர்காணல்
ஆ.இரா.வேங்கடாசலபதி, தமிழ் நாட்டின் குறிப்பிடத்தகுந்த இளம் வரலாற்றாய்வாளர். வ.உ.சி.கடிதங்கள், வ.உ.சி.யும் திருநெல்வேலி எழுச்சியும், மறைமலையடிகளார் நாட்குறிப்புகள், பின்னி ஆலை வேலைநிறுத்தம், வ.உ.சி.யும் பாரதியும், திராவிட இயக்கமும் வேளாளரும் போன்ற வரலாற்று நூல்களின் ஆசிரியர்.
‘ஆராய்ச்சி’, ‘எகனாமிக்ஸ் அண்டு பொலிடிக்கல் வீக்லி’, ‘இன்டியன் லிட்டரேசர்’, ‘சவுத் ஏசியன் ஸ்டடீஸ் இன் ஹிஸ்டரி’ முதலான இதழ்களிலும் கட்டுரைகள் எழுதியுள்ளார்.
புதுதில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் முனைவர் ஆய்வு மாணவர்.
இந்நேர்காணலுக்கு உடனிருந்து உதவியவர் : ‘சவுத் விஷன்’ பதிப்பக நிறுவனர் எம்.பாலாஜி
வரலாறு என்றால் என்ன என்பது பற்றி இன்னமும் தெளிவின்மை நிலவுகின்றது. ஆகவே, வரலாறு என்றால் என்ன என்ற கேள்வியிலிருந்து தொடங்குவது பொருத்தமாக இருக்கும்.
வரலாறு என்றால் என்ன என்பதைவிட எது வரலாறு இல்லை என்பதை முதலில் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில், ‘வரலாறு’ என்பது பற்றிப் பல தவறான கருத்துகள் நிலவுகின்றன.
வரலாறு என்பது, வெறும் மன்னர்கள் - அவர்களுடைய கேளிக்கைகள், போர்கள், அந்தப்புரச் சூழ்ச்சிகள் அல்ல. மேலும், கடந்த காலத்தைப் பற்றியது மட்டுமல்ல. அசோகர் மரம் நட்டார், கரிகாலன் குளம் வெட்டினார் என்ற போக்கில் எழுதப்படுவது வரலாறாக முடியாது. இது போன்ற தவறான கருத்துகளால்தான் வரலாறு என்றாலே மாணவர்கள் கொட்டாவி விடுகிறார்கள். மேலும், தேதிகளை உருப்போட வேண்டும் என்றும் பலர் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். வெறும் பெயர்கள் மற்றும் எண்களின் பட்டியலாக ‘டெலிபோன் டைரக்டரி’ போல் இருக்கும் பாட நூல்களும் இத்தகைய கருத்தையே வலியுறுத்துகின்றன. உண்மையில், வரலாறு என்பது சுவையானது. ஆவலைத் தூண்டக் கூடியது.
வரலாறு என்ற துறை சார்ந்த ஒழுங்கு, சென்ற இரண்டு நூற்றாண்டுகளாகத்தான் வழங்கி வருகின்றது. பிரெஞ்சு அறிவொளி இயக்கத்திற்குப் பிறகே நவீன வரலாற்றியல் தொடங்குகின்றது. தேசியத்தின் எழுச்சி, ஜனநாயகக் கருத்துகளின் பரவல் என்பவற்றோடு வரலாற்றுக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது.
இடதுசாரி மற்றும் மார்க்சிய சிந்தனைகள் வரலாற்றியலுக்குப் பெரும் பங்காற்றியுள்ளன. ஒரு வகையில், எது வரலாறு இல்லை என்பது இடதுசாரி இயக்கங்களைச் சார்ந்தவர்களுக்குப் பாலபாடம். பிரெக்டினுடைய கல்வி அறிவு பெற்ற பாட்டாளி கேட்கிற முதல்
கேள்வி “அலெக்சாண்டர் இந்தியாவை வென்றாரே, அப்போது ஒரு சமையல்காரன் கூடவா அவனோடு இல்லை’’ என்பதுதானே!
எது வரலாறு என்று வரையறுக்கும்போதுதான் பிரச்சினை வருகின்றது. வேறு எந்த வரையறையையும் போலவே இதிலும் கருத்தியல் பிரச்சினை எழுகின்றது. மார்க் பிளாக் என்ற பிரெஞ்சு வரலாற்றாசிரியர் (இவர் இரண்டாம் உலகப் போரில் ஆயுதம் ஏந்திப் போராடியபோது நாஜிக்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதை ஏன் சொல்கிறேன் என்றால் வரலாற்றாசிரியன் தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்ச்சிகளிலிருந்து விலகி நின்று, ஒரு மூலையில் ஆராய்ச்சி செய்துகொண்டிருக்க முடியாது. இடைக்கால ஐரோப்பிய நிலவுடைமைச் சமூகம் பற்றிய இவர் ஆய்வுகள் மிக முக்கியமானவை. தம் நண்பர் லூசியன் ஃபெப்வரோடு இணைந்து இவர் தொடங்கி நடத்திய ‘அனால்ஸ்’ என்ற ஆராய்ச்சி இதழ் வரலாற்றியலின் போக்கையே மாற்றி விட்டது) சொல்வார்: “வரலாற்றாசிரியன் என்பவன் தேவதைக் கதைகளில் வரும் பூதத்தைப் போன்றவன். எங்கிருந்து மனித வாடை வருகின்றதோ, அங்கேதான் அவனுக்கு இரை அல்லது வேட்டை’’ என்று. இந்த வகையில் மனித வாழ்க்கையோடு தொடர்புடைய விஷயங்கள் எல்லாமே வரலாற்றுக்குக் கருப்பொருள்.
பிளாக்கைப் பின்பற்றிய பிரெஞ்சு வரலாற்றாசிரியர்கள் வானிலையின் ஆயிரமாண்டு கால வரலாற்றை எழுதி இருக்கிறார்கள். உடை, உணவு, பாவனைகள் என்று பலவற்றின் வரலாற்றை எழுதியிருக்கிறார்கள். தொழில்நுட்பம் அறிவியல் ஆகிய வற்றின் வரலாறுகள் தனித்துறைகளாகவே வளர்ந்துள்ளன. நீர்விசை ஆலை (தானியங்களை மாவாக்குவதற்குப் பயன்படும் இயந்திரம்) என்ற தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு ஐரோப்பிய சமூகத்தில் தோன்றி நிலைபெற்றதைப் பற்றிய பிளாக்கின் கட்டுரை ஒரு காவியம். (நானும்கூடத் தமிழ்நாட்டுக்குப் புகையிலை வந்த கதையை எழுதியிருக்கிறேன்.)
இது ஒருபுறம் இருக்க, வரலாறு என்பது கடந்த காலத்துக்கும் நிகழ் காலத்துக்குமான ஓர் உரையாடல் என்பது முக்கியமான கருத்து, கடந்த காலத்தில் நடந்த எண்ணற்ற நிகழ்ச்சிகள் எல்லாவற்றையும் எழுதினால் பைத்தியம்தான் பிடிக்கும். எனவே, நிகழ்காலத்திற்கு அக்கறையுடைய பழங்காலம் மட்டுமே வரலாற்றின் களம்.
எனினும், வரலாற்றியலில் மிகமுக்கியமான போக்கு ‘சமூக வரலாறு’ எனப்படுவது. இதில் இங்கிலாந்து மார்க்சியர்களின் பங்கு மிகமுக்கியமானது. இந்தப் போக்கு வரலாற்றில் மக்களின் பங்கு, பாட்டாளிகள், உழைப்பாளிகளின் பங்கை வற்புறுத்துகின்றது.
மாரிஸ் டாப், கிறிஸ்தபர் ஹில், அண்மையில் மறைந்த இ.பி.தாம்சன், எரிக் ஹாப்ஸ்பாம், ராட்னி ஹில்ட்டன் போன்ற மார்க்சிய வரலாற்றாசிரியர்கள் இதனைத் தனித் துறையாகவே வளர்த்து, வரலாற்றியலுக்குப் புது இரத்தத்தைப் பாய்ச்சி இருக் கிறார்கள். தொழில் புரட்சி மற்றும் முதலாளித்துவத்தின் வளர்ச்சி யின்போது சாதாரண மக்களும், தொழிலாளரும் பெற்ற அனுப வங்களை ஆராய்ந்தார்கள்.
பெரும்பாலும் இவர்கள் செய்த ஆராய்ச்சிகள், வரலாற்றுத் தேவதையின் தேர் இரக்கமற்று முன்னேறியபோது தோல்வி யுற்றவர்களின் வீறுமிக்கப் போராட்டத்தைப் பேசின. தற்காலத் தொழிலாளர் இயக்கத்துக்கும், சம காலச் சமூக மாற்றத்திற்கும் இந்த வரலாறுகள் உரம் சேர்க்கும் என்ற நம்பிக்கை நிலவியது. ருஷ்யப் புரட்சியும், சோவியத் யூனியனின் வியக்கத்தக்க வளர்ச்சியும் இந்த நம்பிக்கைக்கு ஆதாரமாக இருந்தன.
மொத்தத்தில் வரலாற்றில் பரந்துபட்ட மக்களின் பங்கைப் புரிந்துகொள்ள விரும்புவோருக்குச் சமூக வரலாறு இன்றியமையாதது. தொழிலாளர் இயக்க வரலாற் றுக்கு வி.வி.கிரி எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் ஆஷர் மில் பழனிச்சாமியின் பங்கும்.
இந்தப் பின்னணியில் இந்திய வரலாற்றியலைப் பார்ப்போ மானால், இது பற்றி மூன்று பார்வை கள் உள்ளதாகச் சொல்லப்படுகின்றது. முதல் வகை ‘கிரனாலஜி’ - அதாவது காலமுறைப்படி நிகழ்ச்சிகளைத் தொகுத்துக் கூறும் போக்கு.
இரண்டாவதாக, 11அம் நூற்றாண்டு வரை இந்தியா பொற்காலத்தில் இருந்தது; இஸ்லாமியரின் வருகையோடு இந்தியச் சமூகத்தில் தேக்கம் ஏற்பட்டது. ஆங்கிலேயர் வருகையோடு மறுமலர்ச்சி ஏற்பட்டது என்கிறார்கள். இந்தப் போக்கை இந்துத்துவ சக்திகள் வெளிப்படை யாகவே முன்னெடுக்கிறார்கள்.
மூன்றாவதாக, மார்க்சியச் சார்புடைய வரலாற்றா சிரியர்களின் படைப்புகள். இது இன்னும் குழந்தைப் பருவத்திலேதான் இருப்பதாக கூறுகிறார்கள். இந்த மூன்று போக்குகள் பற்றி...
கிரானலஜி என்ற காலவரிசை முறை, வெறும் கருவி மட்டும்தான். இதையும் முறையியலையும் குழப்பிக் கொள்ளக் கூடாது.
இனி, இந்துத்துவ வரலாறு பற்றி... இந்திய வரலாற்றை இந்து, முஸ்லிம், கிறிஸ்தவக் (ஆங்கிலேயர்) காலப் பகுதிகளாகப் பிரிக்கும் கருத்தாக்கம் சென்ற நூற்றாண்டின் கடைசியிலேதான் ஏற்பட்டது. இதன் பின்னணியில் ஜேம்ஸ் மில், மெக்காலே போன்ற ஆங்கிலேய வரலாற்றாசிரியர்கள் இருந்தார்கள். இன்று இந்துத்துவக்காரர்கள் அயல்நாட்டுப் பாதிப்புகளையும், ஆங்கிலேய வரலாற்றாசிரியர்களை யும் கண்டிக்கிறார்கள். ஆனால், இந்து - முஸ்லிம் என்ற ‘முரண் பாடே’ ஒரு வகையில் வெள்ளையரின் கண்டுபிடிப்புதான். இந்த ‘அயல் நாட்டுச் சரக்கை’ வைத்துத்தான் ‘சுதேசிகளாகத் தம்மைப் பறைசாற்றிக் கொள்பவர்கள் அரசியல் நடத்துகிறார்கள். (பண்டைய இந்தியாவின் பெருமையை கே.தரம்பால் பாடுவது ஆங்கிலேயர் களின் ஆவணங்களை வைத்துத்தான்!)
இந்து, முஸ்லிம், ஆங்கிலேய ஆட்சிக் காலங்கள் என்ற கருத்தாக் கத்தின் வளர்ச்சிக்குத் தேசியம் ஒரு பெரிய காரணம். 19ஆம் நூற்றாண்டின் பிற்பாதியில், காலனியாதிக்கத்தை எதிர்ப்பதற்கு நடுத்தர வர்க்க அறிவாளிகள் (இவர்கள் எல்லோரும் இந்துக்கள்) தம் படைப்புகளுக்கு இடைக்காலத்தில் நிகழ்ந்த போராட்டங்களைக் களமாக கொண்டார்கள். முகலாய மன்னர் களுக்கு எதிராகப் போராடிய (இந்து) குறுநில மன்னர்களின் கிளர்ச்சிகளுக்குத் தேசிய சாயத்தைப் பூசினார்கள். முகலாயர்களை அன்னியர்களாக, ஆக்கிரமிப்பாளர்களாகக் காட்டினார்கள். இத்தகைய சித்திரிப்பைச் செய்யாத தேசியவாதிகளே இல்லையென்று சொல்லலாம். சிறந்த தேசிய நாவலாகக் கருதப்படும் பங்கிம் சந்திரரின் ‘ஆனந்த மடம்’ இப்படிப்பட்டதுதான்.
நம் பாரதி எழுதிய ‘சிவாஜி தன் சைநியத்தாருக்குக் கூறியது’ பாடலில் கூட இந்த மனப்போக்கைக் காணலாம். தேசியவாதிகள் கையாண்ட மொழி இந்து சமய வழிப்பட்டதாக இருந்தது. ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதன், கேவலம் மாட்டிறைச்சி உண்ணும் ஆங்கிலேய மன்னரின் பிரதிநிதியைப் புண்ணிய பாரத பூமியிலிருந்து ஒழிப்பதற்காகவே அவ்வாறு செய்ததாக எழுதியுள்ளார்.
இந்திய தேசியத்தின் இந்து சமய உள்ளடக்கம் தொடக்கத் திலிருந்தே முஸ்லிம்களை அந்நியப்படுத்தித்தான் வந்துள்ளது. இதனால்தான், அண்மைக்கால ஆய்வுகள் தேசியத்தையும், வகுப்பு வாதத்தையும் ஒரே போக்கின் இரு பக்கங்களாக காண்கின்றன. ‘ஸ்பால்டர்ன்’ ஆய்வுக் குழுவைச் சேர்ந்த ஞானேந்திர பாண்டேயின் நூல் இதில் மிகமுக்கியமானது.
மார்க்சியத் தாக்கம் பெற்ற கோசாம்பி, ரொமிலா தாப்பர், இர்பான் ஹபீப், பிபன் சந்திரா, சுமித் சர்க்கார், கே.என். பணிக்கர் போன்றோரால் முன்னெடுக்கப்படும் ஆராய்ச்சிப் போக்கு இன்னும் குழந்தைப் பருவத்தில்தான் உள்ளது என்று சொல்வதை நான் ஒப்புக்கொள்ளமாட்டேன். ஏனென்றால், இன்று மதிக்கப்படும், பயன்படும் ஆராய்ச்சிகள் எல்லாம் இவர்களால் செய்யப் பட்டவை தாம். உலக அரங்கிலும் இவர்களுக்குத்தான் மதிப்பு. விசுவ இந்து பரிஷத்தின் வரலாற்றாசிரியர்கள் எழுதும் ஆய்வுக் கட்டுரை ஒன்றைக்கூட அனைத்துலக ஆய்விதழ் எதிலும் வெளியிட முடியாது. ஆனால், மிகப்பெரிய சிக்கல் என்னவென்றால், நம் வரலாற்றாசிரியர் பலரும் ஆங்கிலத்திலேயே எழுதுகிறார்கள். தம் தாய் மொழிகளில் எழுதுவதில்லை. இதனால், நகரம் சார்ந்த படித்த வர்க்கத்தினரை மட்டுமே இவர்களின் கருத்துகள் சென்றடைகின்றன. ஆனால், இந்துத்துவ வரலாற்றாசிரியர்கள் தாய் மொழியில் எழுதுகின்றனர். அவை ஏராளமாக அச்சடிக்கப்பட்டுப் பரப்பப்படுகின்றன. வகுப்புவாத நஞ்சு வரலாறு மூலமாக ஊட்டப்படுகிறது.
உண்மையில், இன்று வகுப்புவாதத்திற்கு எதிரான போராட்டம் என்பது வரலாறு என்ற களத்தில்தான் முக்கியமாக நடைபெறுகிறது. இதில் கிடைக்கும் வெற்றி தோல்வி அரசியலையும், பொது வாழ்க்கையினையும் பெரிய அளவில் பாதிக்கப் போகிறது. இந்தப் போராட்டத்தில் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் போதுமான மும்முரம் காட்டவில்லை என்றே தோன்றுகிறது.
இந்துத்துவ மற்றும் மார்க்சிய வரலாற்று நெறிகள் பற்றிப் பொதுவாகச் சொன்னீர்கள். இருப்பினும் இஸ்லாமியரின் வருகைக்குப் பின்னர்தான் இந்தியச் சமூகத்தில் தேக்கம் ஏற்பட்டது என்ற கருதுகோள் பற்றி...
இதைப் பற்ற இந்தியாவின் மிகச்சிறந்த வரலாற்றறிஞராக மதிக்கப்படும் கோசாம்பி தெளிவாகவே எழுதியுள்ளார். பிராமணியத்தைக் கருத்தியலாகக் கொண்ட ஆளும் வர்க்கங்கள் என்றைக்கு நிலை பெற்றனவோ, உற்பத்திச் சாதனங்களின் உரிமையினையும், உற்பத்தி உறவுகளையும் தீர்மானிக்கிற சாதி அமைப்பு எப்போது இறுக்கம் பெற்றதோ, அன்றைக்கே தேக்கம் ஏற்பட்டு விட்டது. இது இஸ்லாமியர்கள் வருவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே ஏற்பட்டுவிட்டது.
இம்மானுவேல் வாலர்ஸ்டைன் போன்ற அறிஞர்கள் உலக முதலாளித்துவம் 15ஆம் நூற்றாண்டிலேயே ஏற்பட்டு விட்டது என்றும், உலகச்சந்தை அப்போதே உருவாகத் தொடங்கிவிட்டது என்றும் (வாலர்ஸ்டைன், பெர்டினாண்ட் பிராடெல் போன்ற வரலாற்றறிஞர்களின் பார்வையில் முதலாளித்துவத்தின் பிறப்பிற்கும் தொழிற்புரட்சிக்கும் எந்தத் தொடர்புமில்லை). ஒரு நாட்டின் வளமைக்கும் வறுமைக்கும் இந்த ஓருலக அமைப்பில் (World System) மைய நாடுகளாக (Core) உள்ளவை விளிம்பில் (Periphery) உள்ள நாடுகளின் உபரியைக் கைப்பற்றுகின்றன. இத்தகைய கருத் தாக்கத்தின்படி பார்த்தால் இந்தியாவின் ஆட்சி இஸ்லாமியரிடமிருந்தாலும் இந்துக்களிடமிருந்தாலும் எல்லாம் ஒன்றுதான்.
வேறு சில அண்மைக்கால ஆராய்ச்சியாளர்கள், காலனியாதிக்கம் ஏற்பட்டிராவிட்டாலும்கூட இந்தியாவில் முதலாளித்துவ வளர்ச்சி ஏற்பட்டிருக்கும் என்று சொல்கிறார்கள்.
ஆக, மொத்தத்தில் உலகில் (அல்லது இந்தியாவில்) உள்ள எல்லா பிரச்சினைகளுக்கும் முஸ்லிம்களின் மீது பழிபோட முடியாது. அதிலும் குறிப்பாக, வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் எல்லாவற்றுக்கும் இந்து - முஸ்லிம் முரண்பாட்டைக் கருதுகோளாகக் கொண்டு ஆராய்ச்சி செய்ய முடியாது.
சற்று முன்பு, தேசியத்தைப் பற்றி சில விமர்சனக் கருத்துகளைக் கூறினீர்கள். தேசியம் தவறானது என்பது போன்ற தொனி அதில் இருக்கிறது. அதை விளக்க முடியுமா?
இஜாஸ் அகமது என்ற மார்க்சிய அறிஞரின் வார்த்தையில் சொல்வதானால், ‘யாருடைய தேசியம்?’ என்று எதிர்க்கேள்வி கேட்க விரும்புகிறேன். பொத்தாம் பொதுவாக, தேசியம் நல்லதா, கெட்டதா என்று கேட்டால் பதில் சொல்ல முடியாது.
ஐரோப்பாவில் தேசியம் முற்போக்கான கருத்தியலாகவும், இயக்கமாகவும் விளங்கியது. அந்தத் தேசியத்தின் உந்துசக்தியாக எழுச்சி பெற்ற உயிர்ப்பாற்றல் மிக்க முதலாளிய வர்க்கம் இருந்தது. வரலாற்றி¢ன் முன்னோக்கிய வளர்ச்சியில் முற்போக்கான பங்கை அது ஆற்றியது.
அந்தத் தேசியத்திற்கும், நிலவுடைமை வர்க்கத்தோடு சமரசம் செய்து கொண்ட காலனியாதிக்கத்தை நம்பி இயங்கிய தரகு முதலாளியத்தின் தேசியத்திற்கும் பெரும் வேறுபாடு உண்டு. சிறுபான்மையினரை விலக்கி, தலித்துகளை தன் அரசியல் ஆதாயத்துக்கு மட்டுமே அணி திரட்டி, பெண்களின் மீதான தந்தை வழிச் சமூக ஒடுக்குமுறைக்குப் புதுவடிவம் கொடுத்து, இந்தி தவிர்த்த பிற மொழிகளுக்கு இரண்டாம் இடத்தை அளிக்கும் தேசியத்தைக் கேள்விக்கு உள்ளாகியே ஆக வேண்டும். திருமணச் சம்மத வயதிற்கு முன்னரே தம் மகளுக்கு மணம் முடிப்பேன் என்றும், கலையைப் பேணுவதற்குத் தேவதாசி முறை வேண்டும் என்றும் கூறிய சத்தியமூர்த்தியின் தேசியத்தை விமர்சிப்பது எப்படி தவறாக முடியும்?
திராவிட இயக்கம் பற்றி ஆராய வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு எப்படி ஏற்பட்டது? இப்போது ‘திராவிட இயக்கமும் வேளாளரும்’ என்ற நூலினை எழுதியிருக் கிறீர்கள்...
இலக்கியப் படிப்பின் மூலமாகவே நான் வரலாற்றுக்குள் நுழைந்தேன். தமிழியக்கத்தின் வழி வந்தவர்களின் பழக்கம் - த.கோவேந்தன், ‘முகம்’ மாமணி போன்றோர் - பள்ளியில் படிக்கும்போது ஏற்பட்டது. அதன் சாரமான பகுதிகளை உட்செரிக்கும் வாய்ப்பும் உண்டானது. சிறு பத்திரிகைகள், மார்க்சிய சிந்தனை இவற்றின் அறிமுகமும் கிடைத்தன.
வ.உ.சி.யைப் பற்றி சென்ற 12, 13 ஆண்டு காலமாக ஆய்வு செய்து வருகிறேன். வ.உ.சி.யின் பிற்கால வாழ்வு, பார்ப்பனரல்லாதார் இயக்கத்தோடு நெருங்கிய தொடர்பு உடையது. இந்தச் சூழலில்தான் திராவிட இயக்கம் பற்றி ஆராய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. என்னைச் சுற்றியுள்ள சமூக யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளும் முயற்சியிலும் இது கருவியாக அமைந்தது.
இப்போது ‘சவுத் ஏசியன் புக்ஸ்’ வெளியிட்டுள்ள ‘திராவிட இயக்கமும் வேளாளரும்’ என்ற நூலைத் ‘திராவிட இயக்கம் வேளாளர் இயக்கமே’ என்ற குற்றச்சாட்டைக் கேள்விக்குள்ளாக்கும் முறையில் எழுதியுள்ளேன். பார்ப்பனரல்லாதார் இயக்கத்திற்குப் பெரியார் தலைமையேற்றதோடு அது ஒரு தீவிர முற்போக்கு இயக்கமாக உருப்பெறுகிறது. இதனால் வேளாளர்களுக்கும் திராவிட இயக்கத்திற்குமான முரண்பாடு மோதல்களாக வெடிக்கின்றது. இந்த மோதல்களை இந்நூலில் விரிவாக விளக்கியுள்ளேள். இதன் மூலம் திராவிட இயக்கத்தின் சமூக அடித்தளம், கருத்தியல் உள்ளடக்கம் ஆகியவற்றைப் புரிந்துகொள்ள வழியேற்படும் என்று நம்புகிறேன்.
உங்கள் நூலில் பெரியாரின் பங்களிப்பைச் சாதகமான நோக்கில் பார்த்திருக்கிறீர்கள். இந்த மதிப்பீடு திராவிட இயக்கம் முழுமைக்கும் பொருந்துமா? பிற்காலத் திராவிட இயக்கம் பற்றி நீங்கள் எதுவும் எழுதியதாகத் தெரிய வில்லையே?
திராவிட இயக்கத்தின் வெவ்வேறு கட்டங்களை அதனதன் வரலாற்றுச் சூழலில் பொருத்திப் பார்த்து மதிப்பிட வேண்டும் என்பதே நூலின் மையச் சரடு. எனது நூல் சுயமரியாதை இயக்கக் காலத்தைப் பற்றியது. ஒரு காலகட்டத்தை மட்டும் ஆய்வு செய்ததற்குக் காரணங்கள் உண்டு.
இன்றைய நிலையில் நமக்கு மாற்றுகள் தேவை. இப்போதுள்ள நெருக்கடியிலிருந்து விடுதலை வேண்டும். வரலாற்றுப் போக்கில் பல வழிகள் இருந்திருக்கின்றன. அவற்றில் மக்களுக்கு உரிமையும் நன்மையும் தரக்கூடிய சாத்தியக் கூறுகளும் மாற்றுகளும் இருந்தன என்பதைக் காட்ட விரும்பினேன்.
சுயமரியாதை இயக்கக் காலத்தில் பெரியாரின் கருத்துகள் மலைப்பைத் தரக்கூடியவை. அவருடைய ‘பெண் ஏன் அடிமை யானாள்?’ என்ற நூல் 1970களின் தீவிரப் பெண்ணியலாளர் களின் நிலைபாடுகளோடு ஒப்பிடத்தகுந்தவை. சமயம், சாதி ஆகியன பற்றிய அவரது கருத்துகளும் மிக ஆழமானவை.
“வஸ்துவுக்காக என்று எனக்கு ஒன்றினிடத்தும் பற்று கிடை யாது. அது மூடப்பற்று, மூடப்பக்தியே ஆகும். குணத்திற்காகவும், அக்குணத்தினால் ஏற்படும் நற்பயனுக்காவும்தான் எதனிடத்திலும் பற்று வைக்கக்கூடும். எனது மொழி, எனது தேசம், எனது மதம் என்பதற்காகவோ, எனது மொழி பழமையானது என்பதற்காவோ, ஒன்றையும் நான் பாராட்டுவதில்லை. எனது நாடு எனது லட்சியத் திற்கு உதவாது என்று கருதினால், உதவும்படி செய்ய முடியாது என்று கருதினால் உடனே விட்டுவிட்டுப் போய்விடுவேன். அது போலவே எனது மொழி என்பதானது எனது லட்சியத்திற்கு எனது மக்கள் முற்போக்கடைவதற்கு, மானத்துடன் வாழ்வதற்குப் பயனளிக்காது என்று கருதினால் உடனே அதை விட்டு விட்டுப் பயனளிக்கக் கூடியதைப் பின்பற்றுவேன்’’ என்று பெரியார் 1930களில் சொன்னது இன்று நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய செய்தி. இதை அளவுகோலாகக் கொண்டு பார்த்தால், பெரியாரின் முழு அரசியல் வாழ்க்கையையும் ஒருவாறு புரிந்து கொள்ளலாம்.
சென்ற முப்பது, நாற்பது ஆண்டுகளில் தமிழ்ச் சமூகத்தில் ஏற்பட்ட மாற்றம் பெரியது. உத்திரப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களோடு ஒப்பிட்டால் இது தெரியும்.
பிற்படுத்தப்பட்ட சாதியினர் இன்று அதிகாரம் உடையவர் களாக இருக்கிறார்கள். தலித் மக்களிடையே எழுச்சி ஏற்பட்டு வருகிறது. தமிழ் அடையாளம் என்பது ஒப்பீட்டளவில் அதிக ஜனநாயகத்தன்மை உடையதாக உள்ளது. சிறுபான்மையினர், பெண்கள், தலித் ஆகியோரும் இந்த அடையாளத்தைப் பெரு மளவுக்கு ஏற்றுக் கொள்கின்றனர். இதற்குக் காரணம் திராவிட இயக்கம்.
‘ஸ்ரீ’ என்பதற்குப் பதிலாகத் ‘திரு’ என்ற அடைமொழியைக் கையாளவேண்டும் என்று 1940களில் பெரியார் இயக்கம் நடத்தியபோது இரண்டொரு காங்கிரஸ்காரர்களையும் பிராமணர்களையும் தவிர எல்லோரும் ‘திரு’வை ஏற்றுக்கொண்டனர். முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோரும் இதற்கு ஆதரவு தெரிவித்தனர்.
அவ்வகையில் தமிழ் அடையாளம் என்பது ஜனநாயகத் தன்மை உடையது. இது மேலும் அதிகமாகப் போராட வேண்டும்; மெத்தனமாக இருந்துவிடக் கூடாது. எழுச்சி பெற்று வரும் தலித்துகளின் குரலுக்குச் செவிசாய்க்க வேண்டும்.
இந்த நிலையோடு வடநாட்டை ஒப்பிட்டுப் பாருங்கள். நிலச்சீர்திருத்தம் ஒப்புக்கு மட்டுமே நிறைவேற்றப்பட்ட மாநிலங்கள் பல. அங்கு பிற்படுத்தப்பட்ட சாதிகளின் நிலை என்ன? தாழ்த்தப் பட்டோரின் நிலையைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.
மண்டல் பரிந்துரையை வி.பி.சிங் செயலாக்கியபோது ஏற்பட்ட மேல் சாதி யினரின் கிளர்ச்சியை நாம் அறிவோம். அத்வானியை - ரத யாத்திரையை - அவர்கள் கிளப்பிவிட்டதும் தெரியும்.
50, 60 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் ஏற்பட்ட சமூக மாற்றங்கள் இப்போதுதான் வடக்கில் தொடங்கியுள்ளன. இந்திரா பார்த்தசாரதியும் என்.எஸ்.ஜெகந்நாதனும் தமிழகம் பின்தங்கிவிட்ட தாகப் புலம்பிக் கொண்டிருந்தாலும் உண்மை இதுதான்.
இந்தக் கலந்துரையாடல் நடக்கும் இந்த அறையை எடுத்துக் கொள்வோமே... இங்கே பேசிக் கொண்டிருக்கும் நாம் வேறு வேறு சமூகப் பிரிவைச் சேர்ந்தவர்கள். இதுபோன்ற ஒரு கலந்துரையாடல் வடநாட்டில் நடந்தால் அதில் ஒருவரேனும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராக இருக்கும் வாய்ப்பு குறைவு.
இன்றைய திராவிட இயக்கம் பற்றி நீங்கள் ஆய்வு செய்யாதது ஏன்?
நான் முதன்மையாக ஒரு வரலாற்றாசிரியன். அண்மைக் காலத்தைப் பற்றி எழுத வேண்டுமென்றால் வேறு வகைப் பயிற்சி தேவை. அரசியல், விஞ்ஞானம், சமூகவியல் ஆகிய ஒழுங்குகளில் பயிற்சி தேவை. இது இல்லாதபோது இந்த ஆராய்ச்சியில் இறங்குவது ஆபத்து. சென்ற காலத்தின் தீவிர, முற்போக்குக் காலகட்டத்தை முன் வைப்பது என்பதே இன்றைய நிலை பற்றிய விமர்சனம்தானே? இன்றைய சீரழிவு அல்லது பின்னடைவு அல்லது மெத்தனத்திற்குச் சொரிந்து கொடுப்பதாக இது எப்படி இருக்க முடியும்?
எழுத்தாளர் வ.ரா., ஆய்வாளர் பழ.அதியமானோடு ஒரு திராவிட இயக்கத் தலைவரைச் சந்தித்துப் பேசியபோது “ஆராய்ச்சியே வேண்டாம்; பழையதைக் கிளறி, பிரச்சினையை உண்டாக்குகிறார்கள்’’ என்று அவர் சொன்னதும் இங்கு நினைவுக்கு வருகிறது.
உங்கள் பின்னணி பற்றியும், பிற ஆராய்ச்சிகள் பற்றியும்...
சிறு வயதிலிருந்து புத்தகம் படிக்கும் ஆர்வம் உண்டு. ஒன்பதாவது படிக்கும்போது தமிழார்வம் ஏற்பட்டது. சென்னை, கலைஞர் கருணாநிதி நகர் இலக்கிய வட்டத்தின் மூலம் தமிழுலகம் அறிமுகமாகியது. வ.உ.சி.யின் மீது ஏற்பட்ட பற்றினால் வரலாற்று ஆராய்ச்சிக்குள் நுழைந்தேன். மெல்ல மெல்ல என் ஆய்வு ஈடுபாடுகள் விரிந்தன. இரண்டு பிரிவாக என் வேலை களைச் சொல்லலாம். முதலில் ஆய்வு நூல்கள். வ.உ.சி. பற்றி நிறைய எழுதியுள்ளேன். வ.உ.சி. கைதானதும் திருநெல்வேலியிலும் தூத்துக்குடியிலும் (1908) நடந்த மக்கள் எழுச்சியைப் பற்றியது
‘வ.உ.சி.யும் திருநெல்வேலி எழுச்சியும்’. தலைமையை மையப் படுத்தாமல் மக்களை மையப்படுத்தி எழுதியது என்ற வகையில் இது தமிழுக்குப் புதிது என்று சொல்லலாம். அப்புறம் பேராசிரியர் ஆ.சிவசுப்ரமணியனுடன் சேர்ந்து ‘பின்னி ஆலை வேலை நிறுத்தம்’ 1921’ என்று சென்னைத் தொழிலாளர்களின் முக்கியமான போராட்டம் ஒன்றை ஆய்வு செய்தேன். இதுபோன்ற ஆய்வுகள் தவிர, மூல ஆவணங்களைத் தொகுத்துத் தரவும் முயன்றுள்ளேன்.
அவ்வகையில் ‘வ.உ.சி. கடிதங்கள்’ நூலும், ‘மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்’ நூலும் வெளிவந்துள்ளன. ‘பாரதியும் வ.உ.சி.யும்’ என ஒருவரைப் பற்றி ஒருவர் எழுதியுள்ளவற்றைத் தொகுத்து நூலாக்கியுள்ளேள். இப்போது பாரதி தமது ‘இந்தியா’ இதழில் வெளியிட்ட கருத்துப் படங்கள் நூலாக்கம் பெற்று அச்சாகி வருகின்றன.
இவை தவிர ஆங்கிலத்திலும் பல கட்டுரைகள் வெளியாகியுள்ளன. வெளியாரை அடைவதற்கு ஆங்கிலம் பயன்படுகிறது என்பதோடு தமிழில் எழுதும்போது கிடைக்காத மரியாதை ‘எகனாமிக் அண்டு பொலிடிக்கல் வீக்லி’யில் எழுதும்போது கிடைக்கிறது. அதனையும் என் வேலைக்குப் பயன்படுத்திக் கொள்கிறேன்.
இவை தவிர சங்க இலக்கியம், ஆண்டாள், பாரதிதாசன், சேரன், சுந்தர ராமசாமி ஆகியோர் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளேன்.
புதுதில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் உங்களின் முனைவர் படிப்பு அனுபவம்...
மிகுந்த பயனுடையதாக இருந்தது. பேராசிரியர் கே.என்.பணிக்கரின் மேற்பார்வையில் தமிழ் நாட்டில் புத்தக வெளியீட்டின் சமூக வரலாற்றை ஆராய்ந்தேன். மேலும் ரொமிலா தாப்பர், பிபன் சந்திரா, நீலாத்ரி பட்டாச்சாரியாவின் விரிவுரைகளைக் கேட்கும் வாய்ப்பு கிடைத்ததோடு மிக முக்கியமாக ஒரு குறிப்பிட்ட துறையில் கறாரான பயிற்சி கிடைத்தது. இன்றுள்ள நிலையில் இங்கு அதனைப் பெற வாய்ப்பில்லை. மேலும் பல கருத்தரங்குகளும், கலந்துரை யாடல்களும், சுமித் சர்க்கார், அஷீஸ் நந்தி போன்றோரை நேரில் காணும் வாய்ப்பு, இவற்றோடு ஜே.என்.யு. தேசியப் பல்கலைக் கழகமாகவும் தங்கிப் படிக்கக்கூடிய இடமாகவும் உள்ளதால் பல மாநில மாணவர்களோடு பழகவும் கலக்கவும் வாய்ப்பு.
இவற்றை நான் தமிழ்வழி நின்றே செரித்துக் கொண்டேன்.
ஜே.என்.யு.வில் கற்றுக்கொண்ட அளவுக்கு மறைமலையடிகள் நூலகத்தில் உதவி நூலகராக இருந்தபோது கற்றுக்கொண்டேன். பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் சொல்லிக் கொடுத்த அளவு, மயிலை சீனி.வேங்கடசாமியும், கைலாசபதியும், சிவத்தம்பியும், சாத்தான்குளம் இராகவனும் எனக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்.
சந்திப்பு : சூரியசந்திரன்
சாரதா, 1994
கருத்துகள்
கருத்துரையிடுக