எந்திர அழகியல் : இந்திரன் நேர்காணல்


நான் புதுவை நகரில் பிறந்து, சென்னை நகரில் வளர்ந்து, பிற மாநில நகரங்களில் பணிபுரிந்தவன். அதனால் எனது கவிதைகள் நகரம் சார்ந்த அனுப வங்களாக உள்ளன. நகர வாழ்க்கையில் காணப்படும் பாதாள சாக்கடைகள், நியான் விளக்குகள், மின்சார ரயில், விமானப் பயணம் என்று பல்வேறு தொழில்நுட்பமயப் படுத்தப்பட்ட மனித வாழ்க்கை என் கவிதை களில் பதிவு பெறுகின்றன. இரவுதோறும் என் நாற்பதடி தெருவுக்கு ஓய்வெடுக்க வரும் தார் உருக்கும் இயந்திரம் பற்றி ஒரு கவிதை எழுதி இருக்கிறேன்.

‘கொழுத்த அதன்
இரும்புத் தசைகள்,
நிலவில் தினந்தோறும் குளிரும்’

என்று ஓர் ஸ்தாபிக்க விரும்புகிறேன். ஒரு மலரை ரசிப்பது போல, ஒரு தார் உருக்கும் இயந்திரத்தையும், பேருந்தையும், தொலைக் காட்சிப் பெட்டியையும் ரசிக்கிற தற்கால அழகியல் எனது கவிதைக்குப் பிடித்தமான பகுதி. நகர வாழ்க்கையில் மனித உறவுகள் காலில் இட்டு துவைக்கப்படுவதைப் பார்த்து என் மனம் பதறுகிறது. எனது கவிதைகள் இவற்றைப் பேசுகின்றன.

உங்கள் மொழிபெயர்ப்பில் வெளிவந்த ‘அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்’ தமிழ் இலக்கியச் சூழலில் மிகுந்த தாக்கத்தை அது வெளிவந்த காலத்தில் ஏற்படுத்தியது. தமிழில் இலக்கிய படைப்பாக்க மலர்ச்சிக்கு இந்நூலும் ஒரு தூண்டுகோலாக அமைந்தது. ஒடுக்கப் பட்ட கருப்பர் இலக்கியத்தை எந்த நோக்கத்தில் தமிழுக்குக் கொண்டு வந்தீர்கள்?

நான் கல்லூரி மாணவனாக இருந்தபோதே சென்னையில் உள்ள அமெரிக்க நூலகத்திற்குச் செல்வேன். அந்த நூலகத்தில் எந்த அலமாரியில் டி.எஸ்.இலியட், எஸ்ரா பவுண்ட் போன்ற வர்களின் நூல்கள் இருந்தனவோ, அதே அலமாரியில்தான் ஆப்பிரிக்க அமெரிக்க இலக்கியவாதிகளான லாங்ஸ்டன் ஹ்யூக்ஸ், ரால்ஃப் எல்லீசன், ரிச்சர்ட் ரைட், மாயா ஏஞ்சலோவா, அலைஸ் வாக்கர் போன்றவர்களின் நூல்களும் அடுக்கப்பட்டிருப்பதைப் பார்த்தேன்.
எஸ்ரா பவுண்டையும், டி.எஸ். இலியட்டையும் மாய்ந்து மாய்ந்து மொழிபெயர்த்துக் கொண்டிருந்த தமிழ் இலக்கியவாதிகள், இந்த கருப்பு இலக்கியவாதிகளை ஏன் கண்டுகொள்ளவே இல்லை என்கிற கேள்வி என்னைத் துன்புறுத்திக்கொண்டே இருந்தது.
பிறகு, டாக்டர் அம்பேத்கர் பிறந்த மண்ணான அவுரங்காபாத் சென்று வாழத் தொடங்கியபோது ஏராளமான அவரது நூல்களை அவர் ஏற்படுத்திய நூலகத்திலேயே படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பல மராட்டிய, தலித் சிறுத்தைகள் இலக்கியவாதிகளின் நட்பு ஏற்பட்டது.

தமிழில் இத்தகைய தலித் இலக்கியப் போக்குகளை உருவாக்க ஆப்பிரிக்க இலக்கியம் உதவும் என்பது தெரியவந்தது. இதனால் ஆப்பிரிக்க அமெரிக்க எழுத்தாளர்களின் படைப்புகளைத் தமிழுக்கு மொழிபெயர்க்கத் தொடங்கினேன். பிறகு, மும்பைக்குச் சென்று நான் வாழத் தொடங்கியபோது விமர்சனக் கட்டுரைகளில் வெறும்
பெயரளவுக்குத் தெரியவந்த செனகால் நாட்டுக் கவிஞர் லியோ போல்ட் செடார் செங்கோர், நைஜீரியாவின் வொல்லே கொயின்கா, ச்சினுவா அச்செபே போன்ற ஏராளமான கருப்பு எழுத்தாளர்களின் நூல்கள் எனக்குக் கிடைத்தன.

அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம் (Tamil ...

ஒடுக்கப்பட்ட கருப்பு மக்களின் யதார்த்த வாழ்வை நேரிடையாகவோ அல்லது குறியீடாகவோ வெளிப்படுத்துவதாக மட்டுமல்லாமல், கருப்பு எழுத்துக்கள் தமக்கே உரித்தான ஒரு புதிய அழகி யலைக் கட்டி எழுப்பியது என்பதை உணர்ந்தபோது, அந்த எழுத் துக்களை தமிழில் மொழிபெயர்ப்பதில் ஓர் அர்த்தமும் பொருத்தப்பாடும் இருக்கிறது என்று உணர்ந்து அவற்றை ஒரு நூலாக வடிவமைத்தேன் மும்பையிலிருந்து சிவகங்கைக்கு நான் மாற்றலாகிச் சென்றபோது, கவிஞர் மீரா அதனை ‘அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்’ எனும் நூலாக 1982ல் வெளியிட்டார்.

அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்’ நூலுக்குப் பிறகு ‘காற்றுக்குத் திசை இல்லை’, ‘பசித்த தலைமுறை’, ‘பிணத்தை எரித்தே வெளிச்சம்’, ‘கடவுளுக்கு முன் பிறந்தவர்கள்’ என அடுத்தடுத்து மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டு வந்துள்ளீர்கள். ஒவ்வொரு நூலும் ஒவ்வொரு வகையில் முக்கியத்துவம் வாய்ந்தவை. உங்களின் தொடர் மொழிபெயர்ப்பு செயல்பாடுகள் குறித்து...?

ஆப்பிரிக்க இலக்கியத்தைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியபோது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய வரவேற்பு எனக்கு ஒரு குற்ற உணர்ச்சியை உருவாக்கி விட்டது. உலக அளவில் இருக்கும் இலக்கியங்களை தமிழுக்குக் கொண்டு வருகிறபோது நமது இந்தி யாவில் இருக்கும் அண்டை மொழிச் சகோதரர்கள் என்ன எழுது கிறார்கள் என்பதைக்கூட தமிழர்கள் அறிந்து கொள்ள முடியவில்லையே. இதற்கு நாம் பங்களிப்பு செய்யவில்லையே என்கிற எண்ணத்தில் உருவானதுதான் ‘காற்றுக்குத் திசை இல்லை’ தொகுதி. சிலர் எதையும்  விளைவிக்காத மொழிபெயர்ப்பு நூல்களை மட்டுமே வெளியிடுகின்றனர். சர்மண்ட ராஜு, தயா பவார் போன்றவர்களின் படைப்புகளை அவர்கள் வெளியிடுவ தில்லை. ஆகவே, அவர்களையும் உள்ளடக்கிய ஒரு இந்திய இலக்கியத் தொகுப்பாக அந்நூல் வெளிவந்தது.

இன்றைக்குப் பிரபலமாகப் பேசப்படுகிற மராட்டிய தலித் இலக்கியவாதியான தயாபவாரின் சுயசரிதையி லிருந்து ஒரு பகுதியை முதல்முதலாக தமிழுக்குக் கொண்டு வந்தேன். அமிர்தா ப்ரீதம், சகத்ஹசன் மாண்ட்டோ, கமலாதாஸ், சுனில் கங்கோபாத்யாய போன்றவர்களின் படைப்புகளையும் முதல்முதலாக தமிழுக்கு அறிமுகப்படுத்தியவன் நான்தான். இந்த நூல் பிரபஞ்சன் முதற்கொண்டு பல்வேறு எழுத்தாளர்களின் மீது பாதிப்புகளை ஏற்படுத்தியது.

‘பசித்த தலைமுறை’ தொகுதியை கொண்டு வந்ததற்குக் காரணம், அப்போது ஐரோப்பிய எழுத்தாளர்களின் படைப்புகளே பிரதானமாக மொழிபெயர்க்கப்பட்டன. ஆகவே, மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்தவர்களின் படைப்புகளை தமிழில் கொண்டு வரவேண்டும் என்பதற்காக சீனா, ஜப்பான், பாலஸ்தீனம் என்று பல்வேறு நாடுகளின் படைப்புகளை தமிழுக்குக் கொண்டுவந்தேன். இப்புத்தகத்தை வடிவமைத்த போது அந்தந்த நாட்டு ஓவியங்கள், சிற்பங்கள் ஆகியவற்றின் படங்களையும் நூல் முழுவதும் இருக்கு மாறு வடிவமைத்தேன்.

அதன்பிறகு, மகாராஷ்டிரா மாநிலத்தில் அவுரங்காபாத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோது ஏராளமான மராத்திய, குஜ ராத்திய தலித் இலக்கியங்களை தேடித் தொகுத்து வைத்திருந்தேன்.
தலித் இலக்கியம் தமிழில் தலையெடுக்கத் தொடங்கிய காலம் அது.

Amazon.in: Buy Pinaththai Eriththe Velicham / பிணத்தை ...

மராத்திய குஜராத்திய தலித் இலக்கிய மொழி பெயர்ப் புகளை தமிழ் தலித் இலக்கியத்தின் பக்கத்தில் வைத்து ஒப்பிட்டு வாசிக்க வகைசெய்யும் முயற்சியில் கொண்டு வந்தது தான் ‘பிணத்தை எரித்தே வெளிச்சம்’. இது பாதல் சர்க்காரின் ‘எங்க் இந்திரஜித்’ எனும் வங்காள நாடகத்தில் வரும் கடைசிப் பாடலின் கடைசி வரி.

அதன்பின் எனக்கு ஒரு சிறு சிந்தனைத் தோன்றியது. எழுதப் பட்ட இலக்கியங்களையே மொழிபெயர்க்கிற நாம் எழுதப்படாமல் வாய்மொழி இலக்கியமாக இருக்கிற ஆதிவாசிகளின் இலக்கியங் களைக் கண்டுகொள்ளவில்லையே என்கிற எண்ணம். ஒரிசா, பீகார் போன்ற இடங்களில் நான் சேகரித்த ஆதிவாசிகளின் பாடல்களை அந்தப் பகுதி நண்பர்களின் உதவியுடன் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தேன். அவற்றை தமிழில் மொழிபெயர்த்து ‘கடவுளுக்கு முன் பிறந்தவர்கள்’ என்ற தொகுதியாக வெளியிட்டேன்.

Indiran - தோழர் ஆர்.நல்லகண்ணுவும் ...

தமிழிலேயே முதல்முதலாக வெளிவந்த ஆதிவாசிகளின் மொழிபெயர்ப்புக் கவிதை நூல் இதுதான். இந்தப் புத்தகம் வெளிவந்த பிறகுதான் தமிழில் மலையின ஆதிவாசிகள் குறித்த அக்கறையான செயல்பாடுகள் தொடங்கின.

முப்பட்டை நகரம், சாம்பல் வார்த்தைகள், மின்துகள் பரப்பு ஆகிய மூன்று கவிதை நூல்களும் வெவ்வேறு வகையிலானவை. கவிதைகளில் பல்வேறு சோதனை முயற்சிகளைக் கையாண்டிருக்கிறீர்கள்...

நவீன கவிதையின் முகஜாடை இந்திரனின் ...

ஓவிய இயக்கங்களைப் பற்றி ஒரு கலைவிமர்சகர் என்ற வகையில் நான் அறிந்தவற்றை தமிழ் கவிதைப் பரப்பிற்குள் கையாண்டு பார்க்கவேண்டும் என்கிற உந்துதலில் நான் ஒரே மூச்சில் எழுதிய கவிதைகளின் தொகுப்புதான் ‘முப்பட்டை நகரம்’, Prism என்ற பொருளில் பெயர் வைத்தேன். சூரிய வெளிச்சத்தை பல்வேறு வண்ணங்களாக வெட்டிப் பிரிப்பதுபோல, நகரம் என்னை பல்வேறு குணாம்சங்கள் கொண்டவனாக பிரிக்கிறது.

Tamil works must be translated into European languages as well ...

ஜெர்மனியில் தோன்றிய எக்ஸ்பிரசனிச கவிஞர்கள் நகரத்தை எப்படிப் பார்த்தார்களோ அத்தகைய கவிதை களை முப்பட்டை நகரத்தில் நான் முயற்சித்தேன். இந்நூலைப் படித்த சுஜாதா, “தமிழுக்குக் கிடைத்த புதிய பரிமாண விஸ்தீரணம்’’ என்று கணையாழியில் குறிப்பிட்டிருந்தார். இதில் இடம்பெற்றுள்ள ‘புள்ளி’ என்ற கவிதையைப் பற்றி நகுலன் ஒரு தனி கட்டுரையே ‘விருட்சம்’ இதழில் எழுதினார். ‘மணலுக்குக் கீழும் நதிகள்’ என்ற கவிதை மலையாளத்திற்கு மொழியாக்கம் செய்யப்பட்டு ‘மாத்ருபூமி’ இதழில் வெளிவந்தது.

‘சாம்பல் வார்த்தைகள்’ நூலை எழுதிய அனுபவம் வித்தியாச மானது. முன்பு ஒரு காலகட்டத்தில் அதிகாலையில் எழுந்தவுடன் MTV-ல் பாப் ஆல்பங்களைப் பார்க்கிற வழக்கம் உண்டு. அவற்றில் காட்சிகளை ஒன்றன் மேல் ஒன்றாக Juxtopose செய்து நம்முன் கொடுப்பதை பார்த்து ரசித்திருக்கிறேன். தமிழ்க் கவிதை ஒன்றை நாம் ஏன் இந்த முறையில் படைக்கக்கூடாது என்ற எண்ணத்தில் தான் ‘சாம்பல் வார்த்தைகள்’ எனும் நீள்கவிதையை எழுதினேன்.

“காவல் நிலையங்களில்
கைத்தடிகள்
பாம்புகளாய் மாறி
சாத்தானின் ஆப்பிளைச் சுற்றி
ஊர்ந்து செல்கின்றன
பாம்புகளின் பசிக்கு
பழியாகின்றனர்
பத்மினிகளும் சாவித்திரிகளும்...’’

இவ்வாறு இந்தக் காலகட்டத்தில் எனது மனதைப் பிசைந்த பிரச்னைகளை பல்வேறு காட்சிப் படிமங்களாக லூயிமுனுவல் சினிமா போல தொகுத்து வெளியிட்டேன்.

Vaarppu - Tamil Poems - கவிதை வாராந்தரி - Tamil ...

‘மின்துகள் பரப்பு’ என் சமீபத்திய தொகுதி. தமிழில் இதுவரையிலும் பார்வைக்குக் கொண்டு வரப்படாத பல்வேறு பரிசோதனைகள் இத்தொகுதியில் செய்யப்பட்டிருக்கின்றன.

ஆரம்பத்திலேயே ‘நல்ல சுவையுணர்வின் மரணம்’ என்கிற கோஷத்தை வைத்திருப்பேன். காரணம், கவிதை என்பது தமிழில் எழுதப்படும்போது அந்த பழமையான மொழிக்கே உரிய இலக்கியச் சுமையோடு அது இயங்குவதைத் தவிர்த்து ஒரு நவீன அழகியல் பரிமாணத்தைப் பெறவேண்டும் என்பதுதான்.

ஒரு கவிதைப் புத்தகத்தில் அதிநவீன ஓவியத்தில் எத்தகைய கட்டுப்படுத்தல்கள் விளையாட்டுத் தனங்களோடு செய்யப்பட வேண்டும். ஓவியத்தையே கவிதைகளாகச் செய்திருக்கிறேன். இன்றைய எழுத்து, உருத்திரிபுகள், பதிலி, தீவுமனிதன், ஐந்து மனிதன் போன்ற கவிதைகள் அவ்வாறு படைக்கப்பட்டவைதான். நவீன கவிதைகளின் புதிய எல்லைகளைப் பற்றி பேசுகிற இளைய கவிஞர்கள் கட்டாயம் கண்டுகொள்ள வேண்டிய கவிதைத் தொகுதி இது.

இன்றைக்கு தமிழில் ஒரு புதிய கவிதைப்போக்குத் தோன்றி பல இளைஞர்களாலும், குறிப்பாக பெண் கவிஞர்களாலும் முன் வைக்கப்படுகிறது. இதனால் தமிழ் இலக்கியத்திற்குப் புதிய பரிமாணம் கிடைத்திருக்கிறது. இத்தகைய கவிஞர்கள் எனது மின் துகள் பரப்பில் முன்வைக்கப்பட்டிருக்கும் இயந்திர அழகியல் கவிதைக்குள் ஒரு பார்வைப் பண்பாடு, காட்சி படிமங்களை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்குவது, அதேநேரத்தில் பழங்கவிதை மொழி யிலிருந்து தற்கால கவிதைக்கான பிரத்யேக மொழி ஒன்றைக் கண் டெடுப்பது போன்றவற்றை கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும்.

உங்களின் ‘கவிதை அரசியல்’ பற்றியும், ‘தமிழ் அழகியல்’ குறித்தும்...?

இன்றைக்குத் தமிழில் புதிய கவிதைப் போக்கு என்று ஒன்று என்.டி.ராஜ்குமார், பாலைநிலவன், ராணிதிலக், கடற்கரய், அன்பாதவன், ஐயப்ப மாதவன், சங்கர ராம சுப்பிரமணியன், வஸந்த் செந்தில், குட்டி ரேவதி, சுகிர்தராணி போன்ற இளைய சக்திகளால் முன்வைக்கப்படுகிறது. இது எத்தகைய சமூக காரணங்களால் நிகழ்ந்தது என்பதை ஆராயும் விதத்தில்தான் இந்நூலை எழுதினேன். இதில், கவிதை என்ற பெயரில் எந்தவித அரசியல் உள்நோக்கக்ள் முன்வைக்கப்பட்டன என்பவை குறித்து எழுதிய பகுதிகளைப் படித்து ஏராளமான இளம் கவிஞர்கள் தங்களுக்குப் பெரிய தெளிவை ஏற்படுத்தியதாக எனக்குக் கடிதம் எழுதியிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது.

‘தமிழ் அழகியல்’ என்பது... மேல்நாட்டு கலை அறிஞர்கள் இந்தியக் கலைகளைப் பற்றி- குறிப்பாக தமிழ்நாட்டு ஓவியம், சிற்பம் குறித்து கூறிய பல்வேறு கருத்துகள் தவறாக இருக்கிற காரணத்தால் தமிழ் ஓவியத்தை, தமிழ்ச் சிற்பத்தை சரியான முறையில் புரிந்து கொள்வதற்குத் தத்துவரீதியான அளவுகோல்களை நாம் உருவாக்க வேண்டும் எனும் கருத்தை முன்வைத்து செய்யப்பட்ட ‘தமிழ் அழகியல்’ புத்தகம். இலங்கையில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் நுண்கலைப்பிரிவு பாடத்திட்டமாக வைக்கப்பட்டுள்ளது.
நான் மிகவும் மதிக்கும் ஈழக்கவிஞர் வில்வரத்தினம் “தமிழகத்து கவிஞர் இந்திரன் முன்வைக்கும் தமிழ் அழகியலைத்தான் எனது கவிதைகள் பேசுகின்றன’’ என்று குறிப்பிட்டிருப்பது எனது கருது கோள்களுக்குக் கிடைத்த வெற்றி என்றே கருதுகிறேன்.

சந்திப்பு : சூரியசந்திரன்

புதிய புத்தகம் பேசுது
நவம்பர் 2004

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சங்க இலக்கியம் முதல் பெண் கவிஞர்கள் : பத்மாவதி விவேகானந்தன் நேர்காணல்

எனது கதைகள் வரலாற்று ஆவணங்கள்: மேலாண்மை பொன்னுச்சாமி நேர்காணல்

கவிஞர் அறிவுமதி பாடலாசிரியரான கதை