விருதுகளால் அடையாளம் காணப்படாத வாழ்க்கை : கவிஞர் இன்குலாப் நேர்காணல்


இன்குலாப் என்னும் பொதுவுடைமைக் ...


சந்திப்பு : சூரியசந்திரன்


நியாயச் சூட்டால் சிவந்த கண்கள்
உரிமைக் கேட்டுத் துடிக்கும் உதடுகள்
கொடுமைகளுக்கு எதிராக உயரும் கைகள்
எனது பேனாவை இயக்கும் சக்திகள்’’

எனும் பிரகடனத்துடன் இயங்கிக் கொண்டிருப்பவர் கவிஞர் இன்குலாப்.

கவிதை மட்டுமல்லாது சிறுகதை, நாவல், கட்டுரைகள், நாடகம் என பல்வேறு வடிவங்களிலும் தனது புரட்சிகரக் கருத்துகளை விதைத்துக் கொண்டிருப்பவர். இவரது கவிதைகள் ‘இன்குலாப் கவிதைகள்’ எனும் நூலாக வெளிவந்துள்ளன. ‘ஆனால்’ இவரது கட்டுரைத் தொகுதி.  சிறுகதைகளும் நாவலுமாக ‘பாலையில் ஒரு சுனை’ தொகுதி. ‘ஔவை’, ‘குறிஞ்சிப்பாட்டு’ , ‘குரல்கள்’ ஆகியவை நாடக நூல்கள்.

இயற்பெயர் சாகுல் அமீது. இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் பிறந்தவர். சென்னை,  புதுக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கிறார். தனது எழுத்துகளுக்காக பலமுறை காவல் துறையின் விசாரிப்புகளுக்கு ஆளான இவரது படைப்புகளின் பொதுத்தன்மை எதிர்க் குரலாகவே இருக்கிறது.

விருதுகளிடமிருந்து விலகியே இருந்த இவர், முதன் முறையாக கவிஞர் வைரமுத்துவின் ‘வெற்றித் தமிழர் பேரவை’ விருதை சமீபத்தில் பெற்றிருக்கிறார்.

சென்னை, ஊரப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தேன்...

“என் முதற்கவிதை எதிர்ப்பின் கு ரலாக இருந்தது’’ என்று உங்கள் கவிதைத் தொகுதியின் முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறீர்கள். எந்த விதமான எதிப்ப்பின் குரல்...

ஒடுக்கப்பட்ட எங்கள் குடும்பச் சூழலில் சமூக ஒடுக்குமுறைக்கு அடங்கிப் போனவர்களும் உண்டு; எதிர்த்து நின்றவர்களும் உண்டு. எதிர்த்து நின்ற மரபிலே என் தந்தை முக்கியமானவர். அவர் சித்தர் மரபில் வந்தவர். சித்த வைத்தியர். அம்மாவின் தாலாட்டில், பாடல்களில், பழமொழிகளில் எதிர்ப்புக் குரல் இருக்கும். இப்படி எதிர்மரபு என்பது என்னிடம் சிறு வயதிலிருந்தே வளர்ந்து வந்திருக்கிறது.

தர்க்காவில் “பேய் ஓட்டுகிறேன்’’ என்று பெண்களைக் குச்சியால் அடிப்பார்கள். இதை எதிர்த்துத்தான் நான் என் முதல் கவிதையை எழுதினேன். அப்போது நான் ஐந்தாம் வகுப்போ, ஆறாம் வகுப்போ படித்துக் கொண்டிருந்தேன். 12 வயதுக்குள் இருக்கும். அந்தக் கவிதையை என் வீட்டிலே அரங்கேற்றினேன்.

மதுரை தியாகராயர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் நான், பா.செயப்பிரகாசம், நா.காமராசன், மு.மேத்தா, காளிமுத்து எல்லோரும் ஒரே கல்லூரித் தோழர்கள்.
நான் அப்போது தி.மு.க. அனுதாபி. 1965களில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்களில் நானும் ஒருவன்.
எந்தச் சூழலிலும் போராட்டத்தை முன்னின்று நடத்தியிருக்கிறேனே தவிர, அதை விட்டு ஒதுங்கி நிற்கிற மனப்பாங்கு எனக்கு இருந்ததில்லை. இதற்குக் காரணம் எனக்குள் இருந்த எதிர்ப்புக் குணம்தான்.

கல்லூரி காலத்தில் நான் எழுதிய ‘வெயில்’, ‘மலர்கள்’ எனும் இரண்டு கவிதைகள் கல்லூரி மலரில் வெளிவந்து, பேராசிரியர்களாலேயே பாராட்டப் பெற்றன. அச்சில் வெளிவந்த என் முதல் கவிதைகள் அவை.

தி.மு.க. அனுதாபியாக இருந்த அந்தக் காலத்திலும் கூட ‘வெயில்’ எனும் கவிதையை,

“மண்ணின் குழந்தைகளாய் இங்கு
வாழும் உயிர்களுக்கு
விண்ணின் ஒளிமுலையில் இருந்து
வீழும் வெயில்பாலே’’

என்று தொடங்கி,

“சுரண்டிக் கொழுப்பவர்கள் - உன்
சூட்டில் பொசுங்கவில்லை
சுரண்டப்படுபவர்தாம் உன்
சூட்டில் பொசுங்குகிறார்
ஆகையினால் வெயிலே ஏழை
ஆவி பிரிந்த உடல்
வேகையில் மட்டும் சுடு - அவரை
வீணில் பொசுக்காதே’’

என்று முடித்திருப்பேன். அந்தக் கவிதையில் ஒரு வர்க்கப் பார்வை இருக்கிறது.

சாதியத்திற்கும் அதிகாரத்திற்கும் எதிரான குரல் எப்போதும் இயல்பாக எனக்குள் இருந்திருக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சி இந்த எதிர்ப்புணர்வை கூர்மைப்படுத்தியது.

கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர்பு எப்படி ஏற்பட்டது?

சென்னைக்கு வந்த பிறகு ‘மக்கள் எழுத்தாளர் சங்க’த் தொடர்பின் மூலமாகத்தான் மார்க்சிஸ்ட் கட்சி தோழர்களின் நட்பு கிடைத்தது. வெண்மணி சம்பவம் நடந்த காலகட்டம் அது. அந்தப் பாதிப்பு எனக்குள் இருந்தது.

அப்போது 70களில் இளவேனில் ‘கார்க்கி’ இதழை நடத்தி வந்தார். அதில் நான் தொடர்ச்சியாகக் கவிதைகள் எழுதினேன்.
‘கண்மணி ராஜம்’, ‘நீங்கள் என்னை கம்யூனிஸ்ட் ஆக்கினீர்கள்’, ‘வயல்வெளிகளின் கதாநாயகர்கள்’ போன்ற பல முக்கியமான கவிதைகள் ‘கார்க்கி’யில் வெளிவந்தவைதான்.

‘கண்மணி ராஜம்’ பற்றி குறிப்பிட்டீர்கள். ஒரு வீதியோரச் சிறுமி மழையில் சிக்கி உயிர்விட்டதை அடிப்படையாகக் கொண்டது அந்தக் கவிதை. அந்தக் கவிதையில், “மசூதியில் இருந்து வரும் பாங்கோசை கேட்டு நாய் ஊளையிட்டது எதிரொலியாக “அல்லா பெரியவன், அல்லா பெரியவன்’’ என்று எழுதியிருந்தீர்கள். ஆனால், சமீபத் தில் வெளிவந்துள்ள உங்களின் கவிதைத் தொகுதி யில், அந்த வரிகளை நீக்கி இருக்கிறீர்கள். ஏன் என்று தெரிந்து கொள்ளலாமா? 

தொழுகை என்பது துயருறும் மானுடத்தை மறந்து செய்யப்படக் கூடாது என்ற நோக்கிலேயே அப்படி எழுதினேன். அந்தச் செய்தி இசுலாமியர்களால் சரியாக புரிந்து கொள்ளப்படவே இல்லை. அது ‘பாங்கோசைக்கு எதிராக நாய் ஊளையிட்டது’ என்று மலினமாகப் புரிந்துகொள்ளப் பட்டது. அதனால் சில வருத்தங்களும் ஏற்பட்டன. அதைத் தவிர்ப்பதற்காக அந்த வரிகளை நீக்கினேன். அந்தக் கவிதை, பல்வேறு தளங்களில் எதிர்ப்புகளை சம்பாதித்திருக்கிறது.
வேறு ஒரு காரணத்திற்காக அதே கவிதையை சட்டசபையில் தி.மு.க., அ.தி.மு.க. இரண்டு கட்சிகளும் ஒருமித்தக் குரலில் எதிர்த்தன.

‘நீங்கள் என்னை கம்யூனிஸ்ட் ஆக்கினீர்கள்’, ‘பிரமீடுகளிலிருந்து அடிமைகள் விடுதலைப் பிரகடனம் செய்கிறார்கள்’ போன்ற புரட்சிகரமான கவிதைகளை எழுத நேர்ந்த சூழல்...?

சிம்சன் தொழிலாளர் போராட்டத்தின்போது வி.பி.சிந்தன், குசேலர், சுந்தரம் போன்றவர்கள் காவல் துறையின் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாயினர். அந்தத் தாக்கத்தில் எழுதப்பட்ட கவிதை அது. தொழிலாளர் மத்தியில் பரவலாகச் சென்று சேர்ந்தது.
என் கவிதைகள் தொழிலாளர்கள் மத்தியில் சென்று சேரவில்லை என்று பெங்களூரில் இருந்து கொண்டு பேசும் தமிழவன் போன்றவர்களுக்கு இந்த விசயம் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.
‘பிரமீடுகளிலிருந்து...’ கவிதையானது, நபிகள் நாயகத்தின் வரலாற்றிலே ஒரு சம்பவம் உள்ளது. பிணங்களில் உள்ள துணிகளை எடுத்து அடக்கம் செய்யும் ஒருவன், ஓர் இளம் பெண்ணின் சடலத்தோடு உடலுறவு கொண்டுவிடுகிறான். பின்னர், அவன் மனந்திருந்தி நபிகள் நாயகத்திடம் மன்னிப்புக் கோருகிறான். ஆனால், அவர் அவனுக்கு மன்னிப்புத் தர மறுக்கிறார். ஆனால், இறைவன் அவனை மன்னித்தார். இந்தச் சம்பவத்தை இளவேனிலிடம் கூறினேன். அவர் இதை அடிப்படையாக வைத்து எழுதிய என் தொடக்க கால கவிதை ஒன்றை பிரமீடுகளோடு பொருத்திப் பார்க்கலாம் என்று யோசனை கூறினார். பிரமீடுகளுக்குள் தனது காதலியைப் பார்ப்பதற்காகவும், அவன் எழுந்து இவனுக்கு விடுதலை உணர்வு ஊட்டுவதாகவும் எழுதியிருந்தேன்.

மிகநீளமான அந்தக் கவிதையை பலர் வாசிக்க முடியவில்லை என்றார்கள்.

‘விடியல்’ இதழில் ஒரு விமர்சகர் “அந்தக் கவிதையை வாசிக்க பொறுமை இல்லை. ஆகவே, வீசியெறியப்பட வேண்டிய கவிதை அது’’ என்று எழுதினார். “கவிதையை வாசிக்க பொறுமை தேவை’’ என்று நான் பதில் சொன்னேன்.

கீழவெண்மணி கிராமத்தில் 44 விவசாயிகளை உயிரோடு கொழுத்தியக் கொடூரத்தை, உங்களின் பல கவிதைகளில் பதிவு செய்திருக்கிறீர்கள். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அந்தச் சம்பவம் பற்றி எழுதியிருக்கிறீர்கள். ‘வெண்மணி’ என்றொரு தனி கவிதையையும் எழுதியிருக் கிறீர்கள். அந்தத் தனிக் கவிதை எந்த இதழில் வெளிவந்தது?

பாரதி விஜயனின் ‘பாசறை’ இதழில் வெளி வந்தது. அது இசையமைக்கப்பட்டு, பல மேடைகளில் பாடப்பட்டது. (பாடுகிறார்).

உங்கள் கவிதைகளின் அழகியல், பிரச்சாரத் தன்மை குறித்த உங்கள் அபிப்ராயம் என்ன?

முன்பொரு முறை சொல்லியதைப் போல, என் கவிதை என்பது ‘போராட்ட அழகியல்’ சார்ந்தது. அதைக் காண்பதற்குப் போராட்ட உணர்வு வேண்டும்.

உங்கள் பாடல்களில் பரவலாக மக்களைச் சென்று அடைந்துள்ளது ‘மனுசங்கடா...’ அந்தப் பாடலை எழுதிய அனுபவம்...?

அரியலூர் அருகில் குளப்பாடி மிராசுதாரரின் கிணற்றில் குளிக்கப் போன மூன்று தலித் சிறுவர்களை மின்சாரம் பாய்ச்சிக் கொன்றதை மையமாகக் கொண்டு அந்தப் பாடலை எழுதினேன்.
அப்போது வெளிவந்த ஒரு பத்திரிகையின் ஆசிரியர், என்னிடம் ஒரு கவிதை வேண்டுமென்று கேட்டார். அவருக்கு ‘மனுசங்கடா’ பாடலைத்தான் முதலில் எழுதிக் கொடுத்தேன். அவர் பிரசுரிக்க இயலாது என்று செ-0£ல்லிவிட்டார். அத0ற்குப் பிறகு ‘அந்தப் பம்ப் செட்டை ரிப்பேர் செய்து விட்டார்கள்’ என்ற கவிதையை எழுதிக் கொடுத்தேன். அதை வெளியிட்டார்கள்.

‘மனுசங்கடா’ பாடல் என்னிடம் இருந்தது. முதன் முதலாக, வடசென்னையில் நடந்த கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்தில் வாசித்தேன். அதைக் கேட்டுக் கொண்டிருந்த தோழர் பாலசுந்தரம் பாராட்டினார்.

அப்போது ‘இந்திய மக்கள் முன்னணி’ மாநாட்டில் ஓர் ஒலிப்பேழை வெளியிட்டார்கள். அதில், தோழர் சொக்கர் இசையமைத்து இசைப் பாடலாக  வந்தது. ஆனால், அந்தப் பாடல் ரொம்ப சோகமாக இருந்தது.

Ananda Vikatan - 27 January 2016 - காற்றில் கலந்த ...

அதற்கு ஒரு வீரார்ந்த இசை வடிவம் கொடுத்தவர் தோழர் கே.ஏ.குணசேகரன்.

பெரியார், அம்பேத்கர், பாரதி, பாரதிதாசன், பட்டுக்கோட்டை தொடங்கி, மார்க்ஸ், நெருடா, மண்டேலா என பலரைப் பற்றியும் கவிதை புனைந்திருக்கிறீர்கள். ஆனால் திருவள்ளுவரைத் தவிர்த் திருக்கிறீர்கள். ‘அதிர்வேன்’ என்கிற கவிதையில் ‘இதிகாசம், புராணம், கதை, திருக்குறள், சிலை, கலை, எல்லாச் சிறைகளிலிருந்தும் என்னை ஈரோட்டு ராமசாமி கைத்தடி மீட்டது’ என்று திருக்குறளை விமர்சித்திருக்கிறீர்கள். திருக்குறள் பற்றிய உங்கள் மதிப்பீடு என்ன?

ஒரு சமூகம் விடுதலையை நோக்கி செல்லக் கூடியது என்பதற்கு அடையாளம், அது பெண்களைப் பற்றி எத்தகைய மதிப்பீடுகளைக் கொண்டிருக்கிறது என்பதுதான்.

முதல் அடிமைத்தனம் என்பது பெண் அடிமைத் தனமாகத்தான் இருந்தது. அந்த அடிமைத்தனத்தை மறுக்கிறதா? ஏற்கிறதா? நியாயப்படுத்துகிறதா? என்பதைத்தான் எதிலும் நான் முதலில் கவனிக்கிறேன். மதங்கள் பெண் அடிமைத்தனத்தை ஏற்கின்றன. அதனால், மதத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதுபோலத்தான் திருக்குறளும் இருக்கிறது. நான் திருக்குறளை ஏற்றுக்கொள்வதாக இருந்தால், மதங்களையும் ஏற்றுக்கொண்டாக வேண்டும். திருவள்ளுவர் அவர் காலத்துப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தாரா என்பதுதான் கேள்வி. அக்காலச் சமூக கட்டமைப்பில் பெண்கள் குறித்த பார்வையை ஏற்றுக் கொண்டிருக்கிறார். அந்த காலச் சூழலை கவனத்தில் எடுத்துக் கொள்ளவேண்டும் என்று நாம் சொல்வதெல்லாம் சமாதானங்களே. எதிர் காலத்தைப் பற்றி யோசித்த அவர், தன் காலத்தைப் பற்றி யோசிக்காதது அவரது பலமா? பலகீனமா? நீங்களே சொல்லுங்கள்.

என்றாலும், திருவள்ளுவர் ஒரு மாபெரும் சிந்தனையாளர் என்று எப்போதுமே கருதி வருகிறேன். நான் நிகழ்காலத்தைப் பற்றி எழுதியதால் வள்ளுவர் விடுபட்டுப் போயிருக்கலாம்.

சில ஆண்டுகளுக்கு முன் நள்ளிரவில் நீங்கள் கைது செய்யப்பட்டீர்கள். அது பற்றி ‘உங்கள் விசிட்டர்’ இதழில் ‘நள்ளிரவு அழைப்பு’ என்றொரு கவிதை எழுதினீர்கள்...

விசாரணை என்பது எனக்கு எப்போதும் உண்டு. இப்போது குறைந்திருக்கிறது. இப்போதும்கூட என் மீது ஓர் அவதூறு வழக்கு இருக்கிறது. நான் கூட்டத்தில் யாரையோ விமர்சித்துப் பேசியதாக வழக்குத் தொடர்ந்திருக்கிறார்கள். யாரை விமர்சித்தேன் என்று கூறவில்லை. ஒரு கூட்டத்தில் ஜார்ஜ் புஷ்ஷை விமர்சித்துப் பேசினேன். அவரை விமர்சித்தது நம் அரசுக்கு பொறுக்கவில்லையோ என்னவோ, தெரியவில்லை.

அந்த ‘நள்ளிரவு அழைப்பு’ கவிதையில் ‘அவ்வப் பொழுது விசாரணைக்காக இந்த அரசாங்கம் என்னை அழைப்பதே எனக்கான பரிசுகள்’ என்று குறிப்பிட்டிருந்தீர்கள். அதன்படியே பரிசுகளை, விருதுகளை தவிர்த்து வந்த நீங்கள், முதன் முதலாக கவிஞர் வைரமுத்து அவர்களின் ‘வெற்றித் தமிழர் பேரவை’ விருதைப் பெற்றிருக்கிறீர்கள்...

இது சம்பந்தமாக அந்த விழாவிலேயே பேசினேன். அதன் நகல் இருக்கிறது. படித்துப் பாருங்கள். (நகலைக் கொடுக்கிறார்.) அதிலே குறிப்பிட்டிருப்பது :

“விருதுகளால் அடையாளம் காட்டப்படாத இலக்கிய வாழ்க்கை எனது. ஆண்டுக்கு நான்கைந்து தடவை விசாரணைகள். சில ஆண்டுகளுக்கு ஒரு முறை காவல் நிலையத்தில் தங்க வைத்தல். இப்பொழுது ஒரு வழக்கு. என் எழுத்து முயற்சிகள் இப்படித்தான் கவனிக்கப்படுகின்றன. சில சமயங்களில் பல்கலைக் கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டு நீக்கப்படுகின்ற பெருமையும் நேர்வதுண்டு. இடதுசாரி ஊடகங்கள் என் பெயரை அவ்வப்பொழுது சுட்டியபோதும் என்னுடைய எழுத்துகளை முறையாக திறனாய்வு செய்ததில்லை.

இந்தத் தடைகளுக்கு அப்பால்... முகம் தெரியாத வாசகர்கள் எனக்காக எங்கோ இருக்கிறார்கள் என்பதுதான் இதுவரையிலான எழுத்து முயற்சிகளால் எனக்குக் கிடைத்த நிறைவு. ‘வெற்றித் தமிழர் பேரவை’யின் இந்த ஆண்டு விருதுக்கு நானும் தேர்ந்தெடுக்கப்பட்டேன் என்பது எனக்கு ஒரு வகையில் மகிழ்ச்சி. இன்னொரு வகையில் வியப்பு. பெரும்பாலும் ஒதுங்கியே செல்லும் நான் இந்த விருதை எதனால் ஏற்றுக் கொண்டேன்? ‘அவருடைய அன்பின் அழைப்பை என்னால் மறுக்க முடியவில்லை. நான் வரித்துக்கொண்ட எதுவும் அந்த அன்பை அடைக்கும் தாழாக நிற்க முடியவில்லை. நான் பெறும் முதல் விருது இது. ஒருவேளை கடைசி விருதாகவும் அமையலாம்’’.

“சமரசமற்ற கவிஞர்’’ என்று உங்களைப் பற்றி இருந்த மதிப்பீடு, இந்த விருதின் மூலம் உடைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறதே?

அந்த மேடையில் பேசும்போது, ‘எந்த சபைக்கும் இசையாத சித்தன் நான். அவையில் கிளவி என் சொல். இதை பெருமிதமாகச் சொல்லவில்லை. ஆனால், எது நியாயம் என்று முழங்குகிறேன்’’ என்றும் கூறியிருந்தேன்.

எந்தக் கொள்கையையும் விட்டுவிடுமாறு அந்த விருது கோரவுமில்லை; நான் விடவுமில்லை. ஒரு வகையில் என் நிலைப்பாட்டுக்குக் கிட்டிய ஒப்புதலாகவே அதை கருதுகிறேன்.
“வைரமுத்து அவர்களுக்கு விமர்சகனும் நான், ரசிகனும் நான்’’ என்று குறிப்பிட்டேன். இது உண்மை. வைரமுத்துவை விமர்சிக்கிறேன் என்பது அவருக்கும் தெரியும். அதற்கும் அப்பால் உள்ள ‘தோழமை’யின் வெளிப்பாடு அவ்விருது வழங்கல்.

உண்மையில் நான் எதிர்பார்த்தது விருதுகளையோ, பரிசுகளையோ அல்ல. என் நூல்கள் பற்றிய விமர்சனத்தை. ஆனால், இடதுசாரி இதழ்கள் உட்பட எல்லா ஊடகங்களும் என் படைப்புகள் குறித்து அரக்கத்தனமான மௌனம் காத்தே வந்தன. இந்தச் சூழலில் வைரமுத்துவின் அழைப்பு எனக்கு ஏற்கத் தகுந்ததாகவே இருந்தது. இது பற்றி விமர்சகர்கள், ஊடகங்களில் என் படைப்புக் குறித்துக் காத்த மௌனங்களுக்கு என்ன விளக்கம் சொல்லப் போகிறார்கள்.

புதிய புத்தகம் பேசுது, 2005



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சங்க இலக்கியம் முதல் பெண் கவிஞர்கள் : பத்மாவதி விவேகானந்தன் நேர்காணல்

எனது கதைகள் வரலாற்று ஆவணங்கள்: மேலாண்மை பொன்னுச்சாமி நேர்காணல்

கவிஞர் அறிவுமதி பாடலாசிரியரான கதை