எழுத்தின் திசையில் எனது பயணம்: கவிஞர் சுகிர்தராணி

சுகிர்தராணி கவிதைகளில் இயற்கை ...

“பெண்ணின் உடலானது இதுவரை பெண்ணுக்குச் சொந்தமானதாக இல்லாமல், ஆணுக்குச் சொந்தமானதாகவே இருந்திருக்கிறது. அதனை அவன் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம் என்கிற நிலைதான் இருந்தது. இப்போதுதான், எங்களுடைய உடல் எங்களுக்குச் சொந்தமானது என்பதை உணரத் தொடங்கியுள்ளோம். உடல் விடுதலையைப் பற்றி எழுத ஆரம்பித்திருக்கிறோம். அந்த விடுதலையை நோக்கித்தான் எனது எழுத்து இயங்கிக்கொண்டிருக்கிறது.’’

வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டையிலிருந்து ஏழு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள லாலாபேட்டையில் ஓர் உரக்கம்பெனி கூலித் தொழிலாளியின் மகளாக 1972ல் பிறந்தவர் சுகிர்தராணி. அப்பா மூணாம் வகுப்பும், அம்மா ஆறாம் வகுப்பும் படித்த வர்கள். சுகிர்தராணிக்கு இரு அக்கா, ஒரு தங்கை.

வருடத்துக்கு ஓர் உடைதான் உடுத்திக்கொள்ள. இன்னொரு உடைக்கு அடுத்த பண்டிகை வரை காத்திருக்க வேண்டிய வறுமையான குடும்பச் சூழல். பள்ளியில் எல்லாருடனும் சகஜமாகப் பழக முடியாத தீண்டாமைக் கொடுமை. வீட்டில் பொதுவாக சுதந்திரம் இருந்தாலும், பெண் மீதான கட்டுப்பாட்டையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை.

இவ்விதமாக, பள்ளி நாட்களிலேயே வறுமை, தீண்டாமை, பெண்ணடிமைத்தனம் ஆகிய மூன்றிலும் பாதிப்புக்குள்ளான சுகிர்தராணி, தனது உள்ளக் குமுறல்களையும், உணர்ச்சிகளையும் பின்னொரு நாளில் கவிதைக்கு மடை மாற்றினார்.

“செத்துப்போன மாட்டை
தோலுரிக்கும்போது
காகம் விரட்டுவேன்
வெகுநேரம் நின்று வாங்கிய
ஊர்ச்சோற்றை தின்றுவிட்டு
சுடுசோறென  பெருமை பேசுவேன்.
தப்பட்டை மாட்டிய அப்பா
தெருவில் எதிர்படும்போது
முகம் மறைத்து கடந்துவிடுவேன்.
அப்பாவின் தொழிலும் ஆண்டு வருமானமும்
சொல்ல முடியாமல்
வாத்தியாரிடம் அடி வாங்குவேன்.
தோழிகளற்ற
பின் வரிசையிலமர்ந்து
தெரியாமல் அழுவேன்.
இப்போது யாரேனும் கேட்க நேர்ந்தால்
பளிச்சென்று சொல்லி விடுகிறேன்
பறச்சி என்று.''

தலித் பெண்ணியக் குரல் இது. தமிழில் வேறெந்த பெண்ணும் இவ்வளவு கூர்மையாக தலித் கவிதையை எழுதியதாகத் தெரியவில்லை.

சுகிர்தராணி, தான் ஒரு கவிஞராக உருக்கொண்ட சூழலை, தனது முதல் கவிதை நூலில் இவ்வாறு விவரிக்கிறார்:

“படிக்கின்ற காலத்தில் வார்த்தைகளை மாற்றிப் போட்டு எதுகை மோனையோடு எழுதி கவிதை என்று வாசித்ததற்கு பலமாய் கை தட்டியிருக்கிறார்கள். பிரிவு உபச்சார விழாக்களில் ஆசிரியர்கள் பற்றி இல்லாததையும் இருப்பதாய் எழுதி, இலக்கிய மன்றக் கூட்டத்தில் விருந்தினர் வரும்வரை சிரிப்புக்காக என்னை கவிதை வாசிக்கச் சொல்லி, பேருந்து நிலையத்தில் தோழிகளை புகழ்ந்து பத்து விநாடிகள் வார்த்தைகளில் விளையாடி... என இவைதான் ஆரம்பத்தில் என்னுடைய அடையாளங்கள்... (கவிஞராக) நான் உருக்கொள்ளவும் (கவிதைகளை) கருக்கொள்ளவும் அவையே காரணங்களாக அமைந்தன.’’

பள்ளிப் படிப்பில் சாதாரண மாணவியாக இருந்த சுகிர்தராணிக்கு ஆதர்சமாக இருந்தவர் எட்டாம் வகுப்பு தமிழ் ஆசிரியை கல்யாணி. அவர்போல் தானும் ஆசிரியை ஆகவேண்டும் என்ற உந்துதலில் படிப்பில் ஆர்வம் ஏற்பட்டு ‘தமிழ் இலக்கியம்’ படித்து, எம்ஃபில் பட்டமும் பெற்று, இப்போது ஆசிரியையாக பணியாற்றுகிறார்.
பாடப்புத்தகங்களைக் கடந்த வாசிப்பு என்றால், பள்ளி நாட்களில் அண்ணன் வாங்கி வந்து படிக்கும் க்ரைம் நாவல், பாக்கெட் நாவல், ராணிமுத்து ஆகியவற்றை இவரும் எடுத்து வாசிப்பதோடு முடிந்திருக்கிறது. அந்த இதழ்களில் உள்ளவை போலவே எழுதியும் பேசியும் வந்த சுகிர்தராணியின் கவனத்தை நவீன கவிதையின் பக்கம் திசை திருப்பியதில் கவிஞர் கவிப்பித்தனுக்கு பெரும் பங்குண்டு.

‘தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்’ ஆற்காட்டில் நடத்திய ஒரு கவிதைப் பட்டறையில் கவிஞர் கவிப்பித்தன் அழைப்பை ஏற்று, சுகிர்தராணி கலந்து கொள்கிறார். அந்தப் பட்டறையில் தான் எழுதிய கவிதையைத்தான் தனது முதல் கவிதையாக கணக்கில் எடுத்துக் கொள்கிறார் சுகிர்தராணி.

“எங்கேயோ கேட்ட ஞாபகம்
உலகம் உருண்டை என்று. 
மண்டியிட்டு, குனிந்து, வளைந்து
எட்டி, நிமிர்ந்து, நடந்து
எப்படிப் பார்த்தாலும் 
சதுரமாய்தான் தெரிகிறது
என் வீட்டு ஜன்னலில்’’

சமூகக் கட்டுப்பாடுகளால் அடக்கப்பட்ட ஒரு பெண்ணின் உலகத்தை படம் பிடிக்கும் அழகான கவிதை இது.
அதன் பிறகு ஏற்பட்ட சிறு பத்திரிகைகளின் தொடர்பில் ‘புல்வெளி’ ‘அருவி’ ‘பூங்குயில்’ போன்ற சிற்றிதழ்களில் இவரது கவிதைகள் தொடர்ந்து வெளிவந்தன.

இவரின் ‘அப்பாவின் ஞாபக மறதி’ என்றொரு கவிதை பரவலான கவனிப்பைப் பெற்றது. பொருளாதார சிக்கல் நிறைந்த - மகளின் சம்பாத்தியத்தில் வாழ்க்கை நடத்துகிற ஒரு குடும்பத்தில், அவளது வருமானத்துக்காக சுயநலத்தோடு, குறித்த காலத்தில் அவளுக்குத் திருமணம் செய்யாமல் காலம் கடத்துகிற பெற்றோரின் பொறுப்பற்றத் தன்மையை விமர்சிக்கிற கவிதை இது.

“அப்பாவுக்கு
ஞாபகமறதி அதிகம்.
ஆணியிலாடும் சைக்கிள் சாவியை
அறை முழுக்கத் தேடுவார்.
நூல் சுற்றிய பேனா
கைக்குட்டையோ டோக்கனோ
வெளிச்செல்கையில்
முன்னமே 
ஞாபகப்படுத்துவேன்.
மெலிதான சிரிப்புடன் நகர்வார்.
இப்போதெல்லாம்
எதையும் ஞாபகப்படுத்த வேண்டியிருக்கவில்லை.
அடிக்கடி உபயோகப்படுவதை
கண்ணெதிராகவே வைத்திருக்கிறார்.
சமையலறை தேடி
நீரருந்திவிட்டு திரும்பும் அவருக்கு
எதைச் சொல்லி 
என் வயதை ஞாபகப்படுத்த?’’ 

இக்கவிதையை ‘பூங்குயில்’ சிவக்குமார் ‘கண்ணாடி மீன்’ எனும் குறும்படமாக உருவாக்கி உள்ளார்.

தீவிர வாசிப்பின் மூலம் பெண்ணியக் கருத்துகளை உள்வாங்கிக் கொண்ட சுகிர்தராணி, நவீன மொழியில் கவிதைகள் படைக்கத் தொடங்கினார். அதேவேளை, சிறு பத்திரிகை வட்டாரத்தைக் கடந்து ஆனந்த விகடன், அவள் விகடன் போன்ற இதழ்களிலும் இவரது கவிதைகள் வெளிவரத் தொடங்கின. அவரது கவித்துவமும் மெல்ல மெல்ல மெருகேறின.

‘பனிக்குடம்’ இதழில் வெளிவந்த ‘ஏவாளின் கனியும் ஆதாமின் அறுவடையும்’ எனும் கவிதை மிகப்பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

“திருப்தியான கடலின் லயத்தோடு
பறவைகள் சதா சப்தித்துக் கொண்டிருக்கின்றன
பருவப் பீய்ச்சல்களிலும் உறுப்புகளின் இச்சையற்று
விலங்குகள் அலைந்து திரிந்தன
அழைக்கப்படாத மரங்களின் காம்புகள்தோறும்
தளர்ந்த முலையின் சாயலையொத்த பழங்கள்
வெளிச்சத்தின் நிழலில் ஒளி அமர்ந்திருந்த
அவ்விடம் மிக வசீகரமாய் விளங்கிற்று.
அதனை நிர்மாணித்தவன் 
சுனைகளின் அடைப்பைச் சரி செய்யப் போயிருந்தான்
நஞ்சுக்கொடியின் முதல் சுவையை அலகிலேந்தி
அவளை ரகசியமாய் சமீபித்தது
வேறு எப்படியும் உருக்கொள்ள இயலாத ஸர்ப்பம்.
விரகத்தின் வேர்வை அவளுள் அரும்பத் தொடங்க
அவனுக்குப் பழக்கினாள்
தன் கனிகளைச் சுவைக்கும் உடல்நுட்பம்
அதன்பின் காமத்திற்கான 
அறுவடை அவனுக்கென்றாகிப் போனது.’’

இக்கவிதைக்கு கவிஞர் சுகிர்தராணி தரும் விளக்கம்:
“முதன் முதலாக ஏவாளுக்குத்தான் அவளது நிர்வாணம் தெரிகிறது. அவள்தான் அதனை ஆதாமுக்கு அறிமுகப் படுத்துகிறாள். ஆனால் அறுவடை என்னமோ ஆதாமுக்கு என்றாகிவிட்டது என்கிற கருத்தை மையப்படுத்தி எழுதிய கவிதை’’ என்கிறார்.

இக்கவிதைக்கு நேரிலும் தொலைபேசியிலும் மோசமான கீழ்த்தரமான விமர்சனங்களை அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. நள்ளிரவில் ஒரு சிற்றிதழாளர் தொலைபேசியில் தன்னை அழைத்து, “அவளுக்குப் பழக்கினாள் தன் கனிகளைச் சுவைக்கும் உடல்நுட்பம்’ எழுதி எழுதியிருக்கிறீர்களே, எனக்கும் பழக்குவீர்களா?’’ என்று கேட்டாராம்.

“ஒரு படைப்பை படைப்பாக அணுகாமல், படைப்பாளி பற்றிய விசயங்களை படைப்புகளில் தேடுகிறார்கள். ஒரு விசயத்தை மற்றுவர்களுடைய அனுபவமாகச் சொல்வதைவிட சுய அனுபவமாகச் சொன்னால், வாசகர் அதை தனக்கான அனுபவமாக உணரமுடியும் என்பதால்தான் என் சொந்த அனுபவம் போன்று எழுதுகிறேன். ஆனால், என்னுடைய கவிதைகளையெல்லாம் எனது சுயஅனுபவம் என்பதாகப் புரிந்து கொள்கிறார்கள்.’’

இதே போன்ற விமர்சனத்தை இவரது ‘இரவு மிருகம்’  எனும் கவிதை எதிர்கொண்டது. எனினும், அதையே தலைப்பாகக் கொண்டு ஒரு கவிதை நூலினை ‘காலச்சுவடு’ பதிப்பகம் வெளியிட்டது.

“பெண் இல்லாத உலகமோ, ஆண் இல்லாத உலகமோ இங்கு சாத்தியமில்லை. பெண்ணுக்கு ஆணோ, ஆணுக்குப் பெண்ணோ இங்கு எதிராளிகள் கிடையாது. ஆணுக்குப் பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் இங்கு தேவையாய் இருக்கிது. அதுபோல் நானோ எனது கவிதைகளோ ஆணுக்கு எதிரானவை அல்ல. ஆணாதிக்கத்துக்கு எதிரானவை.

பெண்ணியக் கவிதைகளைத் திட்டமிட்டோ அதிர்ச்சி மதிப்பீட்டுக்காகவோ நான் வலிந்து எழுதுவதில்லை. இவ்வளவு நாள் வரை பெண்கள் ஆண் மொழியில்தான் படித்தோம். ஆண்மொழியில்தான் படைத்தோம். இப்போது எங்கள் அனுபவங்களை எழுத ஒரு மொழி தேவைப்படுகிறது. மனசுக்குள் உள்ள விசயங்களே அதற்கான வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றன. அதைத்தான் பெண்மொழி என்கிறோம்.’’
சமூகத்தில் கவிதை எழுதும் பெண்கள் பல்வேறு நெருக்கடிகளை சந்திக்க வேண்டியுள்ளது. அதில் ஒன்று, திருமண வாழ்க்கையில் ஏற்படும் நெருக்கடிகள். அது பற்றிய சுகிர்தராணியின் கவிதை ஒன்று.

“ஆரம்பமாயிற்று
என் மீதான விசாரணை 
நடக்க வைத்து பார்த்ததில்
புன்னகை பூத்தனர் என்னைப் பிடித்திருப்பதாய்.
நீண்டிருந்த பட்டங்களைக் கேட்டபடி
சிற்றுண்டி தட்டுகள் தேநீர்க் கோப்பைகளும் காலியாயின.
பற்றியிருக்கும் என் அரசுப் பணியை அறிந்ததும்
கைகளில் திணித்தனர் தாம்பூலத்தை.
சம்பள விவரத்தைப் பட்டியலிட 
குறித்தே விட்டனர் கல்யாணத் தேதியை.
எதற்கும் இருக்கட்டுமென
கவிதை எழுதுவதை கடைசியில் சொல்லி வைத்தேன்.
வந்தவர்கள் எழுந்தனர்
வாயிலை நோக்கி.’’

“கவிஞர்களை சராசரிக்கும் மேலாக பார்த்த தமிழ்ச் சமூகம் பெண்ணியக் கவிஞர்களான எங்களை சராசரிக்கும் கீழாய் பார்க்கிறது. அதாவது, ஒழுக்கக் கேடானவர்களாக அடக்க ஒடுக்கம் அற்றவர்களாக, குடும்பத்துக்கு ஒத்து வராதவர்களாகத்தான் பார்க்கிறார்கள். நாலு பேர் நாலு விதமாக பேசும்போது அதை தாங்கிக்கொள்ள முடியாத என் குடும்பத்தினர் கவிதை எழுதுவதை நிறுத்தச் சொல்கிறார்கள். கூட்டங்களுக்குப் போகாதே என்கிறார்கள். நான் எழுதுவதால்தான் என் திருமணம் தள்ளிப்போகிறது என்பது என்னுடைய குடும்பத்தினர் எண்ணம்.’’

எப்போது திருமணம்?

“ஒருத்தரோடு பழகும்போது மனம் தளும்பணும். அப்படி ஒருவரை இன்னும் நான் சந்திக்கவில்லை என்றுதான் நினைக்கிறேன். ஆனால், கல்யாணம் பண்ணிக் கொண்டுதான் துணையோடு இருக்கணும் என்கிற அவசியமில்லை. கல்யாணம் பண்ணாமலும் துணையோடு வாழலாம். அந்தப் பக்குவத்துக்கு நான் இன்னும் வரல. கொஞ்சம் காலம் பிடிக்கும்.’’

‘கைப்பற்றி என் கனவு கேள்’ , ‘இரவு மிருகம்’ எனும் இரு கவிதை நூல்களைத் தந்திருக்கும் இக்கவிஞரின் அடுத்த முயற்சி?

“முதல் தொகுப்புக்கும் இரண்டாவது தொகுப்புக்கும் இடையிலே நிறைய வித்தியாசம் இருப்பதுபோல, எனது அடுத்த கவிதைத் தொகுதியில் அடுத்த தளத்துக்குப் போய் ஆகணும். சிறுகதை எழுதலாம் என்கிற எண்ணமும் இருக்கு. எந்த நிலையிலும் என்னால் எழுத்தை விட்டுவிட்டு இருக்கவே முடியாது. எழுத்து எனக்குத் தைரியத்தைக் கொடுத்திருக்கு. எழுத்தோட கையைப் பிடிச்சிகிட்டு அது என்னை எங்கே இழுத்துகிட்டுப் போகுதோ அந்தத் திசையிலே நான் பயணம் செய்வேன்.’’

பயணம் வெல்க!

சூரியசந்திரன்
பெண்ணே நீ, மார்ச் 2005

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எனது கதைகள் வரலாற்று ஆவணங்கள்: மேலாண்மை பொன்னுச்சாமி நேர்காணல்

சங்க இலக்கியம் முதல் பெண் கவிஞர்கள் : பத்மாவதி விவேகானந்தன் நேர்காணல்

கவிஞர் அறிவுமதி பாடலாசிரியரான கதை