சர்வதேச அளவில் கவனம் பெற்ற திரைப்பட, ஆவணப்பட இயக்குநர் அருண்மொழி

குறும்பட இயக்குநர்' அருண்மொழி ...

திரையிடல் விழாக்கள், கலை இலக்கிய ஆளுமைகள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள், நாடக நிகழ்வுகள், புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிகள், பயிலரங்குகள் என அனைத்திற்கும் தவறாமல் காமிரோவோடு வந்து எவ்வித சலனமும் இல்லாமல் அமைதியாக ஒளிப்பதிவு செய்து கொண்டிருக்கும் ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான அருண்மொழியை இனி காணவே முடியாது என்கிற எதார்த்தம் மனதை பெரும்துயரத்தில் ஆழ்த்துகிறது.

சர்வதேச அளவில் கவனம் பெற்ற திரைப்பட, ஆவணப்பட இயக்குநர் என்பதாகவோ, ருத்ரையா போன்ற மாற்றுத் திரைப்பட இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றியவர் என்பதாகவோ, தமிழ்நாட்டு கலை இலக்கிய ஆளுமைகளை ஆவணப்படுத்தி தமிழ்நாட்டுக்குப் பெருமைச் சேர்த்துக் கொண்டிருப்பவர் என்பதாகவோ, ஓர் அறிவுஜீவியாகவோ அவர் என்றைக்குமே தன்னை வெளிப்படுத்திக் கொண்டதில்லை. தானுண்டு, தன் வேலையுண்டு என தன்னால் எவையெல்லாம் சாத்தியமோ அவற்றையெல்லாம் அமைதியாகவும் வேட்கையோடும் தன் பணியைச் செம்மையாக கொண்டிருந்தவர் அருண்மொழி.

தோழமை, கடின உழைப்பு, எளிமை, மென்மை, துணிச்சல், அரவணைப்பு இவற்றின் மொத்த வடிவம் அருண்மொழி. திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவை முறையாகப் பயின்றவர். வாய்ப்புகள் அதிகமிருந்தபோதிலும் வணிக திரைப்படத் துறையையோ, வசதியான வாழ்க்கையையோ தேடிக்கொள்ளாமல் சமூக அக்கறையுடன் மாற்று சினிமாவுக்கான தளத்தில் இயங்கத் தொடங்கினார்.

அவள் அப்படித்தான் - தமிழ் ...

தமிழ்த் திரைப்பட வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற இயக்குநர் ருத்ரைய்யாவின் ‘அவள் அப்படித்தான்’, கே.ஹரிஹரனின் ‘ஏழாவது மனிதன்’ ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார்.

‘காணி நிலம்’, ‘ஏர்முனை’ ஆகிய திரைப்படங்களை இயக்கினார். இத்திரைப்படங்கள் விவசாயம் மற்றும் விவசாயிகளின் பிரச்சனைகளைப் பேசுபொருளாகக் கொண்டவை. சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளின் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டன.

filmmaker Arunmozhi Sivaprakasam passed away|தமிழின் ...

தமிழ் திரைப்படச் சூழல் தனக்குத் தோதுபடாத சூழலில் குறும்படங்கள், ஆவணப்படங்களில் முழுகவனத்தையும் திருப்பினார். இவரது முதல் ஆவணப்படமான ‘நிலமோசடி’யில் பிரபல பண்ணையார்கள், அரசியல்வாதிகளின் பினாமி நிலப் பித்தலாட்டங்களை அம்பலப்படுத்தினார். மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் போராட்டத்தின்போது தாமிரபரணியில் அரசினால் நடத்தப்பட்ட கொடூர கொலைச் சம்பவத்தை மையமாக வைத்து ‘விசாரணைக் கமிஷன் ஜாக்கிரதை’ எனும் ஆவணப்படமாக்கினார்.

தமிழ் மண்ணின் அடையாளங்களான இசைஞானி இளையராஜா, இலக்கிய ஆளுமைகள் ஜெயகாந்தன், நகுலன், இன்குலாப், சுந்தர ராமசாமி, கி.ராஜநாராயணன், கோவை ஞானி, ராஜம் கிருஷ்ணன், சிற்பி தட்சிணாமூர்த்தி, கூத்துக்கலைஞன் புரிசை கண்ணப்ப தம்பிரான் மட்டுமல்லாது, கடலூர் சமையல்காரர் தர்மர் என பலரையும் ஆவணப்படுத்திய தன்னலமற்ற கலைஞன் அருண்மொழி. முக்கியமாக, ‘சோலோ பெர்ஃபார்மென்ஸ்’ எனும் இவரது ஆவணப்படம் கடந்த அரை நூற்றாண்டுகால தமிழ் நாடகச் சூழலை மையப்படுத்திய ஒரு சிறந்த படைப்பு. இந்த ஆவணப்படம் செக்கோஸ்லேவியாவின் ப்ராக் திரைப்பட விழா, ஹங்கேரி புடாபெஸ்ட் திரைப்பட விழா, ஜெர்மனியின் பெர்லின் திரைப்பட விழா ஆகியவற்றில் திரையிடப்பட்டு உலகின் கவனத்தை ஈர்த்தது.
இந்திய தேசிய இராணுவத்தில் பணியாற்றிய கேப்டன் லட்சுமி உள்ளிட்ட பல போராட்ட வீரர்களை பேட்டி கண்டு ‘ஐ.என்.ஏ’ எனும் பெயரில் ஆவணமாக்க முயற்சி மேற்கொண்டார்.

‘பிரசாத் திரைப்படக் கல்லூரி’---யில் பயிற்றுநராகப் பணியாற்றிய காலத்திலும், பின்னர் தானே தொடங்கிய 'ஸ்தானிஸ்லாவிஸ்கி' எனும் திரைப்படப் பயிற்சிக் கூடத்தின் மூலமாகவும் ஏராளமான இளைஞர்களுக்கு மாற்றுத் திரைப்பட, ஆவணப்படக் கலையைக் கற்றுக் கொடுத்தார்.

ஆவணப்பட இயக்குநர் அருண்மொழி ...

“பிறருக்காகவோ, பிறருடைய விருப்பத்துக்காகவோ, விளம்பரத்துக்காகவோ எடுக்கப்படும் குறும்படம் மற்றும் ஆவணப்படங்களை விட நம் விருப்பத்துக்காக நாம் விரும்பியபடி எடுக்கும் ஆவணப்படங்களே சிறப்பாக இருக்கும்’’ என்பது அருண்மொழியின் அனுபவமொழி.

 ஆவணப்படங்களையும் குறும்படங்களையும் மக்கள் கூடும் வீதிகளில் திரையிட வேண்டும் என்பதே அருண்மொழியின் விருப்பமாக இருந்தது. சமீபத்தில், அவரது உயிர் ஒரு திரைப்பட விழாவின்போது மாரடைப்பினால் பிரிந்துவிட்டது.

“நான் ஒரு திரைக்கலைஞனாக மட்டுமே இருந்திருந்தால் என் படங்கள் மொக்கையாக, மொன்னையாக இருந்திருக்கும். மாறாக, ஒரு சமூகச் செயற்பாட்டாளனாகவும் இருந்ததால்தான் என் ஆவணப்படங்கள் தனித்துவமாக இருக்கின்றன’’ என்பார் அருண்மொழி. இளம் திரைக் கலைஞர்கள் அவரிடமிருந்து கற்கவேண்டிய பாடம் இதுதான்.

சூரியசந்திரன்

மக்கள் வீதி, 
நவம்பர் - டிசம்பர் 2019

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சங்க இலக்கியம் முதல் பெண் கவிஞர்கள் : பத்மாவதி விவேகானந்தன் நேர்காணல்

எனது கதைகள் வரலாற்று ஆவணங்கள்: மேலாண்மை பொன்னுச்சாமி நேர்காணல்

கவிஞர் அறிவுமதி பாடலாசிரியரான கதை