ஒவ்வொரு எழுத்திலும் அரசியல்: பிரபஞ்சன் நேர்காணல்

தமிழ் எழுத்தாளர்களில் முக்கியமானவர் திரு.பிரபஞ்சன். புதுச்சேரியில், 1945ல் ஒரு சித்திரை பவுர்ணமியில் பிறந்த இவர், இப்போது ஒரு முழுநேரப் படைப்பாளி; படிப்பாளி. புதுச்சேரியிலும் சென்னையிலுமாக வசித்துவருகிறார்.
குடும்ப உறவுகளின் மெல்லிய உணர்வுகளையும், நட்பின் மேன்மையையும் நுட்பமாக தமது படைப்புகளில் பதிவு செய்து வருபவர். இவரது படைப்புகள் இந்தியாவின் பல மொழிகளிலும் ஐரோப்பிய மொழிகளிலும் வெளிவந்துள்ளன.
இப்போது, அரசியல் கட்டுரைகளையும் காரசாரமாக எழுதிக் கொண்டிருக்கிறார். அதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட பேட்டி இது.
சென்னை திருவல்லிக்கேணியில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் திரு.பிரபஞ்சன் அவர்களுடன்...
பெரும்பாலான எழுத்தாளர்கள், கவிஞர்களாகத்தான் தங்கள் வாழ்க்கையைத் தொடங்கியிருக்கிறார்கள். நீங்கள்...?
நானும் முதலில் கவிதைதான் எழுதினேன். 8ஆம் வகுப்பு படிக்கும்போது எழுதிய ‘எது கவிதை’ என்ற என் முதல் கவிதை 1962ஆம் ஆண்டு ‘பரணி’ இதழில் வெளிவந்தது. அதற்கு அடுத்த ஆண்டு (1963) ‘என்ன உலகமடா’ என்றொரு கதை எழுதினேன். அதுவும் அதே ‘பரணி’ இதழில் வெளியாயிற்று. அதன் ஆசிரியர் சேர்த்தூர்கூத்தன். 10ஆம் வகுப்பு படிக்கும்போது ‘காதல்’ என்றொரு கட்டுரை எழுதினேன். அது புதுச்சேரியிலிருந்து வெளிவரும் ‘தமிழ்ச்செல்வி’ இதழில் பிரசுரமானது. இவையே என் தொடக்க காலத்து விதைகள்.
ஆனால், ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது நான் நேசித்த பெண்ணுக்கு எழுதிய நேசக் கடிதத்தையே என் முதல் படைப்பு என்று என் நெஞ்சு சொல்கிறது. அந்த நேசக்கடிதத்தை அந்தப் பெண், அப்படியே என் அப்பாவிடம் கொடுத்துவிட்டாள். அப்பா அதைப் படித்துவிட்டு அப்பா கோபப்படவில்லை. மாறாக, “பரவாயில்லையே நன்றாக எழுதுகிறாய். நிறைய எழுது. ஆனால், வேறு விஷயங்களை எழுது’’ என்று என்னை ஊக்கப்படுத்தினார். இதுவே எனக்கு மிகப்பெரிய உந்துசக்தியாக இருந்தது.
1965ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றேன். அப்போது மயிலம் தமிழ்ப் புலவர் கல்லூரி மாணவன் நான். சிறையில் இருந்த அந்த முப்பது நாட்களில்தான் மார்க்சிய நூற்கள் எனக்கு அறிமுகமாயின. நிறைய படித்தேன். அதன் பாதிப்பில் நிறைய கவிதைகள் எழுதினேன். அவை பெருஞ்சித்தனார் நடத்திய பத்திரிகையிலும், தெசிணியின் ‘கவிதை’ இதழிலும் வெளியாயிற்று.

அதன்பின் தஞ்சை ப்ரகாஷ் நட்பு கிடைத்தது. அவரிடம் மிகப்பெரிய நூலகம் இருந்தது. தமிழ்நாட்டில் வேறு எவரிடமும் அத்தனை பெரிய நூலகம் அந்தக் காலத்தில் கிடையாது. மணிக்கொடியை முழுமையாக தொகுத்து வைத்திருந்தார். க.நா.சு, சி.சு.செல்லப்பா, எம்.வி.வெங்கட்ராம் போன்றவர்களின் படைப்புகளை அங்குதான் முழுமையாகப் படித்து முடித்தேன்.
அப்போது ந.பிச்சமூர்த்தி, எம்.வி.வெங்கட்ராம், வெங்கட்சாமிநாதன் போன்றோரின் அறிமுகம் கிடைத்தது. பின்னர் ‘மானுடம் பாடும் வானம்பாடி’களின் நட்பு ஏற்பட்டது. சிற்பி, புவியரசு, கோவை ஞானி, மு.மேத்தா, அக்னிபுத்திரன் ஆகியோர் கோவையில் நடத்தி வந்த அமைப்பு அது. அப்போது ‘பொன்னி துறைவன்’ என்கிற பெயரில்தான் எழுதிவந்தேன்.
‘வானம்பாடி’க்கு கவிதை எழுத ஆரம்பித்தபோது சாதி, மதம் இல்லாத பொதுவான புனைபெயர் வைத்துக்கொள்ளவேண்டும் என்றொரு வழக்கத்தை, தெலுங்கு திகம்பரக் கவிகளைப் பார்த்து நாங்கள் ஏற்படுத்திக் கொண்டிருந்தோம். அதன்படி ‘பிரபஞ்ச கானன்’ என்று பெயர் வைத்துக் கொள்ளுமாறு மு.மேத்தா எனக்கு ஒரு கடிதம் எழுதினார்.
அதைச் சற்று மாற்றி, ‘பிரபஞ்சன்’ என்ற பெயரில் ‘வானம்பாடி’க்கும், ‘பிரபஞ்சக் கவி’ என்ற பெயரில் ‘தாமரை’க்கும் எழுத ஆரம்பித்தேன். என் இயற்பெயர் வைத்தியலிங்கம்.
‘தாமரை’ இதழுடனான உங்கள் தொடர்பு?

தி.க.சி. ‘தாமரை’யில் ஆசிரியராக இருந்த 70களை ‘தமிழ் இலக்கிய வரலாற்றின் பொற்காலம்’ என்றே கூற வேண்டும். தாமரையில் நான் 1968லிருந்து எழுத ஆரம் பித்தேன். ஏறத்தாழ இரண்டு இதழ்களுக்கு ஒரு முறை என் கதை தாமரையில் வெளிவரும். அவருடன் எனக்கு ஏற்பட்ட உறவுதான் மார்க்சியத்தை முழுமையாகப் பயிலும்படித் தூண்டியது. மார்க்சியத்துக்குப் பிறகுதான் பெரியாரைப் படிக்க ஆரம்பித்தேன்.
மாணவப் பருவத்திலேயே இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றிருக்கிறீர்கள். அப்போது தந்தை பெரியாரின் பாதிப்பு உங்களிடம் இருக்கவில்லையா?
1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை தந்தை பெரியார் ஆதரிக்கவில்லை. காரணம், அப்போதைய காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் கட்சியை அவர் ஆதரித்து வந்தார். அதே சமயம், அவரது தி.க.விலிருந்து விலகியவர்களால் தொடங்கப்பட்ட தி.மு.க. நடத்திய போராட்டம் என்பதாலும் அந்தப் போராட்டத்தை அவர் ஆதரிக்க மறுத்தார்.
ஆனால், மாணவர்களிடையே இந்தி எதிர்ப்பும் மொழியுணர்வும் கௌரவப் பிரச்சினையாகவே கருதப்பட்டன. போராட்டத்தில் கலந்து கொள்ளாதவன் மாணவன் என்ற தகுதியே இல்லாதவன் என்கிற நிலைமை நிலவி வந்த காலம் அது.
இலக்கியப் படைப்பாளியாகிய நீங்கள், இப்போது அரசியல் விமர்சனக் கட்டுரைகளையும் காரசாரமாக எழுதி வருகிறீர்கள். அதற்கான சூழல் எப்படி உருவாயிற்று?

வி.பி.சிங் அரசு ‘மண்டல்’ஐக் கொண்டுவந்தபோது, டெல்லி பல்கலைக் கழக மேல்சாதி மாணவர்கள், வீதிகளில் செருப்புக்கு ‘பாலீஸ்’ போட்டுக் கொண்டிருந்தார்கள். ‘ஏன்?’ என்று கேட்டதற்கு “தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் எல்லாம் படித்து வேலைக்குப் போய்விட்டால் நாங்கள் இந்தத் தொழிலைத்தான் செய்ய வேண்டியிருக்கும்’’ என்றனர். இதைப் படித்தபோது என்னுள் ஏற்பட்ட கோபம்தான் என்னை அரசியல் கட்டுரைகள் எழுதத் தூண்டியது.
படைப்பிலக்கியவாதிகள் அரசியல்வாதிகளாக மாறலாமா?

வானத்துக்குக் கீழே அரசியல் இல்லாத ஒரு விஷயத்தை நீங்கள் எனக்குச் சொல்லுங்கள். எந்த காலத்தில் கலையும் இலக்கியமும் அரசியல் சார்பற்று இருந்தன. சிலர், அரசியல் என்பதை கட்சிகள் சம்பந்தப்பட்டதாக மட்டுமே கருதிக் கொள்கிறார்கள். அது மட்டுமே அரசியல் அல்ல. நம்முடைய வாழ்க்கை, கலாசாரம், சுற்றுச்சூழல் அனைத்தும் அரசியலே. கலையும் இலக்கியமும் மக்களுக்காகவே. நம்மை ஆளும் தகுதியை ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்குகிற ஆட்சி முறை இருக்கும்போது மக்களுக்கான கலை இலக்கியங்களை அரசியல்படுத்துவதில் என்ன தவறு!
“உயர் சாதிக்காரன் தகுதி உள்ளவன், தாழ்த்தப்பட்ட சமூகத்துப் பெண் தகுதி இல்லாதவள்’’ என்று ஒருவர் எழுதுவது அரசியல் இல்லையா?
“ஏகலைவன் கட்டை விரலைக் கேட்டது அன்பினால்’’ என்று எழுதுவது அரசியல் இல்லையா?
ஓர் ஓவியக் கலைஞனை “என் கதைக்குப் பொம்மை போடுகிறவன்’’ என்கிறார் ஒருவர். இவர்தான், “குடியானவர் தெருவுக்கு அப்பால் ஊர் வரும்’’ என்று தம் ஊரைச் சொன்னார். குடியானவர்,
ஒடுக்கப்பட்டவர் வாழும் இடங்கள் சிலருக்கு ‘ஊர்’ இல்லை. சிலர் பாஷையில் ஊர் என்பது ‘அக்ரஹாரம்’ மட்டுமே. இது அரசியல் இல்லையா?
‘ராமர் கோயில்’ என்று எழுதும் ஒரு பத்திரிகை, மசூதியை மட்டும் ‘பிரச்சினைக்குரிய இடம்’ என்று எழுதுகிறதே... அது அரசியல் இல்லையா?
தம் காலத்து அரசியலுக்கு நியாயம் செய்தவன் என்பதில்தான் பாரதியின் மரியாதை இருக்கிறது. உலக அளவில் அரசியலை ஏற்காத ஓர் உண்மையான எழுத்தாளனை எனக்குச் சொல்லுங்கள்.
‘ஒவ்வொரு வார்த்தைக்கும் பின்னால் ஒரு வர்க்கம் இருக்கிறது’ என்றார் மார்க்ஸ். நான் சொல்கிறேன், ஒவ்வோர் எழுத்துக்கும் பின்னால் அரசியல் இருக்கிறது.
உங்களை ‘கம்யூனிஸ்ட்’ என்பதை விடவும் பெரியாரிஸ்ட்’ என்பதாகத்தானே வெளிப்படுத்திக் கொள்கிறீர்கள்?

பெரியார்தான் தமிழ்நாட்டின் உண்மையான முதல் கம்யூனிஸ்ட் என்பது என் கணிப்பு. இன்றைய கம்யூனிஸ்ட் தலைவர்கள் பிறப்பதற்கு முன்னால், கம்யூனிசத்தைத் தமிழினத்துக்குக் கற்றுக் கொடுத்தவர் பெரியார். பெரியாரியம் என்பது மார்க்சியமும் அம்பேத்கரியமும் உள்ளடக்கிய ஒரு தத்துவம். மார்க்சியத்தைத் தமிழ்ப்படுத்தியவர் தந்தைப் பெரியாரே. மார்க்சிஸ்டுகள் இந்தியாவில் தோற்றதற்குக் காரணமே அவர்கள் பெரியாரைப் பயிலாமையால்தான். இந்த தேசத்தில் மார்க்சியத்தின் மறுபெயரே பெரியாரியம். ஆகவே, நான் பெரியாரிஸ்டாக இருக்கிறேன்.
கம்யூனிஸ்ட்களும் பெரியாரிஸ்ட்களாக மாறி வருகிறார்களே...?
இது காலத்தின் கட்டாயம். மனிதன் வர்க்கமாக மட்டுமே இங்கே பிரிந்திருக்கவில்லை. சாதிகளாலும் அவன் அடிமைப்படுத்தப் பட்டிருக்கிறான். சாதியத்தின் வேர் - வருணாசிரமத்தின் பிதா பிராமணியம். பெரியாரைத் தவிர்த்த ஒரு சமூகப் புரட்சி இங்கே ஒருபோதும் சாத்தியம் இல்லை.
தமிழ், தமிழன் என்கிற தனித்துவ அடையாளம்...
தமிழனின் மொழியும் கலாசாரமும் பண்பாடும் ஆன்மீகமும் பாதிப்புக்குள்ளாகிறபோது தன்னைத் தமிழனாகவும், தமிழ் நாட்டுக்காரனாகவும் உணரவேண்டிய கட்டாயம் தமிழனுக்கு உண்டாகிறது; உண்டாக வேண்டும்.
தமிழ்நாடு இந்தியாவுக்குள்தான் இருப்பதாக நாம் நினைக்கிறோம். ஆனால், வடநாடோ அது எங்கேயோ இருப்பதாக, லட்சத் தீவுகளில் ஒன்றாக நினைக்கிறது.
காவிரித் தண்ணீரைத் தமிழகத்துக்குள் கொண்டுவர கையாளாகாத மத்திய அரசு, தமிழன் தன் தனி அடையாளத்தைப் பேண வேண்டிய நெருக்கடிக்கு உள்ளாக்குகிறது.
உங்கள் எழுத்துகளால் எப்படிப்பட்ட சமூக மாற்றத்தை உருவாக்க விரும்புகிறீர்கள்?

மானுடம் வடுப்படுத்தப்படாத, மனிதன் கௌரவிக்கப்படுகிற சமூகத்தையே நான் அவாவுகிறேன். இந்தச் சமூகம் ஓர் அடிமைச் சமூகம். இங்குள்ள ஆண்கள் முதலாளியத்துக்கும் வருணாசிரமத்துக்கும் அடிமைகள். பெண்களோ, அந்த இரண்டோடும் ஆண்களுக்கும் அடிமைகள். எனவே, கூடுதல் சுமைகளோடும் அடிமைத்தனத்தோடும் வாழ்பவர்கள் பெண்கள். ஆகவே, நான் அவர்கள் பக்கம் நிற்கிறேன். பெண்களை அடிமை செய்து ஆண்களும் விடுதலை பெறமுடியாது.
நம் சமூகத்தில் ‘ஆண்மை’ ஒழிக்கப்பட்டு. மனிதம் மட்டுமே இருக்க வேண்டும். இன்றைய திருமணம் கணவன் - மனைவி உறவு முறை அனைத்தும் பெண்ணடிமைக்கான காரணங்கள். ‘செம்புலப் பெயல்நீர் போல் அன்புடை நெஞ்சம் கலக்கும்’ ஒரு நிலை வந்தால் மட்டுமே இது நல்ல நிலம்.

தொல்காப்பியன் பெண்களைக் கடல் கடந்து போகக்கூடாது என்கிறான். சங்க காலப் பெண்கள், கண்ணகி, மணிமேகலை எல்லோரும் இன்றைய காலத்துக்கு உதவாதப் பெண்கள். அவர்களை இப்படி ஆக்கியதும் ஆண்கள்தான்.
சகல இடங்களிலும், சகல வாய்ப்புகளிலும் பெண், தான் பெண் என்று உணராமல் இருக்கும்படியான நிலை வரவேண்டும். இந்தச் சூழ்நிலையில் அரசு, நீதி, கலாசாரம் அனைத்தும் ஆணாதிக்கத்தைக் காக்கவே இருக்கின்றன.
இந்த தேசத்தின் காவல் துறையும் நீதித்துறையும் சாமான்ய மக்களின் பக்கமா இருக்கிறது? அது காசுள்ளவனுக்கு வால் ஆட்டுகிறது.
தமிழில் தலித் இலக்கியத்தின் வளர்ச்சி எந்த அளவில் உள்ளது?

தலித் இலக்கியம் தமிழ்நாட்டில் தற்போதுதான் முளைவிடத் தொடங்கி இருக்கிறது. தான் ஒடுக்கப்பட்டவன் என்று உணர்கிற அனைவருமே தலித்துகள்தான். அந்த வகையில் நானும் ஒரு தலித் எழுத்தாளனே. தமிழில் கே.டானியல்தான் முதன் முதலில் தலித் இலக்கியத்தை தொடங்கி வைத்தவர்.
தமிழ்நாட்டில் சிவகாமிதான் முதல் தலித் எழுத்தாளர். தன்வரலாற்றுத் துறையில் ‘கருக்கு’ பாமாவைக் குறிப்பிடலாம். தமிழ் இலக்கியப் போக்கின் அடுத்த கட்ட வளர்ச்சியை உந்தித் தள்ளி முன்னோக்கிச் செலுத்தும் ஒரு போராட்டமாகவே தலித் இலக்கியத்தை நான் பார்க்கிறேன். சமூகத்தின் அடித்தளத்தில் உழலும் மக்களின் உள்ளத்தில் அவர்களின் போர்க்குணத்தை தலித் இலக்கியமே வெளிக் கொண்டுவர வேண்டும்.
இவ்வாண்டுக்கான ‘சாகித்ய அகாதமி விருது’ ‘மணிக்கொடி எழுத்தாளர்’ எம்.வி.வி.க்கு வழங்கப்படுகிறதே?
எம்.வி.வெங்கட்ராம் பரிசு பெற்றது, மிக மிக மகிழ்ச்சிக்குரியது. அவர் தமிழகத்தின் மிகச்சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர். தி.ஜானகிராமனுக்கும், கு.அழகிரிசாமிக்கும் நிகரானவர். எம்.வி.விக்கு இந்தப் பரிசுகளெல்லாம் முப்பது ஆண்டுகளுக்கு முன்பே சென்று சேர்ந்திருக்க வேண்டும். அவ்வாறு சேர்ந்திருந்தால் இன்னும் கூடுதலான படைப்புகள் அவரிடமிருந்து பிறந்திருக்கும். என் மாணவப் பருவத்தில் என்னை மிகவும் பாதித்த எழுத்தாளர்களில் அவரும் ஒருவர். என் எழுத்து வளர்ச்சியில் அவருக்கும் ஒரு பங்கு உண்டு.
‘சாகித்ய அகாதமி’ நீண்ட நாட்களுக்குப் பிறகு ஓர் அசலான எழுத்தாளனைக் கண்டுபிடித்து பரிசளித்திருக்கிறது. அதற்காக நான் பாராட்டுகிறேன்.
சந்திப்பு: சூரியசந்திரன்
சாரதா, ஜனவரி 1994
கருத்துகள்
கருத்துரையிடுக