ஓவிய உலகிற்கு ‘எமோசனலிச ஓவியம்’ எனது பங்களிப்பு : ஓவியர் நெடுஞ்செழியன் நேர்காணல்



சந்திப்பு : சூரியசந்திரன்
இன்தாம் இணையம், 2002

ஆவேசமாக மேடையில் முழங்குபவர்களைப் பார்த்திருப்பீர்கள். ஆவேசமாய் மேடையில் நடனமாடுபவர்களையும் கண்டிருப்பீர்கள். ஆனால், மேடையில் ஆவேசமாய் ஓவியம் தீட்டுபவரைக் கண்டிருக்கிறீர்களா? அந்த அதிசயத் தமிழரை உங்களில் சிலர் கண்டிருக்கக் கூடும். அவர், ஓவியர் நெடுஞ்செழியன். இசைக்கருவிகள் முழங்க, தமிழிசைப் பாடல்கள் ஒலிக்க, ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு வியக்க, ஆவேசங் கொண்டு சில நிமிடங்களில் மேடையிலேயே ஓர் ஓவியத்தைத் தீட்டி முடிப்பார். இவ்வகை ஓவியத்திற்குஎமோசனலிச ஓவியம்என்று அவரே பெயர் வைத்திருக்கிறார். ஓவிய உலகுக்கு இவர் வழங்கியிருக்கும் புதிய வகை ஓவியம் இது

எனது ஓவியங்களை உலகளாவிய ஓவியச் சூழலோடு ஒப்பிட்டுப் பார்க்கவே விரும்புகிறேன். ஏனெனில், மிகநீண்ட ஓவிய வரலாற்றில் பல்வேறு காலகட்டங்களில் பல சோதனை முயற்சிகளும் புதிய கோட்பாடுகளும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அவை உலகளாவிய ஓவியங்களுக்குப் புதியப் புதிய பரிமாணங்களைக் கொடுத்திருக்கின்றன. அத்தகையப் பரிமாணங்களின் அடுத்த கட்ட பரிசோதனை முயற்சியாகவே எனது ஓவியங்கள் உள்ளன. உலகில் வேறு எந்த ஓவியர்களும் செய்யாத புதிய புதிய உத்திகளை என் ஓவியங்களில் செய்திருக் கிறேன்’’ என்கிறார்  தீர்க்கமாக
இவர், தமிழ்நாட்டின் மிகமுக்கியமான ஓவியர்களில் ஒருவர். மாணவப் பருவத்திலிருந்தே ஏராளமான ஓவியக்கண்காட்சிகளை நடத்திவருகிறார். தமிழ்ப் பத்திரிகைகளில் பரவலாக வரைந்து கொண்டிருப்பவர். ஓவிய நூல்களும் வெளியிட்டிருக்கிறார்.
ஒரு மாலைப் பொழுதில், சென்னையில் உள்ள நெடுஞ்செழியனின் ஓவியக் கூடத்தில், அவரது ஏராளமான கலைப்படைப்புகளுக்கு மத்தியில் அமருடன் அமர்ந்து பேசத் தொடங்கினேன்...

நீங்கள் தஞ்சாவூர்க்காரர் என்பதும், விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் என்பதும் தெரியும். அந்தச் சூழ்நிலையிலிருந்து எப்படி ஒரு நாடறிந்த ஓவியராக உருவானீர்கள்?

சிறுவயதில், எங்களது இராயந்தூர் கிராமத்தில் சுற்றித் திரிந்த காலத்தில் கரிக்கட்டையால் சுவரில் ஓவியம் தீட்டியதும், களிமண்ணால் பொம்மைகள் செய்ததும், செங்கற்களால் சிற்பம் செதுக்கியதும், ஆடிப்பெருக்கு அன்று சிறுவர்களெல்லாம் சேர்ந்து சப்பரம் செய்து ஊரெல்லாம் சுற்றியதும், வெகுதொலைவில் உள்ள வெண்ணாற்றங்கரை தோப்பில் உள்ள பெரிய முனியாண்டவர் ஐயனார் சிலைகளும், அரச மரமும், மஞ்சள் எலுமிச்சைக் குத்தப்பட்ட திரிசூலம், வேல், பிரம்மாண்ட குதிரை, யானை சிலைகள் எல்லாம் பயமூட்ட மாவிளக்கிட்டு கும்பிட்டு சப்பரத்தின் சக்கரங்களை கழற்றிவிட்டு அச்சப்பரத்தை ஆற்றில் மூழ்கவிட்ட விழாக்களும், இரவு நேரங்களில் மின்சாரமற்ற ஊரில் கீழத் தெருவிலிருந்து மேலத்தெருவிற்கு நிலவை துரத்திச் சென்றதும் - எனது நிழல் என்னைத் துரத்தி வந்ததும், காலை முதல் மாலை வரை வயல் வேலை செய்த பெண்களெல்லாம் அந்நிலவொளியில் சுற்றி நின்று கும்மியடித்துப் பாட்டுப் பாடி ஆடியதும், எனது தாய் பழைய காகிதங்களை எல்லாம் மாவாக ஆட்டி குடத்தைக் கவிழ்த்து அதன் மீது பூசி கூடையாக்கியதும், கோளமிட்டதும்... 

விளக்கின் ஒளியில் விரலின் நிழலை மீனாக்கியது. மனித முகமாக்கியது, நாயாக குரைத்தது...

பாம்பைப் பிடித்தது, பல்லாங்குழி விளையாடியது, தூண்டில் போட்டது, மணல்வீடு கட்டியது, கண்ணாமூச்சி, கிச்சுசிக்சுத் தாம்பூலம் விளையாடியது, மூங்கில் குச்சியில் கைகொட்டி சிரிக்கும் பொம்மை மிட்டாயினை கடிகாரமாக கையில் கட்டிக் கொண்டது... 

மாடு மேய்த்த அண்ணன் ஒருவன் பனை மட்டையில் பொம்மைகள் வெட்டி இரவு நேரத்தில் இரண்டு தூண்களினிடையே வெள்ளை வேட்டிக் கட்டி பின்புறம் அரிக்கன் விளக்கை வைத்து பொம்மலாட்டம் காட்டியபொழுது நாங்களெல்லாம் பார்த்து வியந்தது... 

மஞ்சள் மாரியம்மன் திருவிழா... பால்குடம் எடுப்பது... சாமியாடுவது... இப்படி எமது தஞ்சையில் எத்தனையோ கலை விழாக்கள்கலாச்சார விழாக்கள், ஆற்றுப் படித்துரை, மதில்கள், தாமரைக் குளம், அரண்மனை, ஏராளமான சிதைந்த சிற்பங்களையுடைய ராஜாகோரி, சரஸ்வதி மஹால், அனைத்திற்கும் மகுடமாய் கம்பீரமான பெரிய கோயில்...

பள்ளிக்கூடம், படம் வரைந்தது, பரிசு வாங்கியது, வீட்டில் பணம் திருடியது, நாடகம் நடத்தியது, கூடைபந்து விளையாடியது, பல பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் சட்டைகளில் பனியனில் படம் வரைந்தது. பணம் சம்பாதித்தது, தேர்தலின்போது ஊர் முழுவதும் உதயசூரியன் வரைந்தது, கலைஞர் வந்தது, விளம்பரம் எழுதியது, படம் வரைந்தது, பணம் கிடைத்தது, பூண்டியில் பி.யூ.சி. படிப்பு, சினிமாவில் ஆர்வம், படிப்பில் ஆர்வமின்மை, கம்யூனிச தோழர் நாகராஜ் அறிமுகம். அவர் மூலம் குடந்தை ஓவியக் கல்லூரி அறிமுகம், பி.யூ.சி. பெயிலானது, சென்னையில் பேனர் கம்பெனியில் பணிபுரிய வந்தது, பணிபுரியாமல் திரும்பிச் சென்றது, குடந்தை ஓவியக் கல்லூரியில் மாணவனாகச் சேர்ந்தது, இவை ...ல்...லா...ம்...தான் என்னை ஓவியனாக்கிய பின்னணி.

கும்பகோணம் ஓவியக்கல்லூரி படிப்பு, உங்களின் ஓவிய வளர்ச்சிக்கு எந்த வகையில் உதவிகரமாக இருந்திருக்கிறது?

நான் ஓவியக் கல்லூரியில் சேர்ந்தபொழுது ஓவியர் சந்தானராஜ் முதல்வராக இருந்தார். அக்கால கட்டத்தில் அவர் வரைந்த ஒரே ஒரு ஓவியத்தைத்தான் பார்க்க எனக்கு வாய்ப்புக் கிடைத்தது என்றாலும், அவருடைய பேச்சு, உடை, நடை எல்லாவற்றிலும் அவரே ஓர் ஓவியமாக வாழ்ந்தார் என்பது எங்களுக்கெல்லாம் கிடைத்த பேரு--.

கல்லூரியைப் பொறுத்தவரை, ஆசிரியர்கள் அவர்களின் பணிகளைச் சரியாக செய்யாதபோதிலும் தொடர்ந்து வரைந்து கொண்டிருப்பதற்கு மாடல்களும், நிலக்காட்சிகளை வரைவதற்கு ஏற்ற வசதிகளும், உலக ஓவியர்களின் ஓவியங்களைப் பார்ப்பதற்கு நூல் நிலையமும், கருத்துகளை பரிமாறிக் கொள்வதற்கு சக மாணவர்களுமாக அந்தச் சூழ்நிலை சிறப்பாகவே இருந்தது.
மேலும், எனது சிறு வயது முதலே புதுமையாகச் செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் ஆராய்ச்சி நோக்குடனேயே இருந்தமையால் நான் மூத்த ஓவியர்களையோ ஆசிரியர்களையோ பின்பற்றி வரைய வேண்டிய தேவையற்றவனாக இருந்தேன். இருப்பினும், ஆசிரியர்களைப் பொறுத்தவரை திரு.கங்காதரன் மூலம் கண்காட்சி அமைப்பது பற்றி அறிந்தேன். திரு.ரெங்கராஜன் மூலம் சில மென்மையான உணர்வுகளுக்கு என்னை உட்படுத்திக் கொண்டேன்.

மாணவப் பருவத்தைப் பொறுத்தவரை குடந்தை ஓவியக் கல்லூரி வரலாற்றில் நான்தான் முதல் ஓவியக் கண்காட்சியை நடத்திய மாணவன், 1985ல் தஞ்சையில் தனியாகவும், 1982-83ஆம் ஆண்டுகளில் நண்பர்களை சேர்த்துக்கொண்டு குரூப் கண்காட்சியும் அமைத்தப் பெருமை என்னைச் சேரும்.

கல்லூரியில் பொதுவாக இருந்து வந்த ஓவிய வரையும் முறைகளை மாற்றம் செய்து நான் உருவாக்கிய புதுவிதமான ஓவியமுறையினையும், 84-85ஆம் ஆண்டுகளில் நான் உருவாக்கிய ஈழவிடுதலை சம்மந்தமான ஓவியங்களையும் எனது காலகட்ட மாணவர்கள் பின்பற்றி வரைந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அக்கால கட்டத்தில் இரவு பகல் பாராது கடுமையாக உழைத்தேன். பலவித பரிசோதனைகளைச் செய்தேன். பல புதிய உத்திகளை கண்டறிந்தேன். ஒரு சராசரி மாணவர் ஒரு ஓவியம் வரையும் நேரத்தில், நான் பத்து ஓவியங்களைத் தீட்டக்கூடிய திறனுடன் பணியாற்றினேன்.

கல்லூரி காலத்தில் புதுவிதமான உத்திகளைப் பயன்படுத்தி ஓவியங்களைத் தீட்டியதாக கூறுகிறீர்கள். அந்த உத்திகளைப் பற்றி?

எனதுமோனலிசாவின் தஞ்சை வருகைஎன்ற ஓவியம்... மிகவும் புகழ்பெற்ற ஓவியம். அதை 1984ஆம் ஆண்டு வரைந்தேன். அந்த ஓவியம் அக்கால கட்டத்தில் மக்களாலும் பெரும்பாலான பத்திரிகைகளாலும் பாராட்டி எழுதப்பட்டுள்ளது. அவ்வோவியத்தில் மோனலிசா தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையுடன் தஞ்சை பெரிய கோயிலின் அருகே உள்ள கடை வீதியில் வலம் வருவதாக வரைந்திருந்தேன். அது பல்வேறு சந்தர்ப்பங்களில் பாராட்டப்பட்டது. குறிப்பாக, 1998ல்குமுதம்இதழில்மோனிலிசா நம்ம ஊருக்கு வந்தால் எப்படி இருக்கும்?’’ என்ற வாசகரின் கேள்விக்கு, “செழியனின் ஓவியம்போல் இருக்கும்’’ என எனது ஓவியத்தை அச்சிட்டு கூறியஅரசு பதில்அவ்வோவியத்துக்கான சிறப்பின் முத்திரை எனலாம்

அதைப் போலவே தஞ்சைக் கோயில் கம்பீரத்தில் வளைவு, தஞ்சைக் கோயில் நிழலாக தாஜ்மஹால், மற்றும் நூற்றுக்கணக்கான போர்ட்ரைட் ஓவியங்கள், நிலப்படங்கள், லெனின் ஓவியம்... முக்கியமாக சிதைந்த சிற்பங்களின் ஓவியங்களில் புதிய வெளிப்பாடுடன் கையாண்ட உத்தி - அவ்வோவியம் ஆந்திராவில் முதல் பரிசு பெற்றது

எனது காம்போசிசன் ஓவியங்களில், அறிவியல் பார்வையோடு வரையப்பட்ட ஓவியங்களில் அதன் கருப்பொருளில் ஏற்படும் சிதைவை மையமாக வைத்து வரைந்த பல ஓவியங்களும், ஈழவிடுதலை குறித்து வரைந்த ஓவியங்கள், தஞ்சை மருத்துவக் கல்லூரியில் சிறந்த ஓவியமாக பரிசு பெற்ற ரங்கோலி ஓவியம் போன்றவற்றைக் குறிப்பாகச் சொல்லலாம். எனது இந்த அறிவியல் நோக்குடனான சிதைவு - வண்ணக் கலவை முறை ஈழவிடுதலை ஓவியம் - அனைத்தும்தான் எனது கல்லூரி காலகட்டத்திற்குப் பிறகான ஓர் ஓவியரின் ஓவியங்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்லூரி காலத்துக்குப் பிறகு நீங்கள் முதல்முதலாகப் பணியாற்றியது தஞ்சையிலுள்ள தமிழ்ப் பல்கலைக் கழகத்தில். அந்த வாய்ப்பு எப்படி கிடைத்தது? அங்கு என்ன மாதிரியான அனுபவம் வாய்த்தது?

நான் கல்லூரியில் இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தபோது 1985ஆம் ஆண்டு எனது ஓவியக் கண்காட்சி தஞ்சையில் நடைபெற்றதாக குறிப்பிட்டேன் அல்லவா. அதனைத் திறந்து வைத்து சிறப்பித்தவர் தமிழ்ப் பல்கலைக் கழக துணைவேந்தர் வி..சுப்ரமணியன். அவர், கருத்துப் பதிவேட்டில்இவர் நிச்சயம் முன்னேறுவார் என்பதில் ஐயமில்லைஎன எழுதிவிட்டு, “படிப்பு முடிந்ததும் என்னை வந்து சந்தியுங்கள்’’ என்று என்னிடம் சொல்லிவிட்டு சென்றிருந்தார். அதன்படி அவரைச் சந்தித்தேன். உடனே, தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றிட வாய்ப்பு தந்தார். தமிழ்ப் பல்கலைக் கழகத்தைப் பொறுத்தவரை எனது முதல் பணி 1330 திருக்குறள்களையும் கையால் எழுதிட கூறி பையடக்க பதிப்பாக வெளியிட்டார்கள். மேலும், அறிவியல் களஞ்சியம் - வாழ்வியல் களஞ்சியங்களில் ஆயிரக்கணக்கான  கோட்டோவியங்கள்- ஒளிப்படங்கள் - ஓவியங்கள் செய்ய வாய்ப்பளித்து 16 தொகுதிகளில் பணியாற்றி உள்ளேன். முக்கியமாக, நாடகத் துறையில் ராமானுஜம், மு.ராமசாமி ஆகியோருடன் நாடகத்தில் கலை இயக்குநராக பணியாற்றவும், முனைவர் கு.முருகேசன் அவர்களின் முதுமுனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சிக்காக கிராமிய நடனங்கள் பற்றி ஓவியம் வரைந்திடவும் வாய்ப்பு கிடைத்தது. நூற்றுக்கணக்கான கோட்டோவியங்களை சுமார் நான்கு ஆண்டுகள் வரைந்ததும் குறிப்பிடத்தக்கதாகும். இப்படியான தமிழ்ப் பல்கலைக் கழகம் தொடர்பான அனுபவம், எனது ஓவியங்களில் இன்றும் தொடர்வதற்கு வாய்ப்பாக இருக்கிறது.

தமிழ்ப் பல்கலைக் கழகக் காலகட்டம் எனது ஓவியம் சம்பந்தமான மேற்படிப்புக்கு இணையானது என்றே கூறவேண்டும். எனது ஓவிய வாழ்க்கைக்குத் தேவையான ஓர் அனுபவம் அக்கால கட்டங்களில் பல ஓவிய அனுபவம் ஏற்பட்டபோதிலும், எனது சுய வெளிப்பாட்டை வெளியிடும் ஓவியம் வரைவதற்கான கால அவகாசம் கிடைக்காததால் சுமார் 4 ஆண்டுகள் கடந்தது. மீண்டும் நான் சென்னை வந்த பிறகு முழுமையான ஓவியம் தீட்டத் தொடங்கினேன். 85ஆம் ஆண்டில் எந்த நிலையில் எனது ஓவியம் விடப்பட்டதோ அங்கிருந்து மீண்டும் தொடர்ந்தேன்.

சென்னைக்கு எப்போது, எதற்காக வந்தீர்கள்?

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் ஓவியராக பணி கிடைத்தது. அதற்காக 1989ஆம் ஆண்டு வந்தேன்.

இப்போது உங்களின்எமோசனலிச ஓவியம்பற்றி விரிவாக பேசலாம் என நினைக்கிறேன்... 

சிறு வயது முதலே சிறந்த ஓவியனாக வேண்டும் என்ற வெறி, புதியன படைக்கவேண்டும் என்ற ஒரு வேகம். கல்லூரி நாட்களில் புதிய யுத்திகள் பற்றிய ஆராய்ச்சி... இவற்றுடன் ஓவியனென்றால் எவ்விதப் பிரச்சினையும் இன்றி முழுமையான ஈடுபாட்டுடன் அமைதியான சூழலில் தனிமையில் சுகமாக ஓவியம் தீட்டவேண்டும் என்ற சிந்தனையில் இருந்தேன். ஆனால், அதற்கு மாறான சென்னை வாழ்க்கை, சாலைகளில் நெருக்கடி, எல்லாவற்றிற்கும் மேலாக, எனது பாணி ஓவியத்தை வரைந்து வேறு ஒரு ஓவியர் பரிசுகளும் பாராட்டும் பெற்றுவிட்ட பிறகு அதே பாணி ஓவியத்தை நான் தொடரமுடியாத கட்டாயம்
இதற்கிடையில், நாம் ஓவியனாக வாழ்ந்தாக வேண்டும் என்கிற வெறி. இது நான் படைக்கும் ஓவியத்தினை, “எப்படி இவன் படைத்தான்’’ என்பதை அறியமுடியாதபடியான ஓர் உத்தியைக் கொண்டு எவராலும் செய்யமுடியாதபடி இருக்க வேண்டும் என்ற வெறியுடனேயே எனது ஓவியத்துடன் போராடினேன். எனது மனநிலையில் எந்த நேரத்திலும் இதற்கான ஒரு கோபம் இருந்துகொண்டே இருந்தது.

எனது ஓவியத்தை நான் தீட்டும்போது இந்த ஓவியத்துறை - இந்த சமூகம் இவற்றின் மீதான கோபங்களுக்கான காரணங்கள் இவற்றை எல்லாம் வெட்டி வீழ்த்த வேண்டும் என்ற வேகத்துடன் பல வித்தைகள் கற்ற ஒரு போர்வீரனைப் போல போராடினேன். எனது கல்லூரி நாட்களில் நான் செய்த பல சோதனை முயற்சிகளின் அனுபவங்கள் எல்லாம் என்னுடன் சேர்ந்து போரிட்டன. இப்படியாகக் கிடைத்த ஓர் ஓவியமுறைதான் எனதுஎமோசனலிச ஓவியம்’.

இவ்வகையான ஓவியம் தீட்டத் தொடங்குவதற்கு முன்பு என்ன ஓவியம் வரையலாம் என்ற தீர்மானத்துடன் தொடங்கினாலும் எனது உணர்ச்சியின் உச்சக்கட்டத்திலும் எனது ஓவியம் தீட்டும் வேகத்தினாலும் நான் பயன்படுத்தும் கவரக் கத்தியின் தாக்கத்தினாலும் அந்த ஓவியம் எப்படி அமையும் என்பதை எனது சுயஉணர்வு அறியாது என்னையும் மீறிய அந்த உணர்ச்சி வேகம்தான் முடிவு செய்யும்ஆகவே, இதனைஉணர்ச்சிமய வெளிப்பாடுஎன்ற தலைப்பின்கீழ் வரைந்தேன். இவ்வகை ஓவியங்களை 1992 முதல் செய்து வந்தாலும் என் எண்ணப்படியே 1996ல் லலித் கலா அகாதமியில் நான் நேரடியாக ஓவிய விளக்கம் செய்து காட்டும் வரை இதற்கான உத்தி என்ன என்பதை எந்த ஓவியரும் அறிந்திருக்கவில்லை. இதுவரை சுமார் 500 ஓவியங்களுக்கும் மேல் இப்பாணியில் படைத்துள்ளேன். இவ்வகை ஓவியம் இப்பொழுதுசெழியன் ஸ்டைல்என அனைவராலும் அழைக்கப்படுகிறது

இதன் உச்சகட்ட நிலையாகதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்’, ‘பெரியார் தமிழிசை மன்றம்நடத்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியுள்ள விழாக்களில் மக்கள் மத்தியில் இசையுடன் கூடிய இசை ஓவியமாக - மேடையில் சில நிமிடங்களில் ஓவியம் தீட்டி மக்களிடம் பாராட்டைப் பெறுவது இந்த எமோசனலிச ஓவியத்தில் முத்திரைப் பதிப்பதாக அமைந்துள்ளது. இவ்வகையான ஓவியங்களாக தந்தை பெரியார், திருவள்ளுவர், பாரதியார், பாரதிதாசன், அம்பேத்கர் என்று பல சான்றோர்களின் ஓவியங்களை; கிராமிய நடனங்கள் போன்றவற்றை தமிழகத்தின் பல மாவட்டங்களில் தீட்டியமை குறிப்பிடத்தக்கது. இவ்வகை ஓவியம் உலக அளவில் என்னால் மட்டுமே படைக்கப்படுகிறது.

உலகளவில் உள்ள ஓவிய வகைகளில் எந்தந்த வகைகள் உங்களை பாதித்திருக்கின்றன?

18-19ஆம் நூற்றாண்டின் காலகட்டங்களில் ஏற்பட்ட முக்கிய ஓவிய முறைகள் முறையே ரியலிசம், இம்ப்ரசனலிசம், எக்ஸ்பிரசனலிசம், கியூபிசம், பியூச்சரிசம், சர்ரியலிசம், டாடாயிசம், அப்ஸ்ட்ராக்ட் எக்ஸ்பிரசனிசம்... இப்படி பல புதிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அதற்கான வழிமுறைகளை நான் அறிந்திராமையாலும் அதன்படி செய்யவேண்டும் என்ற ஆர்வம் இல்லாமையாலும் நான் அவ்வோவியங்களைப் போலவே பின்பற்றாவிடினும் ஓர் உண்மையான  ஓவியனாக வாழ்ந்தாக வேண்டும், நவீன ஓவியம் என்ற பெயரால் என்னை நானே ஏமாற்றிக்கொண்டு மற்றவர்களையும் ஏமாற்றக் கூடாது என்ற எண்ணமிருந்தமையால் நான் உண்மையைத் தேடும்பொழுது ரியலிசத்தில் இருந்து தொடங்கி அதன் அடுத்தடுத்த பரிணாமத்தை நோக்கி தொடர்ந்து ஓவியம் செய்து கொண்டிருந்தபொழுது மேலே குறிப்பிட்ட இசங்களின் பரிணாம வளர்ச்சியின் அனுபவத்துடன் கடந்து வந்ததற்கான தடயங்களை இந்நிலையில் எனது ஓவியங்களில் உணர முடிகிறது. அதன் அடுத்த நிலைதான் எனதுஎமோசனலிச ஓவியம்எனவும் நான் உணர்கிறேன்.

நான்ஆயிரக்கணக்கான ஓவியங்கள் வரைந்திருந்தாலும் நான் எதனையும் இசத்திற்குள் உட்படுத்தி அதே மாதிரியாக செய்ததில்லை. எனது தற்போதைய எமோசனலிச ஓவியங்கள் கூட இலக்கணங்களை வகுத்துக் கொண்டு அதன்படி வரையவில்லை. ஓர் ஓவியம் வரைந்து முடிந்ததும் அது ஏற்படுத்திய உணர்வின் தாக்கத்தில்தான் அதற்கு அப்பெயரிட்டேன். இதற்கு முன்பாக வரைந்த ஓவியங்கள் எல்லாம்கூட ஏதோ ஒரு வகையில் ஓர் இசத்தின் அடிப்படையில் அமைந்திருப்பதை இன்றைய நிலையில்தான் உணர்கிறேன்.

சில ஓவியர்கள் ஒரேவிதமான ஓவியங்களையே வரைந்து தங்களுக்கென்றோர் இடத்தையும் அடையாளத்தையும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்களே...

பல ஓவியர்கள் குறைந்தபட்சம் 20 ஆண்டுகளாக ஒரே பாணி ஓவியத்தை வரைந்து வருகிறார்கள் என்பது உண்மைதான். அதற்கு முதல் காரணம், தன் ஓவியத்தில் தனக்கென ஓர் அடையாளம் கிடைத்து விட்டது என்பது. அதை மீறினால் தனது அடையாளத்தை இழந்து விடுவோம் என்பதும் இரண்டாவது காரணம். மூன்றாவது தன் அடையாளத்துடன் கூடிய ஓவியத்தை மாற்றினால் விற்பனை ஆவது தடைபட்டு விடுமோ என்ற பயம். இதனால் இவர்களைப் போன்ற«£ர் காட்சிகள் வைத்தால்கூட இவர்கள் என்ன ஓவியங்களை வைத்திருப்பார்கள் என்பதை காட்சியைப் பார்க்காமலேயே யூகித்துக் கொண்டு விடலாம். அதைவிடவும் பெரும்பாலான ஓவியர்கள் வருடங்களில் நான்கு அல்லது ஐந்து ஓவியங்கள் மட்டுமே செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. அதாவது மத்திய, மாநில அரசு விருதுகளைப் பெறுவதற்காக மட்டுமே
வரலாற்றில் பல சாதனைகளை படைத்த டாவின்சி முதல் பிக்காசோ வரை பல பரிசோதனைகளை செய்து பல ஓவிய முறைகளை கடந்ததால்தான் இன்று சாதனையாளர்களாகக் கருதப்படுகிறார்கள்

ஓவியத் துறையின் பரிமாண வளர்ச்சியில் தேவையின் பொருட்டு 1910ஆம் ஆண்டிலேயே காண்டிஸ்க்கி என்ற ரஷ்ய ஓவியரால் உருவாக்கப்பட்டதேஅப்ஸ்ட்ராக்ட்ஓவியங்கள். இவ்வகையான அரூப ஓவியங்களைப் பொருத்தவரை உருவங்களற்ற - தெளிவாக புரிந்துகொள்ள இயலாத எந்த ஒரு கருவையும் அடிப்படையாகக் கொண்டு அமைந்துவிடாமல் வரையவேண்டிய விதிக்கு உட்பட்டது இந்த அரூப ஓவியங்களாகும். இதனை கை தேர்ந்த ஓர் ஓவியக் கலைஞன் படைக்கும்போது அவனையும் மீறி அவன் ஆழ்மனதில் உள்ள விசயங்கள் - அனுபவங்கள் அதில் வந்து சேருகின்றன. வார்த்தைகளற்ற இசை நம்மில் எப்படி ஓர் அனுபவத்தைக் கொடுத்து ரசிக்கத் தூண்டுகிறதோ, அதேபோல உருவங்களற்ற வண்ணங்களும் அதன் ஓட்டங்களும் நம்முள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். இப்படியான ஓவியங்கள் ஒவ்வொன்றும் வரையப்பட்டதும் இவ்வுலகில் புதியதாக பூத்துவிட்ட ஒரு பூவாக உணரலாம்.

இதுவரை எத்தனை வகையான ஓவிய முறைகளை உருவாக்கி இருக்கிறீர்கள்?

கடந்த இருபது ஆண்டு காலங்களில் பல வகையான செய்முறைகளை ஆராய்ச்சி செய்திருந்தாலும் அனைத்தையும் முழுமையாக முடித்துவிட அவகாசம் போதவில்லை. எனது எமோசனலிச ஓவிய முறைக்குப் பிறகு தொடர்ந்து அதிக அளவில் அவ்வகை ஓவியங்களை செய்துவிட்டமையால் எனக்கு ஒரு மாற்றம் தேவைப்பட்டது. நான் எப்பொழுதும் எனது ஓவியத்திற்கான அடுத்த வளர்ச்சி நிலைக்கும் என்னுடைய ஓவியத்திலேயே தேடுவதும் அது தானாகவே வந்து கிடைப்பதும் நிகழ்வது உண்டு. ஒன்றை தேடிக் கொண்டிருக்கும்பொழுது புதிதாக வேறொன்றும் கிடைப்பதுண்டு
இப்படியாக எனது அடுத்த நிலைக்குச் செல்ல நான் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு செய்த ஓவியத்தில் ஏற்பட்ட ஒரு துளி செய்முறையை அடிப்படையாகக் கொண்டு எனது அடுத்ததற்செயல் புள்ளியியல்என்ற தலைப்பில் பல ஓவியங்களை உருவாக்கினேன். இவ்வகை ஓவிய வெளிப்பாடுக்கு இந்திய சுவரோவியங்கள், சிற்றோவியங்கள் முறையினை அடிப்படையாக வைத்து வரைவது பொருத்தமாக இருந்தாலும், அவை பழமையான தோற்றங்களுடன் இருப்பதை போன்ற உணர்வுகள் இருப்பதும், அதன் சிறப்பாக அமைந்தது. இவ்வோவியங்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு சில ஓவியர்கள் வரைந்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதைப்போல கிராபிக் முறையில் செதுக்கி செய்யப்பட்ட தோற்றத்தை உடைய ஓவியங்கள் செய்வதும் புதிய உத்திதான். இதனை அடிப்படையாகக் கொண்டும் ஒருசில ஓவியர்கள் பின்பற்றி வருகிறார்கள். இதைப் போலவே எனது வெண்கலச் சிற்பங்கள், சுடுமண் சிற்பங்கள், கோட்டோவியங்கள் அனைத்தும் புதிய உத்தியைக் கையாண்டு படைக்கப்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் எனக்கான தனித்தன்மையுடன் இருப்பது முக்கியமானது. இப்பொழுது இவற்றிற்கும் மீறிய அடுத்த நிலை குறித்து எனது ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறேன்.

குறுகிய காலத்திலேயே அடுத்த வகையான ஓவியமுறைக்கு மாறிவிடுவது ஏன்?

தொடர்ந்து ஓவியம் வரையும்பொழுது எனது ஓவியத்தில் ஒவ்வொரு துளியும் ஒரு புதிய நோக்கோடு என்னை வழி நடத்துகிறது. எனது அடுத்த ஓவியத்திற்கான கருவை, உந்துதலை எனது ஓவியமே தருகின்றது. இப்படி ஒரு வகையான ஓவிய முறையில் நூற்றுக்கணக்கான ஓவியங்கள் தீட்டிய பிறகு எனது மனநிலையில் ஒரு மாற்றம் தேவைப்படுவதாலோ அல்லது சூழலின் காரணமாக அவ்விதமான ஓவியத்தைத் தொடர்ந்து செய்யத் தடையாக இருப்பதாலோதான் என் ஓவியங்கள் என்னை வழி நடத்தியபடி, அதிலிருந்து வேறு உத்தி முறையை பரீட்சிக்க ஆரம்பித்திருக்கிறேன்.

தொடர்ந்து ஓவியம் வரைந்து வந்தால் அதற்கான வளர்ச்சிநிலைத் தானே கிடைக்கும். அப்பொழுது அது தானாக மாறும். ஒரு சில ஆர்வக்கோளாறு ஓவியர்களும், ஓவியம் பற்றிய படிப்பறிவு அற்ற சுயமாக கற்றுக்கொண்ட ஓவியர்களும் என்ன கருதுகிறார்கள் என்றால், இன்று பிரபலமாக உள்ள பல ஓவியர்களின் ஓவியங்களை அதுபோலவே செய்துவிட்டால் அவர்களுக்கு இணையானவர்களாகவும் பலரைப் போல செய்துவிட்டால் பலருக்கும் இணையாகவும், தங்களைக் கருதிக் கொள்கிறார்கள். இது முற்றிலும் தவறான ஒன்று. ஓவியம் என்பது ஒரு பயணம் போன்றது. பல அனுபவங்களோடுதான் கடந்தாக வேண்டும்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சங்க இலக்கியம் முதல் பெண் கவிஞர்கள் : பத்மாவதி விவேகானந்தன் நேர்காணல்

எனது கதைகள் வரலாற்று ஆவணங்கள்: மேலாண்மை பொன்னுச்சாமி நேர்காணல்

கவிஞர் அறிவுமதி பாடலாசிரியரான கதை