மல்லாங்கிணறு கிராமத்தையே என் மனசு விரும்புகிறது: கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன்

“எனதூர்
கரிசல் மண்ணில் மல்லாந்து
வட்டார மொழி சுழிக்க
வடிவங்களின்
முகம் தொலைத்து
நதிநீராய்
புரண்டோட வேணுமெனக்கு
இலக்கின்றி’’
கரிசல் பூமியின் கவிச்சை மொழியில் கரிசல் மண்ணையும் மக்களையும் கவிதைகளாக்கிக் கொண்டிருப்பவர் கவிஞர் தமிழச்சி. இயற்பெயர் சுமதி. விருதுநகர் மாவட்டத்திலுள்ள மல்லாங்கிணறு கிராமத்தில் பிறந்தவர். முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியன் மகள். அம்மா ராஜாமணி, தொடக்கப்பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
தமிழச்சியை கலை இலக்கியங்களை நேசிக்கிற பெண்ணாக உருவாக்கியதில் பெரும்பங்கு அவரது அப்பாவுக்கே உண்டு. முறைப்படி பரதநாட்டியம் கற்றுக் கொடுத்திருக்கிறார். இலக்கியம் படிக்க விருப்பப்பட்டபோது ஊக்கப்படுத்தி படிக்கச் சொல்லியிருக்கிறார். எழுதத் தொடங்கிய காலத்தில் எதை எழுத வேண்டும், எப்படி எழுதவேண்டுமென்று நெறிப்படுத்தியவர் எல்லாமே இவரது அப்பாதான்.
தமிழச்சியின் முதல் கவிதை முயற்சி, மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் முதுகலைப் படித்தபோது நிகழ்ந்திருக்கிறது.
“ஓர் இலக்கிய மாணவிக்கு ஒரு ரசனைக்குரிய விசயமாக இருக்கிற மழை, விவசாயிக்கு எப்படியான மாறுபட்ட உணர்வைத் தருகிறது என்பதை அடிப்படையாகக் கொண்டு ‘மாரி’ என்றொரு கவிதையை எழுதினேன். அதை எனது அப்பாவிடம் காண்பித்தபோது அவர் அக்கவிதையின் அழகியலை விவரித்ததுடன் சில திருத்தங் களையும் கூறி செழுமைப்படுத்தினார்’’.
தமிழச்சி எழுதி பிரசுரமான முதல் கவிதை ‘தீ... தீ... தீ...’ தருமபுரியில் மூன்று மாணவிகள் பேருந்தில் உயிரோடு கொளுத்தப்பட்ட கொடூரத்தைப் பற்றியது. நீண்ட அந்தக் கவிதையின் முடிப்பு இது:
“முகவரி எழுதப்படாத
உள்நாட்டு அஞ்சல்
தோழிக்கொரு கைப் பை
தோழனுக்குக் குளிர் கண்ணாடி
அம்மாவிற்குச் சிரிக்கும் புத்தர்
தம்பிக்கு தொப்பி
அப்பாவிற்கு மூலிகை மணி
தனக்கென்று கிளிஞ்சல்கள்
இத்தனைக்கும் மேலாய்
இணையற்ற மனித உயிர்கள் மூன்று என
எல்லாம் இருந்தன அந்தப் பேருந்துக்குள்
ஒரு பெட்ரோல் குண்டு
மரணமாய் விழும் வரை.’’
இக்கவிதை ‘இதயம் பேசுகிறது’ இதழில் வெளிவந்தது. தமிழச்சியிடமிருந்து முழுவீச்சில் வெளிப்பட்ட முதல் கவிதை என்றால், அது ‘அவள் விகடன்’ இதழில் வெளிவந்த ‘தேடல்’தான்.
தோழனாகவும், தாயாகவுமிருந்த தந்தை தங்கபாண்டியன் அவர்கள் 1997ல் மாரடைப்பினால் மரணம் எய்திவிட, அந்தப் பெருந்துயரத்துக்கும் துக்கத்துக்கும் வடிகாலாக அமைந்த அந்தக் கவிதை:
“ஒரே மாதிரி இருக்கின்ற
இந்த ரயில்பெட்டியில்
எது அந்தக் கதவு என்று தெரியாது
என்றாலும்
பயணம் போகும் ஒவ்வொரு முறையும்
முன்பொரு நாள்
பூரண கர்ப்பிணியாய்
நீண்ட நேரம் நிற்பதற்குச் சிரமப்பட்டுத்
தண்டோடு தலைகுனியும்
தாமரையின் நிறைமாதச் சோர்வோடு
பயணித்த நான்
உறங்குவதற்கு இலகுவாக
உடைமாற்ற யத்தனிக்கையில்
தள்ளாடி விழுந்து விடுவேனோ எனும்
உள்ளார்ந்த பதற்றத்தோடும் உளியின் நுனியது
விரல்களில் படாது
துளையிடும் சிற்பியின்
கவனத்தோடும்
வெளியிலிருந்து
தாயுமான என் தந்தை
ஒருக்களித்துப் பிடித்திருந்த அந்தக் கதவு
ஒருவேளை
இதுதானோ என்று
இன்றுவரை தேடுகிறேன்’’.
இக்கவிதையைத் தொடர்ந்து ‘ஏக்கம்’, ‘வருகை’, ‘பார்வை’ எனப் பல கவிதைகளில் அப்பாவின் இழப்பை பெருந்துயரத்தோடு பதிவு செய்திருக்கிறார்.
அப்பாவின் நினைவுதினமான ஜூலை 31ல் வருடந்தோறும் ஒரு கவிதையை ‘முரசொலி’யில் தொடர்ந்து எழுதி வருகிறார். அவை தந்தைக்கு மகள் எழுதுகிற கவிதைகளாக மட்டுமே இருக்கின்றன.
அப்பாவின் மறைவுக்குப் பின், இவரது சகோதரர் திரு. தங்கம் தென்னரசு திராவிட முன்னேற்றக் கழகத்தில் தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
தனது அப்பாவை மட்டுமல்லாமல், தனது கரிசல் மனிதர்களை எல்லாம் முடிந்தளவு கதைப் பாடல்கள் வழியே நமக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். சலிக்காது பல கவிதைகள் சொன்ன அப்பத்தா, நாலாவது பிரசவத்தில் இறந்துபோன ஒரு சோட்டுப் பெண் சிலம்பாயி, கனகாம்பரமும் கலர் பூந்தியுமாக வரும் சேத்தூர் சித்தப்பா, தன் பெயரை கையில் பச்சைக் குத்திக் கொண்டிருந்த தம்பி, இறுதிவரை ஆரத் தழுவ முடியாமலே இறந்து போன அக்கா, தான் வாங்கிக் கொடுத்திருந்த பித்தளை மோதிரத்தை சாகும்போது போட்டுக் கொண்டிருந்த முடியனூர்க் கிழவி, ‘அர்த்தம் பார்த்தா அழகேது?’ என தனக்கு அனுபவப் பாடம் சொன்ன கொத்தனார் பாக்கியம், சிறுவயது பயஉணர்வின் உருவமான வெடிவாலு கருப்பையா, அணில் விளையாட அரையடி கம்பி கட்டும் குழந்தைவேல் ஆச்சாரி, இன்னும் பலர்...
“நான் எழுதியுள்ள ஒவ்வொருவரும் நிஜமாக, ரத்தமும் சதையுமாக என்னோடு உலாவிய மனிதர்கள். என்னுடைய ஆரம்ப காலம் முதல் இப்போது வரை என்னுடைய வாழ்க்கையில் முக்கியப் பங்கு வகித்தவர்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விசயத்தை எனக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். இவர்கள் ஏடெடுத்துப் படித்ததில்லை; எழுதியும் வைத்ததில்லை. தனது வாழ்வியல் அனுபவங்களை வாழ்ந்துகொண்டே பிறருக்கும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.’’
1990ல் திருமணம். கணவர், காவல்துறை அதிகாரி.
“என்னுடைய கவிதை எழுதுகின்ற ஆர்வத்தை ஊக்கப் படுத்துவதுடன், கவிதை சம்பந்தமான வெளியீட்டு முயற்சிகளை உடனிருந்து உதவுகிற கணவராகவும் இருக்கிறார்’’.
மல்லாங்கிணறு கிராமத்திலிருந்து சென்னை மாநகருக்கு வந்து இராணி மேரி கல்லூரியின் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியேற்று நகர வாழ்க்கையை ஏற்றுக்கொள்ள நேர்ந்த போதிலும், எல்லா கிராமத்துப் பெண்களையும் போலவே இவரும் பிறந்த ஊர் நினைவுகளோடே வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரின் இந்த மன ஏக்கத்தை ‘தீப்பெட்டி பொன்வண்டு’ கவிதையைப் படித்தாலே உணர்ந்து கொள்ளலாம்.
திருமணத்துக்குப் பிறகு நடனம் ஆட முடியாமல் போன சூழலை ‘புதையல்’ கவிதையில் பதிவு செய்துள்ளார்.
சமூகத்தில் நிலவும் பல்வேறு அவலங்களை அறிகிற போதெல்லாம் அதற்கான தனது எதிர்ப்பைக் கவிதைகளின் வழியே பதிவு செய்திருக்கிறார். கொங்கப்பட்டி முத்துச்சாமி, தன் தந்தையின் விவசாயத்திற்காக, வெளியூர் சென்று உயர்நிலைப் பள்ளியில் சேர்க்கப்படாமல், உள்ளூர் பள்ளியில் ஐந்தாம் வகுப்பிலேயே பலமுறை படித்து வருவதை ‘பதிலிருக்கா?’ கவிதையில் கண்டித்திருக்கிறார்.
சோற்றுக்குத் தட்டேந்தும் தஞ்சை விவசாயிகளின் தன்மானம் அடகு போனதை ‘பெருங்காயம்’ கவிதையில் சுட்டிக் காட்டியிருக்கிறார்.
கும்பகோணத்தில் தீக்கிரையாக்கப்பட்ட 94 குழந்தைகளுக்கு ‘அனல் தின்ற அரும்புகள்’ கவிதையில் அஞ்சலி செலுத்தியிருக்கிறார்.
தமிழச்சியின் கவிதைகள் தொகுக்கப்பட்டு ‘எஞ்சோட்டுப் பெண்’ எனும் நூலாக டிசம்பர் 2003ல் வெளிவந்துள்ளது. தன் மண்ணையும் மக்களையும் கவிதைகளில் மட்டுமே பதிவு செய்திருந்த இவர், இந்நூலில் அவர்களைப் புகைப்படங்களின் மூலமாகவும் பதிவு செய்திருக்கிறார். ஆகவே, இந்நூல் கரிசல் மக்களின் வரலாற்றுப் பெட்டகமாக விளங்குகிறது. இந்நூலுக்காக ‘சிற்பி இலக்கிய விருது’ பெற்றிருக்கிறார் தமிழச்சி.
கவிஞர் தமிழச்சிக்கு இரண்டு மகள்கள்.

சமீபத்தில் ஆஸ்திரேலியா சென்று திரும்பிய தமிழச்சியின் அனுபவம்:
“நான்கு மாதங்கள் ஆஸ்திரேலியாவில் இருந்துவிட்டு வந்திருக்கிறேன். ஒரு கிராமத்துக்காரியாக என்னால் அந்த நகரத்தையும் நகர வாழ்க்கையையும் ரசிக்க முடிந்தது பல விதங்களில் அது எனக்குப் பிடித்திருந்தது. சென்னை நகரமும் நகர வாழ்க்கையும்கூட அப்படித்தான் இருக்கிறது. ஆனாலும், “நீங்கள் எங்கே இருக்க விரும்புகிறீர்கள்?’’ என்று என்னிடம் கேட்டால், நான் எனது மல்லாங்கிணறு கிராமத் தைத்தான் சொல்வேன். என் மனசு அப்படியாகத்தான் இப்போதும் இருக்கிறது.’’
சூரியசந்திரன்
பெண்ணே நீ, ஜனவரி 2005
சிறப்பு
பதிலளிநீக்கு