இதத்தான் கவுத கவுதங்கிறியா நீ? - கவிஞர் இளம்பிறை
இராமநாதபுரம் பகுதியிலிருந்து பஞ்சம் பிழைக்க ‘அரிசிபடி’ ஆளாக கீழத் தஞ்சைப் பகுதிக்கு வந்தவர்களில் ஒருவர் சன்னாசி. இவருக்கு ‘வலிவலம் தேசிகர் பண்ணை’யில் தலையாரி வேலை. திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் இருந்தார்கள். அவரின் மனைவி, பஞ்சம் பிழைக்க வந்த இடத்தில் பாம்பு கடித்து இறந்துவிட, ஆதமங்கலம் பண்ணையில் நடவு ஆளாக இருந்த கருப்பாயியைப் (அவரும் இராமநாதபுரத்திலிருந்து பஞ்சம் பிழைக்க அரிசிப்படி ஆளாக வந்தவர்தான்) பேசி சன்னாசிக்கு இரண்டாம் தாரமாக, ஆதமங்கலம் பண்ணையிலேயே கல்யாணம் செய்து வைத் தார்கள். அவர்கள் இருவருக்கும் 1971-ல் பிறந்தவர்தான் கவிஞர் இளம்பிறை. ஐந்தாவது குழந்தையென்பதால் இவருக்கு ‘பஞ்சவர்ணம்’ என்று பெற்றோர் பெயர் வைத்தனர். ‘இளம்பிறை’ என்பது பின்னாளில் கவிதை எழுதுவதற்காக இவரே வைத்துக் கொண்ட புனைபெயர்.
இவர்களின் குடும்பம் ‘வலிவலம்’ தேசிகர் பண்ணையில் சில வருடங்கள், ‘கொத்தங்குடி’ கிராமத்தில் சில வருடங்கள் என வசித்துவிட்டு, இறுதியில் ‘சாட்டியக்குடி’க்கு வந்து, அங்கே பண்ணையார் காட்டிவிட்ட ஓரிடத்தில் குடிசையைப் போட்டுக் கொண்டு அங்கேயே தங்கிவிட்டார்கள். பஞ்சவர்ணம் படித்தது, கவிதை எழுதத் தொடங்கியதெல்லாம் இந்த சாட்டியக்குடி கிராமத் தில்தான்.
பஞ்சவர்ணத்தின் அம்மா, அப்பா இருவருமே எழுத்தறிவு இல்லாத கைநாட்டுகள். உடன்பிறந்த சகோதரிகள் யாரும் பள்ளிக்கூடம் பக்கமே ஒதுங்கியதில்லை. அண்ணன் மட்டும் பத்தாவது வரை படித்து தேர்ச்சியடைய முடியாமல் படிப்புக்கே முழுக்குப் போட்டுவிட்டு அவரும் விவசாயி ஆகி விட்டார்.
பஞ்சவர்ணத்திற்கும் பள்ளிக்குச் செல்வதில் ஆர்வமில்லை. அறுவடை முடிந்த வயல்களில் சிதறிக் கிடக்கும் நெற்கதிர்களைப் பொறுக்குவது, வாய்க்காலில் மீன் பிடிப்பது, குளத்து நீரில் மூழ்கி அல்லிக்கிழங்கு எடுப்பது... இவற்றில்தான் அதிக ஆர்வமிருந்தது. என்றாலும், அவ்வூர் பள்ளியில் மாணவர் பற்றாக் குறையை ஈடுசெய்வதற்காக ஓர் ஆசிரியை அடிக்கடி வந்து தொடர்ந்து தொந்தரவு செய்து - கெஞ்சிக் கூத்தாடி பஞ்சவர்ணத்தை அழைத்துச் சென்று பள்ளியில் சேர்த்திருக்கிறார். படிப்பில் ஆர்வமில்லாமலேயே ஆறாம் வகுப்பு வரை பள்ளிக்குச் சென்று வந்திருக்கிறார் பஞ்சவர்ணம்.
வாழ்வின் திருப்புமுனையாக, ஏழாவது வகுப்பாசிரியை இச்சிறுமி மீது எடுத்துக் கொண்ட அக்கறையும், அவரது புத்திமதியும்தான் இவரை கல்வியின் மீது ஆர்வத்தைத் தூண்டி இருக்கிறது. அதன் பிறகு நல்ல விதமாகப் படித்து பட்டம் பெற்று, இப்போது ஆசிரியயையாகப் பணியாற்றுகிறார்.
...
தாயின் தாலாட்டில் இழைந்தோடும் சோகமும், வயல் பாடல்களில் தோய்ந் திருக்கும் சூதுவாது இல்லாத விவசாயப் பெண்களின் வாழ்வனுபவங்களும் - கேலியும் கிண்டலும் இவரை சிறுவயதிலேயே பாதித்து எதுகை மோனையோடு பாட்டுக்கட்டத் தொடங்கியிருக்கிறார்.. முதன் முதலாக, எங்கள் குலதெய்வம் ஐயனாரை வாழ்த்தித்தான் (கற்பனையாக) ஒரு பாடல் எழுதினேன்.’’
கீழத் தஞ்சை பகுதியில் பஞ்சம் பிழைக்க வந்த அரிசிபடி ஆட்களும், உள்ளூர் விவசாயக் கூலிகளும் குடும்பம் குடும்பமாக இரவு பகல் பாராமல் உழைத்து உற்பத்தி செய்த நெல்மணிகளை எல்லாம் பண்ணையார்களிடமே கொடுத்துவிட்டு, தங்கள் பசிக்கு அரிசி இல்லாமல் பட்டினி கிடக்கும் நிலைதான் அப்போது நிலவியது என்பதற்கு கவிஞர் இளம்பிறை சிறுவயதில் எழுதிய ஒரு கவிதை வரலாற்றுச் சாட்சியமாக இருக்கிறது.
“அம்மா
அடுப்பைப் பற்ற வை
குளிராவது காயலாம்.’’
இதுவே இளம்பிறையின் முதல் கவிதை என அடையாளம் காணப்படுகிறது. இக்கவிதையை எழுதும்போது அவருக்கு வயது பதினாறு. தன்னை ஒரு கவிஞராக அடையாளம் கண்டு கொண்ட இளம்பிறை, தைரியமாகக் கவியரங்கங்களிலும் கவிதை வாசிக்கத் தொடங்கினார்.
கலைஞர் மு.கருணாநிதி பிறந்த ஊரான ‘திருக்குவலை’யில் ஒரு கவியரங்கம். அதில் தனது முதல் கவியரங்கக் கவிதையை வாசிக்கிறார். அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிறுபத்திரிகைத் தோழர்கள் தங்களின் பத்திரிகைகளுக்குக் கவிதைகளை அனுப்பி வைக்குமாறு கேட்கிறார்கள். அனுப்பி வைக்கிறார். சில கவிதைகள் பிரசுரமாகின்றன.

நண்பர்களின் தூண்டுதலால், தான் எழுதிய ஒரு நீண்ட பாடலை 24 பக்கங்களில் ‘இளவேனில் பாடல்கள்’ எனும் சிறு நூலாக வெளியிட்டார். அந்நூலுக்கு பத்திரிகையாளர் மானா.பாஸ்கரன் அணிந்துரை எழுதியிருந்தார்.
இளம்பிறையின் தொடக்க கால கவிதைகளில் ‘அம்மா’ மிகமுக்கியமான கவிதை.
“தாலாட்டுப் பாடாம
தனித்தழுக விட்டவளே.
காட்டு வேலைக்கென்ன
கதறவுட்டுப் போனவளே’’ எனத் தொடங்கி...
“என் இதயத்திலே வாழுகிற
உனக்குத்தான் மொதப் பாட்டு
என் உயிர்பாடும் தாலாட்டு’’ என்று முடியும், அந்த நீண்ட கவிதை. இக்கவிதையை எழுதி முடித்தவுடன் தன் அம்மாவிடம் வாசித்துக் காண்பித்தாராம். ஆச்சர்யமும் ஆனந்தமும் அடைந்த அந்தத் தாய், “என்னப் பத்தி எழுதிட்டு, இதத்தான் கவுத கவுதங் கிறியா நீ...’’ என்று வெள்ளந்தியாகச் சொல்லி, வெட்கத்துடன் சிரித்தாராம். இக்கவிதையை கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக - இப்போதும்கூட பல மேடைகளில் வாசித்துக்கொண்டி ருக்கிறார் இளம்பிறை. அவருக்கேயான கிராமியக் குரலில், நெஞ்சுருக அவர் வாசிக்கும்போது கேட்பவர் கண்களெல்லாம் பனிக்கும்.
இளம்பிறையையும் அவரின் ‘அம்மா’ கவிதையையும் பரவலாக அறிமுகப்படுத்தியவர்களில் மிகமுக்கியமானவர் எழுத்தாளர் சுஜாதா. அத்துடன், ‘புதிய பார்வை’, ‘குமுதம் ஸ்பெஷல்’, ‘மலர் மல்லிகை’ போன்ற இதழ்களிலும் இக்கவிதை மறுபிரசுரம் செய்யப்பட்டன.
கவிஞர் இளம்பிறையின் கவிதைகள் அப்போது முன்னெடுக்கப்பட்டு வந்த தலித்திய வகைப்பாட்டுக்குள் வைத்துப் பார்க்கப்பட்டன. இதற்கு தலித் வட்டாரத்திலிருந்து எதிர்ப்புக் கிளம்பியது.
இளம்பிறையின் ‘மௌனக்கூடு’ கவிதைத் தொகுதிக்கு மன்னார்குடியில் நடந்த ஒரு விமர்சனக் கூட்டத்தில், அவரது சாதியப் பின்புலம் அறிந்த சில தலித் தோழர்கள் “ஓர் ஆதிக்க சாதியில் பிறந்த இளம்பிறை, ‘அம்மா’, ‘நினைவுகள்’ மாதிரியான கவிதைகளை எழுதி, தன்னை ஒரு தலித்தாக காட்டிக்கொள்ள விரும்புகிறார்’’ என்று நேரடியாக விமர்சித்திருக்கிறார்கள்.
“தலித் மக்களும் நாங்களும் ஒன்று என்பதுபோலதான் இப்போதும் அங்கே வாழ்ந்துகொண்டிருக்கிறோம். எங்களின் வாழ்நிலை ஒரே மாதிரியானவை என்பதால், தாயா பிள்ளையாகத்தான் ஒருத்தருக்கொருத்தர் பாசமா இருக்கோம். எங்க நல்லது கெட்டதுக்கு அவர்களும், அவர்களின் நல்லது கெட்டதுக்கு நாங்களும் வருவோம், போவோம். எங்களுக்குள் ஒரு குடும்ப ரீதியான பாசம், பழக்கம் இருக்குது. நாங்க சாதி ரீதியா வேறுபடாம, வர்க்க ரீதியா ஒன்றுபட்டு இருக்கோம். அந்த மாதிரியான சூழலில், எங்களின் அனுபவங்கள், நாங்கள் படுற அவமானங்கள், பண்ணையாரிடம் வாங்குற ஏச்சு பேச்சு எல்லாமே ஒண்ணாதான் இருக்கு. எங்களையெல்லாம் ஒண்ணு படுத்துச்சுன்னா அது வறுமைதான்...’’
‘நிசப்தம்’ கவிதைத் தொகுதியில் இடம்பெற்றுள்ள மிக முக்கியமானதொரு கவிதை ‘அறுவடைக் காலம்’.
“கொட்டுகிற பனியில
குனிஞ்சு அறுக்கையில
அடிவயிறும் நடுங்குதய்யா
ஆரிடத்தில் இதைச் சொல்ல...
புள்ளக்குட்டி போதுமுன்னு
பண்ணிகிட்ட ஆபரேசன்-
கதுர அள்ளிப்போட்டுத் தூக்கயில
முள்ளுபோல குத்துதய்யா
மூச்சுவிடத் திணறுதய்யா...’’
எனத் தொடரும் அக்கவிதை, ஓரிடத்தில்...
“கண்ணுல விழுந்த தூச
நின்னெடுக்க நேரமேது? - அட
ஒன்னுக்கு இருக்கக்கூட
ஒழியுதில்ல நேரமய்யா...’’
என்று வாசகனின் நெஞ்சை ஆங்காங்கே அதிர வைத்து நகர்ந்து போகிறது. கிராமப்புற விவசாயக்கூலிப் பெண்களின் வாழ்வியல் துயரங்களை இளம்பிறையைத் தவிர வேறெந்த கவிஞரும் இவ்வளவு நுட்பமாக எழுதியதில்லை எனலாம்.
...
இளம்பிறையின் திருமண வாழ்வு அவ்வளவு உவப்பானதாக அமையவில்லை. அந்த அனுபவப் பதிவுகளை ‘நிசப்தம்’ கவிதைத் தொகுதியில் இடம்பெற்ற பல கவிதைகளில் படித்தறியலாம். அதன்பிறகும் அவர் வாழ்வில் நிறைய ஏமாற்றங்கள்... குழப்பங்கள்...
முகிலன், சூரியதிலீபன் ஆகிய இரண்டு குழந்தைகளுக்குத் தாயான இளம்பிறை, இப்போது சென்னையில் வசிக்கிறார்.
“மாநகர் வந்து
மாதங்கள் பல ஓடிவிட்டன.
பொருட்களை
ஏற்றிவந்து விட்டேன் அப்போதே.
வராமல் அடம்பிடித்துக் கொண்டிருக்கும்
இந்த மனசைத்தான்
எப்படிக் கொண்டு வருவதென
தெரியவில்லை’’
இப்படி பல்வேறு வாழ்வனுபவங்கள், கிராமத்து ஏக்கங்கள் ‘முதல் மனுஷி’ எனும் இவரது நான்காவது கவிதைத் தொகுதியில் இடம்பெற்றுள்ளன.
...
கவிஞர் இளம்பிறைக்கு முதன்முதலாக விருது கொடுத்து சிறப்பித்தவர் கவிஞர் இந்திரன். அவரது ‘யாளி அறக் கட்டளை விருது’, கவிஞர் கரிகாலனின் ‘களம் இலக்கிய விருது’ கவிஞர் வைரமுத்துவின் ‘கவிஞர் தின விருது’ ஆகியவை இவரது கவிதைகளுக்குக் கிடைத்த மிகச்சிறந்த அங்கீகாரங்கள்.
சமீபத்தில், திரைப்படப் பாடல் ஒன்றையும் எழுதியுள்ளார். தன் கிராமத்து மனசின் ஈரம், நகரத்து வெக்கையில் உலர்ந்து விடாமல் காத்தபடி வாழ்ந்து கொண்டிருக்கும் இளம்பிறை, தனது கிராமத்து அனுபவங்களை ஒரு நாவலாக எழுதும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்.
சூரியசந்திரன்
பெண்ணே நீ, ஆகஸ்ட் 2004
கருத்துகள்
கருத்துரையிடுக