பெண்ணியத்தை வாழ்க்கைதான் கற்றுக்கொடுத்தது : கவிஞர் சல்மா

திருச்சியிலிருந்து மதுரைக்குப் பயணிக்கும் நெடுஞ்சாலையில் 58 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது துவரங்குறிச்சி. அக்கிராமத்தின் ஊராட்சி ஒன்றியத் தலைவர் றொக்கையா. இவரின் இன்னொரு பெயர் ராசாத்தி. தமிழ் இலக்கிய உலகுக்கு நன்கு அறிமுகமான பெயர் சல்மா.
சல்மா பிறந்தது, வளர்ந்தது, படித்தது, திருமணம் செய்து கொண்டது, பணியாற்றியது என சகலமும் இந்த துவரங்குறிச்சியில்தான்.
சம்சுதீன் - சர்புனிசா தம்பதியருக்கு 1968ல் பிறந்த சல்மாவின் பள்ளிப் படிப்பு ஒன்பதாம் வகுப்பு வரைதான். அந்தப் பகுதியில் இஸ்லாமியப் பெண்கள் வயதுக்கு வந்த பிறகு பள்ளிக்குச் செல்லவோ மேற்கொண்டு படிக்கவோ அனுமதிக்கப்படுவதில்லை. ஏன், வீட்டுக்குள் ஒரு பெண் இருக்கிற விசயமே வெளியில் தெரியக்கூடாதாம். அப்படி ஒரு கட்டுப்பாடு வீட்டுக்குள். அடங்கி ஒடுங்கி, தனிமையான சூழலில் (தொலைக்காட்சி வசதிகூட இல்லாத காலத்தில்) வார, மாத இதழ்களையும், கதைப் புத்தகங்களையும் படித்தே பொழுதைப் போக்கிக் கொண்டிருக்க வேண்டியதுதானாம்.
சல்மாவின் பெரியப்பா மகன் அப்துல் ஹமீது (கவிஞர் மனுஷ்யபுத்திரன்) பக்கத்து வீடு. இருவரும் துணுக்குகள், ஜோக்குகள், எழுதி ‘ராணி’ போன்ற பத்திரிகைகளுக்கு அனுப்பிக் கொண்டிருந்தார்கள். அவை பிரசுரமாகி சன்மானங்களும் பரிசுகளும் கிடைத்துக் கொண்டிருந்தன. அவற்றைப் படித்துவிட்டு மனுஷ்யபுத்திரனை சந்திக்க நண்பர்கள் வருவார்கள். நிறைய இலக்கியம் பேசுவார்கள். அவர்கள் சென்றபிறகு மனுஷ்யபுத்திரன் மூலமாக அவற்றை எல்லாம் சல்மா கேட்டுத் தெரிந்துகொள்வார். அவர்கள் கொண்டு வந்து கொடுத்த புத்தகங்களையும் வாங்கி வாசிப்பார். பெரியார் நூல்களும், ரஷ்ய இலக்கியங்களும், தமிழின் முக்கியப் படைப்புகளும் அவர்கள் மூலமாகத்தான் இவருக்குக் கிடைக்கின்றன. வாசிப்பு விசாலமாகிறது. கவிதை முயற்சி தொடர்கிறது.
திருச்சியிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த ‘சோலைக் குயில்’ , ‘சுட்டும் விழிச்சுடர்’ ஆகிய சிற்றிதழ்களில் இவரது கவிதைகள் வெளிவரத் தொடங்கின. இவற்றைத் தொடர்ந்து கோவை ஞானியின் ‘நிகழ்’ , மனுஷ்யபுத்திரன் பங்களிப்பு செய்த ‘காலச்சுவடு’ ஆகிய இதழ்களின் மூலமாகவும் சல்மாவின் கவிதைப் பயணம் தொடர்கிறது.
எனினும், ‘சுட்டும் விழிச்சுடர்’ இதழில் வெளிவந்த ‘சுவாசம்’ எனும் கவிதையிலிருந்தே தனது கவிதைப் பயணம் தொடங்கியதாகக் கூறுகிறார் கவிஞர் சல்மா.
“எப்போதும்
எல்லா காரியங்களும்
நான் இல்லாதபோதே நிகழ்கின்றன’’
எனத் தொடங்கும் அக்கவிதை,
“நான் அனுமதிக்கத்தான் வேண்டுமா
என் சுவாசம்
நானன்றி நிகழ்வதை?’’
என முடிகிறது. அந்தக் கவிதை ‘ராசாத்தி, துவரங்குறிச்சி’ என்ற பெயரில் ‘சுட்டும் விழிச்சுடர்’ இதழின் பின்னட்டையில் வெளியானது.
“இழிவான செயலில் ஈடுபட்ட ஒரு பெண்ணை இந்தச் சமூகம் எப்படி மோசமாகவும் அசிங்கமாகவும் பேசுமோ, அப்படியான அவமானத்தை அப்போது நான் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.’’ என்கிறது.

“என்னைப் போலத்தான் மனுஷ்யபுத்திரனும் கவிதை எழுதினார். அவரைப் பார்க்க நண்பர்களெல்லாம் வந்தார்கள். அவருக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. நான் பெண் என்பதால்தான் இப்படியான பிரச்சினைகள்.’’
சல்மாவுக்கு அப்போதுதான் திருமணம் ஏற்பாடாகி இருந்தது. மாப்பிள்ளையின் தந்தை இந்தக் கவிதையைப் படித்துவிட்டு “இப்படியானப் பெண்ணை எப்படி கல்யாணம் பண்ணிக்கிறது?’’ என்று சண்டை போட்டிருக்கிறார். “இனிமேல் எழுதமாட்டேன்’’ என்று உத்தரவாதம் தருமாறு கேட்டிருக்கிறார்கள்.
அதற்கு சல்மாவோ, “என்னால் எழுதாமல் இருக்க முடியாது. நீங்கள் வேண்டுமானால் உங்கள் பையனுக்கு வேறு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளுங்கள்’’ என்று தைரியமாகக் கூறியிருக்கிறார். வேறு வழியின்றி “கல்யாணத்திற்குப் பிறகு எல்லாம் சரியாகிவிடும்’’ என்கிற சமாதானத்தோடு அந்தப் பிரச்னை முடிவுக்கு வருகிறது. திருமணமும் நடந்திருக்கிறது.
“எளிய விருப்பங்களுடன்
தயங்கியபடித் தொடங்கும்
உன் வீட்டில்
எனது முதல் நாள்
அருகில் வந்து
என் கைப் பற்றிப்
பரிச்சயமான முகங்களில் வழிந்த
பிரியங்களின் அரவணைப்பும்
கபடமற்றத் தொடர்ந்த அக்கறைகளும்...
எனது காரியங்களிலொன்றோடு
உங்களில் ஒருவர்
இணங்கிப் போக முதயாத கணத்தில்
உடையத் தொடங்கும்
பெரும் பாதுகாப்பின்மையை
என்னுள் உறுதி செய்தபடி’’
திருமணத்துக்குப் பிறகு சல்மா கவிதை எழுதாமல் ரொம்ப நல்லப் பெண்ணாய் செக்குமாட்டு வாழ்க்கைக்குத் தயாராகிவிட்டார் என்றுதான் குடும்பத்தினர் நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால், நடந்ததோ வேறு.
“என்னால் கவிதை எழுதாமல் இருக்க முடியவில்லை. அதனால் யாருக்கும் தெரியாமல் எழுதத் தொடங்கினேன். எழுதிய கவிதைகளை ஒரு துணியில் சுற்றி, பையில் வைத்து ரகசியமாக அம்மாவின் மூலமாக மனுஷ்யபுத்திரனுக்குக் கொடுத்து அனுப்புவேன். மனுஷ்யபுத்திரன் அந்தக் கவிதைகளை பத்திரிகைகளுக்கு அனுப்பி வைப்பார். மனுஷ்யபுத்திரன் முகவரிதான் எனக்குத் தொடர்பு முகவரி. எனக்கு வருகிற கடிதங்கள், பத்திரிகைகள் யாவும் துணியில் சுற்றப்பட்டு, அம்மாவின் மூலமாக மனுஷ்யபுத்திரனிடமிருந்து இரகசியமாக என்னிடம் வந்து சேரும்.’’
இப்படியாக பன்னிரண்டு வருடங்கள் தனது கவிதைகளை இரகசியமாக கடத்தியிருக்கிறார். ‘சல்மா’ என்ற புனைபெயரில் கவிதைகள் வந்து கொண்டிருந்ததால் யாருக்கும் எந்த சந்தேகமும் எழவில்லை.
“புனைபெயர் வைத்துக் கொள்வதில் எப்போதும் எனக்கு விருப்பம் இருந்ததில்லை. திருமணத்துக்கு முன்பு ‘தலாக்’க்கு எதிராக ஒரு கவிதை எழுதியிருந்தேன். இஸ்லாமிய மதவாதிகளால் தஸ்லிமா நஸ்ரின், சல்மான் ருஷ்டி ஆகியோர் அச்சுறுத்தப்பட்ட காலம் அது. ‘சுட்டும் விழிச்சுடர்’ தோழிகள், ஏதாவது புனைபெயரில் இந்தக் கவிதையை வெளியிடலாம் என்று ஆலோசனைக் கூறினார்கள். ஆனால், புனைபெயருக்குள் ஒளிந்து கொண்டு எழுத நான் உடன்படவில்லை. என் பெயரிலேயே வந்தால் வரட்டும். இல்லையென்றால் தேவையில்லை என்று உறுதியாக கூறிவிட்டேன். அந்தக் கவிதை பிரசுரமாகவே இல்லை. ஆனால், திருமணத்திற்குப் பிறகு குடும்பத்திற்குத் தெரியாமல் எழுதியே ஆகவேண்டும் என்கிற சூழலில்தான் புனைப்பெயரை வைத்துக் கொண்டேன்.’’
சல்மா என்கிற புனைபெயரில் வெளிவந்த முதல் கவிதை ‘ஒப்பந்தம்’. அக்கவிதையின் இறுதி வரிகள்:
“முடியுமானால்
உன்னைச் சிறிதளவு அதிகாரம் செய்ய
நான் சிறிதளவு அதிகாரத்தை ஸ்திரப்படுத்திக் கொள்ள
எல்லா அறிதல்களுடனும்
விரிகிறதென் யோனி’’
சமகால தமிழ்ப் பெண் கவிஞர்கள் தங்களின் பாலுறுப்புகள் பற்றி கவிதை புனைவதற்கு உந்துதலாக அமைந்த இக்கவிதை ‘நிகழ்’ இதழில் வெளிவந்தது.
“பெண்ணியம் என்கிற விசயத்தை எனக்கு என் வாழ்க்கைத்தான் கற்றுக் கொடுத்தது. என் அனுபவத்தைத்தான் இயல்பாக எனது கவிதைமொழியில் பதிவு செய்தேன். இக்கவிதை வெளிவந்த காலத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. பிறகு, பல பெண்கவிஞர்கள் பாலுறுப்புகள் சார்ந்த கவிதைகள் எழுத முனைந்தவுடன் என்னுடைய கவிதையைத் தேடி எடுத்து இப்போது விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.’’
சல்மாவின் முதல் கவிதைத் தொகுதி ‘ஒரு மாலையும் ஒவ்வொரு மாலையும்’ காலச்சுவடு வெளியீடாக ஆகஸ்ட் 2000ல் வெளிவந்தது. இத்தொகுப்பில் பெரும்பாலான கவிதைகள் ‘தனிமை’ குறித்தே பேசுகின்றன.
“எனது பெரும்பாலான கவிதைகளில் பாடுபொருளாகத் தனிமை மட்டுமே இருப்பதும், குறிப்பிட்ட சில புள்ளிகளைச் சுற்றியே கவிதைகள் உருவாகியிருப்பதும் அலுப்பூட்டுவதாக இருக்கலாம். திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம் உங்களுக்கு ஏற்படும் சங்கடத்திலிருந்தே இக்கவிதைகளை நீங்கள் அடையக்கூடும்.’’
ஒரு சராசரி இஸ்லாமிய பெண்ணுக்கான கட்டுப்பாடுகளோடு வீட்டுக்குள்ளே தனிமையில் தகித்துக் கொண்டிருந்த சல்மா, 2001 செப்டம்பரில் நடைபெற்ற ஊராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டு, இப்போது ஊராட்சி மன்றத் தலைவராக இருக்கிறார். இது எப்படி சாத்தியம்?
சல்மாவின் கணவர் மாலி, அந்தப் பகுதியில் செல்வாக்கானவர். அவர் தேர்தலில் வெற்றி உறுதி என்கிற நிலை. ஆனால், அந்தத் தொகுதி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. அதனால், தன் மனைவியை பெயரளவுக்கு வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெற்றிருக்கிறார்.
ஓர் அதிசயம் என்னவென்றால், முன்பு எந்தப் பெண்ணின் பெயர் பத்திரிகையில் அச்சானதற்காக இழிவாகப் பேசினார்களோ, அதே பெண்ணின் பெயரை மட்டுமல்ல, அவரது புகைப்படத்தையும் அச்சிட்டு ஊரெல்லாம் போஸ்டர் ஒட்டியிருக்கிறார்கள். யாரை வீட்டு விட்டு போகக்கூடாது என்று கண்டித்தார்களோ அவரை வீடு வீடாக அழைத்துச் சென்று ஓட்டுக் கேட்க செய்திருக்கிறார்கள். இவை மட்டுமல்ல, மேடையேறி பேசவும் வைத்திருக்கிறார்கள். பத்திரிகைகளில் பேட்டிக்கு அனுமதித்திருக்கிறார்கள். நடப்பதெல்லாம் கனவா, நனவா என திக்குமுக்காடி கொண்டிருந்த சூழலில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.
ஒரு நவீன பெண் கவிஞர் முதன் முதலாக ஊராட்சி மன்றத் தலைவராக வெற்றி பெற்றிருப்பதை அறிந்து தமிழ் இலக்கிய உலகம் மகிழ்ந்து கொண்டாடியது. ‘விகடன்’ அவரது பேட்டியை வெளியிடுகிறது. அந்தப் பேட்டி வெளிவந்த பிறகுதான், ரெக்கையாவுக்கு ‘சல்மா’ என்று இன்னொரு பெயர் இருப்பதும், இவர் தொடர்ந்து கவிதை எழுதிக் கொண்டிருப்பதும் கணவருக்குக்கூட தெரியவருகிறது. ஆனால், விளைவு முன்பு போல பயப்படும் படியாக இல்லை.

மாறாக, கவிஞர் என்கிற அடையாளம் அதிகாரத்திற்கு கூடுதல் அங்கீகாரமாகி விட்டது. அதிகாரிகள் கௌரவத்துடன் நடந்து கொள்ளும் சூழலையும் ஏற்படுத்தி இருக்கிறது. ஆனாலும், பொது வாழ்க்கையில் ஈடுபடும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை இவரும் சந்திக்கத்தான் வேண்டியிருந்தது.
ஊராட்சி ஒன்றிய தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, ‘நந்தன்’ இதழில் இவருடைய ‘ஒப்பந்தம்’ கவிதையின் கடைசி ஆறு வரிகளான
“முடியுமானால்
உன்னைச் சிறிதளவு அதிகாரம் செய்ய
நான் சிறிதளவு அதிகாரத்தை ஸ்திரப்படுத்திக் கொள்ள
எல்லா அறிதல்களுடனும்
விரிகிறதென் யோனி’’
வெளியிட்டு, பெண் கவிஞர்கள் இப்படியெல்லாம் யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் என பெருமைபடுத்தும் வகையில் வெளியிட்டிருந்தார்கள். விளைவு சல்மாவுக்கு அவரது துவரங்குறிச்சிப் பகுதியில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி விட்டது. அந்த வரிகளை அடிக்கோடிட்டு, “இப்படியொரு கேவலமான பெண் நமது பஞ்சாயத்து தலைவராக இருக்கலாமா?’’ என்று எழுதி, அதை ஏராளமாக ஜெராக்ஸ் எடுத்து துவரங்குறிச்சி முழுவதும் வீடுகளிலும் கடைகளிலும் ஒட்டியிருக்கிறார்கள்.
“இது நிச்சயமாக என் மீது வெறுப்பு கொண்ட இஸ்லாமியர்களின் செயல்தான். இந்தச் செயலுக்காக எனக்கு வருத்தம் ஏதுமில்லை. ஏனென்றால், அது என்னுடைய கவிதைதானே. ஆனாலும், அது சரியாகப் புரிந்துகொள்ளப் படவில்லை. நான் வேறு நோக்கத்தில் பழி தீர்த்துக் கொள்ளப்பட்டேன். என் குடும்பத்தினர் ரொம்பவே கலங்கிப் போனார்கள்’’ என்று கலங்குகிறார்.
சல்மாவின் இரண்டாவது கவிதைத் தொகுதி ‘பச்சை தேவதை’ 2003ல் ‘உயிர்மை’ வெளியீடாக வந்துள்ளது. இத்தொகுதியில் தனிமையிலிருந்து விடுபட்ட சற்று விசாலமான மனஉலகை காணமுடியும்.
“வாகனம் கடக்கிற பாதையில்
கவிந்து கொண்டிருக்கிற
பயிரின் மணத்துடன்
தன் கழிவின் நாற்றத்தைப் பரப்பும்
தூரத்துத் தொழிற்சாலை...
என் விருப்பங்களை கனவுகளை
உடலின் வனப்புகளை
காலம் கொத்தித் தின்னுவதே போல
சாலையில் பரப்பிய தானியங்களை
சாவகாசம் கொள்ள வழியற்ற பறவைகள்
மிதந்து மிதந்து கொத்தும்...
மாறி மாறித் தொடர்கிற காட்சிகளோடு
இணைந்துகொள்கிறது இப்பயணம்...’’
கவிதைகள் மட்டுமல்லாமல், சிறுகதைகள், நாவல், விமர்சனம் என பல்வேறு பரிமாணங்களில் செயல்படத் தொடங்கியிருக்கிறார்.
‘இரண்டாம் ஜாமங்களின் கதை’ இவரது முதல் நாவல் இப்போது வெளிவந்திருக்கிறது.
சமீபத்தில் தில்லியிலுள்ள ஐ.எஸ்.எஸ். அமைப்பின் ஏற்பாட்டில் பாகிஸ்தான் சென்று திரும்பியுள்ள இவர், தனது பயண அனுபவங்களை ஓர் இதழில் தொடராக எழுதியுள்ளார்.
இவரது கதைகளும், விமர்சனங்களும், பாகிஸ்தான் பயண அனுபவத் தொடரும் தொகுக்கப்பட்டு தனித்தனி நூல்களாக விரைவில் வெளிவர இருக்கின்றன. அவை வெளியான பிறகு சல்மா பற்றிய முழுமையான தோற்றம் கிடைக்கும்.

இவர் கோப்புகளில் மட்டுமே கையெழுத்துப் போடுகிற பெண் ஊராட்சித் தலைவராக இல்லாமல், செயல்படுகிறவராகவும் இருக்கிறார். மக்கள் பிரச்னைகளை அறிவது, அதிகாரிகளை சந்திப்பது, வெளியூர்களுக்குப் பயணம் செல்வது என வீட்டுக்குளிலிருந்து விடுதலையாகி இருக்கும் சல்மாவின் இந்தச் சூழல் தனது படைப்பு வெளியிலும் பிரதிபலிக்கிறது.
“கசங்கிய அரைக்கால் உரை தரித்து
நாசியை எக்கும் நாற்றம் பருகியபடி
குப்பை சுமப்பான்.
எத்தனையாவது பரம்பரையென
என்னைப் போன்றே தானும் அறியாதபடி
சுத்தத்திற்கும் அசுத்தத்திற்கும்
இடையிலான தூர்ந்துபோன வேறுபாடுகளுடன்
நான் விலக்கிச் செல்கிற இடங்களையே
வசிப்பிடமாக்கிக் கொள்கிறான்.
என் வீட்டுக் குப்பைகளை அள்ளும் தருணத்தில்
சூல்கொள்ளாது உடைந்த
என் கருமுட்டைகளின் கறைபடிந்த
நாப்கினைக் கண்டு
என்ன நினைத்துக் கொள்கிறானோ என
நடுங்கிக் கூசும் என் கருப்பை.’’
“முன்பு வீட்டுக்குள்ளேயே முடங்கிப் போன வாழ்க்கை. அதனால் நிறைய எழுத நேரமிருந்தது. ஆனால், இப்போது எழுதுவதற்கான நேரம் குறைந்திருந்திருக்கிறது. ஆனால், புதிய புதிய அனுபவங்கள் நிறைய கிடைத்துள்ளன. இந்த அனுபவங்கள் அவகாசம் கிடைக்கும்போது படைப்புகளாகலாம்.’’
அத்தகைய படைப்புகளை எதிர்பார்ப்போம்.
சூரியசந்திரன்
பெண்ணே நீ, ஏப்ரல் 2005
கருத்துகள்
கருத்துரையிடுக