கலையும் இலக்கியமும் கூட்டாகச் செயல்படும் நாட்டில்தான் மேதைகள் உருவாகுவார்கள்: தேனுகா நேர்காணல்
சந்திப்பு : சூரியசந்திரன்
புதிய புத்தகம் பேசுது, டிசம்பர் 2006
காவேரி பாயும் தஞ்சை பூமி ஏராளமான இலக்கியவாதிகளையும் கலைஞர் களையும் விளைவித்திருக்கிறது என்றால், அந்த பூமியின் ஓர் அபூர்வமான விளைச்சல்தான் கலை விமர்சகர் தேனுகா. இசை பாரம்பரியமிக்க ஒரு குடும்பத்தில் பிறந்த இவர், தீராத வேட்கையுடன் கலைகளைக் கற்றறிந்து, கலை விமர்சகராக பரிணமித் துள்ளார். தமிழில் நவீன கலை விமர்சன நூல் இல்லாத குறையை இவரது ‘வண்ணங்கள் வடிவங்கள்’ எனும் முதல் நூல்தான் தீர்த்தது. அந்த நூலுக்கு கிடைத்த வரவேற்பினாலும் உந்துதலாலும் ‘வித்யாசங்கர் ஸ்தபதியின் சிற்பமொழி’, ‘மைக்கேலேஞ்சலோ’, ‘லியனார்டோ டாவின்சி’, ‘வான்கா’, ‘பியத் மோந்திரியான்’ என அடுத்தடுத்த நவீன கலை விமர்சன நூல்களை தமிழுக்குத் தந்துகொண்டே இருக்கிறார். இவரது எல்லா நூல்களும் விருதுகள் பெற்றவை. மத்திய அரசின் ஃபெல்லோசிப்பும், மாநில அரசின் கலைச் செம்மல் விருதும் குறிப்பிடத்தக்கவை. அமெரிக்க நூலகம், பல்வேறு நாடுகளில் உள்ள தனது கிளைகளுக்கு இவரது நூல்களை இடம்பெறச் செய்துள்ளது. சுவாமிமலையில் பிறந்த இவர், தற்போது கும்பகோணத்தில் வசிக்கிறார். பாரத் ஸ்டேட் வங்கியில் பணியாற்றுகிறார். கும்பகோணம் ராமஸ்வாமி கோயிலிலும், அவரது இல்லத்திலுமாக நிகழ்த்தப்பட்ட உரையாடல் இது. ராமஸ்வாமி கோயிலைத் தேர்ந்தெடுத்ததற்கு ஒரு காரணம் உண்டு. அங்கேதான் மணிக்கொடி எழுத்தாளர் எம்.வி.வெங்கட்ராமும் தேனுகாவும் அடிக்கடி சந்தித்துப் பேசிக் கொண்டிருப்பார்களாம். இப்போது எம்.வி.வி. இல்லை. அவரது நினைவில் சிறிது நேரம் உலவிய பின் நம் உரையாடலைத் தொடங்கினோம்.
தேனுகா என்கிற ராகத்தையே உங்களின் புனைபெயராக வைத்துக் கொண்டுள்ளீர்கள். அந்த ராகத்தின் சிறப்பம்சம் என்ன?
தேனுகா என்பது ஒரு சம்பூர்ண ராகம். தியாகராஜ சுவாமி களின் ‘தெரிய லேது ராமா’ கீர்த்தனை அந்த ராகத்தில் பிரபலமாக அமைக்கப்பட்டது. இந்த ராகம் என் அத்தான் திருவாவடுதுறை கக்காயி பிள்ளை என்பவராலே பிரபலம் அடைந்தது. அப்போது, அதனை ஒரு புதிய ராகமாகவே ஜனங்கள் பார்த்தார்கள். இப்பவும் மணிக்கணக்காக மற்ற ராகங்களை ஆலாபனை செய்வது போல, இந்த ராகத்தை ஆலாபனை செய்பவர்கள் மிகக் குறை வாகவே உள்ளனர். நான் முதலில் எழுத வந்தபோது ஒரு ராகத்தின் பெயரை புனைபெயராக வைத்துக் கொள்ளலாம் என்று நினைத்தேன். அப்போது ‘தேனுகா’ என்கிற ராகத்தின் பெயரை வைத்துக் கொண்டேன்.
ராகத்தின் பெயரைத்தான் புனைப்பெயராக வைத்துக் கொள்ள வேண்டும் என நீங்கள் நினைத்ததற்கான பின்னணி என்ன?
நான் நாதஸ்வரம் வாசிக்கிற இசைக்குடும்பத்திலே பிறந்தவன். சுவாமிமலை முருகன் கோயிலில் ஆறு கால பூஜைக்கும் எங்கள் குடும்பம் நாதஸ்வரம் வாசிக்கணும். அப்பா முருகையன் ஒரு நாதஸ்வரக் கலைஞர். நாதஸ்வரப் பயிற்சிக்காக ஆந்திராவிலிருந்து மாணவர்கள் வந்து தஞ்சை மாவட்டத்தின் பல ஊர்களில் தங்கியிருந்து நாதஸ்வரம் பயிற்சி பெறுவார்கள். அப்படி, எங்கள் வீட்டிலும் சில மாணவர்கள் தங்கி இருந்தார்கள். அவர்கள் விடியற்காலை மூன்று மணிக்கே வாசிக்கத் தொடங்கி விடுவார்கள். ஜண்ட வரிசை, அலங்காரம், கீதம், வர்ணம், ராகம்... இப்படி பலவிதமாக வாசித்துக் கொண்டிருப்பார்கள். என் விழிப்பே, அந்த சங்கீத ஓசையில்தான் இருக்கும். எனக்குச் சங்கீதம் என்பது கேள்வி ஞானம்தான். நாதஸ்வரத்தில் அலங்காரம் அளவுக்கு கற்று, நிறுத்திக் கொண்டேன்.
நான் தாளக் கலைஞராக இருந்திருக்கிறேன். என் அண்ண னோடு பல நிகழ்ச்சிகளில் தாளம் வாசித்திருக்கிறேன். கல்கத்தா போன்ற வெளி மாநில ஊர்களுக்கெல்லாம் சென்று நிகழ்ச்சி நடத்தியிருக்கிறோம். என் தாத்தா அருட்பா சீனிவாசம் பிள்ளை ஆரம் பத்தில் நாதஸ்வர மேதையாக இருந்தார். பின்னர் ராமலிங்க அடிகளார் மீது ஈடுபாடு கொண்டு அருட்பாவை அதே ராகத்தில் மெய்யுருகப் பாடி, ஊரெங்கும் பிரபலமாகி இருந்தார். அவருடைய பெயரைத்தான் ‘சீனிவாசன்’ என்று எனக்கு வைத்தார்கள். இந்த இசைப் பின்னணிதான் ராகத்தையே புனைப்பெயராக வைத்துக் கொள்ளத் தூண்டுதலாய் அமைந்தது.
சுவாமிமலையில் உலகப் புகழ்பெற்ற பல ஸ்தபதிகள் இருக்கிறார்கள். அவர்களோடு உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள்...?
சுவாமிமலை, விக்கிரக வார்ப்புக்குப் பேர்போன ஊர். ராஜராஜ சோழன் காலத்தில் விக்கிரகப் புரட்சி ஏற்பட்டது. அந்த வம்சாவழியினர் எல்லாம் சுவாமிமலையில்தான் இருந்தார்கள். காரணம், விக்கிரக (சிலை) வார்ப்புக்கான மண் சுவாமிமலையில் தான் கிடைக்கிறது. சுவாமிமலை ராஜவீதி, ஸ்தபதிகள் நிறைந்த ஊர். விநாயகர் சிலை, உமையொரு பாகனான அர்த்தநாரீஸ்வரர், பாம்பை முண்டாசாகக் கட்டிக் கொண்டு இடையராகக் காட்சி தரும் ரிஷப தேவர், பல முத்திரைகளோடு கூடிய சுவாமி சிலைகள் ஆகியவை அங்கே மெழுகு வார்ப்பாக -களிமண்ணாக இருக்கும்; உளி நாதம் எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கும். அவர்கள் வீட்டில் விளையாடி இருக்கிறேன். ஒவ்வொரு சிலையையும் அவர்கள் தாள அமைப்பில்தான் செய்வார்கள். உதாரணமாக, குள்ளமான பிள்ளையார் சிலையை ஐந்து தாள அமைப்பிலும், உத்தம குணம் கொண்ட சுவாமிகளான ஈஸ்வரன், லக்ஷ்மி போன்ற சிலைகளை உத்தமதாளம் என்று சொல்லப்படுகிற தசதாளத்தில் (பத்து தாளம்) வடிப்பார்கள்.
என்னுடைய பள்ளி பருவத்திலேயே, புகழ்மிக்க காமராஜர் ஸ்தபதி, மூத்த கலைஞர்களான தேசிய விருது பெற்ற உலகப்புகழ் பெற்ற தேவசேனா ஸ்தபதி, மூர்த்தி ஸ்தபதி, ராமசாமி ஸ்தபதி, அண்ணாசாமி ஸ்தபதி போன்றவர்களுடன் பழகுகிற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
தேவசேனா ஸ்தபதி, மூர்த்தி ஸ்தபதி, ராமசாமி ஸ்தபதி, அண்ணாசாமி ஸ்தபதி... இவர்களின் சிற்ப வெளிப் பாடுகள் பற்றிய உங்கள் அபிப்ராயம் என்ன?
தேவசேனா ஸ்தபதியின் போக சக்தி அம்மன், ரிஷப தேவர், அன்னபட்சி வாகனம், விதம்விதமான நடராஜர்கள், கார்த்திகேயன் இவையெல்லாம் சாஸ்திர முறைப்படி அற்புதமாக இருக்கும். மூர்த்தி ஸ்தபதியின் அர்த்த நாரீஸ்வரர் சிற்ப வடிவம் அப்படி யொரு அற்புதம். அது இன்னும் என் மனதைவிட்டு அகலவில்லை. அண்ணாசாமி ஸ்தபதி, விக்கிரகங்களை அதிகம் செய்ய மாட்டார். அவர், சிற்ப சாஸ்திர விற்பன்னர். கிரந்த சாஸ்திர மேதை. எல்லாமே அளவு முறையில் அமைக்கப்படுகிற படிம முறையை அவரிடம் கற்றுக் கொள்வதற்காக வெளியூரிலிருந்து வருவார்கள். ராமசாமி ஸ்தபதி வலது கை, இடது கை, இரண்டிலும் உளி கொண்டு செதுக்கும் வல்லமை படைத்தவர்.
சுவாமிமலையில் உருவாகும் சிலைகள் எங்கெல்லாம் சென்றிருக்கின்றன?
சபரிமலையில் உள்ள ஐயப்பன் விக்கிரகம்கூட சுவாமி மலையில் உருவாக்கப்பட்டதுதான். இலங்கை, பாரிஸ், லண்டன் என பல நாடுகளுக்கும் சென்றிருக்கின்றன.
உங்கள் பால்ய காலத்து இசை, சிற்பம் சார்ந்த ரசனைதான் நீங்கள் நவீன கலை விமர்சகராக உருவாக காரணமாக அமைந்திருப்பதை உணர முடிகிறது. கலை ரசிகரான நீங்கள் விமர்சகரானது எப்படி?
நான் அடிப்படையில் ரசிக மனோபாவம் கொண்டவனாகவே இருந்தேன். முழுமையாக எதையும் தெரிந்து கொண்டுவிட்டோம் என்ற எண்ணமும் எனக்கு இல்லை. தொடர்ந்து தேடலில் இருந்தேன். கும்பகோணம் ஆடவர் கல்லூரியில் பி.எஸ்.ஸி. முடித்துவிட்டு வேலையின்றி இரண்டு ஆண்டுகள் இருந்த காலத்தில், நண்பர் ஓவியர் கங்காதரன் மூலமாக கும்பகோணத்தில் ஓவியக் கல்லூரி நூலகத்தில் உள்ள புத்தகங்களை வாசித்தேன். என்னுடைய கலைத் தேடலை நவீன கலைத் தேடலாக அவை மாற்றின. அப்போதுதான் ‘சர்ரியலிசம்’ என்கிற புத்தகத்தைப் பார்த்தேன்.

அப்போது தமிழில் சர்ரியலிசம் பற்றிய புத்தகத்தைப் பார்ப்பதே ஆச்சர்யமாக இருந்தது. கவிஞர் பாலா எழுதியது. அதைப் படித்துவிட்டு, புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் ஆங்கிலத் துறை பேராசிரியராக இருந்த அவரைச் சென்று சந்தித்தேன். அவரிடம் “சர்ரியலிச கவிஞர்கள் பற்றி சொல்லி இருக்கிறீர்கள். ஆனால், சர்ரியலிச ஓவியர்கள், சிற்பிகள் பற்றி சொல்லவில்லையே’’ என்று கேட்டேன். மேலும், சர்ரியலிச ஓவியர்களைப் பற்றி அவரிடம் சொன்னேன். அவர் “சர்ரியலிச ஓவியர்களை பற்றி நீங்களே எழுதலாமே’’ என்றார். அதுவரை எழுதணும் என்கிற எண்ணமே எனக்கு இருந்ததில்லை. பாலாவின் தூண்டுதலால்தான் எழுத முயற்சித்தேன்.
‘டாக்ஸிடெர்மிஸ்டுகள் தேவை’ என்றொரு கட்டுரை எழுதினேன். அப்போது எம்.வி.வெங்கட்ராம் தொடர்பு எனக்கு இருந்தது. அவரிடம் காட்டினேன். அவர் படித்துவிட்டு, “மௌனிக்கு வாய்த்த நடை உன்னையறியாமலே உனக்கு வாய்த்திருக்கிறது’’ என்று பாராட்டி விட்டு, ‘கணையாழி’க்கு அனுப்பச் சொன்னார். அப்போது கணை யாழியில் அசோகமித்திரன் பொறுப்பில் இருந்தார். அவர் அந்தக் கட்டுரையை வெளியிட்டார்.
எம்.வி.வெங்கட்ராமுடன் உங்களுக்கு ஏற்பட்ட தொடர்பு பற்றி...?
கும்பகோணம் கோபால்ராவ் நூலகத்துக்கு நான் படிக்கச் செல்வேன். அங்கே எம்.வி.வி. வருவார். வெற்றிலை சீவல் பெட்டியை கையில் எடுத்துக்கொண்டு அவர் கம்பீரமாக வருவதும், வெற்றிலை மென்றபடி படிப்பதும், பார்ப்பதற்கே ஆச்சர்யமாக இருக்கும். எனது நண்பர் கண்ணன், “அவர்தான் மணிக்கொடி எழுத்தாளர்
எம்.வி.வெங்கட்ராம்’’ என்று சொன்னார். அப்போது இலக்கியப் பரிட்சயம் ஏதும் எனக்குக் கிடையாது. எம்.வி.வி.யின் தொடர்பு ஏற்பட்ட பிறகுதான் அவர் மூலமாகத்தான் எனக்கு இலக்கிய வாசிப்பும், நவீன இலக்கியம் பற்றிய புரிதலும் கிடைத்தது. எம்.வி.வி. மிகச்சிறந்த படிப்பாளி. சங்க இலக்கியத்தில் கரை கண்டிருந்தார். வால்மீகி ராமாயணம், கம்பராமாயணம் இரண்டைப் பற்றியும் விரிவாகக் கூறுவார். வால்மீகி ராமாயணத்தில் மனித வாழ்வு எதார்த்தமாக எழுதப்பட்டுள்ளது; கம்பராமாயணத்தில் தெய்வீகத் தன்மை ஏற்றப்பட்டுள்ளது என்பார். அவர், உலக இலக்கியங்களை எல்லாம் கற்று அறிந்திருந்தார். அந்தத் தாக்கத்தில், தன்னுடைய படைப்புகளிலும் பல்வேறு சோதனை முயற்சிகளை செய்தார்.
அவரது படைப்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்கும்.
கரிச்சான் குஞ்சு அப்போதுதான் பணி ஓய்வு பெற்று மன்னார்குடியிலிருந்து கும்பகோணத்துக்கு வந்திருந்தார். நானும்
ரவிசுப்பிரமணியமும் அவர்கள் இருவர் வீட்டுக்கும் அடிக்கடி சென்று சந்தித்துப் பேசுவோம். அல்லது அவர் களை பூங்காவுக்கு அழைத்து வந்து பேசச் சொல்லி கேட்போம். ந.பிச்சமூர்த்தி, கு.ப.ரா., தி.ஜானகிராமன், க.நா.சு., போன்றவர்களை பற்றியெல்லாம் அவர்கள் மூலமாகத்தான் அறிந்தேன். என்னை இலக்கிய உலகுக்குப் பரவலாக அறிமுகப்படுத்தியவர் தஞ்சை ப்ரகாஷ்.
‘வண்ணங்கள் வடிவங்கள்’ எனும் உங்களின் முதல் புத்தகம், தமிழின் முதல் நவீன கலை விமர்சனப் புத்தகமாக அறியப்பட்டது. அந்தப் புத்தகத்துக்கு தமிழ்நாடு அரசின் முதல் பரிசும் கிடைத்தது. அது வாசகர்களிடம் எத்தகைய வரவேற்பைப் பெற்றது?
அந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டு க.நா.சு. ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையில் ‘An Oasis in Tamil desert’ (தமிழ்ப் பாலையில் ஒரு பசுஞ்சுனை) என்று எழுதி யிருந்தார். க.நா.சு. பாராட்டியது பெரிய விசயமாக அப்போது பேசப்பட்டது. “க.நா.சு. அவ்வளவு எளிதாக யாரையும் பாராட்டமாட்டார்’’ என்று அசோகமித்திரன் சொன்னார். க.நா.சு. பாராட்டிவிட்டார் என்பதற்காக சில புத்தகங்கள் விற்றன. அவ்வளவுதான். நூலகத்திலும் எடுத்துக் கொள்ளவில்லை. அந்தப் புத்தகத்தை வெளியிட்ட ‘மணிவாசகர் பதிப்பகம்’ மெய்யப்பனுக்கு 30,000 ரூபாய் அப்போது நஷ்டம். “நானூறு புத்தகங்களை வெளியிட்டிருக்கிறேன். இவ்வளவு நஷ்டம் எந்த புத்த கத்துக்கும் வந்ததில்லை. இருந்தாலும், நல்ல புத்தகத்தை வெளியிட்ட திருப்தி இருக்கிறது’’ என்றார் அவர். தில்லி புத்தகக் கண்காட்சிக்கு வந்திருந்த அமைச்சர் ப.சிதம்பரம், ‘வண்ணங்கள் வடிவங்கள்’ புத்தகத்தை நான் வாங்கி வைத்திருக்கிறேன்’’ என்று சொன்னாராம். இதிலே பதிப்பாளருக்கு ஒரு மகிழ்ச்சி.
உலகின் மிகமுக்கியமான ஓவியர்களான ‘மைக்லேஞ்சலோ’, ‘லியனார்டோ டாவின்சி’ -இருவரைப் பற்றிய பன்முக ஆளுமையை வெளிப்படுத்தும் சிறு நூல்களை தமிழில் முதல் முதலாக 90களின் தொடக்கத்தில் தந்தீர்கள். ‘சவுத் ஏஷியன் புக்ஸ்’ நிறுவனம் அந்நூல்களை மிக நேர்த்தியாக பல வண்ணங்களில் வெளியிட்டது. அவ்விரு ஓவியர் களைத் தொடர்ந்து ‘வான்கா’வின் வாழ்க்கை வரலாற்று நூலை ‘சவுத் விஷன்’ மூலமாக பல படங்களுடன் கலா பூர்வமாக வெளியிட்டீர்கள். அந்த மூன்று நூல்களும் தமிழ் வாசகர்களுக்கு புதிய திறப்பு களாக அமைந்தன. இம்மூன்று கலைஞர்களைப் பற்றி எழுத வேண்டும் என்கிற தூண்டுதல் எப்படி கிடைத்தது...?
‘வண்ணங்கள் வடிவங்கள்’ கொடுத்த உந்துதல்தான் காரணம். சிற்பக் கலை, ஓவியக் கலை, கட்டடக் கலை என்றாலே ரோமானிய கலை இலக்கிய ஆளுமையைச் சொல்லாமல் இருக்க முடியாது.

இதில் டாவின்சியின் பன்முக கலை ஆளுமை என்னை ரொம்ப பாதித்தது. அவர் அறுபத்தி நாலுக்கும் மேற்பட்ட துறைகளில் கலை மேதையாக இருந்திருக்கிறார்.

மைக்கலேஞ்சலோ சிற்பி, ஓவியர், கட்டடக் கலை நிபுணர், கவிஞர் என பன்முக ஆளுமை கொண்டவர். பறக்கும் பறவையின் வேகத்தை, பார்த்தே சொல்லி விடக்கூடிய பறவையியல் நிபுணராகவும் விஞ்ஞானியாகவும் இருந்திருக்கிறார். அதனால் தான் அந்த இருவரையும் பற்றி முதலில் எழுதினேன்.
வான்கா, வாழும் காலத்தில் சரியாக அறியப்பட வில்லை. தன் வர்ண ஜாலங்களால் ஓவிய உலகத்தையே சிருஷ்டித்தவர் அவர். ‘வான்கா இன்டஸ்ட்ரி’ இப்போது உலகையே குலுக்கிக் கொண்டிருக்கிறது. ஆனால், அவர் வறுமையிலேயே வாழ்ந்து மறைந்தார். சூரிய
மஞ்சளில்தான் எல்லா நிறங்களும் ஜனிப்பதாக அவர் கருதினார். அதனால், அவரது ஸ்ட்ரோக்குகளை நேரடியாக இல்லாமல் ஆங்கிளோ ஸ்ட்ரோக்காக கொண்டு வந்தார். இந்த ஸ்ட்ரோக் மனித உணர்வுகளை மேலே கொண்டு வரும்.
ஏழை மக்கள் பற்றிய கவலை அவருக்கு இருந்துகொண்டே இருந்தது. உருளைக்கிழங்கு உண்போர், சுரங்கத் தொழிலாளரின் ஷூ, விவசாயி பற்றிய ஓவியங்கள், விதை தெளிப்போர் ஓவியம் இவை எல்லாம் மக்கள் மீது அவர் கொண்ட அக்கறையையே காட்டின. தான் வறுமையில் வாடினாலும், வறுமையில் வாடும் மக்களை நோக்கியே அவரது மனம் தேடிப்போனது. வான்காவைப் பற்றி நான் எழுதியபோது என் எழுத்து முறை மாறிப் போனது. கடுமையான எழுத்து நடையைத் தவிர்த்து எளிய மக்களுக்கான நடையில் குழந்தைகளுக்கும் புரியும் வகையில், ஆல்பர்ட் காம்யுவின் ‘பாஸ்ட் இன்டெபனன்ட்’ வடிவில் பரிட்சார்த்த மாக அதை எழுதினேன். எளிமையாகச் சொல்வது எவ்வளவு கஷ்ட மானது என்பதை அப்போதுதான் உணர்ந்தேன்.
வெளிநாட்டு கலை மேதைகளின் பன்முகத் தன்மையைப் பற்றிச் சொன்னீர்கள். அது அவர்களுக்கு எப்படி சாத்தியப் பட்டது?
பொதுவாக, கலை, இலக்கிய, இயக்க, இசங்களுக்குப் பாரீஸ் பேர் பெற்றது. ஃபாவிசம், கியூபிசம், கன்ஸ்ட்ரக்டிவிசம், நியோ பிளாஸ்டிசிசம், எக்ஸ்பிரஸனிசம், சிம்பலிசம் போன்ற பல இசங் களுக்கு மையப் பகுதியாக அது இருந்தது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு தத்துவத் தேடலை உருவாக்கிய இசங்கள். இதனுடைய பாதிப்பு இலக்கியத்திலும் தொனித்தது. கலைஞர்களும் இலக்கிய வாதிகளும் அடிக்கடி சந்தித்துக் கொண்டார்கள். கலையின் பாதிப்பு இலக்கியத்திலும், இலக்கியத்தின் பாதிப்பு கலையிலும் நிகழ்ந்தன. அதுவே, பல இஸங்கள் உருவாக காரணமாக அமைந்தன.

பிகாசோவின் ஓவியங்களைப் பார்த்து அருவருத்த பிராக் எனும் புகழ்பெற்ற ஓவியர், பின்நாட்களில் பிக்காசோவை ‘கியூபிசத்தின் தந்தை’ என்று அழைத்தார். சிக்மன் பிராய்ட் என்னும் உளவியல் அறிஞனால் உருவாக்கப்பட்ட பாலுணர்வு மற்றும் மரணபீதி பற்றிய உணர்வுகள் சர்ரியலிசத்துக்குப் பின்புலமாக அமைந்தன. சல்வெடார் டாலி போன்ற ஓவியர்கள் புகழ் பெற்ற சர்ரியலிச ஓவியர்களாக இருந்தனர். அந்த்ரோ பெர்த் தோன் சர்ரியலிச கவிஞர் ஆனார். சிம்பலிசத்தில் மல்லார்மே, விம்போ போன்ற ஓவியர்கள் போலவே பால்வெலரி போன்ற சர்ரியலிச கவிஞர்களும் தோன்றினர்.

காஃப்கா எழுத்து நடைகூட எக்ஸ்பிரசனிச ஓவிய வகையைச் சார்ந்தது. இப்படி கலைஞர்களும் இலக்கிய வாதிகளும் அங்கே கூட்டாக செயல்படுகிறார்கள். இப்படி கலையும் இலக்கியமும் கூட்டாக செயல்படும் நாட்டில்தான் மேதைகள் உருவாகுவார்கள். நம் நாட்டில் கலைஞர்களும் இலக்கியவாதிகளும் தனித் தனியாக ஒருவருக்கு ஒருவர் சம்பந்தமில்லாமல் இயங்கி வருகிற சூழல்தானே இருக்கிறது.
ஒரு கலைஞனுக்குப் பல்வேறு தளங்களில் பரிட்சயம் இருக்க வேண்டும். நாட்டு மக்கள்மீது அக்கறை, தன்னைச் சுற்றி நடக்கும் விசயங்கள், விஞ்ஞானம், பௌதிகம், உலகவியல், வளர்ந்து வரும் தொழில் நுட்பம் இவை சார்ந்த விசயங்கள் அந்தக் கலைஞனின் படைப்பின் உள்ளடக்கமாக வைக்கப்பட வேண்டும். இதற்குக் கூட்டுமுயற்சி வேண்டும்.
வெளிநாட்டு ஓவியர்களைப் பற்றியே எழுதிக் கொண்டி ருக்கிறீர்கள். நம் நாட்டில் வித்யாஷங்கர் ஸ்தபதியைத் தவிர வேறு யாரைப் பற்றியும் நீங்கள் முழுநூலாக எழுத வில்லையே...?
இந்திய ஓவியர்களின் படைப்புகளை எல்லாம் நான் நேரடியாக பார்த்திருக்கிறேன். கஜிலியோ, சிவ்சிங், சத்தீஸ் குஜ்ரல், ஜெ.சுவாமி நாதன், சாந்தி தவே, பெரண்டோ, தையப் மேத்தா, லக்ஷ்மண கௌடு, சூரா, ஆரா, எம்.எஃப்.உசைன், ஜெமினிராய், செர்கிள் போன்ற இந்திய ஓவியர்கள் நம் இந்தியத் தன்மையை அழகாக வெளிப்படுத்தியுள்ள விதம் ஆச்சர்யப்பட வைக்கிறது.
தமிழ்நாட்டில், கே.சி.எஸ்.பணிக்கர் தமிழ்நாட்டின் நவீன ஓவிய முன்னோடி என்று சொல்லலாம். இவர்களை பற்றியெல்லாம் புத்தகம் எழுதலாம். ஓவியப் புத்தகத் தயாரிப்பு செலவும், அதற்காக ஏற்படும் நஷ்டமும்தான் தயக்கத்தைத் தருகிறது
இந்திய ஓவியர்களின் இந்தியத்தன்மையைப் பற்றி குறிப் பிட்டீர்கள். கலை விமர்சகர் இந்திரன் ‘தமிழ் அழகியல்’ என்றொரு கோட்பாட்டை முன் வைத்திருக்கிறாரே...?
இந்திரன் அப்படி ஒன்றை வைத்துக்கொள்வது தேவைதான். இன்றைய உலகமயமாக்கல் சூழலில் தமிழ் இன மரபுகள் அழிந்து, அவை அருங்காட்சியகங்களில் பார்வைக்கு வந்துவிடும் அபாயம் இருக்கிறது. சங்க இலக்கியத்திலிருந்து இன்றுவரை கலை இலக்கியம் சார்ந்த கீழ்தட்டு மக்களின் அழகியல் சார்ந்த விசயங்
களை எல்லாம் மீட்டெடுக்க வேண்டும்
சேக்கிழார் பாடிய பெரிய புராணத்தில் பறை பற்றி பேசப்பட்டிருக்கிறது. ஆனால், பறை அடிக்கும் மக்கள் பற்றி இன்னும் பெரிய அளவில் பேசப்படவில்லை. அடித்தளத்தில் காணாமல் போன மக்களைப் பற்றிய கலைப் பண்பாட்டுக் கூறுகளை எல்லாம் வெளிக் கொண்டு வரவேண்டும்.
இளம் ஓவியர்களை, சிற்பிகளை வளர்த்தெடுப்பதில் நமது ஓவியக் கல்லூரிகளின் பங்களிப்பு எந்த விதத்தில் உள்ளது?
நம் தமிழ்நாட்டில்தான் இரண்டு ஓவியக் கல்லூரிகள் (கும்பகோணத்திலும், சென்னையிலும்) இருக்கின்றன. இரண்டு கல்லூரிகளுமே நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட பாரம்பரிய பெருமை கொண்டவை. மாணவர்களிடம் உள்ள தீவிர சிந்தனையை பயன் படுத்தி அவர்களை உருவாக்கலாம். அவர்களின் கிரியேடிவ் ஏரியாவை வளர்த்தெடுக்கலாம். அதற்கான Reasearch & Development கொண்டு வரலாம். மாணவர்கள், படித்துவிட்டு என்ன செய்வது என்று தவிக்கும் சூழல் மாறவேண்டும். இதில், அரசு கவனம் செலுத்த வேண்டும்.
கே.சி.எஸ்.பணிக்கர் போல கலை ஞராகவும் நிர்வாக ஆளுமை மிக்கவராகவும் இருக்கக்கூடியவர்கள் கல்லூரி முதல்வராக வேண்டும். பணிக்கருக்குப் பின் வந்தவர்கள் கலைஞர்களாக இருந்தார்களே தவிர, ஆளுமை மிக்கவர்களாக இல்லை என்பது பெருங்குறை.
உங்கள் வீடு, நீங்கள் அமர்ந்திருக்கும் நாற்காலி இவை யெல்லாம் வளைவுகளற்று சதுர, செவ்வக வடிவில் கலைத் தன்மையோடு உருவாக்கப்பட்டிருக்கின்றன. இதைப் பற்றி சொல்லுங்கள்...

ரீத் வெல்த் என்ற டச்சு நாட்டுக் கட்டடக் கலை நிபுணர் உருவாக்கிய நாற்காலி இது. ஒரு செவ்வக மரப்பலகையை 17 பாகங்களாக வெட்டி ஒன்றன் மீது ஒன்று அடுக்கி உருவாக்கப்பட்டது. தோற்றத்தில் ரொம்ப எளிமையாகவும், நீலம், மஞ்சள், சிவப்பு, கறுப்பு போன்ற
வண்ணங்களாலும் ஆக்கப்பட்டது. அதே போன்ற நாற்காலியை நான் உருவாக்கி இருக்கிறேன். ஊத்ரெக்த் நகரத்தில் ரீத்வெல்த் கட்டிய வீடு உலகப் புகழ் பெற்றதாக உள்ளது. செவ்வக, சதுர வடிவங்களில் நேர் கோடாகவும், கிடைக்கோடாக வும் உருவாக்கிய வீடு. வளைவு, நெளிவு, குவி, குழி எதுவும் கிடையாது. இவ்வடிவத் தினால் செலவும் குறையும். நியோ பிளாஸ்டிசிச கட்டடக் கலை நிபுணர் அவர். “சிற்பம், ஓவியம், இசை போன்ற பல்வேறு கலை களில் உன்னதமானது கட்டடக் கலைதான்’’ என்று நியோ பிளாஸ்டிசிச கோட்பாட்டாளர்கள் சொல்கிறார்கள். நியோ பிளாஸ்டிசிச முறையில் இந்தியத் தன்மை யும் கலந்து நான் எனது வீட்டைக் கட்டி இருக்கிறேன்.
இப்போது என்ன எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்?
நெதர்லாந்து ஓவியரான பியத் மோந்திரியான் பற்றிய ஒரு புத்தகத்தை எழுதி அதை வெளியிடும் முயற்சியில் இருக்கிறேன். கலையை தனிமனித முயற்சி என்று குறுக்கிவிடாமல், ஒரு கூட்டு முயற்சியாக கலை பரிணமிக்க வேண்டும். அது சிக்கனமாகவும் இருக்க வேண்டும் என்பது பியத்மோந்திரியான் விருப்பம்.

மேலும், கலை விமர்சகர் என்ற நிலையைக் கடக்க வேண்டியுள்ளது. தத்துவங்களின் மீது இப்போது ஈர்ப்பு ஏற்பட்டிருக்கிறது. தத்துவம் சம்பந்தமான நூல்களை படித்துக் கொண்டிருக்கிறேன்.
பொதுவாகவே, ரசனையிலும், அபிப்ராயங்களிலும் எப்போதும் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. “கவிஞர்களை நாட்டை விட்டே வெளியேற்ற வேண்டும்’’ என்றார் பிளேட்டோ. “இலக்கியப் பிரதிகளை நம்பி ஏமாந்து விடாதீர்கள்’’ என்கிறார் டெரிடா.
இருந்தாலும், நம்ப வேண்டியிருக்கிறது. அதை நம்பித் தான் இன்டஸ்ட்ரி இருக்கிறது. திருக்குறளுக்கு பல்வேறு உரைகள், அபிப்ராயங்கள் இருக்கின்றன. திருக்குறளில் முக்கால் பகுதி தேறாது என்று சொன்ன க.நா.சு., பிறகு முக்கால் பகுதி தேரும் என்று சொன்னார். காரணம், அவரது ரசனை மாற்றம்தான். எனக்குத் திருக்குறளில் மிகவும் பிடித்தது காமத்துப் பால். அது, சங்க இலக்கியங்களுக்கு நிகரானது. முன்பு சினிமாவைப் பார்த்ததற்கும் இப்போது சினிமாவைப் பார்ப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.
பாசமலர் காலத்து ஆட்கள் கதையோடு ஒன்றிப் போய் கண்ணீரோடு வெளியே வந்தார்கள். ஆனால், இப்போது கதை மட்டுமல்லாமல், தொழில்நுட்ப விசயங்களையும் உள் வாங்கிக் கொண்டு ரசிக்கிற மனநிலை உருவாகி இருக்கிறது. அந்த மாற்றங்களை படைப்பாளிகள் உள்வாங்கிக் கொண்டு தங்கள் படைப்புகளை உருவாக்கவேண்டும் என்பதுதான் என் விருப்பம்.
கருத்துகள்
கருத்துரையிடுக