கருப்பு எருமை, கருப்பு காக்கை, கருப்பு மனுசன் : ஓவியர் விஸ்வம் நேர்காணல்


Galerie de Arts ::

த்திரிகைகளில் ஓவியம் வரைவதன் மூலமாகப் பரவலாக கவனிப்பைப் பெற்றவர் ஓவியர் விஸ்வம். இவரது ஓவியங்களில் காக்கையும் மாடும் நிச்சயம் இடம்பெற்றிருக்கும். இவையே அரவது அடையாளமாகவும் குறியீடாகவும் இருந்தன. பின்னர் அரூப (உருவமற்ற) ஓவியங்களுக்கு மாறிவிட்டார். ஏராளமான ஓவியக் கண்காட்சிகளை நடத்தி வருகிறார். விஸ்வத்தின் சொந்த ஊர் திருச்சி. இப்போது சென்னைவாசி. “பசுமையான இயற்கைச் சூழலில் வளர்ந்ததால் தனது ஓவியங்களில் இயற்கை அழகு நிறைந்திருக்கிறது’’ என்கிறார். சமூக அவலத்தின் சாட்சியங்களாக இவரது பல ஓவியங்கள் உள்ளன. குளிரூட்டப்பட்ட நான்கு சுவர்களைத் தாண்டி நடுவீதிக்கு வந்து பாமரர்களையும் சென்று சேர்ந்துவிட்டவை இவரது ஓவியங்கள். இவர் தனது ஓவிய அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

உங்கள் ஓவியங்கள் பலவற்றில் மாடும், காகமும் தொடர்ந்து இடம் பெறுகின்றனவே, அவை உங்களின் குறியீடுகளா?

இது என் அனுபவம் சார்ந்த விசயம். என் பள்ளி நாட்களில் பள்ளிக் கூடத்திலிருந்து திரும்பி வீட்டுக்கு வந்தவுடன் எருமை மாட்டை ஓட்டி வரப் போவேன். மேய்ச்சலுக்காக நீண்ட கயிறில் அதைக் கட்டியிருப்பார் அப்பா. சுற்றிச் சுற்றி மேய்ந்ததால் கயிறு முறுக்கேறி கழுத்தை நெறித்துக்கொண்டு நிற்கும். அந்த முறுக்கை எடுத்துவிட்டு, கயிற்றை அதன் கழுத்தில் சுற்றிவிட்டு அதன் மேலே ஏறிக்கொள்வேன். அது ஓடை புதைமணலிலும் சுடுகாட்டிலும் ஏறிவரும். இப்படி எனக்கு வினவு தெரிந்த காலத்திலிருந்த நான் பார்த்ததெல்லாம் கருப்பு எருமை, கருப்பு காக்கா, கருப்பு மனுஷன் இவங்களைத்தான். இவங்கதான் என் அடையாளம்.
ஒரு காக்கா, கத்தி எடுத்துக்கிட்டு போய் கொடுத்திடாது. துப்பாக்கி எடுத்து சுட்டுடாது. இப்படியெல்லாம் நடக்கிறதே என்று சாட்சிபூர்வமாக பார்த்துக் கொண்டிருக்கும். அப்படித் தான் நான் காக்கை மாதிரி கவனித்துக் கொண்டிருப்பேன். மாடு மாதிரி அசை போட்டுக் கொண்டிருப்பேன். என் ஓவியங்கள் அரசியல் பேசும்.

உங்களுடைய ஆரம்ப கால ஓவியங்களில் உருவங்கள் இருந்தன. இப்போது அரூப ஓவியங்களுக்கு மாறி விட்டீர்களே...?

என் ஓவியங்களைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பவர்களால் ஒரு விசயத்தை அறியமுடியும். அதாவது, என் ஓவியங்களை வரிசைப்படுத்தினால், ஒரு படத்துக்கும் அடுத்த படத்துக்கும் தொடர்பு இருக்கும். ஆனால், முதல் படத்துக்கும் கடைசி படத்துக்கும் தொடர்பு இருக்காது. ஆரம்பத்தில் உருவம் சா£ந்த விஷயங்களை வரைந்து கொண்டிருந்தேன். அப்போது ஏதோ ஒன்று ஓவியத்தைத் தடுப்பதாகத் தோன்றியது. அதனால் உருவத்தை  தவிர்த்துவிட்டு வரையத் தொடங்கினேன். உருவம் உள்ளவை எனக்கான விஷயமாகவும் அது விலகி விடுகிறபோது மற்றவர்களுக்கான விஷயமாகவும் ஆகிவிடுகிறது.

அரூப ஓவியங்களின் உள்ளடக்கமே பிடிபடவில்லை. ஓவியங்களுக்கப் பெயர் வைக்கப்படுவதும் இல்லை. பின் எப்படி அதைப் புரிந்து கொள்வது?

கலை என்பது அவரவர் அனுபவத்திற்கேற்பவே தன்னை வெளிப்படுத்தும். எந்த ஓவியமும் ஒரே மாதிரியான புரிதலை எல்லா மனிதரிடமும் ஏற்படுத்தி விடாது. யாராவது ஒருவர் அவர் சம்பந்தப்பட்டதாக இருக்கும்போது அதில் லயிப்பார், காலச் சூழற்சியில் ஒன்றை புரிந்துகொண்ட ஒருவர் அந்த இடத்தை விட்டு நகரும்போது புரியாத ஒருவர் அந்த இடத்துக்குள் வருவார். பிறகு அவருக்கும் புரியவரும். எல்லாம் பயிற்சிதான். எத்தனை பேருக்குப் புரிந்தது என்பதைவிட சம்பந்தப்பட்ட ஒருவரையாவது சென்றடைந்திருக்கிறதா என்பதுதான் முக்கியம்.
அடுத்து, ஓவியத்துக்குப் பெயர் என்பது பார்வையாளரை ஒரு விசத்துக்குள்ளே கட்டுப்படுத்திவிடும். அப்படிக் கட்டுப் படுத்தினால், அவர்களின் தேடலும் விரிந்த அனுபவமும் குறை பட்டுப் போய்விடும் என்பதால்தான் நாள் பெயர் வைப்பதில்லை.

உங்கள் ஓவிய முயற்சி எப்போது தொடங்கியது?

சின்ன வயதில் சம்பா, ஆடுபுலி ஆட்டம் விளையாடு வதற்காக கோடு போடுவேன். எனக்கு நேராக கோடு போட வரும் என்பதற்காக என்னைத்தான் கோடு போடச் சொல்வாங்க. அப்போது நான் பயன்படுத்தியது. ஆடுதொடா இலையும் கரிக்கட்டையும்தான். கோயில் சுவர்களில் கரிக்கடையால் படங்களை கிறுக்கியிருக்கிறேன். பதினோறாவது வயதில் ஒரு பெண்ணை ஓவியமாக வரைந்திருக்கிறேன். அந்தப் பெண்ணை இப்போதும் எனக்கு ஞாபகம் இருக்கிறது. பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது ஓவிய வகுப்பில் மட்டும்தான் முதல் வரிசையில் உட்கார்ந்திருப்பேன். மற்ற வகுப்புகளில் கடைசி பெஞ்ச்தான். ஓவியத்தில் இருந்த நாட்டம் படிப்பில் இல்லை. ஓவிய ஆசிரியர் உத்திராபதி என்னிடம்தான் ஓவியங்களைக் கொடுத்து திருத்தச் சொல்வார்.

அப்பாவுக்கு என்னை இன்ஜினியராக்க ஆசை. நான்தான் ஓவியத்தின் பக்கம் வந்துவிட்டேன். எங்க ஊர் டீக்கடை தொழிலாளிதான் ‘கும்பகோணத்திலே ஓவியக் கல்லூரி இருக்கு. அதிலே சேர்ந்து படி’ என்று வழிகாட்டினார். அங்கே சேர்ந்த பிறகுதான் ‘கேம்ளின்’ கலரையே பார்த்தேன். ஓவியக் கல்லூரி கண்காட்சியில் ஒரு வயதானவரை ‘போர்ட்ரைட்’  பண்ணி வைத்திருந்தேன். கண்காட்சியில் இடம்பெற்ற என் முதல் ஓவியம் அதுதான். ஆதிமூலம், ஆர்.பி.பாஸ்கரன், தட்சிணாமூர்த்தி போன்றவர்கள் வந்திருந்தார்கள். என் ஓவியத்தைப் பாராட்டினார்கள்.

அப்போது என்ன மாதிரி வண்ணங்கள் உபயோகப் படுத்தினீங்க?

நான் ஆரம்பத்தில் சோகமான ஓவியங்களையே வரைந்து கொண்டிருந்தேன். சோகங்களைச் சொல்ல கருப்பு வெள்ளைதான் சரியாக இருக்கும் என்று அவற்றை மட்டுமே பயன்படுத்தினேன். கருப்பு வெள்ளையிலிருந்து வண்ணத்துக்கு வந்தபோது, வண்ணங்களை வெள்ளை மென்மையாக்கி விடுவதாலும், வண்ணத்தின் குணத்தைக் கருப்பு குறைத்து விடுவதாலும் கருப்பு, வெள்ளை நிறங்களைக் கலக்காமல் கொஞ்ச காலம் வரைந்தேன்.

நவீன ஓவியங்களின் பக்கம் எப்போது திரும்பினீர்கள்?

First Live Art Show of Andhra Pradesh kick-starts in Guntur ...

நவீனத்தின் பக்கம் என்னைக் கைப்பிடித்து அழைத்து வந்தவர் ஓவியர் தனபால். அவர்தான் ஓவியக் கல்லூரியில் என் ஒவ்வொரு ஓவியங்களையும் பார்த்து, நவீன ஓவியம் வரையத் தூண்டினார். சென்னை கல்லூரிக்கு வந்தபோது எனக்கு ஆசிரியராக இருந்தவர் டாக்டர் அல்போன்ஸா. போர்ட்ரைட்டை இன்னும் எப்படி எளிமைப்படுத்துவது, எந்தெந்த வண்ணங்கள் எதனெதனுடன் சேரும் என்பதையெல்லாம் அவர்தான் செய்து காட்டினார்.
கோடுகள்தான் ஓவியத்துக்கு முதலும் முற்றும் என்பதை கும்பகோணம் கல்லூரி ஓவிய ஆசிரியர் ஹெச்.வி.ராம்குமார் புரியவைத்தார். கோடுகளுக்கும் முந்தையது புள்ளி என்பதை ஆதிமூலம் படங்களைப் பார்த்துதான் புரிந்து கொண்டேன். அவர், கோடுகளை புள்ளியிலிருந்து இழுத்து வந்து சட்டென நிறுத்தி இருப்பார். எந்தக் கோட்டையும் தொடர்ந்து இழுத்துக்கொண்டே வந்திருக்க மாட்டார். அவருடைய தாக்கம் எனக்குள்ளும் உண்டு.

சமூகப் பிரச்னைகளைப் பிரதிபலிக்க நவீனம்தான் சரியான வடிவமா?

ஆமாம். தெருவில் அடிபட்டு சிதைந்து கிடப்பவனையோ, ஓர் ஏழைத் தொழிலாளி சோகமாக உட்கார்ந்திருப்பதையோ நவீன ஓவியங்கள் மூலமாகத்தான் அழுத்தமாகக் கொண்டுவர முடியும்.

எந்தெந்த சம்பவங்களை ஓவியங்களாக வரைந்திருக்கிறீர்கள்?

தாமிரபரணி சோகம், மகாமக உயிர்க்குளியல், ஒரிசா, வியட்நாம் கொடுமைகள், ஈரான் ஈராக் போர் அழிவு, செர்னோபில் அணுஉலை, டெல்லி பாராளுமன்றச் சிதைவு... இப்படியான விசயங்களை வரைந்திருக்கிறேன். என்னுடைய ஓவியங்கள் எல்லைகளைக் கடந்த மனிதநேயத்தை வலியுறுத்தக் கூடியதாகவே உள்ளன.

இலக்கியப் படைப்புக்கு ஓவியம் வரையும்போது அதில் எந்த அளவுக்கு உங்களால் பயணிக்க முடிகிறது?

படைப்பை முழுமையாகப் படித்துவிட்டு, எந்த இடம் என்னைத் தாக்குகிறதோ, அதைத்தான் வரைவேன். எழுத்தாளர் குறிப்பிட்டபடிதான் வரைய வேண்டும் என்பதில்லை.

உங்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்திய ஓவியர்கள்?

வான்கா, காலின் வாழ்நிலையை ரசித்திருக்கிறேன். டாலியின் வித்தியாசமான பார்வை என்னை ஆச்சர்யப்படுத்தி இருக்கிறது. பிகாசோவின் சமூகப் பார்வையை பின்பற்றுகிறேன். இன்னும் ராய் சௌத்ரி, கே.சி.எஸ்.பணிக்கர், தனபால் இப்படி பலர் என்றாலும் ஆதிமூலம்தான் மிகப்பெரிய சந்தோசத்தைக் கொடுக்கக்கூடிய வெளிச்சமாக எனக்குத் தெரிகிறார்.

ஓவியம் சார்ந்த உங்கள் சமூகப் பார்வை விரிவடைக் காரணமாய் அமைந்த சூழல்...?


நா.காமராசன் கவிதைத் தொகுதிக்குப் பாடம் வரைந்தேன். அதற்காக அவரது கவிதைகளை வாசித்தேன். எனக்கு ரொம்பப் பிடித்துவிட்டது. அதற்குப் பிறகு நல்ல இலக்கியங்களைத் தேடிப் படிக்க ஆரம்பித்தேன். பிறகு, எழுத்தாளர்களின் தொடர்பு ஏற்பட்டது. மனிதநேயம் உள்ளவர்களின் நட்பும் கிடைத்தது. நிறைய ஓவியக் காட்சிகளிலும், நிகழ்வுகளிலும் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இவையெல்லாம்தான் என் பார்வையை விரிவடைய வைத்தன. இப்போது எனக்கான விஷயங்களை மட்டுமே தேடுகிறேன். சிலரை அடையாளம் காணுகிறேன். சிலரை என்னிடம் அடையாளப்படுத்துகிறேன். இதனால்தான், பூட்டிய அறையில் அமைதியாக, மேல்நாட்டு சங்கீதத்தைக் கேட்டுக்கொண்டே படம் வரைவது மட்டுமல்ல, இரைச்சல் மிகுந்த பகுதியில் மக்கள் மத்தியில் படம் வரையவும் என்னால் முடிகிறது.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் ‘மக்கள் முன் ஓவியம்’ தீட்டினீர்களே... அந்த அனுபவம் எப்படி இருந்தது? பொதுமக்களின் கருத்து என்னவாக இருந்தது?

நவீன ஓவியங்களை யாரும் புரியவில்லை என்று சொல்லவில்லை. சம்பந்தப்பட்ட ஓவியர்களும் அங்கே இருந்ததால், அவர்களை அழைத்து சந்தேகம் கேட்டனர். நாங்களும் அக்கறையோடு அவர்களை அணுகினோம். அப்போதுகூட உங்களுக்கு என்ன தெரிகிறதோ அதுதான் இந்த ஓவியம் என்றுதான் விளக்கம் சொன்னேன்.

‘ஊர்கூடி ஓவியம்’ எப்படியான அனுபவத்தைக் கொடுத்தது?

இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தோழர்கள்தான். பொதுமக்கள் ஆர்வத்தோடு கலந்து கொள்கிறார்கள். இளம் ஓவியர்களும் கலந்து கொள்கிறார்கள். ஆதிமூலம், சிற்பி தட்சிணாமூர்த்தி, மூக்கையா போன்றவர்களெல்லாம் வந்து வரைகிறார்கள்.

சந்திப்பு : சூரியசந்திரன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சங்க இலக்கியம் முதல் பெண் கவிஞர்கள் : பத்மாவதி விவேகானந்தன் நேர்காணல்

எனது கதைகள் வரலாற்று ஆவணங்கள்: மேலாண்மை பொன்னுச்சாமி நேர்காணல்

கவிஞர் அறிவுமதி பாடலாசிரியரான கதை