உலகப் புகழ் பெற்ற கிராமியக் கலைத் தம்பதியர் தேன்மொழி இராஜேந்திரன்



வுல் கலைக்குப் புகழ் பெற்றது தஞ்சாவூர். ‘தஞ்சாவூர் தவுல்’ என்றால் தமிழக மக்கள் மனதில் அப்படியொரு மவுசு. அத்தகைய தஞ்சைத் தவுல் இசையை உலக நாடுகள் பலவற்றிற்குச் சென்று இசைத்த பெருமைக்குரியவர் ‘கலைச்சுடர்மணி’ ஏ.இராஜேந்திரன் அவர்கள். இவரது துணைவியார் ‘கலைமாமணி’ தேன்மொழி, நாடறிந்த கரகாட்டக் கலைஞர். இசையும் நடனமுமாக இருவரும் இணைந்து கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக ‘தேன்மொழி இராஜேந்திரன்’ எனப் பெரும் புகழுடன் கலைப்பணி செய்து வருகின்றனர்.

தஞ்சாவூர் அருகேயுள்ள ரெட்டிப்பாளையத்தை ஒட்டிய பகுதிக்கு ‘இராமநாதபுரம்’ என்று பெயர். புது ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் இந்தப் பகுதியில் இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களைப் பூர்வீகமாகக் கொண்ட இசைக் கலைஞர்கள் வசித்து வருகின்றனர். ஏறத்தாழ எண்பது குடும்பங்கள் இங்கு இருக்கின்றன. உலகப் புகழ்பெற்ற கலைத் தம்பதியர் ‘தேன்மொழி  இராஜேந்திரன்’ இல்லமும் இங்குதான் இருக்கிறது. அவ்வில்லத்தில் ‘மக்கள் வீதி’ இதழுக்காக அக்கலைத் தம்பதியரைச் சந்தித்தோம்.

இனி அவருடன்...

“நீங்கள், தவுல் கலைஞராக எவ்வாறு உருவானீர்கள் என்பதி லிருந்து ஆரம்பிக்கலாம்...’’

“எனது பூர்வீகம் இராமநாதபுரம் மாவட்டத்தின் கடைகோடி கிராமமான கோபாலப்பட்டினம். எனது தாய்மாமன் சீனிவாசன், அங்கு பிரபலமான நாயனக் (நாகசுரம்-நாதஸ்வரம்) கலைஞர். அவர் 1955ல் முதன் முதலாக அங்கிருந்து தஞ்சாவூக்கு வந்து, இங்கே பல இடங்களில் தங்கி, நாயனம் வாசித்து, கடைசியாக இந்தப் பகுதியில் வீடு கட்டி குடியேறினார். மாமாவுக்குப் பிறகு அப்பா 1965 பஞ்சத்தின்போது இங்கே வந்தார். அவர் மாமாவோடு துணை நாயனம் வாசித்துக் கொண்டிருந்தார். அதன் பிறகு 1970ல் அம்மாவும், நானும், தங்கையும் இங்கு வந்தோம். அப்பா எங்களை இங்கு வரவழைத்துக் கொண்டார். மாமா வீட்டில்தான் அப்பா தங்கியிருந்தார். நாங்கள் வந்த பிறகுதான் வீடு கட்டினோம். ஏற்கெனவே 15 குடிசை இருந்தது. 16வது குடிசை எங்களுடையது.
நான் பிறந்தது 1965ல். பிறந்தவுடனே அப்பா இங்கே வந்துட்டார். நான் இங்கே வரும்போது எனக்கு வயது ஆறு. நான்தான் மூத்தவன். நானும் ஒரு தங்கச்சியும் எங்க ஊரிலேயே பிறந்தோம். இன்னொரு தம்பியும் தங்கச்சியும் இங்கு வந்த பிறகு பிறந்தாங்க. அப்பா பேரு சன்னாசி. இங்கே வந்த பிறகு கிறிஸ்தவ மதத்திற்கு மாறி, ‘ஏசுதாஸ்’னு வைச்சிக்கிட்டார். அம்மா பெயர் ரஞ்சிதா.
அப்போ எனக்கு 12, 13 வயசிருக்கும். இங்கே எட்டாவது வரைக்கும் படிச்சுட்டு வீட்டில் சும்மாதான் இருந்தேன். அப்பா கல்யாண வீடுகளுக்கு நாயனம் வாசிக்கப் போகும்போது என்னை தாளம் போடுறதுக்கும், ஒத்து ஊதுறதுக்கு அழைத்துக்கொண்டு போவார். (இப்போ ஒத்து ஊதுற கருவியே இல்லாமப் போச்சு) சுதிப்பெட்டி வாசிப்பேன், கிரிகிட்டி மேளம் அடிப்பேன். பிறகு முறையா தவுல் கத்துக்கிட்டேன்...’’

“தவுல் யார்ட்ட கத்துகிட்டீங்க...?’’

“என் தாய்மாமா சீனிவாசன் தஞ்சாவூரில் ஒரு திறமையான நாயனக் கலைஞரா புகழ் பெற்றிருந்தார். அவர் 1970ல் ஒரு முறை டெல்லிக்குப் போய், குடியரசு தின நிகழ்ச்சியாக இருக்கலாம். நேரு, லால்பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி முன்னால பொய்க்கால் குதிரை ஆட்டத்துக்கு நாதஸ்வரம் வாசித்து தமிழ்க் கலைக்கு புகழ் சேர்த்தவர். போட்டோவெல்லாம் எடுத்து வைத்திருந்தார். அப்படியொரு மதிக்கத்தக்க செல்வாக்கு அவருக்கு. ஐந்து பவுன் அளவுக்கு கழுத்தில் ரெட்டை வடை ஜெயின், டாலர் தொங்கும். நாலு விரலிலும் தங்க மோதிரம் போட்டிருப்பார். காரிக்கன் வேட்டி கட்டி, எம்.ஜி.ஆர். மாதிரி தகதகன்னு இருப்பார். காதிலே கடுக்கன் போட்டிருப்பார். பாகவதர் முடி. பின்பக்கமாக இழுத்து சீவியிருப்பார். என் மகள் சமீபத்தில் முத்து ராமலிங்கத் தேவர் படத்தை பார்த்துட்டு, “தாத்தா மாதிரி இருக்காரு’’ன்னு சொல்லுச்சு.
தஞ்சாவூர் டி.எஸ்.கோவிந்தராஜன்னு ஒரு தனித் தவுல் இசைக் கலைஞர். இசை வேளாளர். எங்க மாமாவுக்கும் அவருக்கும் நல்ல பழக்கம் இருந்தது. அந்தப் பழக்கத்தில, மாமாதான் அவர்ட்ட அனுப்பி வைச்சார். வேறு வழியில்லாம அவர் எனக்கு தவுல் கற்றுக் கொடுத்தார். ஐந்து வருடம் அவரிடம் முறையான தவுல் பயிற்சி எடுத்துக் கொண்டேன். ஆனால், அரங்கேற்றத்தின்போது என்னை அவர்கள் மேடையேற்றவில்லை. அந்த இன மக்கள் பல்வேறு விதமான இன்னல்களை எனக்கு ஏற்படுத்திவிட்டார்கள். நான் அருமையா ரிதம் சொல்வேன். அது என் பிறப்பிலேயே இருந்தது (சொல்லிக் காட்டுகிறார்). இப்படிப்பட்ட உச்சரிப்பெல்லாம் சாமான்ய மக்களுக்கு வராது. ஜதிப் பாடம், வரிசைப் பாடம்... இப்படி நூறு பாடம் கத்திருக்கேன். ஆனால், அரங்கேற்றம் நெருங்கும்போது என்னை அங்கிருந்து இனப்பாகுபாடு காரணமாக விரட்டி விட்டார்கள் என்றுதான் சொல்லணும்...’’ (இன்னும் அந்த வேதனை அவருக்குள் இருப்பதை அவரது குரல் நடுக்கத்திலிருந்து நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது).

அந்த சம்பவத்தை விவரித்தார்: “தஞ்சாவூர்ல இருந்தது வாத்தியார் வீடு-. நான் இங்கிருந்து தினமும் போக ஆறு கிலோ மீட்டர்; வர ஆறு கிலோ மீட்டர்னு பனிரெண்டு கிலோமீட்டர் நடந்து தவுல் கத்துகிட்டேன். காலையிலே எழுந்ததும் வீட்டிலேயே ஜாதகம் பண்ணிடுவேன். பத்து மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பி புது ஆத்தோரமா ஒரு மணி நேரம் நடந்து எப்படியும் பதினோறு மணிக்கெல்லாம் வாத்தியார் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்துடுவேன். போனவுடனே தவுல் கட்டையை எடுத்து வெளியே கொடுப்பாங்க. திண்ணையில் உட்கார்ந்துதான் ஜாதகம் பண்ணுவேன். தவுல் மாதிரி கட்டை செய்திருப்பாங்க. அந்தக் கட்டையில்தான் அடிக்கணும். (அவர் வீட்டிலும் ஒரு தவுல் கட்டை இருக்கிறது. அதை எடுத்து அடித்துக் காட்டுகிறார்) முதலில் கையை காய்க்க வைக்கணும். எல்லா பாடங்களையும் தவுல் கட்டையிலேயேதான் அடித்துக் கத்துக்கணும். இசைக் கல்லூரியில் கற்றுக் கொண்ட எல்லோருமே என்னை மாதிரி கட்டையில் அடித்துத்தான் கற்றுக் கொள்வார்கள் (பாடங்களை சொல்லிக் காட்டுகிறார்). ஒரு மணி நேரம் ஜாதகம். திரும்பி நடக்க ஆரம்பித்தால், ரெண்டு மணிக்கு வீட்டுக்கு வந்துவிடுவேன். வந்து சாப்பிட்டுட்டு, கொஞ்சநேரம் தூங்கிட்டு, சாயங்காலம் ஜாதகம் பண்ண ஆரம்பிப்பேன். வாத்தியார் டி.எஸ்.கோவிந்தராஜன் இசைக் கல்லூரி பேராசிரியராக இருந்தார். வெளியூரிலிருந்தெல்லாம் இங்க வந்து அவர்கிட்ட தவுல் கத்துக்கிட்டாங்க.

அப்படி கஷ்டப்பட்டு முறையா தவுல் கத்துக்கிட்டதாலேயே நான் ரொம்ப கஷ்டப்பட வேண்டியதாயிடுச்சு. எங்க ஆளுங்க, “இவன் பெரிய இடத்தில தவுல் படிச்சிட்டு வந்திருக்கான். இவங்கிட்ட சரியா வாசிக்கணும். தப்பா வாசிச்சா திட்டுவான். எதுக்கு இவங்கூட பயந்துகிட்டு வாசிக்கணும்’’னு என்னை கச்சேரிகளுக்குக் கூப்பிட மாட்டாங்க. அப்பா நாயனக்காரர் என்பதால ஏதாவது ஒரு தவுல்காரர்தான் வந்து அவரை அழைத்துக்கொண்டு போவார்.
அதனால எனக்கு வாய்ப்பு கிடைக்கல. என்னால வருமானம் பண்ண முடியல. வருமானம் போதாம அப்பா ரொம்ப கஷ்டப்பட்டார்-. அம்மா விவசாயக் கூலி வேலைக்குப் போனாங்க. குடும்பம் ரொம்ப கஷ்டத்துக்கு தள்ளப்பட்ட பிறகு ஒரு வீட்டில் குடிவேலை (பண்ணை வேலை) பார்த்தோம்.

வேற வழி இல்லாம நான் நையாண்டி மேளம் அடிக்க ஆரம்பிச்சேன். தவுல்ங்கிறது விரல்ல கொப்பியை செருகிகிட்டு அடிக்கிறது. நையாண்டி மேளம் குச்சியில அடிக்கிறது. (கொப்பிகளையும் குச்சிகளையும் எடுத்து வந்து காட்டுகிறார்) பரம்பரைத் தொழிலைத்தான் செய்தாகணும் என்கிற மாதிரி நான் நையாண்டி மேளம் அடிக்க ஆரம்பிச்சேன். அப்பா நாயனம் ஊதப் போற நிகழ்ச்சிகளுக்கு அவரோடு சேர்ந்து நையாண்டி மேளம் அடிக்கப் போனேன். அப்போதெல்லாம் மட்டைக் குச்சியிலதான் அடிப்பாங்க. நான் பிரம்புனால வாசிச்சேன். நெளிவு, சுழிவுகளெல்லாம் எனக்கு ஏற்கெனவே தெரியும்கிறதால பிரம்பிலேயே சொற்கட்டுகளை அழகுபடுத்தி வாசிக்க ஆரம்பித்தேன். அதனால ஒரு காலகட்டத்தில, “தஞ்சாவூர் ராஜேந்திரன் நையாண்டி மேளம்’’னு ஒரு பேரெடுத்தேன். அதனால என் வாத்தியாருக்கும் எனக்கும் பேச்சு வார்தையே இல்லாம போச்சு. அவர் “நாம கச்சேரிக்கு தவுல் கத்துக் கொடுத்தோம். இவனென்ன கரகாட்டத்துக்கு தவுல் அடிச்சிகிட்டுத் திரியிறான்....’’ என்று, என்னென்னவோ வார்த்தைகளைச் சொல்லி... கேவலமாகப் பேசியதாகவும் என் காதில் விழுந்தது. நான் வேலையே இல்லாமல் கஷ்டப்பட்டபோது அவர் என்னை அழைத்து அரவணைத்திருக்கலாம். அப்படி செய்யாம, கண்டும் காணாம இருந்துட்டு இப்போ நான் நையாண்டி மேளம் வாசிக்கிறது அந்த வாத்தியாருக்கு ரொம்ப கேவலமா இருக்குதாம்.

ரெண்டு நாதஸ்வரம், ரெண்டு தவுல், ரெண்டு பம்பையோட ‘தஞ்சாவூர் நையாண்டி மேளக் குழு’ஐ ஆரம்பிச்சேன். (கிறுகிட்டி மேளமெல்லாம் அப்போதே மறைஞ்சு போச்சு) இங்கிருந்து தஞ்சாவூருக்கு புது ஆற்றங்கரையோரமாகப் போனால், ஐந்து கிலோமீட்டர் தொலைவில் தஞ்சாவூர் சிவகங்கை பூங்கா வரும். அவ்வளவு தூரம் தவுலை எல்லம் தூக்கிகிட்டு நடந்துதான் போகணும்.

தஞ்சாவூர் கீழவாசலில் சில கரகாட்டக் குழுவினர் இருந்தார்கள். மதுரை, திருமங்கலம், இராமநாதபுரத்துக்காரர்கள் அங்கேயே வந்து தங்கி இருந்தார்கள். நாங்க ஒரே வர்க்கத்தைச் சேர்ந்ததால இங்க வந்து தங்கிகிட்டோம். வேறு இன மக்களெல்லாம் கீழவாசலில் தங்கிக்கிட்டாங்க.

ராவ்ஜிகள்தான் இந்தக் கலைஞர்களையெல்லாம் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். வீரசிவாஜியின் வழி வந்தவர்கள். அவர்கள் வடக்கு வாசலில் தங்கியிருந்தார்கள். அரசர்கள் காலத்திலேயே அவர்களுக்கு ஒதுக்கிக் கொடுக்கப்பட்ட இடம் அது. அரசர்களை, போர்வீரர்களை, காவலாளிகளை மகிழ்விக்கக்கூடிய கூத்தாடிகள் இவர்களெல்லாம். அந்த ராவ்ஜிகள்தான் நிகழ்ச்சிகளை இப்போதும் வாங்குவார்கள்; பகிர்ந்து கொடுப்பார்கள். நாங்களெல்லாம் அவர்களுக்கு அடிமைகள் போலத்தான் நிற்போம். “வேலை ஏதாவது இருந்தா குடுங்க’’ன்னு கேட்போம். சம்பளம் பேசுவாங்க. 200 தர்றேன்பாங்க. 200 ரூபாங்கிறது அப்போ பெரிய சம்பளம். நான் வாசிக்கும்போது 500 ரூபா சம்பளம். ஆறு பேரு போவோம். அந்த 500 ரூபாயை ஆளுக்கு 80, ரூபா வீதம் பிரிச்சிக்குவோம் - செலவு போக. (அது கருணாநிதிக்குப் பிறகு எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த காலமாக இருக்கலாம்.)

பிறகு, மருத்துவக் கல்லூரி பக்கத்தில வாடகைக்கு ஒரு அறை எடுத்து அங்கேயே தங்கிகிட்டேன். குழுவுக்கு என்னுடைய வயசுக்கேற்ற ஆட்களாக தேர்ந்தெடுத்துக் கொண்டேன்.
அந்த காலகட்டத்துலதான் தேன்மொழி கரகாட்டம் ஆட வருவாங்க. அவங்க வடக்கு வாசலில் இருந்தாங்க. அவங்க கரகம் ஆடுவாங்க. நான் மேளம் வாசிப்பேன். ரெண்டு பேருக்கும் பழக்க வழக்கம் ஏற்பட்டுச்சு. 1982ல் திருமணம். சர்ச்சில் நடந்துச்சு. இவங்களுக்கு நாலு அக்கா, ஒரு அண்ணன். இவங்கதான் கடைசி. இவங்க அம்மாவோட பூர்வீகம் தமிழ்நாடு. தமிழ் நாட்டிலிருந்து கேரளாவுக்கு பிழைக்கப் போயி, பிறகு தமிழ் நாட்டுக்கு வந்துட்டாங்க. அப்பா கிறிஸ்தவர்.




தேன்மொழி அன்றைக்கே சிறந்த நடனக் கலைஞர். அன்றைக்கு இருக்கக்கூடிய மக்களை எல்லாம் ரசிக்க வைக்கக்கூடிய திறமையான கலைஞர். திருமணத்திற்குப் பிறகு இருவருமே சேர்ந்து ஒரு கலைக்குழு வைத்தோம். ‘இராஜேந்திரன் தேன்மொழி கரகாட்டக் கலைக்குழு’ன்னு பெயர்...’’

இங்கே இடைமறித்தேன். “முன்பு ‘இராஜேந்திரன் தேன்மொழி’யாக இருந்த நீங்கள், எப்படி தேன்மொழி இராஜேந்திரன்’ஆக மாறினீர்கள்...’’ என்று கேட்டேன்.

அவர் சிரித்துக்கொண்டே, “சொல்றேன்... எங்களுக்கு கல்யாணம் 1982ல் நடந்தது. அடுத்த வருடம் 1983ல் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் ஒரு கலை நிகழ்ச்சி நடந்தது. அப்போ பல்கலைக் கழகம் அரண்மனையில் இருந்தது-. ராவ்ஜி வகையறாக்கள்தான் கலை நிகழ்ச்சிகளையெல்லாம் நடத்துவார்கள். நானும் ஏற்கனவே வாசிக்கப் போன பழக்கத்தில் என் மனைவியை அழைத்து போய் பல்கலைக் கழகத்தில் ஒரு நிகழ்ச்சியை நிகழ்த்த வைச்சேன். அந்த நிகழ்ச்சியில் ஆறு பேர் கரகம் ஆடினார்கள். அதில் தேன்மொழியும் ஒருத்தர். அந்த நிகழ்ச்சிக்கு வெளிநாட்டு அறிஞர்களெல்லாம் வந்திருந்தார்கள். நான்தான் நையாண்டி மேளம் வாசிச்சேன். அவர்கள் தேன்மொழியின் ஆட்டத்தை மிகவும் ரசித்தார்கள்.
கரகாட்டம் முடிந்த பிறகு மயிலாட்டம் வரணும், அதுக்குப் பிறகு பொய்க்கால் வரணும், காவடி வரணும்... ஆனா, வெளிநாட்டிலிருந்து வந்திருந்த அறிஞர்களெல்லாம் கரகட்டத்தை இடையிலேயே நிறுத்திட்டு “அந்தப் பெண்ணை மட்டும் தனியா ஆடச் சொல்லுங்க’’ன்னு கேட்டாங்க. தேன்மொழி மட்டும் ஒரு பாடலுக்கு ஆடினாங்க. அவங்க தேன்மொழியக் கட்டிப் பிடிச்சு பலமான பாராட்டு கொடுத்தாங்க. அப்போ இவங்களுக்கு 17 வயசுதான் இருக்கும். அந்த மேடையிலேயே நாடகப் பேராசிரியர் முருகேசன், “தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் ஆஸ்தான கலைஞர் நீதான்’’னு சொன்னார். அதுதான் எங்களின் முதல் படி. அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வளர ஆரம்பிச்சோம்.



நான் என் மனைவிக்கு ஒரு ஊக்கத்தையும் பலத்தையும் கொடுத்தேன். நான் கர்னாடக இசையை முறைப்படி படிச்சதாலே எனக்கு கணக்கு வழக்கெல்லாம் முறையா தெரியும் என்பதால இவங்களுக்கு வீட்டிலேயே கற்றுக் கொடுத்தேன். நீங்க பார்த்திருப்பீங்க, இவங்க நடனம் எல்லாம் ‘ஃபோக்’ போல இருக்காது; ‘பரத’மாதான் இருக்கும்.

Mamallapuram Dance Festival 2012 - Folk dance - galeria zdjęć

‘நம்மல்ல யாராவது ஒருத்தர் உயரத்துக்கு வரணும், நமக்குப் பிறகு நம்ம மனைவியை உயர்த்துவோம்னு முடிவெடுத்தேன். வீட்டிலேயே தாம்பாளத்தில் கரகாட்டம், படியில், ரோலரில் ஆடுவது, சைக்கிளில் ஆடுவது... இப்படியாக இரண்டு மணி நேரம் தொடர்ந்து கரகாட்டம் செய்யக்கூடிய அளவுக்கு நான் பயிற்சியும் ஊக்கமும் கொடுத்தேன். தோண்டத் தோண்ட ஊற்றிலிருந்து நீர் வருவதைப் போல அவரிடமிருந்து அந்தத் திறமைகளெல்லாம் வெளிப்பட்டன. பூ வளையம், ஏணி, உருளை மேலே பலகையைப் போட்டு ஆடுவது என தனிச் சிறப்புடன் உருவாக்கி ஒரு ஆளாக்கினேன். அவரை பல விருதுகளுக்கும் சொந்தக்காரர் ஆக்கினேன்.



பிரான்ஸ், ஜெர்மனி, சுஜர்லாந்து, லண்டன், சிங்கப்பூர், இந்தோனேசியா, மலேசியா என பல நாடுகளில் எங்கள் கலை நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறோம். ரஷ்யா போவதற்கு ஏற்பாடாகி இருந்தது. தென்னகப் பண்பாட்டு மையம் மூலமாகச் செல்ல ஏற்பாடாகி இருந்தது. ஆனால் போகமுடியல. பல நாடுகளுக்கும் விமானத்துல பயணம் பண்ணியாச்சு. கப்பலில் போகணும்னு விருப்பம் இருந்தது. அதிலும் அந்தமானுக்கு செல்வதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. இந்த தமிழ்க் கலையை எவ்வளவு வளர்க்கணுமோ அந்த அளவு வளர்ப்பதற்கு நானும் ஒரு கருவியாக இருந்திருக்கிறேன். இப்போது ‘தேன்மொழி ராஜேந்திரன்’னு சொன்னா எல்லாருக்கும் தெரிகிற அளவுக்கு வளர்ந்திருக்கோம். இதுதான் நீங்க கேட்ட கேட்விக்கான பதில்’’ என்று சொல்லி முடித்து கொஞ்சம் தண்ணீரும் குடித்தார். தேன்மொழி அவர்கள் தேநீர் கொண்டு வந்து எங்களுக்குக் கொடுத்தார். தேநீர் அருந்திய பிறகு தொடர்ந்தோம்.

“நாட்டுப்புறக் கலைகள், கலைஞர்களின் இன்றைய நிலை பற்றி...’’

“நம் பாரம்பரியக் கலைகள் பெரும்பாலும் அழிஞ்சு போச்சு. ராஜபார்ட், கினிக்கின்னி, கட்டபொம்மா, மூர்க்க விழா, ஆரவள்ளி, சோழமலை, தெம்மாங்கு, இராமச்சந்திரா போன்ற பழைய பாரம்பரியக் கலைகள் இப்போ இல்ல... இதெல்லாம், இன்று திரைப்படப் பாடல்களுக்கு பாடி ஆடுவதுபோல, திரைப்படங்களெல்லாம் வருவதற்கு முன் பாடப்பட்ட நாடகப் பாடல்கள்.

கரகமே ஒரு வீரம் செறிந்த ஆட்டக்கலை. லயமும் வீரமும் கலந்த ஒரு ஆட்டம். அந்த வீரத்திற்கு தகுற்தாற்போல அடிக்கக்கூடிய இசைதான் நையாண்டி மேளம். அந்த அடியில் அதிரடியும் இருக்கணும்; நளினமும் இருக்கணும். கர்னாடக இசையில் நளினம் மட்டும்தான் இருக்கும். கர்னாடக இசையை மைக் இருந்தால்தான் பொதுமக்களால் கேட்க முடியும். நாங்கள் மைக் கொடுத்தாலும் அடிப்போம்; கொடுக்காவிட்டாலும் அடிப்போம்.

நாட்டுப்புறக் கலைகள் சம்மந்தப்பட்டவை எல்லாம் தோல் கருவிகளால் ஆனதாகவும், அதிக எடை கொண்டதாகவும் இருக்கும். தப்புகூட குறைந்தபட்சம் ஆறு கிலோ எடை இருக்கும். தப்பு, தவுல், பம்பை, உறுமி, டிரம் இதையெல்லாம் வாசிப்பவர்கள் நாட்டுப்புறக் கலைஞர்கள். இந்த மண்ணைச் சார்ந்த கலைஞர்கள்; மண்ணுக்குப் பெருமை சேர்த்தவர்கள்.

இந்து வேறு, இந்துத்துவா வேறு என்பது போல காமாட்சி, மீனாட்சி, விசாலாட்சி இவர்களை எல்லாம் பெரிய கோயில்களில் வைத்து பெரிய ஆட்களெல்லாம் தரிசிக்கிறார்கள். அவர்களும் இந்து. நமக்கு மாரியம்மா, காளியம்மா, கருப்பன், கோடாங்கி, முனியன் இவர்களைக் கும்பிடுறோம். நாமும் இந்து. இவங்களுக்கு நம்ம அடி. அந்த அம்மாக்களுக்கு நம்ம அடி ஒத்துக்காது. நம்ம சாமிங்களெல்லாம் தடாலடிங்கதான். இசைக்கருவிகளைக் கூட அவங்களுக்கு வேற, நமக்கு வேறன்னுதான் பிரிச்சிருக்காங்க. ஆனால், நம்முடைய இசைக்கருவிகள்தான் நம்ம மண்ணைச் சார்ந்தவை.

என்னுடைய ஆதங்கமே, நம்முடைய தமிழ்க் கலைகளை இந்த அரசும் மக்களும் காக்கத் தவறிவிட்டார்கள் என்பதுதான். பறையாட்டம், உறுமி மேளம், தமுர்செட்டு பெரியமேளம், பம்பை மேளம், சும்ளா மேளம், நையாண்டி மேளம், கும்மியாட்டம், கோலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், மயிலாட்டம், காவடியாட்டம், காளியாட்டம், அடுக்கு கரகாட்டம், நாலு பேர் ஆட்டம், புலியாட்டம், சேவையாட்டம், தெருக்கூத்து, சிவன் பார்வதி ஆட்டம், சக்தி கரகாட்டம், அம்மன் ஆட்டம், குடகூத்து, பொம்மை ஆட்டம், தேவராட்டம், வில்லுப்பாட்டு, நாட்டுப்புறப் பாட்டு, லாவணி பாட்டு, கனியன் கூத்து, மகுடம் வாத்தியம், துடும்பாட்டம், மான்கொம்பாட்டம், மரக்கால் ஆட்டம் என்கிற கெக்களி ஆட்டம், கைச்சிலம்பாட்டம், சக்கைக் குச்சி ஆட்டம், ஆஞ்சநேயர் ஆட்டம், சிங்க நடனம், கோடாங்கி ஆட்டம், கோமாளி ஆட்டம், கருப்புசாமி ஆட்டம்... இவையெல்லாம் தமிழ் மக்களின் பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகள். இந்தக் கலைகளில் அழிந்தது போக நாற்பது கலைகள்தான் இப்போ இருக்கு. என் கண் முன்னாலே«யே நாலு பேர் ஆட்டம், குட கூத்து, சிங்க நடனம், ஆஞ்சநேயர் நடனம், லாவணி பாட்டு, கோடாங்கிப் பாட்டு, அடுக்குக் கரகாட்டம், சக்தி கரகாட்டம் இவையெல்லாம் அழிந்துவிட்டன.

‘நாலு பேர் ஆட்டம்’ என்றால், நான்கு பேர் நடத்தக்கூடியது. ராஜா, ராணி, பபூன், தோழின்னு நாலு பேர். நையாண்டி மேளத்துக்குத்தான் இவர்கள் ஆடுவார்கள். இந்த ஆட்டம் விடிய விடிய கதாகலாட்சேபம் போல நடக்கும். கோடாங்கிப் பாட்டு, ஆளவந்தார் கொலை வழக்கு (பெண்டாட்டி மீது சந்தேகப்பட்ட ஒருத்தன், அவளைக் காட்டுக்கு அழைத்துச் சென்று வெட்டி கொலை செய்கிறான். அவள் சாகும்போதுகூட கடவுளிடம், “நான் உத்தமி... நான் சாகப் போறேன். அவரை நீதான் பார்த்துக்கணும்...’’ன்னு சொல்வா. கண்ணீர் விட்டு அழும்படியான கதை). தனுஷ்கொடி விபத்து, அரியலூர் ரயில் விபத்து இப்படியான சம்பவங்களை பாடல்களாக பாடுவது, குறவன் குறத்தி நாடகம், பேய் நடனம் இப்படி விடிய விடிய ஓடிகிட்டிருக்கும். இப்போ அதெல்லாம் நடக்கிறதே இல்லை.

‘குடக்கூத்து’ன்னு ஒரு ஆட்டம். கோவலனுக்கு அம்மைப் போட்டிருக்கும்போது மாதவி நிறைகுடம் தண்ணீரை தன் தலையில் வைத்து, சிந்தாமல் சிதறாமல் ஆடிக்கொண்டு வந்திருக்காங்க. அவள் ஆட ஆட கோவலனுக்கு அம்மை கொஞ்சம் கொஞ்சமா இறங்கினதா சங்க இலக்கியத்தில ஒரு பகுதி இருக்கு. அந்த ஆட்டம்தான் குடகூத்து.

‘பானைக்கரகம்’ என்றொரு பாரம்பரியமான ஆட்டம். அந்த ஆட்டத்தை ஆடிய பெரியசாமி நாட்டார் சமீபத்தில்தான் இறந்து போனார்.

‘சிங்க நடனம்’னு ஒரு ஆட்டம். ஒருத்தர் சிங்க வேடம் போட்டு வருவார். (புலியாட்டம் குழுவா ஆடுவாங்க. சிங்கம் தனி ஆளா ஆடக்கூடிய ஆட்டம்) அந்தச் சிங்க ஆட்டத்திற்கும் நான் வாசிச்சிருக்கேன். நிகழ்ச்சி நடக்கிற இடத்துக்கு கொஞ்சம் தொலைவிலேயே சிங்க வேசம் போட்டவர் சிங்கம் போலவே நடந்து வருவார். கத்தாலை நாரிலே வேடம் போட்டிருப்பாங்க. சிங்க நடைன்னு சொல்வோம்ல அப்படி ஒரு நடை நடந்து வருவாரு. (உட்கார்ந்தபடியே நடித்துக் காண்பிக்கிறார்) உடம்பை சிலிர்த்து, முகத்தை அப்படியும் இப்படியுமா திருப்பி பயங்கரா பாத்துக்கிட்டு, வாயை கோணல் மாணலா மென்னுகிட்டு, ரொம்ப பயங்கரமா இருக்கும். முகத்தில பேட்ரி லைட் மினுக் மினுக்குன்னு எரியும். குழந்தைங்கள்லாம் பயந்து ஓடிருவாங்க. அப்படி வந்து ஆடுவார் பாருங்க... அப்படியொரு ஆட்டம். அங்கே ஒரு சின்ன பையனை ஏற்கனவே உட்கார வைச்சிருப்பாங்க. ஆட்டத்தோட கடைசியில அந்தப் பையனைப் பிடித்து, அவனோட கட்டி உருண்டு புரண்டு, அவனைக் கீழே போட்டு அவன் குடலை உருவுகிற மாதிரி (வயிறு பகுதியில சிவப்பு சாயம், குடல் மாதிரி துணியெல்லாம் வைத்திருப்பாங்க) உருவியெடுத்து ஆடுவார். அரை மணி நேரம், முக்கால் மணி நேரம் நடக்கும். இந்த ஆட்டம் திருவாரூர் மாவட்டத்தில நடக்கும். இந்த ஆட்டத்தை முதலில் அப்பா ஆடினார். அதன் பிறகு அவர் பையனும் ஆடினார். ரெண்டு பேருக்குமே நான் வாசிச்சிருக்கேன்.

நான் ஆச்சர்யப்பட்டுப் போன இன்னொரு ஆட்டம், ‘ஆஞ்சிநேயர் ஆட்டம்’. ஆஞ்சநேயர் வேஷம் போட்டவன் தாவித் தாவி அங்கிருந்து இங்கே, இங்கிருந்து அங்கேன்னு... மரம், சுவர் எது இருக்குதோ அங்கெல்லாம் தாவித் தாவி கண்ணிமைக்கும் நேரத்தில் எகிறிக் குதிச்சு கீழே வந்து நிற்பான். ஆச்சர்யமா இருக்கும். ஆடிகிட்டே ஒரு பெரும் பூசணி, பத்து புடலங்காய், ஒரு தார் வாழைப்பழம்... எல்லாத்தையும் சரசரன்னு தின்னு விழுங்கிடுவான்.

இதுபோல லாவணிப் பாட்டு, கோடாங்கிப் பாட்டு, அடுக்குக் கரகம், சக்திக் கரகம்... இப்படி அபூர்வமான கலைகள்  எல்லாம் என் காலத்திலேயே, என் கண் முன்னாலயே அழிஞ்சுப் போச்சு. இப்போ கரகமும் அழிஞ்சியிட்டிருக்கு. இப்போ ஆடுவதெல்லாம் கரகாட்டம் கிடையாது; கெரகம் பிடிச்ச ஆட்டம். கரகாட்டம்னா, எங்க வீட்டுக்காரங்க (தேன்மொழி) அரை மணி நேரம் ஆடி சுத்துவாங்க. சுத்தி முடிச்சாங்கன்னா அந்த இடத்திலே எட்டு கிடக்கும். அது கரகாட்டம்...’’ என்று உணர்ச்சித் ததும்ப சொல்லி முடித்தவர் சிறிது நேரம் அமைதியாகி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார்...

“நீங்க சொல்ற கலைகளைப் பற்றியெல்லாம் எங்களுக்கு எதுவும் தெரியல. நம்ம பாரம்பரியக் கலைகளைக் காப்பாத்துறதுக்கு அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு போறதுக்கு என்ன செய்யலாம்?’’

“இரவு பத்து மணிக்கு கலைநிகழ்ச்சிகள் தொடங்கி விடியற் காலை ஆறு மணி வரை கிராம ரசிகப் பெருமக்களை, அவர்களின் விருப்பத்திற்கேற்ப, மனநிலைக்கேற்ப கலை நிகழ்ச்சிகளைச் செய்து மனமகிழ்ச்சியை அளிக்கக்கூடிய திறமைப் படைத்தவர்கள் நாங்கள். எங்களின் வாழ்க்கையே நசிந்துவிட்டது. எங்களுடன் உறவாடி கிராமியக் கலைப் பயிற்சியாளர்கள் என்று சொல்லிக் கொண்டு அரசை ஏமாற்றும் சில இடைத்தரகர்கள் எங்கள் கிராமியக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை சூறையாடி வருகி றார்கள். எங்களுக்குக் கிடைக்க வேண்டிய  உதவிகள், பாராட் டுகள், விருதுகள் அனைத்துக்கும் அவர்களே சொந்தக்காரர்களாக இருந்து கலை நிறுவனங்களுக்கும் அரசுக்கும் உள்ள நன்மதிப்பைக் கெடுத்து வருகிறார்கள்...’’

“கிராமியக் கலைகளைப் பாதுகாத்து வளர்த்திட அரசிடமிருந்து என்னென்ன உதவிகளை எதிர்பார்க்கிறீங்க?’’

“பள்ளி கல்லூரிகளில் முன் அனுபவமுள்ள, அரசு விருது பெற்ற கலைஞர்களை ஆசிரியர்களாக நியமித்து அந்தந்த மாவட்டத்தில் உள்ள சிறப்பு வாய்ந்த கிராமியக் கலைகளை மாணவ மாணவியருக்கு அவர்களின் விருப்பத்துக்கேற்றபடி பயிற்சி கொடுக்கணும். பயிற்சி பெறும் மாணவ, மாணவியருக்கு ஊக்கப் பரிசும் சான்றிதழும் கொடுக்கணும். மாவட்ட, மாநில அளவில் நாட்டுப்புறக் கலைப் போட்டிகள் நடத்தி வெற்றி பெறும் மாணவ, மாணவியர்களுக்கும் நிரந்தர கலைஞர்களையும் கௌரவிக்கும் விதமாக தற்போது மாவட்ட கலை பண்பாட்டுத் துறை வழங்கும் விருதுகளை அவர்களுக்கு வழங்கி சிறப்பிக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள இசைக் கல்லூரிகளில் தமிழக பாரம்பரிய இசையான நாயனம், பறை, துடுப்பு, நையாண்டி மேளம், தவுல், பம்பை, உறுமி, மகுடம், தெருக்கூத்து இசை, வில்லிசை போன்றவைகளை அனுபவமுள்ள ஆசிரியர்களைக் கொண்டு பயிற்சி அளிக்க வேண்டும். கிராமியப் பெண் கலைஞர்களுக்கு 35 வயதிற்கு மேல் கலை நிகழ்வுகளுக்கு சரியாக வாய்ப்பு கிடைப்பதில்லை. ஆகவே, அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விடுகிறது. எனவே, அரசு வழங்கி வரும் நலிந்த பெண் கலைஞர்களுக்கான உதவித் தொகைப் பெறுவதற்கான வயதை 35ஆக தளர்த்தி உதவிடவேண்டும்.

திரைப்படம், தொலைக்காட்சி வருகையினால் எங்கள் கிராமியக் கலைகள் நசிந்துவிட்டன. அதனால் பாரம்பரிய கிராமிய கலைஞர்களுக்கு வாழ்வாதாரம் சிதைந்து வருகிறது. ஆகவே, மண்பானை செய்பவர்கள், மீனவர்கள் போன்றவர்களுக்கு தொழில் இல்லாத காலங்களில் அரசு நிவாரண உதவி வழங்குவது போல எங்களுக்கும் வழங்க வேண்டும். கலைமாமணி, கலைமுதுமணி விருது பெற்ற 50 வயதுக்கு மேற்பட்ட ஆண் கலைஞர்களுக்கும், 40 வயதுக்கு மேற்பட்ட பெண் கலைஞர்களுக்கும் மாதந்தோறும் 5000 ரூபாய் உதவித்தொகை வழங்கவேண்டும். அரசுடையாக்கப்பட்ட தேவஸ்தானத் திருக்கோயில் விழாக்களில் நாட்டுப்புற கிராமியக் கலைகள் நடத்திட வாய்ப்பு வழங்க வேண்டும். தமிழக அரசு ஆண்டுதோறும் ஒரு முறை கலைவிழா நடத்த வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமியக் கலைகளையும் அரசு ஆவணப்படுத்த வேண்டும். நாட்டுப்புறக் கலைஞர் பிள்ளைகளின் மேற்படிப்புக்கு அரசு உதவித் தொகை வழங்க வேண்டும். மாவட்டங்கள்தோறும் சிறந்த கலைஞர்களைக் கொண்டு கலை பயிற்சி மையம் தொடங்க வேண்டும். வீடு இல்லாத கிராமியக் கலைஞர்களுக்கு இலவச வீடு வழங்க வேண்டும்...’’ இப்படி அவரது கோரிக்கை பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

“கடைசியாக ஒரு கேள்வி... உங்களின் இந்தக் கலையுலக வாழ்க்கை திருப்தி அளிப்பதாக இருக்கிறதா...?’’

“20 வயதில் கலைக்குழுவை ஆரம்பித்த நான், நையாண்டி மேளம், ரெண்டு கரகம், குறவன் குறத்தி, மயிலாட்டம், காளை யாட்டம், காவடியாட்டம், பபூன் இதுபோன்ற நடனங்களை வைத்து 45 ஆண்டுகளாக இந்தக் கலைகளை வளர்த்திருக்கிறேன். குமரியிலிருந்து திருத்தணி வரைக்கும் 4,000க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறேன். இந்த நாலாயிரம் நிகழ்ச்சிகளின் மூலமாக எத்தனையோ விடியல்களைக் கண்டிருக்கிறேன். இந்தக் கலைக்காகவே வாழ்ந்திருக்கிறேன். என்னோடு என் கலைக் குழுவில் உள்ளவர்களையும் அரவணைத்து, பாதுகாத்து, வளர்த்து வந்திருக்கிறேன். கலைஞர்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வது சாமான்ய விசயம் அல்ல. அவர்களுடைய சகலவிதமான நல்லதும் கெட்டதுமான பழக்க வழக்கங்களுக்கு ஈடுகொடுத்து அவர்களைத் தன்னோடு அரவணைத்து பாதுகாக்க வேண்டும். உதாரணமாக, (அருகில் உட்கார்ந்திருந்த ஒருவரைக் காட்டி) இவன், என்னிடம் தவுல் கற்றுக்கொள்வதற்காக பத்து வயதில் வந்தான். என்னிடம் தவில் கற்றுக்கொண்டு, என் குழுவிலேயே தப்பு அடித்து, இங்கு ஒரு வீட்டை கட்டி, கல்யாணம் ஆகி, இரண்டு மகள்கள் ஒரு மகன் என மூன்று குழந்தைகளைப் பெற்று இரண்டு மகள்களைக் கட்டிக் கொடுத்து பேரன், பேத்தி எடுத்துவிட்டான். இன்னும் என்னுடன் இருக்கிறான். அந்தமானிலிருந்து கப்பலில் வந்தபோது இவர்களைப் பற்றி ‘நான் பயணித்தவர்களும் என்னோடு பயணித்தவர்களும்’ என்று எழுதியிருக்கிறேன்.

நாட்டுப்புறக் கலைஞர் கே.எஸ்.குணசேகரன் என் நெருங்கிய உறவினர். அவர் இங்கே வந்து நிறைய விசயங்களைச் செய்திருக்கிறார்.

‘தமிழ்நாடு கிராமியக் கலைஞர்கள் நடன நையாண்டி  சங்க’த்தை 1979ல் தொடங்கி, தொடந்து நடத்தி வருகிறேன். நாட்டுப்புறக் கலைஞர்களுக்காக வீதியில் இறங்கி போராடி இருக்கிறேன். சுனாமி, கஜா போன்ற புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டிக் கொடுத்திருக்கிறேன். மதுரை சோமசுந்தரம் நடத்தும் சங்கத்தில் இரவு பகல் பாராமல் கடுமையாக உழைத்திருக்கிறேன். நாட்டுப்புறப் பாடகி சின்னப் பொண்ணுவுடன் இணைந்து நாட்டுப்புறக் கலைக்கும் கலைஞர்களுக்கும் நிறைய விசயங்களைச் செய்திருக்கிறேன்.



என் மனைவி தேன்மொழி கலைமாமணி விருது பெற்றிருப்பதால் ஏராளமான நலிந்த நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு சிபாரிசு கடிதம் கொடுத்து அவர்களுக்கு உதவியும் வருகிறேன்... இப்படி என்னைப் போன்ற உண்மையான கலைஞர்கள் நாட்டுப்புறக் கலைக்காகவும் கலைஞர்களுக்காகவும் போராடிக் கொண்டும், செயல்பட்டுக் கொண்டும் இருக்கும்போது இந்த அரசும், அதிகாரிகளும், இடைத்தரகர்களும் நம் பாரம்பரியக் கலைகளையும், கலைஞர்களையும் கொஞ்சம் கொஞ்சமாக நலியச் செய்து வருகிறார்கள். இப்போது, அரசு மரக்கால் ஆட்டக் கலைஞர் கோவிந்தராஜுக்குக் கொடுத்த கலைமாமணி விருதை, அப்படி யொரு ஆட்டமே இல்லை என்று இடைத்தரகர்கள் கொடுத்த அழுத்தத்தினால், அந்த விருது அந்தக் கலைஞனிடமிருந்து பிடுங்கப்பட்டிருக்கிறது. மரக்கால் ஆட்டம் பற்றி நம் சங்க இலக்கியத்திலேயே பாடல் இருக்கிறது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ‘மாற்று ஊடக மைய’த்திற்கும் தகவல் சொல்லியிருக்கிறேன்...’’

“உங்களுக்கு அரசு விருதுகள், பரிசுகள் கொடுத்திருக்கிறதா?’’

“என் மனைவிக்கு ஏராளமாகக் கொடுத்திருக்கிறார்கள். அதெல்லாம் எனக்கும் கிடைத்த விருதுகள் போலத்தான். மாவட்ட அளவில் எனக்கு ‘கலைச் சுடர்மணி விருது’ கொடுத் தார்கள். உடனே, ஒரே குடும்பத்தில் ரெண்டு பேருக்கு விருது கொடுக்கலாமா? என்று இடைத்தரகர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் சொல்லி இருக்கிறார்கள். ஆட்சியர் என்னைப் பற்றி விசாரித்திருக்கிறார். நான் ‘இராஜேந்திரன் தேன்மொழி’யாக இருந் ததிலிருந்து ‘தேன்மொழி இராஜேந்திரன்’ஆக மாறிய விசயங்களை எல்லாம் கேள்விப்பட்டு “இவருக்குத்தான்யா முதல்ல பரிசு கொடுக்கணும்’’ என்று பாராட்டிச் சொல்லியிருக்கிறார்...’’

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த நேர்காணலை முடித்துக்கொண்டு இராஜேந்திரன், தேன்மொழி எனும் இரு கலை ஆளுமைகளுக்கும் வணக்கம் சொல்லி விடைபெற்றுக் கொண்டோம்.

இருவரும் இப்போதும் ஓய்வின்றி கலைப்பணி செய்து கொண்டிருக்கின்றனர். அது மேலும் தொடர வேண்டும் என்பதே நம் விருப்பம்.

சந்திப்பு : சூரியசந்திரன், ரத்ன கார்க்கி

மக்கள் வீதி, ஆகஸ்ட் 1999

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சங்க இலக்கியம் முதல் பெண் கவிஞர்கள் : பத்மாவதி விவேகானந்தன் நேர்காணல்

எனது கதைகள் வரலாற்று ஆவணங்கள்: மேலாண்மை பொன்னுச்சாமி நேர்காணல்

கவிஞர் அறிவுமதி பாடலாசிரியரான கதை