ஆதரவுக் கரம் எங்கிருந்து நீண்டாலும், அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்: இலக்கிய விமர்சகர் தி.க.சிவசங்கரன் நேர்காணல்

Thi. Ka. Sivasankaran - Wikipedia


லக்கிய விமர்சகர் தி.க.சி.க்கு வருகிற மார்ச் மாதம் 80ஆவது வயது தொடங்குகிறது. இவர், திருநெல்வேலியில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தார். இளவயதில் திரு.வல்லிக்கண்ணன் ஆதரவால் இவரது முதல் சிறுகதை ‘பிரசணட விகடன்’ இதழில் வெளிவந்தது. அதைத் தொடர்ந்து இளந்தமிழன், கலாமோகினி, கிராம ஊழியன், சக்தி, சாந்தி ஆகிய இதழ்களிலும் கவிதைகள், சிறுகதைகள் எழுதினார். பிறகு இலக்கிய விமர்சனத்தில் தீவிர கவனம் செலுத்தினார். இவரது விமர்சனங்கள் மார்க்சிய கண்ணோட்டத்திலானவை. இவர்தம் ‘விமர்சனங்கள் மதிப்புரைகள் பேட்டிகள்’ எனும் விமர்சன நூலுக்காக 2000ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருதைப் பெற்றார்.

1944ல் நெல்லையில் வங்கி காசாளர் வேலையில் சேர்ந்த இவர், தொழிற்சங்கப் பணியில் ஈடுபட்டதனால் நெல்லையிலிருந்து சென்னை, கொச்சி ஆகிய இடங்களுக்கு மாற்றப்பட்டார். மாற்றப்பட்ட இடங்களிலும் தொழிற் சங்கப் பணியை விடாது தொடர்ந்து கொண்டிருந்தார். பின், 1964ல் அவ்வேலையை ராஜினாமா செய்துவிட்டு, சென்னை ‘சோவியத் நாடு’ அலுவலகத்தில் பத்திரிகையாளர் பணியை ஏற்றார். அப்பணியில் 25 ஆண்டுகாலம் இருந்தார். இடையில் 1965- - 72 காலகட்டத்தில் ‘தாமரை’ இதழின் ஆசிரியர் பணியையும் ஏற்று, 100 இதழ்களைச் சிறப்பாகக் கொண்டு வந்தார். 1990ல் மீண்டும் திருநெல்வேலிக்குச் சென்று வசித்து வரும் தி.க.சி. சமீபத்தில் எஸ்.பொ.வின் விருதைப் பெறுவதற்காக சென்னைக்கு வந்திருந்தார்.

தி.க.சி. ஏற்றுக்கொண்டிருக்கிற சித்தாந்தத்திற்கு நேர் எதிரான சிந்தாந்த நிலைபாடு கொண்டவர் ‘எஸ்.பொ.’ என்று அழைக்கப்படுகிற திரு. எஸ்.பொன்னுதுரை அவர்கள். அவரது விருதினை தி.க.சி பெறுகிறார் என்பதே இடதுசாரிகள் மத்தியில் முணுமுணுப்பை ஏற்படுத்தியது. அது பற்றி தி.க.சி.யிடமே கேட்டுவிடலாம் என்று, விருது வாங்குவதற்காக சென்னைக்கு வந்திருந்த அவரைச் சந்தித்து அது பற்றி கேட்டறிந்தோம்.

இனி அவருடன்...

எஸ்.பொ.வின் ‘தமிழ் இலக்கியம் 2004’ கௌர விப்பை இந்த 79ஆவது வயதில், திருநெல்வேலி யிலிருந்து சென்னைக்கு வந்திருந்து பெற்றிருக் கிறீர்கள். உங்களின் இந்த அணுகுமுறை வியப்பாக இருக்கிறதே!

நவம்பர் 26 - எஸ்.பொ. நினைவு நாள்: ஈழ ...

நான் ‘தாமரை’ இதழின் ஆசிரியராக இருந்த காலத் தில் (1965-72) முற்போக்கு கலை இலக்கிய வளர்ச்சிக்காக மேற்கொண்ட பணிகள் எஸ்.பொ.வுக்குப் பிடித்திருக்கிறது. அதனால் என்னை சிறப்பிக்க வேண்டுமென்று அவர் நினைத்திருக்கிறார்.

அதுபோல ‘சரஸ்வதி’ இதழை நடத்திய விஜயபாஸ்கரன், பல்வேறு இதழ்களில் பணியாற்றிய முதுபெரும் எழுத்தாளர் வல்லிக்கண்ணன், ‘வாசகர் வட்டம்’ லட்சுமி கிருஷ்ணமூர்த்தி, மூத்த ‘மணிக் கொடி எழுத்தாளர்’ சிட்டி, இலங்கை ‘மல்லிகை’ இதழாசிரியர் டொமினிக் ஜீவா இவர்களை எல்லாம் அழைத்து சிறப்பித்திருக்கிறார்.

நாம் செய்திருக்கிற நல்ல காரியங்களுக்கு ஆதரவுக் கரம் எங்கிருந்து நீண்டாலும், அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்த வழியில்தான் கலை இலக்கியத் துறையில் ஐக்கிய முன்னணி அமைக்க முடியும் என்று நினைக்கிறேன்.


எஸ்.பொ. என்னை அழைத்திருக்கிற இன்றைய வரலாற்றுச் சூழலை கவனத்தில் கொள்ளாமல் அவருடைய கடந்த காலத்தை இப்போது புரட்டிப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய தேவையில்லையென்றே நினைக்கிறேன்.

‘தாமரை’யில் நீங்கள் ஆசிரியராக இருந்த காலத்தை ‘தமிழ் இலக்கிய வரலாற்றில் பொற் காலம்’ என்று பிரபஞ்சன் வர்ணித்திருக்கிறார். ‘தி.க.சி. வளர்த்துவிட்ட பிள்ளைகள் நாங்கள். அவர் இல்லையென்றால் இன்றைக்கு இருக்கும் எழுத்தாளர்களில் பலர் நமக்குக் கிடைத்திருக்க மாட்டார்கள்’ என்று பூமணி உருக்கமாக ஒரு நேர்காணலில் குறிப்பிட்டார். கந்தர்வனை நீங்கள் தான் கட்டாயப்படுத்தி கதையெழுத வைத்திருக் கிறீர்கள். இளம் படைப்பாளிகளை வளர்த்தெடுப் பதில் உங்களுக்கிருக்கும் தாயுள்ளம்... அது எப்படி வாய்த்தது?

பாட்டாளிகளின் தோழன் ஜீவா! | Communist Jeeva ...

ஜீவாவின் வழிகாட்டுதலும், பொதுவுடைமை தத்துவமும், இயக்கமும், தொழிற்சங்க ஈடுபாடும்தான் இதற்குக் காரணம். தோழர் ஜீவா சிறந்த பொதுவுடைமை இயக்கத் தலைவராக இருந்தபோதிலும் எல்லோருடனும் தோழமையுடன் பழக் கூடியவராக இருந்தார். கட்சி அட்டை இருக்கிறதா என்று அறிந்துகொண்டு தோழமை கொள்கிற பழக்கம் அவருக்கு இல்லை. எதிரான கருத்து கொண்டவர்களையும் மனித நேயத்தோடு அணுகக் கூடியவர். அவர்களோடு மனம் திறந்து விவாதிக்கக் கூடியவர். அவரே ஒரு படைப்பாளியாக இருந்ததால், சக படைப்பாளிகளை வழிநடத்துகிற பண்பு அவரிடம் இயல்பாகவே இருந்தது. மாற்றாரும் மதித்துப் போற்றும் பண்பாளராக அவர் இருந்தார்.

நீங்கள் ‘தாமரை’யில் ஆசிரியராக இருந்த காலத்தில் குறிப்பிடும்படியாக என்னென்ன விசயங் களைச் செய்தீர்கள்?

நான் சம்பளத்துக்கு சோவியத் செய்தித் துறையில் வேலை செய்துகொண்டு, இலக்கியப் பணியாக ‘தாமரை’ யின் ஆசிரியராக இயங்கினேன். பல்வேறு இலக்கிய அமைப்புகளுடனும் ‘கண்ணதாசன்’, ‘எழுத்து’, கோவை ‘வானம்பாடிகள்’, ‘இலக்கிய வட்டம்’ போன்ற இதழ்களுடனும் எனக்கு நேரடியான தொடர்பிருந்தது. அங்கிருந்தெல்லாம் இளம் படைப்பாளிகளை இனம் கண்டு அவர்களை ‘தாமரை’யில் எழுத வைத்தேன்.  ஒரு கதை ‘தாமரை’க்கு வருகிறதென்றால், அந்தக் கதையை உடனடியாக படித்து, அது பிரசுரிக்க தகுதியானது என்றால், உடனே அந்தத் தகவலைக் கடிதம் மூலம் தெரிவித்து விடுவேன். திருத்தம் செய்ய வேண்டும் என்றாலோ, அல்லது பிரசுரிக்க இயலாது என்றாலோ அதை விவரித்து எழுதி, வேறு கதை அனுப்பச் சொல்லி கேட்பேன். இத்தகைய அணுகுமுறைதான் எழுத்தாளர்களை வளர்க்க காரணமாக இருந்தது. கரிசல் மலர், வியட்நாம் மலர், சிறுகதைச் சிறப்பு மலர், மொழிபெயர்ப்பு இலக்கிய மலர் என பல மலர்களை வெளியிட்டோம். முக்கியமான படைப்பாளிகள் இந்த மலர்களைத் தயாரித்தார்கள்.

இடதுசாரி இலக்கியவாதிகளிடம் பாரதியார் பற்றிய சரியான புரிதல் இருந்த அளவுக்கு பாரதிதாசன் பற்றிய புரிதல அப்போது இல்லை. அந்நிலையை ‘தாமரை’ மூலம் மாற்ற முயற்சித்தோம்.
புதுக்கவிதை வடிவம் அப்போதுதான் அறிமுகமாகி இருந்தது. அந்த வடிவத்தை பொதுவுடைமைக் காரர்கள் ஏற்றுக் கொள்வதில் தயக்கம் காட்டினர். புரட்சிகர கருத்துகளைச் சிறப்பாகச் சொல்லக்கூடிய புதுக்கவிதைகளை வெளியிட்டோம்.
பல சாதனையாளர்களின் படங்களை ‘தாமரை’ அட்டையில் வெளியிட்டு சிறப்பித்தோம். அன்றைய கட்சித் தலைமை எனது இந்தப் பணிக்கு மிகவும் ஆதரவாக இருந்தது என்பதை நன்றி உணர்வோடு குறிப்பிட வேண்டும்.

தமிழில் குறிப்பிடும்படியான இலக்கிய விமர்சகராக இருக்கிறீர்கள். உங்களது ‘விமர்சனங்கள் மதிப்புரைகள் பேட்டிகள்’ நூலுக்கு ‘சாகித்ய அகாதமி’ விருதும் கிடைத்திருக்கிறது. தமிழ் இலக்கிய உலகுக்கு ஒரு சிறுகதை எழுத்தாளராக அறிமுக மான நீங்கள் இலக்கிய விமர்சகராக மாறியது எப்படி?

இலக்கிய உலகத்துக்கு என்னை அறிமுகப்படுத்திய பெருமை மதிப்பிற்குரிய என் வழிகாட்டி வல்லிக்கண்ணன் அவர்களையே சாரும். அவர்தான் என்னுடைய சிறு கதையை ‘பிரசண்ட விகடன்’ இதழுக்கு அனுப்பி, பிரசுரமாகச் செய்தவர்.

வல்லிக்கண்ணன் - தமிழ் விக்கிப்பீடியா

வல்லிக்கண்ணன் இன்றைய வணிக இலக்கியச் சூழலில் ஆத்மாவை விலை பேசாத அபூர்வ மனிதர்களில் ஒருவர். ஆகவே, இன்றளவும் எனது மதிப்பிற்குரிய தோழராகவும் வழிகாட்டியாகவும் விளங்கி வருகிறார்.

தமிழர் வரலாறும் பண்பாடும் | நா ...

இவரைப் போலவே, பேராசிரியர் நா.வானமாமலை அவர்களும், முற்போக்கு கலை இலக்கியத் துறையில் நான் மறக்க முடியாத ஆசான்களில் ஒருவர். அவர்தான் கவிதைகளையும், சிறுகதைகளையும் எழுதிக் கொண்டிருந்த என்னை 1952ல் விமர்சனத் துறையில் ஈடுபடச் செய்த முக்கிய காரணி.
க.நா.சு. போன்றவர்கள் ‘கலை கலைக்காகவே’ என்ற கோஷத்தை உரக்க எழுப்பி, அணி திரட்டிக் கொண்டிருந்த காலகட்டத்தில் ‘கலை மக்களுக்காகவே’ என்ற கருத்தை முன் வைத்து கருத்தியல் போராட்டம் நடத்த வேண்டியது அவசியம் என்றும், முற்போக்குப் படைப்பாளிகளை இனம் காண வேண்டும் என்றும் என்னிடம் எடுத்துக் கூறி என் விமர்சனப் பணிக்குத் தடம் அமைத்துக் கொடுத்தவர் அவரே.

நீங்கள் அறிமுகப்படுத்தியுள்ள ‘இலக்கிய பஞ்சசீலக் கொள்கை’ பற்றி?

90க்குப் பிறகு தமிழியம், பெண்ணியம், தலித்தியம், சுற்றுச் சூழலியம், மார்க்சியம் இவற்றின் அடிப்படையில் மூத்தப் படைப்பாளிகளும், இளம் படைப்பாளிகளும் நிறைய படைப்புகளை கலை அம்சத்துடன் வெளியிட்டு வருகிறார்கள்.

இன்றைய உலகமயமாக்கல் நுகர்வு கலாச்சார சூழ்நிலையில் இத்தகைய படைப்புகள் ஒரு புதிய மாற்று கலாச்சாரத்தை, மாற்று உலகத்தை உருவாக்கப் பெரிதும் துணைபுரியும் என்று நம்புகிறேன்.

மேற்கூறிய பஞ்சசீலக் கொள்கையின் அடிப்படையில் இவர்கள் எந்தத் தரப்பிலிருந்து வந்தாலும், அவர்களை நட்புறவுடன் அணுகி பாராட்டி, ஆக்கப்பூர்வமாக வளர்த்தெடுப்பது முற்போக்குக் கலை இலக்கிய படைப் பாளிகள் மற்றும் அமைப்புகளின் நீங்கா கடமை ஆகும்.

இன்றைய கால கட்டத்தில் ஒரு படைப்பாளி என்பவன் உண்மை, நீதி, விடுதலை, சமத்துவம், சமுதாய முன்னேற்றம் இவற்றுக்காக அயராது பணியாற்றும் போராளியாகவும் இருக்கவேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.

இக்கால இளம் படைப்பாளிகளுக்கு நீங்கள் தெரிவித்துக் கொள்ள விரும்புவது?

தமிழ்நாட்டு இலக்கியவாதிகள் தங்களை முதலில் தமிழன் என்று சொல்லிக்கொள்வதில் வெட்கப்படத் தேவையில்லை. நாம் நமது மொழியை, நம் இலக்கியத்தை நேசிப்பதில் என்ன தவறு! நமது மூவாயிரம் ஆண்டுகால மரபை விட்டுவிடத் தேவையில்லை. சங்க இலக்கியங்களைப் படியுங்கள். பாரதி, பாரதிதாசனை அவசியம் படியுங்கள். ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் வந்திருக்கும் படைப்புகளை பட்டியலிட்டு படியுங்கள். தொடர்ந்து படித்துக் கொண்டே இருங்கள். தொடர்ந்த படிப்பு இல்லை யென்றால், எதிர்க் கருத்துக் கொண்டவர்களை எதிர் கொள்வது கடினம். தலித்தியம், பெண்ணியம், சூழலியம் மூன்றிலும் முக்கிய கவனம் செலுத்துங்கள். தலித்துகள் சாதிக் கொடுமைகளுக்கு உட்படுகிறார்கள் என்பதை உணருங்கள்.

பிரச்சினைகளின் அடிப்படையில் ஒன்று சேருங்கள். மக்களிடமிருந்து அந்நியமாகி, மேலை நாட்டு விசயங்களின் தாக்கங்களில் எழுதிக் கொண்டிருப்பவர் களிடம் எச்சரிக்கையாக இருங்கள். நையாண்டி இலக்கிய வகையில் கவனம் செலுத்துங்கள்.
அந்தந்தப் பகுதி மக்களைப் பற்றி எழுதுங்கள். கலை அம்சத்தோடு எழுதுங்கள். எல்லா பத்திரிகைகளிலும் எழுதுங்கள். எந்தப் பத்திரிகைகளிலும் உங்கள் குரல், உங்கள் முகம் இருக்கட்டும். தமிழ்நாடு, இந்தியா, உலகம் என விரிந்த பார்வை கொள்ளுங்கள்.

புதிய சக்திகளை, புதிய ரத்தம் பாய்ச்சுபவர்களை வரவேற்கிறேன். மாற்று உலகமும், மாற்று கலை இலக்கியமும் சாத்தியமே.

சந்திப்பு : சூரியசந்திரன்
   
புதிய புத்தகம் பேசுது,
 2004

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சங்க இலக்கியம் முதல் பெண் கவிஞர்கள் : பத்மாவதி விவேகானந்தன் நேர்காணல்

எனது கதைகள் வரலாற்று ஆவணங்கள்: மேலாண்மை பொன்னுச்சாமி நேர்காணல்

கவிஞர் அறிவுமதி பாடலாசிரியரான கதை