கரைகளை உடைத்து நுங்கும் நுரையுமாக சுழித்தோடும் காட்டாற்று கவிவெள்ளம்: தோழர் உ.வாசுகி
தோழர் சூரியசந்திரன் ‘பெண்ணேநீ’ இதழில் எழுதிய ‘கவிக்குயில்கள்’ கட்டுரைத் தொடர், தற்போது தொகுக்கப் பட்டு ‘அறையின் இருளில் காடு மணத்துக் கிடந்தது’ எனும் நூலாகியுள்ளது.
இந்நூலின் மூலமாக, பெண் கவிஞர்கள் பட்ட பாடுகளையும், பெற்ற வெற்றிகளையும், நடத்திக் கொண்டிருக்கிற போராட்டங்களையும் அவர்களோடு இணைந்து நின்று உணரமுடிகிறது. அவர்களது அனுபவங்களை, அவர்களது வார்த்தைகளிலேயே பதிவு செய்யும்போது, தமது கருத்தை ஒட்ட வைக்காமல் உண்மையாக எழுதியிருக்கிறார், சூரியசந்திரன்.
இந்நூலில் இடம்பெற்றுள்ள கவிஞர்கள், பிறந்ததும் வளர்ந்ததும் வெவ்வேறு ஊராக இருந்தாலும் வர்க்கம்கூட வித்தியாசப்பட்டாலும், இவர்களது கவிதைகள் கலகக் குரல்களாகவே ஒலிக்கின்றன.
பெண்கள் மீதான ஒடுக்குமுறையை பல தளங்களில் பார்த்ததும், கேட்டதும், அனுபவித்ததும் ஒரு பரிமாணத்தை இவர்களுக்கு அளித்தது என்றால், சிலருக்கு வறுமை கூடுதல் உந்துசக்தியாக இருந்திருக்கிறது. இளம்பிறை தனது 16ஆவது வயதில் எழுதிய முதல் கவிதை.
“அம்மா
அடுப்பைப் பற்ற வை
குளிராவது காயலாம்’’
என்பது இப்படியாகவே அமைந்துள்ளது.
இவர்களின் பெற்றோர்களும் விதவிதமாகவே இருக்கிறார்கள். பெண்கள் கவிதை எழுதுவது ‘ஒரு மாதிரியான’ விஷயம் என்று கலங்கிய பெற்றோர்கள், கல்யாணத்துக்குப் பிறகாவது ‘பொறுப்பாக’ இரு என்று அறிவுறுத்திய பெற்றோர்கள், கவிதைக்கு அடிப்படையான வாசிப்புக்கு உதவிய பெற்றோர்கள், கவிதை எழுதுவதை ஊக்கப்படுத்திய பெற்றோர்கள் என்று பல ரகம்.
ஆனால், திருமணத்துக்குப் பின்னால்... பொதுவாக, கவிதை எழுதுகிற, பெண்ணியம் பேசுகிற பெண்களுக்குத் திருமணமும் குடும்ப அமைப்பும் தோழமையோடு தோள் கொடுக்காமல், சுயத்தை இழக்க வைக்கிற அமைப்பாக இருந்துவிட்டால்...
“அடுத்த ஆண்டும்
வசந்தம் ஆர்ப்பாட்டமாய் வரும்
நான் மட்டும் மணமாகிப் போயிருப்பேன்’’
என்கிற வெண்ணிலா கவிதையும்,
“திருவிழாவில்
தொலைந்துபோனபோது
உறவுகளும்,உறவினர்களும்
கவலைப்பட்டனர்.
ஆனால்,
என் மணவிழாவில்
நான் தொலைந்துபோனேன்
யாரும் என்னைத்
தேடவில்லை’’
எனும் தாமரையின் கவிதையும்,
“கல்யாணம் ஆகிவிட்டால்
கல்லாகி வீடுவேனா?
கயவர்கள் உலகத்தில்
சுயநலமே வாழ்க்கையெனில்
எனக்குப் பயந்தக்கால் தேவையில்லை
சொந்தக்கால் போதுமடா’’
என்கிற வைகைச்செல்வியின் வரிகளும்,
“மற்ற பல விஷயங்கள்
சாதகமாக இருந்ததால்
தாம்பூலத்தட்டு மாற்றுகின்றனர்
மாப்பிள்ளை வீட்டார்.
அப்போது...
எதற்கும் இருக்கட்டுமேயென
கவிதை எழுதுவதை
கடைசியில் சொல்லிவைத்தேன்.
வந்தவர்கள் எழுந்தார்கள்
வாயிலை நோக்கி’’
என்கிற சுகிர்தராணியின் வரிகளும் திருமணத்தின் மீதும் இன்றைய ஜனநாயகமற்ற குடும்ப அமைப்பின் மீதும் துல்லியமாக விமர்சனங்களைப் பதிவு செய்கின்றன.

ஆண் எழுதுகிறபோது “ஸ்... அப்பா எழுதுகிறார்’’ என்று குழந்தைகளை அடக்கி, அமைதியான சூழலை அநேகப் பெண்கள் ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள். ஆனால், பெண் எழும்போது, அப்படி ஒரு சூழலை ஏற்படுத்துகிற ஆண்கள் அரிதாகவே இருக்கிறார்கள்.
12 ஆண்டுகள் கணவருக்குத் தெரியாமல் புனை பெயரில் எழுதிய சல்மா, எல்லா பணிகளையும் முடித்து விட்டு அனைவரும் தூங்கியபிறகு திருட்டுத்தனமாக எழுதிய உமா மகேஸ்வரி... இவர்கள், எழுதும் உரிமையை விட்டுக் கொடுக்காமல் இருக்க நிறையவே போராடியிருக்கிறார்கள்.
பெண்ணியம் என்பது ஏதோ படிப்பாளிகளுக்கும் மேல் தட்டுப் பெண்களுக்கும் வேலையில்லாமல் பேசிக்கொண் டிருக்கிற விவகாரம் என்பதான போலி பிம்பத்தை, இயக்கம் சார்ந்தவர்களோடு, இவர்களும் உடைத்திருக்கிறார்கள்.
“பெண்ணியத்தை எனது வாழ்க்கைதான் எனக்குக் கற்றுக் கொடுத்தது’’ என்கிறார் சல்மா.
“பெண்களுக்கென்று வரையறுக்கப்பட்ட எந்த விசயத்தையும் ஆரம்பத்திலிருந்து நான் செய்ததே கிடையாது’’ என்று அழுத்தமாய் கூறுகிறார் வெண்ணிலா.
“சமூகக் கோடுகளோடு ஒத்துப் போகாத பிரச்னைக்குரிய குழந்தை நான்’’ என்று, தனது பால்யத்தைப் பற்றிப் பேசுகிறார், தாமரை.
தனக்கு வரும் அரசு கடிதங்கள் செல்வியா, திருமதியா என்கிற குழப்பத்தில் அடித்தல் திருத்தல்களுடன் வருவதை பாலபாரதி சுட்டிக்காட்டுவதுடன், அரசு நிர்வாகத்துக்குத் திருமணம் ஆனவரா இல்லையா என்பது முக்கியமா? என்கிற கேள்வியை முன்வைக்கிறார்.
வாழ்வின் பல கூறுகளை இவர்களது கவிதை வரிகள் கடுமையாய் கேள்விக்குள்ளாக்குகின்றன. ஏழை, உழைக்கும் தாய் தனது குழந்தைக்குத் தாலாட்டு பாடக்கூட நேரமில்லாமல் வேலைக்குப் போக நேருவதையும், அப்பா என்கிற உறவில் சரியாக இருப்பவர்கள்கூட அம்மாவின் கணவர் என்ற உறவில் பிசிறு தட்டி நிற்பதையும், தருமபுரியில் கொளுத்தப்பட்ட பேருந்தில் எரிந்துபோன மாணவிகள் குறித்தும், தீண்டாமை குறித்தும், பெண்ணைக் கட்டுப்படுத்துகிற சமூக அமைப்பையும், பிள்ளையார் சதுர்த்தி அச்றுறுத்தும் அரசியல் அடையாளமானது குறித்தும், குடும்ப வன்முறை குறித்தும் வேதனையோடும் வெகுளியோடும் வெம்மையோடும் இவர்களது வரிகள் மதிப்பீடு செய்கின்றன.
வாழ்வின் கூறு எனும்போது பெண்ணின் உடலும், பாலியலும் அதற்கு உட்பட்டதுதானே? சில கவிஞர்கள் அவை குறித்த கண்ணோட்டத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர். மாதவிலக்குப் பற்றியும், தாம்பத்திய உறவு காதலோடு இல்லாமல் அலுத்து தூங்குவதற்கான உடற்பயிற்சியாக பலரது வாழ்வில் நடந்து கொண்டிருப்பதும், உடலுறவிலும்கூட அதிகாரப் படிநிலையும், எதிர்பார்ப்புகளும் இருக்கின்றன என்பது பற்றியும் எழுதியுள்ள கவிதை வரிகள் காட்டாற்று வெள்ளமாய் கரைகளை உடைத்துக்கொண்டு, நுங்கும் நுரையுமாக சுழித்தோடுகின்றன.
இவற்றில் சில ஆபாசமாக இருக்கின்றன என்று கூறப்படுகிறது.
“யார் எழுதினாலும் ஆபாசம்தானே’’ என்றொரு கேள்வியும் எழுகிறது. உண்மைதான். ஆபாசம் யார் எழுதினாலும் விமர்சிக்கப்பட வேண்டியதுதான். ஆனால், பெண்ணின் உடலை நுகர்வு பொருளாகப் பார்த்து ஆண் எழுதுவதையும், பெண் தனது பாலியல் குறித்து எழுதுவதையும் ஒரே தளத்தில் வைத்து பார்க்கமுடியாது. அந்த வித்தியாசத்தைப் புரிந்துகொண்டு விமர்சிக்க வேண்டும்.
இரண்டாவதாக, பெண்கள் எழுதுகிற கவிதைகள் எல்லாம், அவர்களது சுயவரலாறு என்று முடிவுசெய்து, அவர்களது சொந்த வாழ்க்கையை எட்டிப் பார்ப்பதும், அவதூறு செய்வதும் எந்தவிதத்திலும் பொருத்தமானது அல்ல.
இக்கவிஞர்கள் பலரது எழுத்துக்கள் வெளிவர ‘தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்’, ‘கலை இலக்கியப் பெருமன்றம்’, சுஜாதா உள்ளிட்ட பல எழுத்தாளர்கள் மிகப்பெரும் பங்கு வகித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய சமூகமும், கடந்த காலங்களைப் போலவே வர்க்கங்களாகப் பிரிந்துவிட்டுள்ளது. ஆளும் வர்க்கத்துக்குச் சாதகமான பொருளாதார அமைப்பு இதன் அஸ்திவாரத்தில் அழுத்தமாய் உட்கார்ந்திருக்கிறது.
பெண்ணடிமைக் கோட்பாடும், சாதிய ஒடுக்குமுறைகளும் இதற்கு உதவுகின்றன. கலை, இலக்கியம், பண்பாடு அஸ்திவாரத்தின் மீது கட்டப்படும் கட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது. அஸ்திவாரமும் மேல் கட்டுமானமும் ஒன்றையொன்று பொதுவாக வலுப்படுத்துகின்றன. எனவேதான், பொதுவான கலை, இலக்கிய படைப்புகள் வர்க்கச் சுரண்டலையும், பெண்ணடிமை, சாதிய கோட்பாடுகளையும் கேள்விக்கு உள்ளாக்க மறுக்கின்றன. அல்லது நியாயப்படுத்துகின்றன. அஸ்திவாரத்தை அசைக்காமல் சமூகம் மாறாது. எனவே, இந்தப் பொது ‘அமைதி’ கெடுக்கப்பட வேண்டும். அதற்கு, கலகக் குரல்களும் நிச்சயம் தேவை. இந்தக் கவிஞர்களின் கவிதைகள் இன்னும் கூடுதலாகக் கலகம் செய்யவேண்டும் என்பதுதான் என் எதிர்பார்ப்பு.
கொஞ்சம் கவிதை, கொஞ்சம் வாழ்க்கை, சமூகத்தைப் பற்றிய சுருக்கங்கள், கொஞ்சம் போராட்டம், கொஞ்சம் வெற்றிகள், கொஞ்சம் சமரசம் என்று கவிஞர்களது பல பரிமாணங்களை, சுருக்கமாக ஆனால் கூர்மையாக வெளிக் கொண்டுவருகிறது இந்த நூல். இக்கவிஞர்களின் அகமும் புறமும் குறித்த மிகச் சுருக்கமான, ஆரோக்கியமான குறுக்கு வெட்டுத் தோற்றம் என்பதாக இந்நூலை மதிப்பீடு செய்யலாம்.
- உ.வாசுகி
கருத்துகள்
கருத்துரையிடுக