வீட்டுக்கு வீடு கவிஞர்கள் : உவமைக் கவிஞர் சுரதா நேர்காணல்

மின்னம்பலம்:மூன்று முதல்வர்கள் ...

பாரதி இறந்த ஆண்டிலே பிறந்தநான்
பாரதி தாசனின் பாடலைப் பயின்றதால்
ஒருவா ரென்னை உயர்த்திக் கொண்டேன்.
செய்யுள் இலக்கணம் தெரிந்து கொண்டபின்
தடுமாற்றம் இல்லாத் தகுதி பெறலானேன்
தகுதி இருப்பின் தனித்தி யங்கலாம்
அத்தகுதி எனனிடம் அதிக மிருப்பதால்
தமிழ்க் கவிதை உலகில் தனித்தியங்கு கின்றேன்.
பெரும்பாலும் கவிஞர்கள் பிறரைப்பின் பற்றி
எழுதும் வழக்கம் இங்குண்டு - அந்த
நிழல்வழி வாசலை விட்டு  நீங்கி
எழுதும் கவிஞன் நான்! இவரையோ அவரையோ
பின்பற்றி எழுதப் பிரியப் படாதவன்!
கணக்கைப் போன்றதே கவிதை என்பதால்
கவிதை புனைந்திடக் கற்பனை வேண்டும்
என்னும் கருத்தைநான் ஏற்பதே இல்லை.
மடையனாய் இருப்பதில் உள்ள மகிழ்ச்சி
அறிஞனாய் இருப்பதில் இல்லை - ஆதலால்
நானொரு கவிஞன்! அதைவிட
நானொரு நல்லவன் இந்த நாட்டினிலே!

உவமைக் கவிஞர் சுரதாவின் இயற்பெயர் இராஜகோபாலன். சுப்புரத்தினம், பாரதியார் மீது கொண்ட பற்றினால் - பாரதிதாசன் ஆனதுபோல, இவர் பாரதிதாசன் மீது கொண்ட பற்றினால் சுப்புரத்தினதாசன் (சுரதா) ஆனார்.

தஞ்சை மாவட்டம், பழையனூர் கிராமத்தில் ஒரு கூரை வீட்டில் வசித்த திருவேங்கடம் - செண்பகம் அம்மையார் தம்பதியருக்கு 23.11.1921ல் பிறந்தார். ஒரத்தநாடு ராஜமடம் பள்ளியில் இறுதி வகுப்பு வரை படித்துள்ளார். சுயமரியாதை சிந்தனை கொண்ட இவர், தனது கவித்திறமையால் 16 கவிதை நூல்களும், 60க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களும் எழுதியுள்ளார். இதழியல் அனுபவமும் உண்டு. அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர். ஆகிய மூன்று முதலமைச்சர்களிடமும் அரசு விருது பெற்ற சிறப்பும் இவருக்கு உண்டு. மலேசியா, சிங்கப்பூர், துயாய் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்துள்ளார்.

சென்னை கலைஞர் கருணாநிதி நகரில் உள்ள அவரது இல்லத்தில் அவரைச் சந்தித்து பேசினோம்.

இனி அவருடன்...

உங்கள் கவிதைகளின் தனித்துவம் என்று நீங்கள் எதை குறிப்பிடுவீர்கள்...?

புதிய சொல்லாக்கங்கள் நிறைய இருக்கும். வரலாற்றுச் செய்திகளும், நாளேட்டைப் படிப்பது போன்ற எளிமையும், அடிகோடு கிழிக்கத் தக்கதுமான அருமையான கவிதை களாகவும் இருக்கும்.

கவிஞனுக்கு கற்பனா சக்தி அவசியமில்லை என்று சொல்லியிருக்கிறீர்களே...?

கவிதை என்பது கணிதம் போன்றது. அதற்கு கற்பனை தேவை இல்லை. உள்ளதை உள்ளபடியே பதிவு செய்தால்தான் வரலாற்று செய்திகள் கிடைக்கும். நிலவின் வெளித்தோற்றத்தை பாடுவதோடு நிறுத்திக்கொள்ளக் கூடாது. அதில் இருக்கிற மண்ணையும் பாடவேண்டும். ‘மாம்பழக் கன்னம்’ என்றால் மட்டும் போதாது; மாம்பழத்தின் மகத்துவத்தையும் கூற வேண்டும். மனிதனின் வெளித் தோற்றத்தை மட்டும் பாடினால் போதாது. உள்ளுறுப்புகளையும் பாடவேண்டும். இதைச் சமணத் துறவிகள் சரியாகச் செய்தார்கள். நாம் சொல்லத் தவறிவிட்டோம்.

கற்பனை மட்டுமே கவிதை என்றால், அது செய்தி ஆகாது. அதனால் வருங்காலத்திற்குப் பயன் இருக்காது. நன்றாக எழுதுகிறானா? என்பதைவிட, சரியாக எழுதுகிறானா? என்று மதிப்பிட வேண்டும். நன்றாக இருப்பது மயக்கம்; சரியாக இருப்பது மருத்துவம்!

சமூகத்தில் கவிஞர்களுக்கென்று சில கடமைகள் உண்டு; அதை எந்த அளவு நீங்கள் நிறைவேற்றியிருக்கிறீர்கள்?

எனது இளம் வயதில் நிறைய சமூகப் பாடல்களை எழுதியுள்ளேன். சுயமரியாதை இயக்க மேடைகளில் பேசியிருக்கிறேன். இப்போது அதற்கு அவசியம் இல்லை என்பதால் அது பற்றி சிந்திப்பதில்லை.

இன்றைய சமூகச் சீர்கேடுகள் குறித்து எழுதுவீர்களா?

எழுதலாமே! எந்தப் பத்திரிகையிலாவது கேட்டால் நான் எழுதித் தரத் தயார்.

புராணங்களை முன்நிறுத்தி நாட்டின் சரித்திரத்தை ஆய்வு செய்வது ஆரோக்கியமானதா?

புராணச் சம்பவங்களையும் பாத்திரங்களையும் முழுவது மாக மூடநம்பிக்கை என்று ஒதுக்கிவிட முடியாது. அதில் மிகைபடுத்தப்பட்ட கற்பனைகள் செருகப்பட்டுள்ளன. அதை நீக்கி விட்டால் மற்றவை வரலாற்றுச் சம்பவங்களே... இதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம்.

மதவாத வளர்ச்சியில் கவிஞர்களின் பங்களிப்பு...?

நபிகள் நாயகம், யேசுநாதர் போன்றவர்கள் மத வளர்ச்சிக்கு கவிதையைப் பயன்படுத்தவில்லை. சித்தர்களும், ராமலிங்க அடிகளார், தாயுமானவர் போன்றவர்களும்தான் கவிதையை மதவாதத்திற்குப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

முன்பெல்லாம் கவிதை எழுத ‘சரஸ்வதி’ அருள் வேண்டும் என்பார்கள். அதனால் குறிப்பிட்ட சாதிக்காரன் மட்டுமே தன் போக்குக்கு எழுதினான். பின்னர் வந்தவர்கள் “யார் அந்த சரஸ்வதி? கல்விக்குத் தெய்வம் என்றால் அவள் எதுவரை படித்திருக்கிறாள்? எத்தனை ‘வால்யூம்’ எழுதி இருக்கிறாள்?’’ என்று கேள்வி கேட்ட பிறகுதான் எல்லோரும் கவிதை எழுதலாம் என்ற நிலை உருவானது. இப்போது வீட்டுக்கு வீடு கவிஞர்கள் இருக் கிறார்கள். மக்கள் தொகையை கணக்கெடுப்பது போல் கவிஞர்களையும் கணக்கெடுக்க வேண்டும்.

இங்கே, பெரியாரைத் தவிர மற்ற எல்லோருக்கும் தடுமாற்றம் இருக்கிறது. பெரியார்கூட ஆரம்ப காலத்தில் பக்திமான்தான். சில நூல்களைப் படித்ததால் பகுத்தறிவுவாதி ஆனார். பாரதிதாசனும் அப்படியே.

காங்கிரஸ்காரன் தெய்வம் இருக்கிறது என்று உறுதியாக நம்புகிறான்; வணங்குகிறான். இவன் அப்படியல்ல; ‘கடவுளே இல்லை’ என்பான். பிறகு ‘அன்பே கடவுள்’ என்பான். அதன் பிறகு ‘ஒன்றே குலம்; ஒருவனே தேவன்’ என்பான். ஏன் இந்தத் தடுமாற்றம்?

உங்கள் நூல்களின் ஒவ்வொரு பதிப்பிலும் கவிதை வரி களைத் திருத்தம் செய்துகொண்டே இருக்கிறீர்களே.... வாசகர்களிடையே குழப்பம் ஏற்படாதா?

என்னுடைய அறிவு வளர்ச்சியின் காரணமாக ஓரிரு கவிதைகளில் அவ்வப்போது திருத்தம் செய்ய வேண்டியிருக் கிறது. அதனால் மிகப்பெரிய குழப்பம் எதுவும் ஏற்பட வாய்ப்பு இருக்காது.

மனப்பாடம் செய்தவர்களுக்குப் பிரச்சினையாக இருக்காதா?

அதை மனப்பாடம் செய்தவன், அதை திருத்தி இதையும் மனப்பாடம் செய்துகொள்ள வேண்டியதுதானே!

தங்களின் சில கவிதைகளில் பாலுணர்வு சற்று தூக்கலாக இருக்கிறதே...?

மல, மூத்திர உணர்வுபோல பாலுணர்வு உலகம் முழுவதும்  அனைத்து மக்களிடமும் உள்ளது. அதில் செய்தியை வைத்து சொல்கிறபோது படிப்பவனுக்கு எளிதாக மனதில் பதிந்து விடுகிறது. எழுதியவனுக்கும் எளிதில் விளம்பரம் கிடைத்து விடுகிறது.

‘சுவரும் சுண்ணாம்பும்’ எழுதியதால் எந்த அளவுக்கு சாதித்துவிட்டீர்கள்?

நடிகைகள் பற்றிய செய்திகளைப் பதிவு செய்வதற்காக எழுதப் பட்டது ‘சுவரும் சுண்ணாம்பும்’. சொல்ல வந்த செய் தியை சுவையாகச் சொல்லவேண்டும் என்பதற்காக ‘செக்ஸை’க் கையாண்டேன். அவ்வளவே!

“கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்’’ என்கிறானே வள்ளுவன்.

இளமையின் நிலையாமையைச் சொல்ல வந்த காரைக் கால் அம்மையார், “கொங்கை திறங்க...’’ என்றொரு செக்ஸியானப் பாடலை பாடவில்லையா?

பாரதிதாசன் தமிழின் இன்பத்தைச் சொல்ல வந்தபோது, “மங்கை தரும் இன்பம், மாத்தமிழுக்கு ஈடில்லை’’ என்கிறானே. ஆக, செக்ஸ் தேவைதானா? என்பதை விடவும், அது கையாளப் பட்ட இடம் சரியானதுதானா? என்பதில் கவனம் செலுத்துவதே சரி.

சமீபத்தில் நடிகைகள் பற்றி கவிஞர் வைரமுத்து எழுதிய ஒரு கவிதை பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. அந்த விதத்தில் ‘சுவரும் சுண்ணாம்பும்’ விமர்சிக்கப்படாதது ஏன்?

In the name of Andal - Frontline

அந்த அளவுக்கு நடிகைகளுக்கு அப்போது தைரியம் ஏது?

புதுக்கவிதையை முன்பு நீங்கள், ‘குடும்பக் கடிதம்’, ‘ஆசை நாயகி’, ‘காகிதப் பூக்கள்’ என்றெல்லாம் விமர்சித்திருக்கிறீர்கள். இன்றைய அபார வளர்ச்சியில் அதனை என்ன சொல்வீர்கள்?

அந்த வடிவத்தின் அபார வளர்ச்சியை ஒப்புக்கொள்கிறேன். ஆனாலும், அதைக் கவிதைப் பட்டியலில் இணைக்க மாட்டேன். சாலய் இளந்திரையன் சொன்னது போல, ‘உரை வீச்சு’ என்பதே சரி.

மரபுக் கவிஞர்களெல்லாம் புதுக்கவிதைக்கு மாறி வருகிறார்கள். இது கவிதை உலகின் வளர்ச்சியா? வீழ்ச்சியா?

இலக்கிய உலகின் வளர்ச்சி.

உங்களுக்கு புதுக்கவிதை எழுதும் எண்ணம் இருக்கிறதா?

கண்டிப்பாக இல்லை.

கலைஞர் மு.கருணாநிதி கவிதைகளை “கவிதைகளே அல்ல; அவை எதற்கும் பயன்படாது’’ என்று கூறியுள்ளீர்களே?

How pluck, satire and rhetoric set milestones for Murasoli ...

கலைஞர் கையாளுகிற வடிவம் நிலைக்காது என்று சொன்னேனே தவிர, அவருடைய கருத்துகளை அல்ல. அவர் சிந்தனைகள் உயர்வானவை; நிலைக்கத்தக்கவை.

நீங்கள் சினிமாவுக்குத் தொடர்ந்து பாடல் எழுதிக் கொண் டிருந்தால், இன்றைய திரைப்படப் பாடல்களின் தரம் எந்த அளவில் இருந்திருக்கும்?

எந்தப் பெரிய மாற்றமும் இருக்காது. முன்பு சினிமாவில் பாடலுக்கு முக்கியத்துவம் இருந்தது. இப்போது இசைக்காக மட்டுமே பாடல் எழுதுகிற நிலை இருக்கிறது. இசையமைப் பாளன் விருப்பத்திற்காக எழுதுகிற பாடலை யார் எழுதினால் என்ன? திரைப்படப் பாடலை வைத்து பாடலாசிரியனை எடை போடுவது தவறு. அவனைப் பத்திரிகையில் எழுத வைத்து சோதித்துப் பாருங்கள். அவனது திறமை வெளிப்படும்.

இந்தியா சுதந்திரம் அடைந்த அன்று நீங்கள் பட்டினிக் கவிஞனாக இருந்திருக்கிறீர்கள். அதே நிலை இன்றும் நீடித்திருந்தால் பாரதிதாசன் ‘விமானம் ஏற’ ஆசைப் பட்டது குறித்து கவனம் செலுத்தி இருப்பீர்களா?

நிச்சயமாக மாட்டேன்.

பாவேந்தர் வழித்தோன்றல்களுக்கு எத்தனையோ பிரச்சனைகள் இருக்கும்போது, விமானப் பயணம் ரொம்ப அவசியமா?

பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள் ...

பாவேந்தர் பரம்பரைகளுக்கு என்ன பிரச்சினை? எல்லோரும் வசதியாக, சுகமாகத்தானே இருக்கிறார்கள்.

பாரதிதாசன் பரம்பரைகளை நிர்ணயிக்கும் அளவுகோல் எது?

‘பொன்னி’ இதழை நடத்தி வந்த முருகு. சுப்பிரமணியம் ‘பாரதிதாசன் பரம்பரை’ என்று நாரா. நாச்சியப்பன் தொடங்கி, தொடர்ந்து எழுதி வந்தார். 47வது பேர் எழுதப்பட்டபோது அந்த இதழ் நின்று போயிற்று. இந்த 47 பேர்களைத்தான் ‘பாரதிதாசன் பரம்பரை’ என்பார்கள். அதில் நானும் ஒருவன்.

பெரியாரியக் கொள்கைப் பிடிப்புள்ள நீங்கள் ஏன் கலப்பு மணங்களை, விதவைத் திருமணங்களை நடத்த முன்வரக் கூடாது?

நிறைய திருமணங்களை நடத்தி வைத்திருக்கிறேன். அதில் கலப்பு மணங்களும் உண்டு. பார்வையற்றவர்களுக்குத் திருமணம், கொலை செய்துவிட்டு சிறை சென்றவன் திருந்தி வெளியே வந்து திருமணம் செய்துகொண்டபோது அந்த திருமணத்தை நான்தான் தலைமையேற்று நடத்தி வைத்தேன். தற்போது கலப்பு மணங்களை அரசியல் தலைவர்கள் நடத்தி வைப்பதால் கவிஞர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. என்னை அழைத்தால் நான் நடத்தி வைக்கத்
தயார்.

கிழக்கத்திய நாடுகள் அளவுக்கு மேற்கத்திய நாடுகளில் கவிதைகள் செழிக்காது என்று சொல்லியிருக்கிறீர்களே...?

சோம்பேறிகளும், துதிபாடுபவர்களும், பிறன் உழைப்பில் பிழைப்பவனும் வாழும் நாட்டில்தான் கவிதை செழிக்கும். வணிகமும் விஞ்ஞானமும் வளர்கிற நாட்டில் கவிதை செழிக்காது என்பது என் கருத்து. கவிதை எழுதுவதைக் கொஞ்ச காலத்திற்கு நிறுத்தி வைத்தால்தான் நம் நாடு உருப்படும். சினிமாவில் பாடல் இருப்பது போல, வாழ்க்கையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சம்பவங்களைப் பதிவு செய்வதற்காகக் கவிதை எழுத வேண்டுமே தவிர, கவிதை எழுதுவதையே வாழ்க்கையாக்கிக் கொள்ளக் கூடாது.

துதி பாடும் கவிஞர்கள் ஏராளமாக இருக்கிறார்களே?

முன்பு கடவுளிடம் கையேந்திப் பாடினார்கள். அவர் எதுவும் கொடுக்காததால் சற்று கீழே இறங்கி வந்து மன்னரைப் பாடினார்கள். பிறகு சிற்றரசர்களை, அதற்குப் பிறகு வள்ளல் களை, இப்போது அரசியல் தலைவர்களை, அமைச்சர்களைப் பாடுகிறார்கள். பாடுபொருள் மாறுகிறதே தவிர துதிபாடுதல் மட்டும் மாறவே இல்லை. துதிபாடுபவர்களையும் விருந்தோம்பிகளையும் முதலில் ஒழித்துக்கட்டவேண்டும்.

துதி பாடி பொருளீட்டுபவர்களுக்கு அரசு சிறப்பு வரி விதிக்க வேண்டும்.

உங்கள் மொழிக்கொள்கை என்ன?

நாட்டுக்கு எல்லை இருப்பது போல, மொழிக்கும் எல்லை வகுத்து தமிழ்ச் சொற்கள் பிறமொழிகளில் கலவாமலும், பிற மொழி சொற்கள் தமிழில் ஊடுருவாமலும் தடுக்க வேண்டும்.

இத்தகைய எல்லை வகுத்தல் பண்பாடு, நாகரீகம் போன்றவற்றிற்கும் பொருந்துமா?

நாகரிகத்தில், கல்வி, ஆட்சி முறையில் வெள்ளையனைக் கடைபிடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். வெள்ளையன் இந்தியாவுக்கு வராமல் இருந்திருந்தால் இங்கே விஞ்ஞான நாகரிகம் வளர்ந்திருக்காது. எல்லோரும் படிக்க வேண்டும்; படித்த அனைவருக்கும் வேலை வேண்டும். தீண் டாமை கூடாது என்பன போன்ற சமூக முன்னேற்றத் திட்டங் களைக் கொண்டு வந்தவனே அவன்தான். அதை சீரமைக்க லாம்; ஒதுக்கிவிட முடியாது.

உங்கள் கவிதை வாரிசாக யாரைக் குறிப்பிட்டுக் கூறுவீர்கள்?

இன்றைக்கு கவிதை எழுதுகிற எல்லோருக்கும் என்னுடைய பாதிப்பு இருக்கும். ஆனால், குறிப்பிட்டு எவரையும் சொல்ல விரும்பவில்லை.

பட்டுக்கோட்டையாரின் பாடல்களை அரசுடைமையாக்கி இருப்பது பற்றி..?

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ...

மகிழ்ச்சி தரும் விஷயம். உடுமலை நாராயணகவி, பாபநாசம் சிவம், மருதகாசி, கம்பதாசன், லட்சுமணதாஸ், தஞ்சை ராமையாதாஸ் போன்றவர்களின் பாடல்களையும் அரசுடைமை ஆக்கவேண்டும்.

வீட்டுக்கு வீடு திருவள்ளுவர், பாரதிதாசன் படங்களைத் திறந்து வைக்கிறீர்களே...?

திருவள்ளுவரின் உருவம் உருவானது ...

செல்வாக்குள்ளவர்கள் வீடுகளில் திறந்துவிட்டு, பிறகு என் வீட்டில் வைத்துக் கொள்ளலாம் என்று இருக்கிறேன். நிச்சயமாக வைப்பேன்.

தங்களின் அரசியல் தொடர்பு?

1936லிருந்து இன்று வரை தடுமாற்றம் இல்லாத நாத்திகனாக வாழ்ந்து வருகிறேன். மற்றபடி, ‘வானம் எல்லோருக்கும் பொது’ என்பதுபோல, நான் எல்லா அரசியல் இயக்கங்களுக்கும் பொதுவானவன்
.
எந்தக் கட்சிக்கு வாக்களிப்பீர்கள்?

தி.மு.க.வுக்கு.

தற்போதைய பணி?

1942 முதல் இன்றுவரையில் பத்திரிகைகளில் வெளிவந்த என் சம்பந்தப்பட்ட அனைத்து செய்திகளையும் சேகரித்து நூலாக வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். அந்நூலின் மூலமாக தமிழ் நாட்டின் கடந்த சில ஆண்டுகள் பற்றிய அரிய தகவல்கள் வாசகர் களுக்குக் கிடைக்கும்.

சந்திப்பு : சூரியசந்திரன்

சாரதா, செப்.1993

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சங்க இலக்கியம் முதல் பெண் கவிஞர்கள் : பத்மாவதி விவேகானந்தன் நேர்காணல்

எனது கதைகள் வரலாற்று ஆவணங்கள்: மேலாண்மை பொன்னுச்சாமி நேர்காணல்

கவிஞர் அறிவுமதி பாடலாசிரியரான கதை