அகதிகளிலிருந்து படைப்பாளிகள் உருவாவதைத் தடுக்கும் அக, புற காரணிகள் வலிமையானவை : தேவகாந்தன் நேர்காணல்
“போர் எந்த சூழ்நிலையில், எத்தகைய நியாயத்தின் பின்னணியில் இருப்பினும் கொடுமையானதுதான்’’ என்று கூறும் தேவகாந்தன், ஈழத்து எழுத்தாளர்களில் குறிப்பிடும்படியானவர். இப்போது சென்னையில் வசித்து வருகிறார். போர்ச் சூழலில் அவதியுறும் ஈழத் தமிழர்களின் துயரமும் சோகமும் நிறைந்த வாழ்வை இவரது பெரும்பாலான படைப்புகள் பேசுகின்றன. அகிலமெங்கும் பரவியிருக்கும் தமிழ் அகதித் தன்மையை விவரித்து ஐந்து பாகங்களைக் கொண்ட மாபெரும் நாவலை எழுதியுள்ளார். இந்நாவல், புலம் பெயர் இலக்கிய வகையில் முக்கியமான படைப்பாக உள்ளது. சில கவிதைகளையும் எழுதியுள்ளார். ‘இலக்கு’ எனும் இலக்கிய இதழின் ஆசிரியர்.
அவருடன்...

தமிழ்நாட்டில் உள்ள ஈழத்தமிழ் அகதிகளின் வாழ்க்கை எந்த அளவுக்கு இலக்கியத்தில் பதிவு செய்யப்பட் டிருக்கிறது?

செ.யோகநாதனின் ‘இரவல் தாய்நாடு’ நாவல், ‘அகதிகளின் முகம்’ குறுநாவல் போன்றவையும், எனது ‘விதி’ நாவலும், ‘மனுதர்மம்’ குறுநாவலும், இன்னும் சில சிறுகதைகளும் தமிழ் நாட்டிலுள்ள இலங்கை அகதிகளை மையமாகக் கொண்டு புனைவு பெற்றவையே. ஆனாலும், இவை போதுமானவையல்லதான். அகதிகளுக்குள்ளிருந்தே படைப்பாளிகள் உருவாகாததை இதன் பிரதான காரணமாகச் சொல்லலாம்.
அகதிகளுக்குள்ளிருந்து படைப்பாளிகள் உருவாவதைத் தடுக்கும் அக, புற காரணிகள் இங்கே வலிமையானவை. அகதித் தளத்துக்குள்ளிருக்கும் அதன் பயங்கரமான உள்முகம் லேசுவில் வெளியே தெரிந்துவிடாது. இந்த மண்ணில் அவர்களுக்கிருக்கும் நிரந்தரமற்ற வாழ்க்கை நிலை, வாழ்நிலைக் கஷ்டங்கள் யாவும் படைப்பிலக்கிய முயற்சிகளுக்குச் சாதக மானவையல்ல. இந்தக் கடினங்களைப் பிளந்துகொண்டே நாங்கள் இலக்கியம் செய்கிறோம்.
ஈழத்துப் போராட்டச் சூழலின் தாக்கம் ஈழத்தமிழ் கலை இலக்கியப் படைப்புகளில் எந்தளவுக்கு உள்ளது?
ஈழத்தில் கவிதையானது எப்போதும் ஒரு வலிமையான இலக்கிய ஊடகமாகவே இருந்து வந்திருக்கிறது. அதை உச்சத்துக்கு இழுத்துச் சென்றது போராட்டச் சூழ்நிலை. சிறுகதையும் ஓரளவு பாதிப்பைப் பெற்றதென்று சொல்லலாம். ஆனால், பிற இலக்கிய ஊடகங்கள் குறிப்பாக, நாவல் இலக்கியம் போதுமான ஊக்குவிசை பெற்றதாய்க் கொள்ள முடியாது. நாடக அரங்கக் கலை, வீதிநாடகம் போன்றவை மகத்தான வளர்ச்சியடைந்ததைச் சொல்ல வேண்டும். ஆரம்ப கால கட்டத்தில் இனக் கொடுமைகளைப் பேசிய இலக்கியச் சூழ்நிலை, பின்னால் யுத்தத்தின் நியாயங்களைப் பேசிற்று, அடுத்த காலகட்டத்தில் அது அதிகமாக மனிதத்துவத்தையே பேசியது. இரு தரப்பாரிடத்திலும் ஏற்பட்ட யுத்த அவலம் மனிதத்துவத்தைப் பேசுவதைத் தவிர்க்கவியலாததாக்கிற்று. பொருள் மாற்றம், தர மாற்றத்துக்குக் காரணமான கதை இதுதான்.
இந்தியா தவிர வேறு நாடுகளின் வாழும் ஈழ அகதிகளின் இலக்கிய முயற்சிகள் எப்படி இருக்கின்றன?
சிற்றிதழ்கள் தமிழில் அதிகமாய்த் தோன்றிய காலப் பகுதியாக இதைச் சொல்லலாம். இது அவர்களாலேயே நிகழ்ந்தது. மொழியின் செழுமையும், கனதியான இலக்கியப் படைப்பாக்கமும் இதனால் கவனமாகிற்று. சிறுகதை, கவிதைகள் மூலமாக மேற்குலகின் அகதி நிலைமைகள் பதிவாகின. கலாமோகனின் ‘நிஷ்டை’ சிறுகதைத் தொகுப்பு, கி.பி.அரவிந்தனின் ‘கனவின் மீதி’ கவிதைத் தொகுப்பு,

விமர்சனத்துக்கு உட்படுத்தப்படவேண்டியதாயினும் அண்மையில் வெளிவந்திருக்கும் ஷோபாசக்தியின் ‘கொரில்லா’ நாவல் யாவும்.
உங்களின் ‘அந்தச் சில கணங்கள்’ சிறுகதை ‘இலக்கு’ இதழில் வெளிவந்தது அதில் காந்தியை இந்துத்துவவாதியாகச் சித்திரித்திருக்கிறீர்களே...!
காந்திஜி அதிலே வருவார்தான். ஆனாலும் அந்தக் கதையிலே எனது அக்கறை நாதுராம் கோட்ஸேதான். அவனது பார்வையூடாகவே காந்தி பார்க்கப்படுகிறார். மடிவதற்கு முன்பாக காந்திஜியின் வாயிலிருந்து பிறக்கும் ‘ஹே ராம்’ என்ற வார்த்தைகள் கோட்ஸேயையே அதிர வைத்துவிடுகின்றன. இஸ்லாமியருக்கு ஆதரவு காட்டுவதினால்தான் கோட்ஸேயின் மனதிலே காந்தி மீதான வெறுப்பு பிறந்தது. ஆனால் காந்திஜியின் கடைசி நேர வார்த்தைகள் அவரை ஒரு சரியான இந்துவாய்... அவனை விடவுமே சிறந்த இந்துவாய்... அவனுக்கு அந்தக் கடைசிக் கணங்கள் காட்டிவிடுகின்றன.
‘நெருப்பு’ சிறுகதையை ஈழப் போர்ச் சூழலின் அவலச் சித்தரிப்பாகக் கொள்ளலாம் இல்லையா?
கொள்ளலாம். பல பாராட்டுகளையும் பரிசுகளையும் பெற்ற கதை அது. உருவ, உள்ளடக்க, நடை, உத்திகள் அதில் விசேஷமாகவே இருக்கின்றன. போர் எந்த நிலையில், எத்தகைய நியாயத்தின் பின்னணியில் இருப்பினும் கொடுமையானதுதான். அதைச் சிறப்பாக வெளிப்படுத்திய கதை அது.
‘இலக்கு’ சிறுபத்திரிகையில் உங்கள் அனுபவம்...?
அது பலத்த பொருள் நஷ்டங்களிடையே மூன்று ஆண்டுகளாக வெளிவந்த பத்திரிகை. எவ்வளவுதான் பொருள் நஷ்டம் அடைந்தாலும், என் எழுத்திலும் சிந்தனையிலும் பலத்த மாற்றங்களை அது ஏற்படுத்தியது. வெகுஜன எழுத்தாக அடையாளம் காணப்படக்கூடிய ஒரு பெரிய ஆபத்திலிருந்து என்னை, என் எழுத்தை அது காப்பாற்றியதாகவும் சொல்லலாம்.
“இடதுசாரி இலக்கிய விமர்சகர்கள் சிலர் கட்சி நிலைப்பாட்டின் காரணமாய் தராதரமற்ற இலக்கியங்களை முன்னிலைப்படுத்தினார்கள்’ என்று சொல்லப்படுவது குறித்து...?
கலை நேர்த்தியைக் கவனமெடுக்காமல், படைப்புகளின் உள்ளடக்கத்தை வர்க்கச் சார்புகளை வைத்து சில எழுத்தாளர்களின் படைப்புகள் சற்று மிகையாகப் புகழப்பட்ட ஒரு நிஜம் இருக்கிறதுதான். ஆனால், அதைச் சாக்காக வைத்துக்கொண்டு இலக்கிய லாபம் சம்பாதிக்கப் பார்த்த சிலரின் கூக்குரல் அது. அக்காலக் கட்டத்தில் வெளியான சகல படைப்புகளோடும் வாசக ரீதியான அனுபவம் எனக்கு இருக்கிறது. அதை வைத்துக்கொண்டு சொல்கிறேன். மார்க்சிய விமர்சகர்களால் கனதியற்ற இலக்கியங்கள் சில எடுத்துப் பேசப்பட்ட ஒரு குற்றம் நடந்ததே தவிர, எந்த நல்ல இலக்கியமும் கிடங்கு வெட்டி புதைக்கப்பட்டதாக நான் அறியவில்லை. அப்படி ஒரு நல்ல இலக்கியத்தைச் செய்து விடவும் முடியாது. அதைத்தான் புதுமைப்பித்தன் அன்று சொன்னார், ‘எத்தனை நந்தி வந்து தடுத்தாலும் நல்ல எழுத்து வாழும்’ என்று.
இலக்கு, நிழல், சுந்தர சுகன் போன்ற இதழ்களில் உங்கள் கவிதைகளைப் படித்திருக்கிறேன். உங்கள் கவிதைகள் பற்றி...?
இதுவரை சுமார் பத்து கவிதைகளுக்கு மேலே நான் எழுத வில்லை. சில விசயங்கள் உரைநடைக்குள் அடங்க மறுத்து கவிதை வாகனம் கேட்கும். அந்த விசயங்களே என் வரையில் கவிதைக்கானவையாக நான் கருதி வந்திருக்கிறேன். அந்த விசயங்களும் சில வேளைகளிலேயே கவிதையாகின்றன. கவிதையில் பெரிய முயற்சி ஏதுமில்லை. அதேவேளை கவிதை வருகிறபோது தடுத்து வைத்துவிடுவதும் இல்லை.
ஈழத்து தமிழ் மொழியின் புரிதல் குறித்து சாதகமான அபிப்ராயங்கள் தமிழகத்தில் ஒரு காலத்தில் இருக்கவில்லை. இப்போது நிலைமை எப்படி இருக்கிறது?
ஈழத்து தமிழ் மொழிக்கு அடிக்குறிப்பு போடவேண்டும் என்று கி.வ.ஜகந்நாதன் போன்றவர்கள் கூறியிருக்கிறார்கள் முன்பு. ஆனால், பழக பழக எதுவும் வசமாகிவிடும். ஈழத்து தமிழ் இப்போது தமிழக வாசகர்களுக்கு வசமாகியிருக்கிறது என்றே நினைக்கிறேன். புரிதல் என்ற காரணத்தில் எவ்வித விட்டுக் கொடுப்புமின்றியே பேச்சு மொழியை நான் என் படைப்புகளிலே கையாளுகின்றேன். தமிழக வாசகர்கள் அம்மொழியின் புதுமைச் சுவையை அனுபவித்தே வாசிக்கிறார்கள். இதனை அவர்களே கூறியிருக்கிறார்கள்.
சந்திப்பு: சூரியசந்திரன்
இன்தாம் இணையம், 2002
கருத்துகள்
கருத்துரையிடுக