எல்லா பெண்களும் அடக்குமுறையையும் ஒடுக்குமுறையையும் சந்திக்கத்தான் நேரிடும் : கனிமொழி நேர்காணல்



சந்திப்பு : சூரியசந்திரன்

புதிய புத்தகம் பேசுது, ஜனவரி 2007
30வது சென்னை புத்தகக் காட்சி சிறப்பிதழ்

பெண்ணியச் சிந்தனையை மையமாகக் கொண்டு இயங்கும் கவிஞர் கனிமொழியின் கவிதைகள், சமூக ஒடுக்குமுறைகள் அனைத்திற்கும் எதிரான குரலை உரத்து ஒலிப்பவையாக உள்ளன.

தினம்ஒருகவிதை hashtag on Twitter

தமிழ்க் கவிதை வரலாற்றில் இவரது ‘கருவறை வாசனை’க்கு ஓர் இடம் உறுதியாக உண்டு. கவிஞராக மட்டுமல்லாமல், பத்திரிகையாளராக, பத்தி எழுத்தாளராக, கட்டுரையாளராக செயல்பட்டுக் கொண்டிருப்பவர்.

பார்வைகள் Parvaikal


கனிமொழியின் எழுத்துகள் தொகுக்கப்பட்டு, கருவறை வாசனை (கவிதைகள்), பார்வைகள்’ (கட்டுரைகள்), கருக்கும் மருதாணி (பத்திகள்) ஆகிய நூல்களாக வந்துள்ளன. ஆவணப் படம் ஒன்றையும் இயக்கிக் கொண்டிருக்கிறார். ஆவணப்பட பணி மும்முரங்களில் இருந்த அவரிடம், ஒரு மதிய நேரத்தில் அவரது இல்லத்தில் அவரோடு நிகழ்த்திய உரை யாடல்...

பொதுவாக, தமிழில் இப்போது ஏராளமான பெண்கள் பெருவீச்சில் கவிதை எழுத வந்திருக்காங்க. அதற்கு சாதகமான சூழல் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது அமைந்திருப்பதாக நினைக்கிறேன். ஒரு கவிஞராக நீங்கள் எப்படி உணர்றீங்க?

எல்லா துறைகளிலும் பெண்கள் வரத் தொடங்கி இருப்பது போலவே கவிதைத் துறையிலும் பெண்கள் வரத் தொடங்கியிருக்காங்க. அவ்வளவுதான். நீங்க சொல்ற மாதிரி ஏராளமான பெண்கள் எழுதிகிட்டிருக்கிறதாக எனக்குத் தெரியல. இன்னும் அதிகமான பெண்கள் எழுத வரணும்.

இப்போது எழுதுகிற பெண்களையே இடஒதுக்கீட்டுல எழுத வந்தவங்க மாதிரி பார்க்கறாங்களே தவிர, அவங்களை ஆண்களோடு சமமா பாவிக்கிறது கிடையாது. பெண்கள் எழுதுகிற விசயங்களைக்கூட “இதையெல்லாம் பெண்கள் எழுதக்கூடாது, இப்படியெல்லாம் எழுதக்கூடாது’’ன்னு பிரச்சினைகள் வந்து கிட்டிருக்கு.

கருவாச்சி காவியம் - karuvachi kaaviyam - Panuval ...

வைரமுத்து ‘கருவாச்சி காவிய’த்திலே, பிரசவத்தின் போது ஒரு பெண்ணுக்கு நேரும் விசயங்களை ரொம்ப துல்லியமா விவரிச்சி எழுதியிருக்கார். அதையே ஒரு பெண் எழுதியிருந்தா, அதை ‘ஆபாசம்’னு சொல்லி பிரச்சினை பண்ணியிருப்பாங்க.

நீங்க நினைக்கிற மாதிரி பெண்களுக்கேற்ற ஆரோக்கியமான சூழல் இன்னும் உருவாகலே, மாற்றங்கள் வந்துகிட்டுருக்குன்னு வேணுமானா சொல்லலாம்.

பெண்கள் பெரும்பாலும் கவிதை எழுதுற அளவுக்கு கதைகளிலோ, நாவல் எழுதுவதிலோ அதிக கவனம் செலுத்துவதில்லே. நீங்ககூட கவிதைகள்தான் எழுதுறீங்களே தவிர, கதைகளிலோ, நாவலிலோ கவனம் செலுத்தல. ஏன் அப்படி?

தமிழ்ச் சூழல்ல, பொதுவாகவே கவிதைகள்தான் அதிகமாக வந்துகிட்டிருக்கு. இதில் ஆண், பெண் வித்தியாசம் பார்க்க வேண்டியதில்ல. இது தமிழ்நாட்டினுடைய இலக்கியப் போக்கு. எல்லாரும் எல்லா வடிவத்திலும் எழுதணும்னு அவசியம் கிடையாது. அதுல எனக்கு நம்பிக்கையும் கிடையாது. ஞானக்கூத்தன் இதுவரை சிறுகதையோ, நாவலோ எழுதல. பாமா கவிதைகளே எழுதல. அம்பையும் கவிதை எழுதல. ஜெயகாந்தன்கிட்டே போய் நீங்க ஏன் கவிதை எழுத மாட்டீங்கிறீங்கன்னு கேட்க முடியாதில்ல... ஆகவே, அவரவர்களுக்கு எது தேவையோ அதைத்தான் தேர்ந்தெடுத்து எழுதுவாங்க. எனக்கு கவிதை எழுதுறது பிடிச்சிருக்கு. எழுதுறேன்.

கவிதைகளை விட சிறுகதை, நாவல் வடிவங்களில்தான் வாழ்க்கையை விரிவாகச் சொல்வதற்கான பெரிய ‘கேன்வாஸ்’ கிடைக்குது...

நேர்மையான படைப்புகள் எதிர்காலத்தில் நிறைய வரும். அதுக்காக கவிஞர்களெல்லாம் நாவல் எழுதணும்னு எதிர்பார்க்க முடியுமா? எது சாத்தியமோ, எதை எழுதணும்னு தோணுதோ அதை எழுதினா போதும்.

உங்கள் கவிதைகள், கட்டுரைகளை ஒட்டுமொத்தமா வாசிக்கிறபோது, உங்களின் குரல்... சாதி, மதம், இனம், மொழி, நிறம் சம்மந்தமான அனைத்து ஆதிக்க சக்திகளுக்கும் எதிராக அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டவர்களின் குரலாகத்தான் ஒலிச்சிகிட்டிருக்கு. நீங்கள் பிறந்த குடும்பப் பின்னணியைப் பார்க்கிறபோது இது ரொம்ப வியப்பளிக்கக்கூடிய அம்சமாக இருக்கு. உங்களுக்கு இப்படியான மனப்பக்குவம் எப்படி உண்டாச்சு?

கருவறை வாசனை! - Thai Magazine

அடக்குமுறையையும் ஒடுக்குமுறையையும் புரிஞ்சிக்கிறதுக்குப் பெண்ணாய்ப் பிறந்ததே போதுமானதாக இருக்கு. எந்த சூழலில் பெண்ணாய்ப் பிறந்திருந்தாலும் அந்த அடக்குமுறைகளிலிருந்து தப்பிக்க முடியாது. அரசியல்ரீதியாக ஒரு நல்ல நிலையில் இருக்கிற குடும்பத்தில் பிறந்ததாலேயே இந்த அடக்குமுறைகளையும், ஒடுக்கு முறைகளையும் தாண்டிட முடிவதில்லை.

ஆனால், வசதி இல்லாதவர்களை விட சில விசயங்களை தவிர்த்து விடுவதற்கான வாய்ப்பு இருக்கே தவிர, அவற்றை முழுமையா கடந்துவிட முடியும் என்பதற்கான சாத்தியமே கிடையாது. நிச்சயமா எல்லா பெண்களும் அடக்குமுறையையும் ஒடுக்குமுறையையும் சந்திக்கத்தான் நேரிடும்.

ஒரு கிராமத்திலே வளர்கிற ஒரு தலித் பெண்ணோட வலிகளும் அனுபவங்களும் எனக்கு இருக்குன்னு சொன்னா அது உண்மையல்ல. ஆனால் அவங்களுக்கு நேரும் அவமானங்களோ திணிக்கப்படுகிற அடக்குமுறைகளோ ஒரு துளிகூட என் மேலே இல்லை என்கிறதும் உண்மை இல்ல.

புத்தக வாசிப்பு என்பது பலருக்கு - குறிப்பாக படிப்பறிவு பெற்ற பெண்களுக்கும் ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கும் பல புதிய திறப்புகளை தந்திருக்கு. உங்களுக்கும் அந்த அனுபவம் இருக்கும்னு நினைக்கிறேன்...

வாசிப்பு என்பது எல்லாருக்குமே ஒரு பெரிய உலகத்தைத் திறந்துவிடுகிற விசயம்தான். உங்களுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டுள்ள சின்ன வட்டத்தை விட்டு வெளியேறி வருவதற்கான வாய்ப்பை வாசிப்பு கொடுக்கும். அந்த வட்டத்தை விட்டு வெளியே வந்து சுற்றி இருக்கிற நிதர்சனங்களைப் பார்க்க ஆரம்பித்தாலே, அது உங்களை இழுத்துகிட்டுப் போயிடும்.

என்ன மாதிரியான புத்தகங்கள் அப்படியாக உங்களை பாதித்ததுன்னு சொல்ல முடியுமா?

கல்கியிலிருந்து ஆரம்பிச்சு ஜெயகாந்தன் வழியாகத்தான் இலக்கிய உலகத்துக்குள்ளே வர முடிஞ்சது. ஆங்கிலப் புத்தகங்கள், பிற மொழிபெயர்ப்பு நூல்களும்தான். ஆனால், எந்த ஒரு புத்தகமும் என் வாழ்க்கையை அப்படியே புரட்டிப் போட்டுடிச்சின்னு சொல்லமுடியாது. இன்னொரு விசயம், நம்மை அதிகமா பாதிக்கிற புத்தகங்கள் நம்முடைய கருத்துக்களோடவும், நம்முடைய எண்ணத்தோடவும் ஒத்துப்போவதா இருக்க வேண்டிய அவசியமும் கிடையாது. நாம ஒத்துக்க நம்மை வேறொரு தளத்திலிருந்து சிந்திக்க வைக்குது. வேறொரு இடத்துக்கு அழைச்சிட்டுப் போகுது. பல எழுத்துக்கள், பல சம்பவங்கள், பல அனுபவங்கள், பல கலை சார்ந்த விசயங்கள்... இவை எல்லாம் சேர்ந்துதான் நமக்குள்ளே சின்னச் சின்ன பாதிப்புகளை ஏற்படுத்துது.

பெண்கள் தங்கள் உடலைப் பற்றி தாங்களே வெளிப்படையா எழுத முன்வந்திருப்பது தமிழ் இலக்கியச் சூழலிலே பெண் பற்றிய புதிய புரிதல்களைத் தந்திருக்கு. இந்த வகை எழுத்துகள் பற்றிய உங்கள் அபிப்ராயம்...?

நம்முடைய சமூகத்திலே பெண்ணின் உடல் என்பது ஆண் சார்ந்த விசயமாகவும், ஆணின் தேவைக்காகவும் அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் ஒரு விசயமாகவும்தான் நாம் பார்க்கிறோம். இப்போது பெண்ணுக்குத் தன்னுடைய உடல் தன்னைச் சேர்ந்தது என்றும், தன்னுடைய கட்டுப்பாட்டுக்கு, தன்னுடைய முடிவுகளுக்குள்ளே இருக்க வேண்டியது என்னும் புரிதலும் வந்திருக்கு. இந்தப் புரிதலைத் துணிந்து சொல்வதே ஒரு பெரிய விடுதலைக்கான முதல் அடின்னு நான் சொல்வேன். பெண்ணுடைய உடலைப் பற்றிய பல கட்டுப்பாடுகள் மட்டுமல்லாமல், அதனை தரக்குறைவாக பார்க்கிறதுக்கான விசயமாகத் தான் வழக்கப்படுத்தி வைத்திருக்கிறோம். அந்தச் சூழல்ல வளர்ற ஒரு பெண், தன்னுடைய துன்பங்கள் துயரங்களுக்கெல்லாம் காரணம் பழமையா போதிக்கப்பட்ட விசயங்கள்தான் என்று உணர்ந்து அதிலிருந்து விடுதலையை நோக்கிப் போக நினைக்கிறதென்பதே நிஜமான விடுதலைக்கான முதல் படின்னு நினைக்கிறேன். இந்தப் புரிதல் வந்துட்டாலே பல விசயங்களை உடைச்சிகிட்டு வெளியே வந்துட முடியும. இது அப்படி ஒன்னும் சாதாரண விசயமும் இல்ல. ஒவ்வொரு பெண்ணும் தனக்குள்ளே நடத்திக்க வேண்டிய ஒரு போராட்டம் இது. சாத்தியப்படும்போதுதான் சமூகத்திலே மிகப்பெரிய மாற்றங்கள் வரும்.

ஆனாலும், இவ்விதமா எழுதுகிற பெண்கள் மோசமான எதிர்வினைகளை சந்திக்க வேண்டியிருக்கிறதே...

பெண்ணின் உடலை ஆண்கள் ஒரு வியாபாரப் பொருளாக, வர்த்தகப் பொருளாக எழுதறப்ப கேள்வி கேட்காத இந்த இலக்கியவாதிகளும், சமூகமும் ஒரு பெண் தன்னுடைய உடலைக் கடந்து போகணும்னு படைப்பிலக்கியததை உருவாக்கும்போது அதை எதிர்த்து எழும் கோஷங்களுக்குள், பெண்கள் ஒரு வட்டத்துக்குள்தான் இருக்கணும். அதைத் தாண்டி வெளியே வந்துவிடக் கூடாது என்கிற அவர்களின் எண்ணம் இருக்கு.

பெண்களுக்கான போராட்டத்தில் பெண் விடுதலைக்கான எழுத்தில் ஆண்களும் இணைந்து குரல் கொடுக்க வேண் டிய அவசியம் இருக்குதானே...?

ஒரு நாகரிகமான நல்ல சமூகம் என்றால், அங்கே யாரும் ஒடுக்கப்படுவதற்கான நியாயம் இல்லை. அப்படி ஒருவர் ஒடுக்கப்படும்போது, அந்த சமூகமே ஒன்று சேர்ந்து குரல் கொடுக்கணும். அது ஆண் சார்ந்து பெண் சார்ந்துன்னு பார்க்கக்கூடாது. எல்லோரும் சேர்ந்துதான் விடுதலைக்கான குரலைக் கொடுக்கணும்.

ஆண்களைப் பொருத்தவரை, ஒரு பெண் அவளுடைய வசதிகளை எல்லாம் விட்டுட்டு, தனக்குக் கீழே பணிவிடை செய்து தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள்ளே இருக்கிறவளை சுதந்திரமாக இருக்க ஓர் ஆண் அனுமதிப்பதென்பது சாமான்ய விசயமல்ல. அதிலிருந்து விடுபட ஆண்களுக்கும் ஒரு விடுதலை தேவையா இருக்கு.

பத்திரிகை, மீடியாக்களிலே செயல்பட்டுகிட்டிருக்கீங்க. அங்கே பணி செய்கிற பெண்களுக்கான சூழல் எப்படி இருக்கு?

ஒரு பெண் செய்தியாளர் என்றால், ஓர் அரசியல் சார்ந்த விசயங்களையோ மற்ற முக்கிய விசயங்களையோ கருத்துச் சொல்லி எழுதுவதற்கு அங்கே இடம் கிடையாது. அதோடு, குடும்பத்திலும் கட்டுப்பாடுகள் இருக்கு. இந்தத் தடைகளை உடைச்சிகிட்டு வெளியே வந்தவங்கதான் இப்போ மீடியாவிலே இருக்கிற பெண்கள்னு சொல்லணும். பெரிய பத்திரிகைகளில் அரசியல் விசயங் களை எழுத ஓர் ஆண் நிருபருக்கு பத்து ஆண்டுகள் போதும். ஆனால், ஒரு பெண் என்கிறபோது அவ்வளவு சுலபமாக சுலபமாக விட்டுவிட மாட்டார்கள். அறிவு சார்ந்த விசயங்களில் ஆணுக்குக் கீழாகத்தான் பெண் இருப்பாள் என்கிற நம்பிக்கை அங்கேயும் இருக்கத்தான் செய்யுது. பெண்கள் எழுதுவதை ஏளனம் செய்கிற விசயமும் இருக்கு. மீடியாவிலே ஆணுக்குச் சமமா ஒரு பெண் பாவிக்கப்படணும்னா அவனைவிட பல மடங்கு அறிவார்ந்த விசயங்களை இவள் செய்ய வேண்டிய அவசியம் இருக்கு. அதோடு மற்ற எல்லா இடங்களிலும் வேலைக்குப் போகிற பெண்கள் எதிர்கொள்கிற பிரச்சினைகள் இவர்களுக்கும் இருக்கத்தான் செய்யுது.

சினிமாவில் பெண்கள் சித்தரிக்கப்படுவதற்கும், தொலைக் காட்சியில் பெண்கள் சித்தரிக்கப்படுவதகும் என்ன மாதிரியான வித்தியாசத்தை உணர்றீங்க?

பெரிய வித்தியாசம ஒண்ணும் கிடையாது. சினிமாவில் இருக்கிற பெண்கள்தானே 35 வயதுக்குப் பிறகு தொலைக் காட்சிக்கு வர்றாங்க. முட்டாள்தனமான, சிந்திக்கத் தெரியாத, கணவனே கண் கண்ட தெய்வம், காதலிக்கிறவன் என்ன மாதிரி அயோக்கியனாக முட்டாளாக இருந்தாலும் அவன் பின்னாலே பெண் துரத்திட்டு போறதைத்தான் சினிமாவிலே காட்டுறாங்க. அதே மனோபாவத்தோட இருக்கிற பெண்களைத்தான் தொலைக்காட்சித் தொடரிலும் காட்டுறாங்க. அவள் ஓர் அலுவலகம் நடத்துவாள். நிர்வாகமும் பண்ணிகிட்டிருப்பாள். ஆனால், அவளது வாழ்க்கையில்...?

யார் இந்தப் பெரியார்: அவர் விட்டுச் ...

பெரியார் என்னென்ன விசயங்களை பெண்கள் உடைச்சிகிட்டு வரணும்னு சொல்லி இத்தனை கஷ்டப்பட்டாரோ அனைத்தையும் உடைச்சி, கிட்டதட்ட நூறு வருசத்துக்கு பின்னாடி பெண்கள் இருந்த மனநிலைக்கு அவர்களைத் திரும்ப கொண்டுபோய்விட்டதுதான் இந்தத் தொலைக்காட்சி தொடர்கள் செய்த மிகப்பெரிய சேவை.

மூடநம்பிக்கைகளையும் இப்படித்தான் இந்தத் தொடர்கள் பரப்பி விடடுகிட்டிருக்கு. பெரியாரை அழிக்கிறதுக்கு, சமூக நீதியையும் சமூகத்தையும் அழிக்கிறதுக்கு இவங்க பெரிய சேவை செய்து கிட்டிருக்காங்க. இப்போ இருக்கிற சமூகத்தை சீரழிக்கிறதோட மட்டுமில்லாம, அடுத்த தலைமுறை குழந்தைகளையும் உருப்படாம, சிந்திக்கத் தெரியாம செய்வதுடன், பழமையான, முட்டாள்தனத்திலே மூழ்கடிக்கிற காரியத்தையும் இந்தத் தொடர்கள் செய்துகிட்டிருக்கு. இந்தத் தொடர்களாலே குழந்தைகள் பேசும் விதமே மாறியிருக்கிறதா கருத்துக் கணிப்பு சொல்லுது.

பொதுவாக, இப்போது தமிழ்ப் பதிப்புலகத்திலே ஒரு மலர்ச்சி ஏற்பட்டிருக்கு. வாசிக்கும் பழக்கமும் வளர்ந்திக்குன்னு நினைக்கிறேன். நீங்க என்ன நினைக்கிறீங்க?

தமிழ்லே நிறைய புத்தகங்கள் வருது. வெவ்வேறு விசயங்கள் பத்தின புத்தகங்கள் வருது. ஆனால், இது போதாது. தமிழ்ப் பேசும் மக்கள் தொகையோடு ஒப்பிடும்போது ஏமாற்றம்தான் ஏற்படுது. படிக்கிற பழக்கம் வளர்ந்திருந்தா ஏன் 2000 படிகள் அச்சடித்த புத்தகம் விற்கிறதுக்கு ஐந்து வருசங்கள் ஆகுது. இப்போ ஆங்கிலப் புத்தகம் படிக்கிற பழக்கம் அதிகரிச்சிருக்குன்னு நினைக்கிறேன். குறிப்பா நகர்ப்புறங்களிலே வாசிக்கிறவங்க ஆங்கிலப் புத்தகங்களைத்தான் அதிகம் படிக்கிறாங்க. தமிழ் மட்டுமே படிக் கிறதுன்னு ஒரு பிரிவு இருக்குது. இங்கிலீஸ் மட்டுமே படிக்கிறதுன்னு ஒரு பிரிவு. ஆங்கிலம், தமிழ் இரண்டையும் ரொம்ப குறைச்சலான வங்கதான் படிக்கிறாங்க. பொதுவா, இப்ப படிச்சி கிட்டிருக்கிற மாணவர்களுக்கு ஆங்கிலத்திலே படிக்கிறதுலதான் ஆர்வம் இருக்குன்னு நினைக்கிறேன். அதுதான் உண்மை.

இந்த நிலைமையை மாத்தணும்னா என்ன செய்யலாம்?

தமிழ்ப் படிக்கிறது ஒரு பழக்கமாக்கப்படணும். இளைய தலைமுறையினருக்குத் தேவைப்படுகிற எழுத்தா அது இருக்கணும்...

தாய்மொழியிலே படிக்க வேண்டியதன் அவசியம், முக்கியத்துவம்...?

மொழியை ஒரு தகவல் தொடர்பு சாதனமா மட்டும் நாம் பார்க்க முடியாது. நம்முடைய கலாசாரம், சரித்திரம், பாரம்பரியம், கலை இலக்கியக் கூறுகள் எல்லாத்தையும் சேர்த்து சுமந்து கிட்டுதான் இந்த மொழி வருது. நான் நாளையிலிருந்து தமிழ் பேசுவதில்லைன்னு முடிவெடுத்தால், இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளாக எனக்குள்ளே இருந்த வேர் அறுந்து போச்சுன்னு அர்த்தம். நான் சொல்கிற எந்த ஒரு தமிழ் வார்த்தையும் என்னுடைய மரபை சுமந்துவிட்டு வராது. என்னுடைய கலாசாரத்தையும் வரலாறையும் பாரம்பரியத்தையும் மரபையும் சுமந்துகொண்டு வர்ற அந்த மொழியை நான் பேசாம போனா, நான் தொலைஞ்சுப் போவேன். நீங்கள் உங்கள் இனத்தின் அடையாளத்தை மொழியின் மூலமாக மட்டுமே சுமந்துகொண்டு வரமுடியும். இந்த இடத்துக்கு மதமோ, தேசமோ வரமுடியாது. மொழியால மட்டும்தான் அது முடியும்.

புத்தக வாசிப்பை வளர்த்தெடுக்கிறதுக்கு ஆலோசனை இருந்தா சொல்லுங்க...

குழந்தைகளுக்கான புத்தகம் எழுதுறதிலே கவனம் செலுத்துற வரைக்கும் புத்தக வாசிப்பை - இலக்கிய வாசிப்பை வளர்த்தெடுக்க முடியாது. குழந்தைகள் படிக்கிறதுக்குன்னு என்ன வச்சிருக்கோம். ஹாரிபாட்டர் படிச்சிட்டு வளருது குழந்தைகள் இங்கே. திடீர்னு அதை தமிழ் இலக்கியம் படின்னா எப்படி படிக்கும்? அந்தந்த வயதுக்கான புத்தகங்களை அந்தந்த வயதிலே கொடுத்தாதான் குழந்தைகள் ஆரோக்கியமா வளரும். பஞ்சதந்திர கதைகளும், ராமாயணம், தெனாலிராமன் கதைகளும் தேவைதான். ஆனால், இன்றைய நவீன உலகத்துக்கான - கல்விக்கான புத்தகங்களையும் சேர்த்து கொடுக்க வேண்டாமா? அவர்களுக்குத் தேவையான விசயங்களை, வாழும் சூழலுக்கேற்ற விசயங்களை, ஈடுபாடுள்ள விசயங்களைப் பற்றி நாம் புத்தகம் எழுத வேண்டிய அவசியம் இருக்கு.

நீங்கள் இப்போது ஓர் ஆவணப்படம் எடுத்துகிட்டிருக்கீங்கன்னு கேள்விபட்டோம்...

அப்பாவை (தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி)ப் பற்றி ஒரு டாக்குமெண்டரி தயாராகிட்டு இருக்கு. படத்தொகுப்பு நடக்குது. அது தயாரான பிறகு அது பற்றி பேசலாம்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சங்க இலக்கியம் முதல் பெண் கவிஞர்கள் : பத்மாவதி விவேகானந்தன் நேர்காணல்

எனது கதைகள் வரலாற்று ஆவணங்கள்: மேலாண்மை பொன்னுச்சாமி நேர்காணல்

கவிஞர் அறிவுமதி பாடலாசிரியரான கதை