புரஸ்கார் விருது பெற்ற பொம்மலாட்டக் கலைஞருக்குப் புகழஞ்சலி!


பொம்மலாட்டத் தந்தை
கலைமாமணி டி.என்.சங்கரநாதன்
(1926 - 2019)

புரஸ்கார் விருது பெற்ற பொம்மலாட்டக் கலைஞர் கலைமாமணி டி.என்.சங்கரநாதன் அவர்கள், கடந்த 2019 டிசம்பர் 28இல் காலமானார்.

92 ஆண்டு காலம் நிறைவாழ்வு வாழ்ந்த அவர், தமது வாழ்வின் அறுபது ஆண்டு காலத்தை மரப்பொம்மைகளுடன்தான் கழித்தார். மரப்பொம்மைகளுடன் வாழும் வித்தையை தன் மனைவி, பிள்ளைகள், பேரன் பேத்திகள் என குடும்பத்தினர் எல்லோரும் கற்றுக் கொடுத்துவிட்டுத்தான் சென்றிருக்கிறார்.

கும்பகோணம் மகாமகக் குளத்தின் மேற்குப் பகுதியில், பழனியாண்டவர் சன்னதி தெருவில் உள்ளது டி.என்.எஸ், பிறந்து, இறுதி காலம் வரை வாழ்ந்த வீடு. நாகேஸ்வரன் கோயில் தெற்கு சந்து இறக்கத்தில் இறங்கியும் அவரது வீட்டுக்குச் சென்றடையலாம்.

1926இல் சங்கரன் பிறந்தபோது, இவ்வீடானது சிறு ஓலைக் குடிசையாக இருந்தது. வீட்டைச் சுற்றிலும் சாக்கடை  நீரோடியது.. தந்தை நன்னையன், நெசவுக் கூலித் தொழிலாளியாக இருந்தார். தாயார் நாமினியம்மாள் சுட்டுத் தரும் இட்லிகளை சங்கரன் எடுத்துச் சென்று விற்றுக் கிடைக்கும் காசுகளும் செலவுக்குத் தேவைப்படும் நிலையில் அந்தக் குடும்பத்தில் வறுமை சம்மணம் இட்டு உட்கார்ந்திருந்தது.

‘தேனே. நன்னையன். சங்கரன்’ என்பதன் சுருக்கமே ‘டி.என்.எஸ்’., ‘தேனே’ என்பது சௌராஷ்டிரர்களில் ஒரு பிரிவினரைக் குறிக்கும் சொல். (டி.எம்.சௌந்தரராஜன் எனும் பெயரில் உள்ள ‘டி’ எனும் எழுத்தும் இத்தகையதே).

‘எம்.ஜி.ஆர் படித்தப் பள்ளி’ எனும் சிறப்புக்குரிய ‘யானையடிப் பள்ளி’யில் ஐந்தாம் வகுப்பு வரையே படித்தார் சங்கரன். அதன் பிறகு சங்கீதத்தில் விருப்பம் ஏற்பட்டு, பிரபல வயலின் வித்துவான் ராஜமாணிக்கம் பிள்ளை,  தமிழ்நாடு (இயல் இசை) நாடக மன்றப் பாடகரான இ.கிருஷ்ண அய்யர்,  டி.எஸ்.ராஜாராமன்,  ஆகியோரிடமும் முறையாக கர்னாடக சங்கீதம் பயின்று, கோயில் விழாக்களில் பாடத் தொடங்கினார்.


அசாத்திய குரல்வளமும், கர்னாடக சங்கீத ஞானமும் ஒருங்கே அமைந்த டி.என்.எஸ். பாடலுக்கு பக்தகோடிகளிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. மேடையை அலங்கரிக்கும்படியான அழகிய உடற்தோற்றமும் கொண்டிருந்தார் அவர்.

ஒரு நாள், கோயில் விழா ஒன்றில் பாடிக்கொண்டிருந்த டி.என்.எஸ்-ன் பாடலை, அந்த வழியாக வந்த பொம்மலாட்டக் கலைஞர் மணி அய்யர் கேட்டு அசந்து போகிறார். அவர் ‘கும்பகோணம் மங்கள கான சபா’ என்றொரு பொம்மலாட்டக் குழுவை அப்போது நடத்திக் கொண்டிருந்தார்.  அந்த கணமே டி.என்.எஸ்ஐத் தன்னுடைய பொம்மலாட்ட சபா-வின் பாடகராக்கிக் கொள்ள முடிவெடுக்கிறார்..

கலைஞர்களை மதிக்கும் திறனுடைய மணி அய்யர், எவ்வித கௌரவமும் பார்க்காமல், டி.என்.எஸ்-ஐத் தேடி அவரது வீட்டுக்கேச் சென்று, தன்னுடைய பொம்மலாட்டக் குழுவிற்குப் பாடிக் கொடுக்கவேண்டும் என்று டி.என்.எஸ்-ஐக் கேட்டுக்கொள்கிறார். டி.என்.எஸ்-ம் அந்த வாய்ப்பைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு மணி அய்யரின் பொம்மலாட்டக் குழுவில் பாடத் தொடங்குகிறார்.
பிறகு, தொடர்ந்து பாடுவதற்கு ஒப்பந்தம் செய்துகொள்கிறார். ஒரு கட்டத்தில், மணி அய்யருக்கு குழந்தை இல்லை என்பதால்  சங்கரனை முறையாகத் தத்தெடுத்துக் கொண்டார்.

ஆனாலும், மணி அய்யருக்கு உடல்நலம் பாதித்தபோது, அவருடைய ‘கும்பகோணம் மங்கள கான சபா’வின் நிர்வாகமானது அவரது தம்பி மகனான ஸ்ரீநிவாச ஐயருக்குத்தான் கைமாறியது. அவர் டி.என்.எஸ்-ஐ அலட்சியமாக நடத்தியிருக்கிறார். தான் ஓர் அய்யர் என்கிற கர்வத்தோடு அவர் நடந்து கொள்வதாக டி.என்.எஸ் தனது பிள்ளைகளிடம் சொல்லி வருத்தப்பட்டிருக்கிறார்.

இந்த காலகட்டத்தில், டி.என்.எஸ்.-க்கு பாமா எனும் பெண்மணியுடன் மிகஎளிமையாக சுவாமிமலை சுவாமிநாத சுவாமி  கோயிலில் திருமணம் நடைபெற்றது. குழந்தைகளும் பிறந்துவிட்டனர். குடும்பத்தை நடத்தும் அளவிற்கு வருமானம் இல்லாமல்  சிரமப்பட்டார் டி.என்.எஸ்.

பெருங்கொடுமையாக, டி.என்.எஸ் மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். மாலை நேரமானால் அவரின் கண்கள் பார்வை இழந்துவிடும். அந்நோய் மெல்ல முற்றி, பார்க்கும் திறனை முழுமையாக இழந்துவிட்டார்.

“மாலைக்கண் நோய் இருப்பதை என்னிடம் சொல்லாமலே திருமணம் செய்து வைத்துவிட்டார்கள்’’ என்று இப்போதும் குமுறுகிறார் டி.என்.எஸ்.ஸின் துணைவியார் பாமா அம்மையார். அவருக்கு திருமணமானபோது வயது பதினைந்து; டி.என்.எஸ்.ஸுக்கோ முப்பத்தைந்து. வயது. (இவருக்கு ஏற்கெனவே ஓர் உறவுக்காரப் பெண்ணுடன் திருமணமாகி சில மாதங்களிலேயே மணமுறிவு ஏற்பட்டுவிட்டது. அந்தப் பெண்மணிக்கு குழந்தை ஏதும் இல்லை.) பார்வையற்ற நிலையிலேயே டி.என்.எஸ், பொம்மலாட்ட நிகழ்ச்சிகளில் பாடிக் கொண்டிருந்திருக்கிறார்.

பார்வையற்ற கணவன், சின்னஞ்சிறு குழந்தைகள், வருமானப் பற்றாக்குறை... இந்தச் சூழல் டி.என்.எஸ்.-ஐவிட அவரது துணைவியாரையே அதிகமாக பாதித்தது.

இந்த நெருக்கடியான சூழல்தான், பாட்டு மட்டுமே பாடிக்கொண்டிருந்த டி.என்.எஸ்-ஐ ஒரு பொம்மலாட்டக் குழுவை உருவாக்குவதற்கான கட்டாயத்திற்குத் தள்ளியது. அதற்கான யோசனையை முன்மொழிந்தவர் டி.என்.எஸ்-ன் நீண்ட கால நண்பரும் ‘புல்புல்தாரா’ இசைக் கலைஞரும் வங்கி ஊழியருமான ஜி.பாலவேலாயுதம் அவர்கள். அவரின் ஆலோசனையை வழிமொழிந்தவர் மிருதங்கக் கலைஞர் பட்டீஸ்வரம் செல்லையா அவர்கள்.

அதுவரை, அப்படியொரு எண்ணமே டி.என்.எஸ்-க்கு இருந்ததில்லை. “பார்வைத் திறனற்ற என்னால் எப்படி ஒரு பொம்மலாட்டக் குழுவை உருவாக்கி நடத்த முடியும்?’’ என்று, அப்போதும் அவர் தயங்கியிருக்கிறார். அவ்விரு நண்பர்களும் அவருக்குத் தோள் கொடுக்கத் தயாராக இருப்பதாக தைரியம் அளிக்கவே, அதற்கான வேலையில் மும்முரமாக இறங்கினார் டி.என்.எஸ்.


1965-ல், எவ்வித பொருளாதாரப் பின்புலமும் இல்லாமல் தொடங்கப்பட்ட தனது பொம்மலாட்டக் குழுவுக்கு ‘ஸ்ரீ முருகன் சங்கீத பொம்மலாட்ட சபா’ என பெயர் சூட்டினார். (கவனியுங்கள்: பொம்மலாட்டத்திற்கு முன்னதாக சங்கீதத்தை இணைத்திருக்கிறார்.)

தனக்கு அறிமுகமான கோயில் நிர்வாகிகளுக்கெல்லாம் கடிதம் எழுதி வாய்ப்பு கேட்டிருக்கிறார். முதல் அழைப்பு, புதுக்கோட்டை வெள்ளைப் பிள்ளையார் கோயில் நிர்வாகத்திடமிருந்து வந்தது.

முதல் நிகழ்ச்சியாக ‘வள்ளித் திருமணம்’ கதையை நடத்துவது என முடிவு செய்தனர். ஆனால், நிகழ்ச்சியை நடத்த ஒரு பொம்மைகூட அப்போது அவரிடம் இல்லை. பொம்மைகளை வாங்கும் அளவுக்கு பொருளாதார வசதியும் இல்லை. ஒரு பொம்மையை வாங்குவதற்கு அப்போதே பத்தாயிரம் ரூபாய் ஆகுமாம். (இப்போது நாற்பதாயிரும் ஆகும்). தன்னைத் தத்தெடுத்துக் கொண்ட மணி அய்யரிடம் கேட்டுப் பார்க்கலாம் என்று அவரிடம் சென்றிருக்கிறார்.

நோய்வாய்ப்பட்டிருந்த அவர், தன்னுடைய தம்பி மகன் ஸ்ரீநிவாசனிடம் “சங்கரனுக்கு சில பொம்மைகளை எடுத்துக் கொடேன். அவன் நிகழ்ச்சி நடத்திக் கொள்ளட்டும்’’ என்று சொல்லியிருக்கிறார். ஆனால், ஸ்ரீநிவாச அய்யரோ “நாம்தான் அவருக்கு அவ்வப்போது சம்பளம் கொடுத்துவிட்டோமே’’ என்று பொம்மைகளைத் தர மறுத்துவிட்டாராம்.

டி.என்.எஸ். துணைவியார்
திருமதி பாமா
 பிறகு, பொம்மைகளை நாமே செய்துகொள்வது என்று களத்தில் இறங்கிவிட்டனர். பொம்மைக் கலைஞர் லட்சுமணன் என்பவர்தான் கல்யாண முருங்கை மரத்தை வெட்டிக் கொண்டு வந்து போட்டு, சங்கரனின் துணைவியார் திருமதி. பாமா அவர்களிடம் பொம்மை செய்யும் கலையைக் கற்றுக் கொடுத்து உதவியிருக்கிறார். டி.என்.எஸ்.ஸுடன் பிள்ளைகளும் சேர்ந்து பொம்மைகளைச் செய்யத் தொடங்கி இருக்கிறார்கள்.

என்னிடம்,   டி.எஸ்.எஸ்.-ன் துணைவியார், வீட்டில் செய்து வைக்கப்பட்டிருந்த பொம்மைகளின் உடற்பாகங்களை  காட்டி, “தொட்டுப் பாருங்களேன்...’’ என்றார். நானும்  தொட்டுத் தூக்கிப் பார்த்தேன். கல்யாண முருங்கையினால் செய்யப்பட்ட அந்த பொம்மையின் உடற்பாகங்கள் இலேசாக தக்கையைப் போல இருந்தன. “முழு பொம்மையாகும்போது எடை எட்டு கிலோவிலிருந்து பனிரெண்டு கிலோ வரை  கூடிவிடும்’’ என்றார் டி.என்.எஸ்.-ன் மூத்த மகன் முருகன்.

ஒரு பொம்மையாட்ட நிகழ்ச்சியை நடத்த குறைந்தபட்சம் பத்து பொம்மைகளாவது தேவைப்படும். ஒரு பொம்மையைச் செய்ய மூன்று மாதங்களாவது ஆகும். அதற்கு ஒரு நீண்ட தயாரிப்புப் பணி தேவைப்படுகிறது.

முதலில், கல்யாண முருங்கை மரக்கட்டைகளை வெட்டிக் கொண்டு வந்து நீரில் ஊற வைத்து பதப்படுத்த வேண்டும். பிறகு அந்தக் கட்டைகளை நிழலில் காயவைத்து பதப்படுத்த வேண்டும். அதன்பிறகு, கதாபாத்திரங்களுக்கேற்ப அந்த மரக்கட்டைகளைச் செதுக்கி பொம்மைகளின் உடம்பு, தலை, கைகள், கால்கள் என உடற்பாகங்களை எல்லாம் தனித்தனியாகச் செதுக்கி உருவாக்க வேண்டும். பின்னர், அதன் மீது மக்கு பூச வேண்டும். அடுத்ததாக, வண்ணம் பூச வேண்டும். பிறகு கம்பியைக் கொண்டு உடற்பாகங்களை இணைக்க வேண்டும். இணைத்த பிறகு முதல் துணியைச் சுற்ற வேண்டும். அதற்கு மேல் இரண்டாவது துணியைச் சுற்ற வேண்டும். கடைசியாக கதாபாத்திரங்களுக்கு ஏற்ற துணிகளைச் சுற்ற வேண்டும். இறுதியாக, அந்த பொம்மைகளை இயக்குவதற்கான கம்பிகளையோ, கயிறுகளையோ, குச்சிகளையோ இணைக்க வேண்டும். பரதநாட்டியப் பொம்மைகளுக்குக் கம்பிகளையும், மற்ற பொம்மைகளுக்கு கயிறுகளையோ, குச்சிகளையோ இணைக்க வேண்டும்.

ஒரு வழியாக, முதல் நிகழ்ச்சியான ‘வள்ளித் திருமண’த்திற்குத் தேவையான பொம்மைகளை எல்லாம் செய்துவிட்டார்கள். ஆனால், பொம்மைகளின் மேல் அணிவிக்கக்கூடிய கதாபாத்திரத்திற்கு ஏற்ற பட்டுத்துணி வாங்க அவர்களிடம் வசதி இல்லை. உடனடியாக, டி.என்.எஸ்-ஸின் நண்பர் வேலாயுதம் தன்னுடைய மனைவிக்கு வாங்கி வைத்திருந்த பட்டுப் புடவையைக் கிழித்து எல்லா பொம்மைகளுக்கும் மேலாடை அணிவித்தாராம். அந்த உதவியை இன்றளவும் டி.என்.எஸ். குடும்பத்தினர் நன்றியுணர்வோடு நினைவில் கொண்டிருக்கிறார்கள்.

டி.என்.எஸ்.-ன் மூன்றாவது மகன் 
டி.எஸ்.கோபி
நம் பாரம்பரிய ஆட்டக் கலைகள் அனைத்திலும் கலைஞர்களே நேரடியாக மேடைகளில் ஆடுபவர்களாக இருப்பார்கள். ஆனால், பொம்மலாட்டக் கலையிலோ, திரைக்குப் பின்னாலிருந்து பொம்மைகளுக்கு உயிர் கொடுத்து அவற்றை ஆட்டி வைக்கும் கலைஞர்களாக மட்டுமே பொம்மலாட்டக் கலைஞர்கள் இருக்கிறார்கள்.

நாடகத்தில் ஒரே கலைஞன் பல்வேறு கதாபாத்திரங்களை ஏற்று அதற்கேற்ற ஒப்பனைகளை மாற்றி நடித்துவிட முடியும். ஆனால், பொம்மலாட்டத்திலோ ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனித்தனி பொம்மைகள் தேவைப்படும். அப்படி உருவாக்கப்படும் பொம்மைகளின் உடற்பாகங்கள் உடைந்தாலோ, சிதைந்தாலோ அந்த கதாபாத்திரத்தின் தன்மையே மாறிவிடும். அந்தப் பொம்மையைப் பயன்படுத்தவே முடியாது.

ஆகவே, பொம்மைகளை நான்கு தகரப்பெட்டிகளில் அடுக்கி எடுத்துச் செல்வார்கள். பிள்ளையார், யானை பொம்மைகளுக்கு மட்டுமே ஒரு பெட்டி தேவைப்படுமாம். இவையல்லாமல் மேடைக்கான பொருட்கள், ஸ்கிரீன்கள், துணிகள், இசைக் கருவிகள் என ஏகப்பட்ட பொருட்களை அவர்கள் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு எடுத்துச் சென்று திரும்ப வேண்டும்.

தொடக்க காலத்தில்  கட்டை வண்டிகளையும், கூண்டு வண்டிகளையும் பயன்படுத்தி இருக்கிறார்கள். சாலை வசதியே இல்லாத கிராமப்புறங்களில் தகரப் பெட்டிகளைத் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆற்றைக் கடந்து சென்று பொம்மலாட்டம் நடத்திய அனுபவமும் ‘ஸ்ரீ முருகன் சங்கீத பொம்மலாட்ட சபா’ கலைஞர்களுக்கு உண்டு.

பேருந்து வசதி இருந்தபோதும் பெரும்பாலும் தகரப் பெட்டிகளை ஏற்றிக்கொள்ள மாட்டார்கள்தானே! ஒரு முறை, ‘எண்கண்’ எனும் ஊரிலுள்ள முருகன் கோயிலில் இரவு பொம்மலாட்ட நிகழ்ச்சியை நடத்திவிட்டு காலை ஐந்து மணிக்கெல்லாம் பேருந்து நிறுத்தத்திற்கு வந்துவிட்டார்களாம். ஆனால், எந்தப் பேருந்திலும் இவர்களின் தகரப் பெட்டிகளை ஏற்றிக் கொள்ளவில்லையாம். ஒவ்வொரு பேருந்தும் போவதும் திரும்பி வருவதுமாக இருந்தனவாம். “இன்னும் போகவில்லையா?’’ என ஒரு பேருந்துக்காரர் மட்டும் பதினோரு மணிக்கு பரிதாபப்பட்டு ஏற்றிக் கொண்டாராம்.

தனி வாகனம் ஏற்பாடு செய்வதுதான் ஏற்றதாக இருக்கும். ஆனால், அதற்கான வசதி வாய்ப்பை எல்லா நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடமும் எதிர்பார்க்க முடியதல்லவா!


ஒரு பொம்மலாட்ட நிகழ்ச்சியை நடத்துவதற்கு பொம்மைகளை இயக்குபவர்கள், வாய்ப்பாட்டு பாடுபவர்கள், மிருதங்கம், ஆர்மோனியம், தபேலா, டோலக், மோர்சிங், தவில், கடம், கஞ்சிரா (சமீப காலமாக   ரிதம் போர்டு) வாசிப்பவர்கள் என பத்து கலைஞர்களாவது தேவைப்படுவர். இக்கலைஞர்கள் எல்லோரும் சரியாக ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான் நிகழ்ச்சி சிறப்பாக அமையும்.

பொம்மலாட்ட மேடை என்பது தனித்துவமானது. அதன் மூன்று பக்கங்களும் மூடியிருக்கும். பார்வையாளர்கள் பக்கம் மட்டுமே திறந்திருக்கும். முன் பகுதியில் இரண்டிலிருந்து இரண்டரை முழம் அளவுக்கு பார் (பட்டையான) பகுதியை அமைப்பார்கள். முன்பெல்லாம், பின் பக்கத்தில் கருப்பு நிற திரைச்சீலை (Screen) அமைக்கப்படும். இப்போது விதம் விதமான டிஜிட்டல் பேனர்களை தொங்கவிடுகிறார்கள்.

இப்பொம்மலாட்டக் கலையில் சிரமங்கள் அதிகம்; வருமானம் குறைவு. அதனால் இதற்கு கலைஞர்கள் கிடைப்பது அரிது. ஆகவே, நம்பிக்கைக்குரிய தன் குடும்பத்தினரையே பொம்மலாட்டக் கலைஞர்களாக்கிக் கொண்டார் டி.என்.எஸ்.   பார்வையற்ற டி.என்.எஸ்-க்கும் அதுதான் உகந்த சூழலாக இருந்தது.

தன் கணவருக்குக் கண் பார்வை வரவேண்டுமென்பதற்காக அவரது துணைவியார் போகாத கோயில் இல்லை; வேண்டாத தெய்வம் இல்லை. மருத்துவத்துக்கும் குறைவில்லை. ஆனால், கண்பார்வை மட்டும் கிடைக்கவில்லை. கடைசியாக, தஞ்சாவூர் பொது மருத்துவனைக்குச் சென்று டாக்டர் நவமணியிடம் தனது நிலைமையை விவரித்து, தன் கணவருக்கு அறுவை சிகிச்சை செய்யச் சொல்லி மன்றாடியுள்ளார்.. டாக்டர் நவமணி நம்பிக்கை இல்லாமல்தான் வலது கண்ணில் மட்டும் அறுவை சிகிச்சை செய்திருக்கிறார். விளைவு, டாக்டரே ஆச்சர்யப்படுமளவுக்கு டி.என்.எஸ்.க்கு பார்வை கிடைத்துவிட்டது. “நான் வணக்கும் அம்மன் என்னைக் கைவிடவில்லை’’ என்று அந்த அதிசயத்தை இப்போதும் சொல்லிச் சிரிக்கிறார் பாமா அம்மையார்.

1968இல் காஞ்சி மடம் நடத்திய ‘ஆகம சில்ப சதஸ்’ விழாவில், பெரியவர் சந்திரசேகரர் என்.எஸ்-க்கு  ‘நாதன்’ எனும் பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தார். (நாதன் என்பதற்கு ‘நாதமயமானவர்’ அல்லது ‘சங்கீதமயமானவர்’ என்று பொருள்). டி.என்.சங்கரன் அந்தப் பட்டத்தை தன் பெயரோடு இணைத்துக் கொண்டு அன்று முதல் ‘டி.என்.சங்கரநாதன்’ ஆனார்.

பார்வை கிடைத்த பிறகு பொம்மலாட்ட நிகழ்ச்சிகளை புத்துணர்வோடு  நடத்தத் தொடங்கி இருக்கிறார் ஆலயங்கள், ஆதீனங்கள், மடங்கள், சமஸ்தானங்கள் மட்டுமல்லாது மதுரை கம்பன் கழகம், லயன்ஸ் கிளப், ரோட்டரி சங்கம்,  தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், தென்னக கலை பண்பாட்டு மையம், டெல்லி தமிழ்ச் சங்கம், மும்பை தமிழ்ச் சங்கம், ஹைதராபாத் தமிழ்ச் சங்கம், கொச்சின் தமிழ்ச் சங்கம் போன்ற அமைப்புகளும்
இவரது பொம்மலாட்ட சபாவுக்கு வாய்ப்புகள் வழங்கி ஊக்குவித்தன.

அரிச்சந்திரா, வள்ளித் திருமணம், அருணகிரிநாதர், சீதா கல்யாணம், பக்த பிரகலாதன்,  சங்கரதாஸ் சுவாமிகள் கதைகள், அருணகிரிநாதர், நாயன்மார்கள் வரலாறு போன்ற கதைகள் மட்டுமல்லாது சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

கிராமப்புறக் கோயில் விழாக்களில் பொம்மைகள் கரகாட்டம், காவடியாட்டம், பாம்பாட்டம் போன்ற கிராமியக் கலைகளை நிகழ்த்தச் செய்த பெருமை டி.என்.எஸ்.-க்கே உண்டு.

திருமண விழாக்களில் மணமக்களுக்கு பொம்மைகள் மாலை அணிவித்து வாழ்த்தும் நிகழ்ச்சியைக் கொண்டு வந்தவரும் டி.என்.எஸ். அவர்களே.

டி.என்.எஸ் தனது பொம்மைகளை சில திரைப்படங்களிலும் நடிக்க வைத்து, பொம்மலாட்டக் கலைக்குச் சிறப்பு சேர்த்திருக்கிறார்.

இயக்குநர்  எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் உருவான ‘சொந்தமடி நீ எனக்கு’ (1977) திரைப்படத்தில் இடம்பெற்ற
‘பெண்ணல்ல நீ ஒரு பொம்மை;
பொய்யல்ல நான் சொல்வது உண்மை’ என்கிற பாடலில் ‘ஸ்ரீ முருகன் பொம்மலாட்ட சபா’ எனும் பெயரிலேயே பொம்மலாட்ட நிகழ்ச்சி நடைபெறும். பொம்மலாட்டத்திற்கு இடையே ஜெய்சங்கர், ஸ்ரீப்ரியா இருவரும் பொம்மைகளாகத் தோன்றுவர். இவ்விருவரும் அவரவர் அம்மாக்களினால் ஆட்டி வைக்கப்படுவதாக காட்சி அமைத்திருப்பார் அந்தத் திரைப்படத்தின் இயக்குநர்.  அந்தக் காட்சிகளை அருமையாக உருவாக்கிக் கொடுத்திருப்பார் டி.என்.எஸ்.

காண்க: https://www.youtube.com/watch?v=wMt9mGhy_Zg

பி.ஜெயச்சந்திரனும் பி.சுசிலாவும் பாடிய பாடல் அது. அந்தப் பாடலை டி.என்.எஸ். பாடுவதாகத்தான் இருந்தது. அந்த நேரத்தில் கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்ததால் அவரால் சென்னைக்குச் சென்று பாடிக் கொடுக்க முடியவில்லை. பாடல் காட்சிகளை மட்டும் உருவாக்கிக் கொடுததார்.

இந்தப் பாடலின் படப்பிடிப்பு நடக்கும்போது, நடிகர் ஜெய்சங்கர் தனது குடும்பத்தினர் பொம்மலாட்டத்தைப் பார்க்க விரும்புவதாகவும், வீட்டுக்கு வந்து ஒரு பொம்மலாட்ட நிகழ்ச்சியை உங்களால் நடத்தித்தர இயலுமா? என்று டி.என்.எஸ்ஸிடம் கேட்டிருக்கிறார். அதன்படி, படப்பிடிப்பு முடிந்த பின்னர் ஜெய்சங்கரின் வீட்டிற்கு சென்று ஒரு பொம்மலாட்ட நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறார்.

இயக்குநர்  எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் உருவான ‘சிவப்பு மலர்கள்’  (1986) திரைப்படத்திலும் -
‘ஒரு பொம்மலாட்டம் நடக்குது
ரொம்ப புதுமையாக இருக்குது
நாலு பேரு நடுவிலே
நூலு ஒருத்தன் கையிலே’’ எனும் பாடலில் ‘ஸ்ரீ  முருகன் சங்கீத பொம்மலாட்ட சபா’வின் பொம்மலாட்டம் இடம்பெற்றிருப்பதுடன், பொம்மலாட்டக் கலைஞராக டி.என்.எஸ். தோன்றுவார்.

இயக்குநர் பரதன் இயக்கிய ‘ஆவாரம் பூ’ (1992) திரைப்படத்தில், ‘நதியோடும் கடலோரம்
உருவாகும் அலை பாயும்
அதிலே ஒரு உயிரே கரையும்’
எனும் இளையராஜாவின் இசையில் அமைந்த பாடலின் தொடக்கக் காட்சிகளில், ஒரு தெருவில் பொம்மலாட்ட நிகழ்ச்சி நடக்கும். கதாநாயகன் வினித் ஒரு பொம்மையாகவும், கதாநாயகி நந்தினி ஒரு பொம்மையாகவும் காதலித்து மகிழ்ச்சியாக இருக்கும்போது, கதாநாயகியின் தந்தையும் வில்லனுமான நாசர் எனும் பொம்மை வந்து இருவரையும் பிரித்துவிட்டு, வினித் பொம்மையை அடிப்பதாகவும், வினித் பொம்மை தன் தலையிலும் நெஞ்சிலும் அடித்துக் கொண்டு அழுவதாக காட்சி அமைத்திருப்பார் பரதன். அந்த அழகிய பொம்மைகளும், அந்தக் காட்சியும் நெஞ்சில் நிலைத்திருக்கும்படியாக டி.என்.எஸ். உருவாக்கியுள்ளார்.
காண்க: https://www.youtube.com/watch?v=YtTGh8WfgSc

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவான ‘இந்தியன்’  (1996) திரைப்படத்தில் சுகன்யா பொம்மலாட்டக் கலைஞராக இருப்பார். அந்தக் காட்சிகளில் இடம்பெற்றிருக்கும் பொம்மைகளும் டி.என்.எஸ். அவர்களுடையதே. காட்சியை வடிவமைத்துக் கொடுத்தவரும் டி.என்.எஸ். அவர்களே!

‘அவள் பெயர் தமிழச்சி’ , ஷங்கரின் ‘தசாவதாரம்’ , மரிக்கொழுந்து போன்ற படங்களுக்காக வாய்ப்பு வந்தபோதிலும் வெளியூர் நிகழ்ச்சிகளில் இருந்ததால் அத்திரைப்படங்களில்   ‘ஸ்ரீ  முருகன் சங்கீத பொம்மலாட்ட சபா’ பொம்மலாட்ட நிகழ்ச்சிகள் இடம்பெற முடியவில்லை என்பதை ஆதங்கத்தோடு தெரியப்படுத்துகிறார்கள் டி.என்.எஸ்.ன் வாரிசுகள்

பொம்மையை இயக்கும்
டி.என்.எஸ்.ன் பேரன் எம்.சங்கீத்ஸ்ரீராம்

டி.என்.எஸ்.-ஸின் கலைச் சேவையைப் பாராட்டி,  பல்வேறு அமைப்புகள் விருதுகளையும் பரிசுகளையும் வழங்கி அவரைச் சிறப்பித்துள்ளன.

பாட்னா தமிழ்ச் சங்கம் ‘இசைத்தென்றல்’ விருது (1981),


‘கலைமாமணி’ விருதை முதல்வர் ஜெ.ஜெயலலிதா வழங்கிச் சிறப்பித்தார் (1992)

காஞ்சி மடம் வழங்கிய மணி விழா விருது (1997) இவ்விருதை முன்னாள் குடியரசு தலைவர் ஆர்.வெங்கட்ராமன் வழங்கி சிறப்பித்தார்.

குடந்தை சங்கீத வித்யாலயாவின் ‘நாத கான சுடரொளி’ விருது (1998),

திருவாடுதுறை ஆதினத்தின் ‘கைப்பாவை கலைமணி’ விருது (2005)
,
கோவை திருநேரிய தமிழ் மன்றத்தின் ‘பாவைக் கூத்திசைக் கலைஞர் மாமணி’ விருது (2007),

திருச்சி கலைக்காவேரி இசைக் கல்லூரியின் ‘கலைக்காவேரி’ விருது (2012)

‘மதுரை கம்பன் கழகம்’ விருது (2012). இவ்விருதை பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா வழங்கினார்.

சங்கீத நாடக அகாதவி விருது (2015)

சென்னை, ரசிகா ஃபைன் ஆர்ட்ஸ் சார்பில், ‘ரசிக கலாபாரதி’ விருதுடன் (2016), ஒரு இலட்ச ரூபாய் தொகையும் வழங்கப்பட்டது.


2016ஆம் ஆண்டு, இந்திய அரசின் மிகமுக்கிய விருதான ‘புரஸ்கார்’ விருதை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கி சிறப்பித்தார்.

இலயோலா கல்லூரியும் மாற்று ஊடக மையமும் இணைந்து வழங்கிய ‘வீதி விழா’ விருது (2020)  விருதைப் பெறுவதற்கு சில நாட்களுக்கு முன் டி.என்.எஸ். காலமாகிவிட்ட நிலையில், அவரது மூத்த மகன் முருகன் வந்து விருதைப் பெற்றுக்கொண்டார்.





அஸ்ஸாம் மாநிலம் கௌஹாத்தியில் நடைபெற்ற விழாவில், டெல்லி சங்கீத நாடக அகாடமியின் ‘யுவ புரஸ்கார்’ விருதை அஸ்ஸாம் கவர்னர் கைகளால் பெறும் டி.என்.எஸ்.-ன் மூன்றாவது மகன் திரு. எஸ்.கோபி 
டி.என்.எஸ்.-க்கு 'நாடக நடிகர்' என்றொரு பரிமாணமும் உண்டு. கும்பகோணம் 'வாணி விலாச சபா'வின் ஆஸ்தான நடிகர்களுள் இவரும் ஒருவர். பார்வையற்ற நிலையில் சில நாடகங்களில் துணை பாத்திரங்களிலும், பார்வை கிடைத்த பிறகு முக்கிய பாத்திரங்களிலும், கதாநாயகனாகவும் கூட நடித்திருக்கிறார்.

டி.என்.எஸ்க்கு அறுபது வயதானபோது, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் அவருக்கு ஓய்வூதியம் வழங்க முன்வந்தது. அதனை வாங்க மறுத்த டி.என்.எஸ் தன்னை விட வறுமையில் வாடும் வேறு ஒரு கலைஞனுக்கு அந்தத் தொகையை கொடுக்குமாறு கேட்டுக் கொண்டாராம்.  26 ஆண்டுகளுக்குப் பிறகு - வயலின் இசைமேதை குன்னக்குடி வைத்தியநாதன்,  நடிகர் ஆர்.எஸ்.மனோகர் போன்றோரின் - குடும்ப வறுமையின் காரணமாகவும்  86ஆவது வயதிலிருந்து அரசின் ஓய்வூதியத் தொகையைப் பெற்றுக் கொண்டார். அவர் காலமான பிறகு அவரது மனைவியும் பொம்மலாட்டக் கலைஞருமான பாமாவுக்கு ஓய்வூதியம் பெறும் முயற்சியில் குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

பொம்மையை இயக்குபவர்
டி.என்.எஸ்.-ஸின் இரண்டாவது மகன் எஸ்.இரவி
டி.என்,எஸ். மகன்கள் முருகன், ரவி, கோபி, பேரக்குழந்தைகளான கார்த்திகேயன், சங்கீத் ஸ்ரீராம், அபிராமி, சந்திரா, சுபாஷினி  போன்ற மூன்றாவது தலைமுறையினரும் இப்போது இந்தப் பொம்மலாட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டு தீவிரமாக இயங்கி, இப்பொம்மலாட்டத்தை அழிவிலிருந்து காத்து, பெருமைபடுத்தி வருகின்றனர்.

டி.என்.எஸ். புரஸ்கார் விருது பெற்றமைக்காக ‘சௌராஷ்டிரா சமூக நல சங்கம்’ நடத்திய பாராட்டு விழாவில், டி.என்.எஸ். சார்பாக அவரது மூத்த மகன் எஸ்.முருகன் நினைவுக் கேடயம் பெறும் காட்சி (2016) 
டி.என்.எஸ்.க்கு இவ்வளவு புகழும் பெருமையும் குடும்பத்தினரின் ஒத்துழைப்பு இல்லாமல் ஒருபோதும் சாத்தியமில்லை. அவர் பார்வை இழந்த காலத்திலும், இறுதி  இருபது ஆண்டு காலங்களில், அவருக்கு உடல்நிலை பாதித்து, எழுந்து நடக்க முடியாத
நிலைமை ஏற்பட்டபோதும் அவரைத் தூக்கிச் சென்று, ஒவ்வொரு மேடையிலும் அமர வைத்து அழகு பார்த்தவர்கள் அவர்களின் குடும்பத்தினரே.

1979-லிருந்தே டி.என்,எஸ்-ன் ‘ஸ்ரீ முருகன் சங்கீத பொம்மலாட்ட சபா’வை நிர்வகிக்கும் பொறுப்பை  அவரது மூத்த மகன் டி.எஸ்.முருகன் ஏற்றுக்கொண்டு, தனது குடும்பத்தினருடன் சிறப்பாக நடத்தி வருகிறார்.

சமீபத்தில், நமது ‘ஸ்ரீ முருகன் சங்கீத பொம்மலாட்ட சபா’வினர், கொரானா விழிப்புணர்வு பொம்மலாட்டப் பாடல் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள்.
காண்க: https://www.youtube.com/watch?v=DlGpwqRooso


பொம்மலாட்டக் கலையாளுமை டி.என்.எஸ்.க்கு நமது புகழஞ்சலியைச் செலுத்துவோம். பொம்மலாட்டக் கலைக்காகவே தங்கள் வாழ்க்கையை முழுமையாக அர்ப்பணித்த அவரின் குடும்பத்தினரை வணங்கி வாழ்த்துவோம்.

மத்திய, மாநில அரசுகள், கலை அமைப்புகள் இந்தக் கலைப் பொக்கிஷங்களைப் பாதுகாக்கவேண்டும். இவர்கள் தொடர்ந்து இக்கலையில் ஈடுபடுவதற்கான அனைத்து வகையான உதவிகள், வேலைவாய்ப்புகள், பரிசுகள் விருதுகள் அளித்து சிறப்பிக்க வேண்டும்.

தொடர்பு முகவரி:
திரு. டி.எஸ்.முருகன்,
ஸ்ரீ முருகன் சங்கீத பொம்மலாட்ட சபா,
40- 2/60, பழனியாண்டவர் சன்னதி தெரு,
கும்பகோணம் - 612 001
கைபேசி : 9894449244
வாட்ஸ்அப் : 7845933899

புகழஞ்சலி : சூரியசந்திரன்

மக்கள் வீதி, ஜனவரி 2020

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எனது கதைகள் வரலாற்று ஆவணங்கள்: மேலாண்மை பொன்னுச்சாமி நேர்காணல்

சங்க இலக்கியம் முதல் பெண் கவிஞர்கள் : பத்மாவதி விவேகானந்தன் நேர்காணல்

கவிஞர் அறிவுமதி பாடலாசிரியரான கதை