சாகித்ய அகாதெமி விருது பெற்ற கவிக்கோ அப்துல் ரகுமான்

அப்துல் ரகுமான் - தமிழ் ...

விக்கோ அப்துல்ரகுமான். ‘ஆலாபனை’ எனும் தனது கவிதை நூலுக்காக ‘சாகித்ய அகாதமி’ விருது பெற்றிருக்கிறார். 1937-ல் மதுரையில் பிறந்த இவர், தமிழ் இலக்கியத்தில் முதுகலையும், முனைவர் பட்டமும் பெற்று, வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் முப்பதாண்டு காலம் பேராசிரியராகப் பணியாற்றியவர். பணிமுடிய நான்காண்டுகள் இருக்கும்போதே விருப்ப ஓய்வு பெற்று முழுநேர இலக்கியப் பணியை ஏற்றார். இப்போது சென்னைவாசி.

சாகித்ய அகாதெமி, பொதுவாக கவிதைக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. மிகநீண்ட காலத்திற்குப் பிறகு கவிதைக்காக உங்களுக்குப் பரிசு வழங்கி இருக்கிறார்கள். இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

எனக்கு முன்பாக ஆ.சீனிவாசராகவனுக்கு கவிதைக்காக சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. ஆனால், அவர் கவிஞராக அறியப்பட்டவர் இல்லை. பாவேந்தர் பாரதிதாசனுக்கும், கவியரசு கண்ணதாசனுக்கும் வழங்கப்பட்ட போதிலும், அவ்விருவருக்கும் கவிதைக்காக வழங்கப்படவில்லை. ஒரு கவிஞனுக்கு கவிதை நூலுக்காக அவ்விருது வழங்கப்பட்டது என்றால், அது எனக்குத்தான்.

காரணம், சாகித்ய அகாதெமியின் மற்ற மொழித் தேர்வாளர்கள் நவீன இலக்கியம் தெரிந்தவர்கள். படைப்பாளிகளாகவும் இருப்பார்கள். தமிழில் பெரும்பாலும் கல்லூரிப் பேராசிரியர்கள்தான் விருதுக்கான தேர்வாளர்களாக இருந்திருக்கிறார்கள். பலரும் நவீன இலக்கியத்துக்கு விருது கொடுக்க விரும்பாதவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.
முன்பு, சிறந்த படைப்புக்குப் பரிசு கொடுப்பது என்பதைவிட குறிப்பிட்ட நபருக்கு கொடுப்பது என்கிற நிலைதான் இருந்தது. என்னைப் போன்றவர்கள் மேடையிலும் மீடியாக்களிலும் விமர்சித்த பிறகு, இப்போது மாற்றம் தெரிகிறது.

ஆலாபனை | Buy Tamil & English Books Online | CommonFolks

படைப்பாளிகள் தேர்வாளர்களாக வந்திருக்கிறார்கள். அப்படியிருந்தும் கவிதை புறக்கணிக்கப்பட்டுதான் வந்திருக்கிறது. இந்தக் கெட்டப் பெயரைத் தவிர்க்க எனக்குக் கொடுத்திருக்கலாம்.

தமிழ்க் கவிஞர்கள் பெருகி வருகிறார்கள். கவிதைகளும் ஏராளமாக எழுதப்படுகின்றன. அவை தமிழ்ச் சமூகத்துக்கு எந்த அளவுக்குப் பயன்பட்டிருக்கிறது?

கவிதை எப்போதும் தேவை என்கிற அம்சத்திலே இருந்ததில்லை. அது ஒரு சிலரால் அனுபவிக்கக் கூடிய, ரசிக்கக்கூடிய அவர்களுக்கான விசயமாகவே இருந்திருக்கிறது. அந்த அழகியல் ரசனை எல்லாருக்கு மானதாக இருந்ததில்லை.

உப்பு, புளி, மிளகாய் போல கவிதை பயன்படாது. அதன் விளைவு, மன உள்விசயம் சார்ந்தது. தொடர்பு சாதன வளர்ச்சியினால் இலக்கிய அனுபவம் மக்களுக்கு அதிகமாகவே கிடைக்கிறது. முன்பு நூற்றுக்கணக்கில் படித்தவர்கள் இப்போது ஆயிரக்கணக்கில் படிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதனால் ரசிக்கக்கூடிய அம்சம் கூடியிருக்கிறது. பத்திரிகைகளும் புத்தகங்களும் அதிகமாக வருகின்றன. படைப்புகளும் நிறைய வருகின்றன. சிறுகதை, நாவல் எட்டாத இடங்களுக்குக் கவிதை சென்று சேர்ந்திருக்கிறது. விளம்பர வாசகங்களாக, போராட்ட முழக்கங்களாகக்கூட கவிதைகளைப் பயன்படுத்துகிறார்கள். கவிதை எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது சமூகப் பயன்பாட்டில் அதிகமாக இருந்து வருகிறது.

பாரதியின் பெண்கள் – சுசீந்திரா


பாரதி காலத்தில் சுதந்திரப் போராட்டச் சூழல் இருந்தது.

Pavendhar Bharathidasan - Home | Facebook

பாரதிதாசன் காலத்தில் மொழிப் போராட்டச் சூழல் இருந்தது. அதனால் பாரதியும் பாரதிதாசனும் மக்களால் தொடர்ந்து பேசப்பட்டும் எழுதப்பட்டும் வந்தார்கள். அதற்குப் பிறகு அப்படியான சூழல் இல்லை. அதனால், அவர்களுக்குப் பிறகு வந்த கவிஞர்களின் படைப்புகளை வாசகர்கள் அதிக அளவில் படிக்கவில்லை. குறிப்பிடும்படியாக நிறைய கவிஞர்கள் எழுதி வருகிறார்கள். அவற்றின் மீது நடுநிலைமையான விமர்சனம் இல்லை.

மேலும், கவிஞர்கள் மக்களிடம் எளிதாகச் சென்றுவிடுவதைச் சகிக்காத உரைநடை எழுத்தாளர்கள், வேண்டுமென்றே கவிஞர்களைப் புறக்கணிப்பதில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் பெரும்பாலும் சிற்றிதழ் விமர்சகர்களாகவே இருக்கிறார்கள்.

பாரதி, பாரதிதாசன் காலத்து போராட்டச் சூழல் இப்போது இல்லாதிருக்கலாம். ஆனால், சாதி மதக் கொடூரங்கள், பெண் குழந்தைகள் மீதான ஒடுக்கு முறைகள், சமூக அரசியல் பிரச்னைகள், இலங்கைத் தமிழர் போராட்டங்கள் என போராட்டங்கள் நடந்து கொண்டுதானே இருக்கின்றன. இவற்றை எல்லாம் பற்றி கவலைப்பட்ட மாதிரி தெரியவில்லையே...

நாம் பிரச்சினையின் தன்மையைப் பார்க்க வேண்டும். சுதந்திரப் போராட்டமும் தமிழ் எழுச்சியும் எல்லா மக்களுக்குமான விசயங்களாக பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தின. அந்த அளவுக்கு சாதி, மதம் சார்ந்த பிரச்சினைகள் இல்லை. குறிப்பிட்ட பிரச்னையைத் தொடுகிறபோது அதற்கு எதிரானவர்களால் புறக்கணிக்கப்பட்டு விடுவோமோ என்கிற அச்சமும் ஒரு காரணமாக இருக்கலாம். என்றாலும் இவை பற்றி ஏராளமான படைப்புகள் சிறுபத்திரிகைகளில் வந்துகொண்டிருக்கின்றன. ஈழப்பிரச்னையிலோ, அகதிகளின் அவல வாழ்க்கையிலோ நமக்கு நேரடி அனுபவம் கிடையாது. அப்படி அனுபவித்த ஈழத்தமிழ்ப் படைப்பாளிகளிடமிருந்து ஏராளமான படைப்புகள் நூல்களாக வெளிவந்திருக்கின்றன.

திராவிட இயக்க எழுத்தாளர்கள், எழுத்தைப் பிரச்சார மாகத்தான் பார்த்தார்கள். இது படைப்பாளிகளின் இயக்கம் அல்ல. தூய இலக்கிய அளவுகோலை வைத்து இதை அளக்கக் கூடாது.
அதற்கும் மிஞ்சி அண்ணா, கலைஞர், கண்ணதாசன், நான் (அப்துல் ரகுமான்), வைரமுத்து, தமிழன்பன் போன்றவர்கள் எழுதிக்கொண்டிருக்கிறோம். நாங்கள் திராவிட இயக்கப் படைப்பாளிகள்தாம். எங்கள் எழுத்துகள் படைப்புகளே இல்லை என்று சொல்லுவோர், நேர்மையற்றவர்கள். தமிழின எதிரிகள்தாம் இப்படி கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழின்பால் ஏற்பட்ட பற்று, உணர்ச்சி, எழுச்சியினால் எழுத ஆரம்பித்தவர்கள் ஏராளம். இன்று பிரபலமாக உள்ள பல எழுத்தாளர்கள் அந்த தாக்கத்தில் எழுத வந்தவர்கள்தான்.

ஒரு தலைமுறையை தமிழ் வாசிக்க ...

அண்மையில் ‘வைரமுத்து கவிதைகள்’ நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட பாலகுமாரன் “திராவிட இயக்க எழுத்துக்களின் தாக்கத்தினால்தான் எழுத ஆரம்பித்தேன்’’ என்று கூறினார்.

கலைஞர் முன்னிலையில் பேசக்கூடிய வாய்ப்பு கிடைத்ததால் அதை அவர் ஒப்புக்கொண்டார். அந்த வாய்ப்பு கிடைக்காவிட்டால், அவர் அந்த உண்மையை சொல்லியிருக்க மாட்டார்.
இப்படி எத்தனை படைப்பாளிகளுக்கு ஒப்புக்கொள்கிற நேர்மை இருக்கிறது. திராவிட இலக்கியம் வெறும் பிரச்சாரம் என்று விமர்சிப்பவர்களுக்கு, இதே கோட்பாட்டோடு நாயன்மார்கள், ஆழ்வார்கள் இலக்கியங்களை விமர்சனம் செய்யும் யோக்கியதையும் துணிவும் உண்டா!

உங்கள் எழுத்துகள் எந்த வகையில் தமிழ்ச் சமூகத் துக்குப் பயன்பட்டிருக்கிறது?

திரைப்படப் பாடலாசிரியர்களின் கவிதைகளை மட்டுமே படித்துக்கொண்டிருந்தவர்கள், அதிலிருந்து என் கவிதைகளுக்கு மாறியிருக்கிறார்கள். அதனால் அவர்களது வாசக அனுபவமும், படைப்பு அனுபவமும் விரிவடைந்திருக்கிறது.

திரைப்படப் பாடல் எழுதுவதற்காக வந்த அழைப்பை நீங்கள் ஏன் நிராகரித்தீர்கள்?

திரைப்படம் ஒரு தொழில். அங்கே நான் நினைப்பதை எழுத முடியாது. கண்ணதாசனும் பட்டுக்கோட்டையும் விருப்பத்துடன் எல்லா பாடல்களையும் எழுதவில்லை.

பொதுவுடைமை கருத்துக்கு எதிரான பாடல்களை எழுத வேண்டிய நிர்ப்பந்தம் பட்டுக்கோட்டைக்கு ஏற்பட்டது. அவ்வாறு எழுத என்னால் முடியாது.

சினிமாவுக்கென்று சில குணாம்சங்கள் தேவை. அவை என்னிடம் இல்லை. சுயமரியாதையை இழக்க என்னால் முடியாது.

திரைப்படங்களுக்குப் பாடல் எழுதினால்தான் பேரும் புகழும் சம்பாதிக்கமுடியும் என்கிற நிலையை மாற்றி, பிற ஊடகங்கள் வாயிலாக போதுமான அளவு பிரபலம் அடைந்திருக்கிறீர்கள். தமிழ் மக்கள் மனதில் தாக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறீர்கள். அது எப்படி சாத்தியமாயிற்று?

ஆரம்பத்திலேயே திரைப்படத் துறையை வேண்டாமென்று ஒதுக்கித் தள்ளிவிட்டதால், மற்ற ஊடகங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினேன். கவியரங்க மேடைகளில் அதிகமாக கவிதை பாடியது நான்தான்.

பல்லாயிரக்கணக்கான மக்களிடம் சென்று சேர்கிற வாய்ப்பு கலைஞர் தலைமையில் நடைபெற்ற ‘அண்ணா கவியரங்க’த்தில் கிடைத்தது.

கம்பன் கழகக் கவியரங்கங்கள் இலக்கியவாதிகள் மத்தியில் என்னை அறிமுகப்படுத்தின. அதேபோல, பத்திரிகைகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டேன். அதனால்தான், திரைப்படப் பாடலாசிரியர்களுக்கு அடுத்தபடியாக அறிமுகமானவராக இருக்கிறேன்.

வணிக ரீதியான பத்திரிகைகளில் ஏராளமாக எழுது கிறீர்கள். அந்தப் பத்திரிகைகளில் எந்த அளவு சுதந்திரம் கிடைக்கிறது?

நான் பத்திரிகைகளில் பெரும்பாலும் தொடர்கள்தான் எழுதுகிறேன். தொடருக்கு என்ன தலைப்பு வைக்க வேண்டும் என்பது முதல் என்ன விசயங்களைக் கொடுக்க வேண்டும் என்பதுவரை நான்தான் முடிவு செய்வேன். அவர்கள் எதிர்பார்ப்பதைவிட நன்றாகவே எழுதுவேன் என்பதால் எனக்கு முழுசுதந்திரம் தருகிறார்கள். உயர்ந்த கடினமான விசயங்களைச் சுவையாக, அழகாக, கவித்துவமாகத் தருகிறேன்.

இந்தியாவின் பிற மொழிகளிலும், ஐரோப்பிய நாடு களிலும் உள்ள கவிதை இயக்கங்கள், புதுக்கவிதைகள், கவிஞர்களின் வரலாறு ஆகியவற்றைத் தமிழ் வாசகர் களுக்கு அறிமுகம் செய்யும் வகையில் ‘ஜூனியர் விகடன்’ இதழில் நூறு வாரங்களுக்கு ஒரு தொடரை எழுதினேன்.

ஜப்பானிய ஹைகூ வடிவத்தின் சிறப்பு பற்றி ‘ஜூனியர் விகடன்’ இதழில் ஒரு கட்டுரை எழுதினேன். அதற்குப் பிறகுதான் அது பிரபலமாயிற்று. பலர் ஹைகூ எழுதத் தொடங்கினர்.

அரபு, பாரசீக, உருது மொழிகளில் புகழ்பெற்ற ‘கஜல்’ வடிவத்தைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தி, ‘பாக்யா’ இதழில் 62 வாரங்கள் எழுதினேன்.

சுட்டு விரல் - கவிக்கோ - suttu viral - Panuval ...


‘சுட்டுவிரல்’ என்ற தலைப்பில் தத்துவம், இலக்கியம், வாழ்க்கை பற்றிய 102 கட்டுரைகளை ‘ஜூனியர் விகடன்’ இதழில் எழுதினேன்.

இது சிறகுகளின் நேரம் 1 Idhu Siragukalin Neram 1


அதே இதழில், சமீபத்தில் ‘இது சிறகுகளின் காலம்’ தொடரை எழுதினேன்.

உங்களுடைய கட்டுரைத் தொடர்களில் பிறமொழிக் கவிஞர்களின் கவிதைகளை ஏராளமாக பயன் படுத்திக் கொண்டிருக்கிறீர்கள். அவர்களில் யாரெல் லாம் உங்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள்?

பாப்லோ நெருடா 10 | பாப்லோ நெருடா 10 ...

சின்ன வயதிலேயே உருது, பாரசீகக் கவிஞர்களின் பாதிப்பு உண்டு. பிறகு மேலைநாட்டுக் கவிஞர்களின் பாதிப்பு. தாகூர், இக்பால், ஷெல்லி, கலீல் ஜீப்ரான், அதிகமாக லோர்கா, பாப்லோ நெரூடா, ஆக்டேவியா பாஸ், குறிப்பாக பிரெஞ்சுக் கவிஞர்கள், லத்தீன் அமெரிக்கக் கவிஞர்கள்.

அண்மைக் காலத்தில் பைபிள், இந்திய வேதங்கள், உடநிடதங்கள்... இவற்றினுடைய பாதிப்பு இப்போதைய படைப்புகளில் இருக்கும்.

வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்லும்போது அங்கு வசிக்கும் உங்களுக்கு விருப்பமான கவிஞர் களை சந்திப்பீர்களா? அவர்களோடு உரையாடிய அனுபவம்...?

Amrita Pritam, Indian Writer

இலங்கை, மலேயா, சிங்கப்பூர், ஹாங்காங், சவூதி அரேபியா, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து... இப்படி வெளி நாடுகளுக்குப் பெரும்பாலும் தமிழ் அமைப்புகளின் மூலமே பயணம் சென்றிருக்கிறேன். அதனால் எனக்கு விருப்பமான கவிஞர்களைச் சந்திக்க நேரமோ வாய்ப்போ இல்லை. இந்தியாவில் முக்கியமான பிற மொழிக் கவிஞர்களைச் சந்தித்திருக்கிறேன். குறிப்பாக, அமிர்தா பரிதம் (பஞ்சாபி), வாத்சாயன் அக்ஞேயன், ராமகாந்த நாத் (இந்தி), கடமனிட்ட ராமகிருஷ்ண, கே.சச்சிதானந்தன் (மலையாளம்), பரூவா (அஸ்ஸாம்) ஆகியோரை சந்தித்து பேசி இருக்கிறேன்.

உங்களுடைய கவிதைகள், கட்டுரைகள் பற்றி அவர்கள் என்ன சொன்னார்கள்?

அவர்களது படைப்புகளை நான் படித்திருக்கிறேனே தவிர, என்னுடைய படைப்புகளை அதிகமாக அவர்கள் படிக்கவில்லை. ஏனென்றால், என்னுடைய படைப்புகள் பிற மொழிகளில் பரவலாக வரவில்லை. ஆகவே, இனி மொழியாக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

உங்களைப் பின்பற்றி கவிதை எழுத வந்தவர்களில் குறிப்பிடும்படியாக...

கவிஞர் அறிவுமதி பரிந்துரைக்கும் 10 ...


அறிவுமதி, கபிலன், பழநிபாரதி போன்ற பலர் சிறப்பாக எழுதுகிறார்கள். அதை அவர்கள்தான் சொல்லவேண்டும். பிரபலமானவர்களில் அதிகமாக காப்பியடிக்கப்பட்ட கவிஞர் நான்தான்.

இறுதியாக ஒரு கேள்வி. உங்கள் பெயருக்கு முன்னால் ‘கவிக்கோ’ என்று இணைத்துக் கொண்டிருக்கிறீர்களே...?

‘கவிக்கோ’ என்பது எனக்கு அளிக்கப்பட்ட பட்டம். நான் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் அதை பயன்படுத்தத் தொடங்கி விட்டார்கள். மேலும், அப்துல் ரகுமான் என்ற பெயரில் நிறைய பேர் எழுதுகிறார்கள். இப்போது ஒரு திரைப்பட இயக்குநரும் வந்துவிட்டார். ஆகவே, கவிக்கோ என்பதை எனக்கான அடையாளமாகப் பயன்படுத்தி வருகிறேனே தவிர, ‘கவிக்கோ’ பட்டம் என்னை தாங்கி பிடிக்கவில்லை, நான்தான் அதை தாங்கிப் பிடிக்கிறேன்.

சந்திப்பு: சூரியசந்திரன்

இன்தாம் இணையம்,
2002

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சங்க இலக்கியம் முதல் பெண் கவிஞர்கள் : பத்மாவதி விவேகானந்தன் நேர்காணல்

எனது கதைகள் வரலாற்று ஆவணங்கள்: மேலாண்மை பொன்னுச்சாமி நேர்காணல்

கவிஞர் அறிவுமதி பாடலாசிரியரான கதை