இலக்கிய மாயாஜாலத்தில் விருப்பமில்லை: தங்கர்பச்சான் நேர்காணல்



‘அழகி’ தங்கர்பச்சானை அறிந்த அளவுக்கு தமிழ்ச் சமூகம் ‘கல்வெட்டு’ தங்கர்பச்சானை இன்னும் சரியாக அறிந்திருக்கவில்லை. ‘கல்வெட்டு’ இவர் எழுதிய சிறுகதை. இதுதான் பின்னர் ‘அழகி’ திரைப்படமாக ஆனது. இவர் அடிப்படையில் ஓர் எழுத்தாளர். இவரது 16 கதைகள் ‘வெள்ளை மாடு’,  ‘குடிமுந்திரி’ எனும் இரண்டு நூல்களாக வந்துள்ளன. ‘ஒன்பது ரூபாய் நோட்டு’ இவரது முதல் நாவல். எழுத்துக்காக தமிழக அரசு, திருப்பூர் தமிழ்ச் சங்கம், லில்லி தேவசிகாமணி, அக்னி -அட்சரா விருதுகளைப் பெற்றிருக்கிறார். தனது ‘செம்புலம்’ மூலம், சிறந்த தமிழ் நூல்களை பதிப்பித்து வருகிறார்.

தங்கர்பச்சானின் இயற்பெயர் தங்கராசு. பிறந்தது கடலூர் மாவட்டம், பத்திரக்கோட்டை கிராமம். அப்பா பச்சான், அம்மா லட்சுமி, விவசாயக் குடும்பம். சென்னை நகரத்தில் வசிக்கும் கிராமத்து மனிதர். இவருடனான இலக்கிய உரையாடல்...

கடலூர் மாவட்டத்தில், ஒரு குக்கிராமத்தில் பிறந்த உங்களுக்கு இலக்கியம் படிக்கிறதுக்கும் - படைக்கிறதுக் குமான வாய்ப்பு எப்படி கிடைத்தது?

இலக்கியம் என்றால் என்னவென்றே தெரியாத பகுதியில் பிறந்து வளர்ந்தவன் நான். பாடப்புத்தகத்தில இருப்பதுதான் இலக்கியம் என்கிற நினைப்புதான் நான் சென்னைக்கு வருகிற வரையிலே இருந்தது. எங்க கிராமத்து சனங்கள் நிறைய கதைகள் சொல்வார்கள்.  ஆனால், கதைகள் புத்தகங்களாக வந்துகிட்டிருக்கு என்கிற விஷயம்கூட எனக்கு அப்போது தெரியாது. நாளிதழ், வார இதழ், மாத இதழ் எதுவும் எங்க ஊருக்கு வராது. எப்படியோ, எங்கு கிடந்தோ எங்க வீட்டு ஆளுங்க - யாரோ, திண்ணைத் தூணிலே ‘ராணி’ இதழின் அட்டைப் படத்தை  ஒட்டி வைத்திருந்த ஒண்ணு மட்டுந்தான் இப்போ என் ஞாபகத்துக்கு வருது. அந்தப் படத்திலே ஒரு பொண்ணு தாவணி விலகி, சிரிச்சிகிட்டு இருக்கும். கீழே ‘ராணி - குடும்பப் பத்திரிகை’ன்னு- போட்டிருக்கும்.

சென்னை திரைப்படக் கல்லூரிக்குப் படிக்க வந்த பிறகு தான் எனக்கு இலக்கியம் என்றால் என்ன என்பது மட்டுமல்ல - அரசியல், பொருளாதாரம், கலை பற்றியெல்லாம்கூட தெரிய வருது. அந்தந்த துறைகளில் ஆழமான அறிதல் உள்ள நண்பர்கள் எனக்குக் கிடைத்தார்கள்.

1980-81ல்தான் நான் இலக்கியம் படிக்கவே ஆரம்பித்தேன். நான் படித்த முதல் இலக்கியப் புத்தகம் கி.ராஜநாராயணனின் ‘பிஞ்சுகள்’ குறுநாவல். எல்.ஐ.சி. கட்டடத்துக்கு அருகில், பழைய புத்தகக் கடையில், ஏதாவது புத்தகம் குறைந்த விலையிலே படிக்கக் கிடைக்காதா என்று பார்க்கிறபோது இந்தப் புத்தகம் கிடைத்தது. அப்போது கி.ரா.வைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால், அந்தப் புத்தகத்தை ஒரு பெரிய மனிதர் கையெழுத்துப் போட்டு இன்னொருத்தருக்கு அன்பளிப்பாக கொடுத்திருக்கிறார். அது அங்கே கிடக்கு. ‘சரி, படிச்சிதான் பார்ப்போமே’ன்னு விலை கேட்டேன். ஒன்றரை ரூபாய்னு சொன்னார். வாங்கிப் படிச்சேன். படிக்கப் படிக்க ஆச்சர்யம். ‘இதுதான் இலக்கியமா? இப்படியெல் லாம் எழுதலாமா?’ அளவில்லாத ஆச்சர்யமாக எனக்கு. கி.ராஜ நாராயணன் வேறு என்னவெல்லாம் எழுதியிருக்கிறார் என்று தேடிப் படிக்க ஆரம்பித்தேன். அவர் சொல்கிற மற்ற பல எழுத் தாளர்களின் எழுத்துகளையும் வாங்கி வாசிச்சேன். இப்படியாகத் தான் எனக்குப் பரவலான இலக்கிய வாசிப்பு கிடைச்சது.

அதேநேரத்தில் ‘இலக்கியக் கொம்பன்கள்’ என்று சிலரை சில பேர் சொல்லக் கேட்டு அவர்களுடையதையும் வாங்கிப் படிச்சுப் பார்த்தேன். அதிலே நம்ம வாழ்க்கையே கிடையாது. நிறைய பொய் சொல்றானுவ. அதையெல்லாம் தூக்கிக் கெடாசிட்டேன்.
ஓராண்டுக்குள்ளாகவே உண்மையான இலக்கியம் எது, மோசமான இலக்கியம் எதுன்னு தெரிஞ்சுடுச்சு. இதே மாதிரி திரைப்படத்திலேயும் சிறந்த படம் எது, மோசமான படம் எது என்கிற தெளிவு வந்தது. கலை, இலக்கியம் எதுவாக இருந்தாலும் மக்களின் வாழ்க்கையை, மக்களின் பிரச்சினையைச் சொல்லணும் என்கிற முடிவுக்கு வந்தேன். இதற்கு இடையில், நான் எழுதவும் ஆரம்பிச்சிட்டேன்.

உங்கள் முதல் சிறுகதைத் தொகுதி ‘வெள்ளை மாடு’ 1993ல் வந்தது. அதிலே பல நல்ல கதைகள் இருந்தன. குறிப்பாக ‘வெள்ளை மாடு’, ‘உள்ளும் புறமும்’, ‘கல்வெட்டு’- இப்படி யான கதைகள். ஆனால், அந்நூலின் முன்னுரையில் இக்கதைகள் ‘நான் எழுத்தாளனாக வேண்டும் என்பதற்காக எழுதப்பட்டவை அல்ல’ என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஏன்?

25 ஆண்டுகள் கடந்த நிலையில் "வெள்ளை ...

நான் எழுத்தாளனாக வேண்டும் என்கிற தேவையோ, ஆசையோ எனக்கு அப்போது இல்லை. எங்கள் பகுதி மக்களின் வாழ்க்கையை, எனக்கு நேர்ந்த அனுபவங்களை, துக்கங்களை, துயரங்களை பதிவு செய்யணும் என்கிற எண்ணம்தான் எனக்கு அப்போது இருந்தது. அந்த உந்துதலில்தான் அந்தக் கதைகளை எழுதினேன். என் இளைய சகோதரியின் வீட்டுக்குப் போயிருந்த போது, அந்தக் கிராமத்தில் நான் கண்ட காட்சிதான் என் முதல் கதையான ‘கடமை’ எழுத காரணமானது. அரசு அதிகாரிகள் விவசாயிகளை எப்படி முதலில் கடனை ஆசைக் காட்டி மயக்குகிறார்கள். பிறகு அவர்களை எவ்வாறு மடக்குகிறார்கள். அதேபோல முதலில் அதிகாரிகளின் ஆசை வார்த்தைக்கு மயங்கும் பாமர விவசாயிகள் பிறகு அதிலிருந்து விடுபட எவ்வாறெல்லாம் முயற்சிக்கிறார்கள், பூச்சிக்கொல்லிக்கும் இடுபொருள்களுக்கும் வைக்கப்படுகிற பெயர்களினால் அரசின் முயற்சிகள் எவ்வா றெல்லாம் வீணாகின்றன என்பதுதான் கதை. அதை பதிவு பண்ணிப் பார்த்தேன். அந்தக் கதையை குறும்படமாக எடுக்கலாம்.

உங்கள் முதல் சிறுகதைத் தொகுதியை நேரடியாக புத்தகமாகக் கொண்டு வந்ததாக அதிலே ஒரு குறிப்பு இருக்கு. உங்கள் கதைகளை ஏன் இதழ்களுக்கு அனுப்பவில்லை என்று தெரிந்து கொள்ளலாமா?

முதல் தொகுதியான ‘வெள்ளை மாடு’ நூலில் உள்ள அத்தனைக் கதைகளும் ‘கணையாழி’க்கும், ‘சுபமங்களா’வுக்கும் அனுப்பப்பட்டு திரும்பி வந்தவைதான். ‘அழகி’ படமாக வந்த ‘கல்வெட்டு’ கதைகூட அவர்கள் திருப்பி அனுப்பியதுதான். அவர்கள் ஏன் வெளியிட மறுத்தார்கள் என்று எனக்குக் காரணம் தெரியவில்லை. அந்த இதழ்களில் வெளிவந்துள்ள எல்லா கதை களும் இந்த என் கதைகனைவிட சிறந்தவைதானா என்கிற கேள்வி மட்டும் எனக்குள் இன்னும் இருக்கிறது.

இப்போது உங்கள் எழுத்து பற்றிய அந்தப் பத்திரிகைகளின் நிலைப்பாடு என்னவாக இருக்கிறது. ‘சுபமங்களா’ நின்று விட்டது. கணையாழி...?

கணையாழியில் பிறகு கதை கேட்டார்கள். தர முடியாதுன் னுட்டேன் (தசரா அறக்கட்டளை நடத்தும் இப்போதைய கணையாழி அல்ல). புதிய பார்வையில் ‘குடிமுந்திரி’ கதை வந்தது. ‘பெருவழியில் ஒரு கூத்துமேடை’, ‘பசு’ இரண்டும் ‘கதை சொல்லி’யில் வெளிவந்தன. இப்படி இரண்டாம் தொகுதியில் உள்ள எல்லா கதைகளும் பத்திரிகைகளில் வந்தவைதான்.

வெள்ளை மாடு’ கதைகளெல்லாம் பத்திரிகைகளால் புறக் கணிக்கப்பட்டவை. ‘குடிமுந்திரி’ கதைகளெல்லாம் பத்திரிகை களால் ஏற்கப்பட்டவை. முன்பு உங்கள் கதைகளைத் திருப்பி அனுப்பிய ஒரு பத்திரிகை பிறகு தாங்களாகவே முன்வந்து கதை கேட்டதாகச் சொல்கிறீர்கள். இதற்குத் திரைப் படத்தின் மூலமாக உங்களுக்குக் கிடைத்த வெற்றியும் பிரபல மும்தான் காரணம் என்று எடுத்துக் கொள்ளலாமா?



அப்படியில்லை. நான் சினிமாவில் ஜெயிக்காமல் இருந்தி ருந்தால் ஒரு மிகமுக்கியமான இலக்கியவாதியாக இப்போது அறியப்பட்டிருப்பேன். ‘வெள்ளை மாடு’ கதைகளை பத்திரிகை யாளர்கள் ஏற்காமல் இருந்திருக்கலாம். ஆனால், தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். அந்தப் புத்தகம் நான் சினிமாவில் பிரபல மாவதற்கு முன்பே தமிழ் மக்களால் பரவலாக வாசிக்கப்பட்டு விட்டது. வெறும் சொல்லாடல்களை வைத்துக்கொண்டு இலக்கிய மாயாஜாலம் காட்ட எனக்கு விருப்பமில்லை. இயல்பு நிலைக்கு மாறான, புதிய புதிய சொற்களைக் கண்டுபிடித்து கதைப் பண்றது என் வேலை இல்லை. சில எழுத்தாளர்கள் அதற்காகவே இருக்கிறார்கள். அவர்கள் அதைச் செய்து கொள்ளட்டும். நமக்கு சொல் றதுக்கு நிறைய விசயங்கள் இருக்கு. சொல்லிகிட்டிருப்போம். படிக்கிறதுக்கு தமிழ் மக்கள் இருக்கிறார்கள்.

உங்கள் ‘கல்வெட்டு’ கதையின் இ-றுதியில் தனலட்சுமி தனது குழந்தையைக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொள்வதாக எழுதியிருந்தீர்கள். ஆனால், ‘அழகி’ திரைப்படத்தில் தனலட்சுமி கடிதம் எழுதி வைத்துவிட்டு காணாமல் போய்விடுகிறாள். பிறகு, குழந்தை நாயகனின் கண்காணிப்பில் இருக்கிறது... எழுத்து திரைக்கு வந்த போது எதனால் மாறியது?

அழகி (திரைக்கதை) | Buy Tamil & English Books Online ...

தமிழ்நாட்டில் இலக்கியத்திலும் திரைப்படத்திலும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பவர்கள் ரொம்ப குறைவு. அந்த வகையில் எனக்கு ஒரு தனியிடம் உண்டு என்பதை நான் அறிவேன். அந்த விதத்தில், இலக்கியத்துக்கும் திரைப்படத்திற்குமான ஒற்றுமை நிலை எது? இரண்டையும் எந்த இடத்தில் இணைக்கலாம், எந்த இடத்தில் வேறுபடுத்தலாம் என்பதில் மற்றவர்களைவிட எனக்குக் கூடுதல் அனுபவமும் தெளிவும் அக்கறையும் இருப்பதாகவே நினைக்கிறேன். நான் என் திரை வாழ்க்கையை இலக்கியத்தின் வழியாகத்தான் பயணித்துக் கொண்டிருக்கிறேன். ‘அழகி’ எல்லா தரப்பு மக்களாலும் பல தடவை பார்க்கப்பட்டிருக்கிறது. ‘அழகி’யைப் பார்க்காத தமிழ் மக்கள் ரொம்ப ரொம்ப குறைவு. வறுமையில் உழன்று கொண்டிருக்கிற மக்களையும் பலமுறை பார்க்க வைத்திருக்கிறதென்றால், அதில் சொல்லப்பட்டிருக்கும் வாழ்க்கைதான் காரணம். ‘கல்வெட்டு’ கதையில் உள்ளது போலவே ‘அழகி’யை எடுத்திருந்தால் அந்த வாழ்க்கை எல்லா மக்களையும் சென்று சேர்ந்திருக்காது. அதனால்தான் அந்தக் கதை நீட்சிக்கப்பட்டது. அதன் நீட்சி இன்னும் இருக்கிறது. அது ‘அழகி’ இரண்டாவது பாகமாக வரும். தனலட்சுமியின் 68 வயது வரையிலான வாழ்க்கை அதில் சொல்லப்படும்.

“அழகி’க்குப் பிறகு, நாஞ்சில் நாடனின் ‘தலைகீழ் விகிதங்கள்’ நாவலை ‘சொல்ல மறந்த கதை’ என்கிற திரைப்படமாக எடுத்தீர்கள். இந்தக் கதையை தேர்ந்தெடுத்ததற்கான முக்கியமான காரணம் என்ன? ‘அழகி’ அளவுக்கு இதன் வெற்றி இல்லையே!

தலைகீழ் விகிதங்கள் 1 | நாஞ்சில்நாடன்


‘அழகி’ என்பது ஒவ்வொரு மனிதனுக்குமான உணர்வு. ‘சொல்ல மறந்த கதை’ அப்படியான படம் இல்லை. அது ஒரு குடும்பக் கதை. குடும்பக் கதை இந்த அளவுக்கு ஓடியதே மிகப் பெரிய வெற்றியாகத்தான் நான் நினைக்கிறேன். ‘தலைகீழ் விகிதங்கள்’ ஓர் அற்புதமான கதை. இன்றைய கிராமத்து விவசாயியின் நிலையைச் சொல்கிற கதை. ‘கொத்தைப் பருத்தி’ என்றொரு கதையை கி.ரா. எழுதியிருப்பார். அதில் ஒரு விவசாயிக்கு நிறைய நிலம் இருக்கும். அவன் மகனும் விவசாயியாக  இருப்பான். அவனுக்கு யாருமே பெண் தரமாட்டார்கள். ஆனால், ஒரு ஏக்கர் நிலம் மட்டுமே வைத்துக் கொண்டிருப்பவனின் மகன் அரசாங்க வேலையில் இருப்பான். அவனுக்கு  போட்டிப் போட்டுக் கொண்டு பெண் கொடுப்பார்கள். இதுதான் ‘கொத்தைப் பருத்தி’.

தலைகீழ் விகிதங்களைப் பொறுத்தவரை, இங்கே விவசாயத்தை நம்பி பயனில்லை என்கிற நிலை வருகிறபோது, ஒவ்வொரு பெற்றோரும் நிலத்தை, பொன்னை, பொருளை யெல்லாம் விற்று மகனைப் படிக்க வைக்கிறார்கள். வேலையும் கிடைக்கிறது. உடனே எவனோ ஒரு பணக்காரன் வந்து அவனைக் கொத்திக் கொண்டு போய்விடுகிறான். இந்த இக்கட்டான சூழலில் மாட்டிக்கொண்டு எத்தனையோ ‘சிவதாணு’க்கள் தவிக்கிறார்கள். இன்றைய காலகட்டத்தில் இதை ஒரு முக்கியமான விசயமாக நான் நினைக்கிறேன். அதற்காகத்தான் அந்தக் கதையைப் படமாக எடுத்தேன்.

‘ஒன்பது ரூபாய் நோட்டு’ நாவல் உங்களின் வாழ்க்கையா?

ஒன்பது ரூபாய் நோட்டு | Buy Tamil & English Books ...

அந்த நாவலில் வருகிற மாதவப் படையாட்சி ஏறக்குறைய என் அப்பாதான். சிகாமணியாக வருவது நான். அந்த நாவலுக்கும் நிஜத்துக்குமான ஒரு பெரிய வேறுபாடு, அந்த நாவலின் இறுதியில் சிகாமணி, இந்தக் கிராமத்தை விட்டு இனி போவதில்லை என்று முடிவெடுக்கிறான். அப்படி அங்கேயே இருந்துவிட என்னால் முடியவில்லை. ஆனாலும், நான் எங்கு சென்றாலும், எந்த நிலையில் இருந்தாலும் என் உள்ளம் பத்தரக்கோட்டையிலும், அதே போன்ற கிராமங்களிலும்தான் லயித்திருக்கும்.

அப்பாவைப் பற்றி...! உங்கள் வீட்டில் மட்டுமல்ல, நீங்கள் சம்பந்தப்பட்ட இடங்களிலெல்லாம் அவரது படத்தை வைத்திருக்கிறீர்கள். உங்கள் செல்போனில் கூட அப்பாவின் படம்! ‘அழகி’ திரைப்படத்திலும் ஒரு காட்சியில் அவரது போட்டோ சுவரில் தொங்கும். அப்பா இந்த அளவு உங்கள் நினைவை ஆக்கிரமித்திருப்பது எப்படி?

எனக்கு எல்லாமே என் அப்பாதான். என்னை துரத்தி துரத்தி அடித்து பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி வைப்பார். அவர் கைகளைப் பிடித்துக்கொண்டுதான் நான் அந்தப் பகுதியையே வலம் வந்தேன். உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி எல்லாம் கூத்துப் பார்க்க என்னை நடத்தியே கூட்டிக்கொண்டு போயிருக்கிறார். ஆனால், நான் என்ன படிக்கிறேன்னோ, என்ன வேலை செய்றோன்னோ எதுவும் அவருக்குத் தெரியாது. கடைசியா, அப்பாவுக்கு காசநோய் வந்து கடலூர் பக்கத்திலே ஒரு ஆஸ்பத்திரியிலே சிகிச்சை நடக்குது. நான் இங்கே சினிமா உலகத்திலே கிடந்து கஷ்டப்பட்டுகிட் டிருக்கேன். அவர் அங்கே “எம்மவன் சினிமா ஸ்டுடியோவிலே இருக்கான். பெரிய ஆளா வருவான்’’ என்று எல்லாரிடமும் சொல்லிக்கொண்டிருந்தார். அவர் இறக்குறதுக்கு கொஞ்ச நாளைக்கு முன்புதான் ஒரு நண்பரிடம் ஓட்டைக் கேமராவை வாங்கிட்டு போய் அப்பாவை ஒரு படம் எடுத்தேன். அதுதான் இது. அப்பா இறந்து போகிறார். சுடுகாட்டில் கடைசியாக அவரின் முகத்தைப் பார்த்துக் கொள்ளச் சொல்கிறார்கள். நான் இந்தப் பூமிக்கு வரக் காரணமாக இருந்த என் அப்பாவின் முகம் மறையப் போகிறது. இதன் பிறகு நான் அவரைப் பார்க்க முடியாது  அப்போது அங்கிருந்தவர்களின் அனுமதியோடு அப்பாவின் தலை முடியிலிருந்து கொஞ்சம் வெட்டி எடுக்கிறேன். பிறகொரு நாள், அவரின் எந்த விரல்களைப் பிடித்துக்கொண்டு எத்தனையோ கிலோ மீட்டர்கள் நடந்தேனோ, அந்த விரல் எலும்பை பொறுக்கி வைத்துக் கொள்கிறேன். இந்த இரண்டையும் நான் பாதுகாத்து வைத்திருக்கிறேன்.

உங்கள் அப்பாவுக்குப் பிறகு நீங்கள் ‘அப்பா’ என்று கூப்பிடுவது எழுத்தாளர் கி.ரா.வை! அவர் தலைமையில் தான் உங்ள் திருமணம் நடந்தது. உங்கள் முதல் சிறுகதைத் தொகுதிக்கு அவர்தான் முன்னுரை கொடுத்தார். அவரோடு ‘கதைசொல்லி’ இதழில் இப்போது இயங்கிக் கொண்டிருக் கிறீர்கள். இதற்கெல்லாம் காரணம், நீங்கள் படித்த முதல்  இலக்கியப் புத்தகம் அவருடையது என்பதால் மட்டும் தானா?

மின்னம்பலம்:கி.ரா: கரிசல் ...

எழுத்தறிவு உள்ளவர்கள் மேலானவர்கள், எழுத்தறிவு இல்லாதவர்கள் கீழானவர்கள் என்கிற பார்வை சமூகத்திலே இன்னும் இருந்துகிட்டிருக்கு. இப்படியான சூழலில் இருந்து கொண்டு எழுத்தறிவற்ற மக்களை, அவர்களின் வாழ்க்கையை, அவர்களின் உன்னதங்களை அவர் எழுதுவதால்தான் அவரோடு எனக்கு ஈர்ப்பு உண்டாகிறது. அதனால் அவரை சிறந்த எழுத் தாளராக நான் நினைக்கிறேன். உதாரணத்திற்கு, என் அம்மாவுக்கு இப்போ 83 வயதிருக்கும். அவருடைய கால்கள் என் கிராமத் திலிருந்து அதிகபட்சம் பத்து கிலோ மீட்டருக்கு அப்பால் போயி ருக்காது. அதற்குள்தான் 83 ஆண்டு கால வாழ்க்கை நடந்திருக்கு. அதற்காக அந்த வாழ்க்கையை மோசம் என்று சொல்லிவிட முடியுமா? எங்க அம்மாவிடம் பத்து எழுத்தாளர்களுக்கான அனுபவங்கள் இருக்கு. அவங்க எழுதல; கி.ரா. எழுதுகிறார்.

அவர் தொடாத விசயங்களே கிடையாது என்கிற மாதிரி எழுதியிருக்கிறார். அவர் என்னவோ குறிப்பிட்ட மக்களுக்கு மட்டும் எழுதுற மாதிரியும், மற்றவர்கள் உலகத்துக்கே எழுதுற மாதிரியும் ‘கரிசல் இலக்கியத் தந்தை’ என்கிறார்கள். அதெல்லாம் தப்பு என்கிறதை காலம் நிரூபிக்கும். கி.ரா.வின் எல்லா எழுத்தையும் படிச்சிருக்கேன். எல்லாமும் சிறந்ததுன்னு சொல்ல முடியல. அது பற்றி அவரிடமே கேட்டிருக்கிறேன். “அது அப்படித்தான் தங்கரு. விட்டுடு’’ என்கிறார். கதை சொல்கிற ஒரு வயசான ஆளுக்கு கொடுக்கும் மரியாதையைத்தான் தமிழ்ச் சமூகம் அவருக்குக் கொடுத்திருக்கே தவிர, அவருக்குரிய மரியாதை இன்னும் அவருக்குப் போய்ச் சேரல.

நீங்கள் கிராமத்தைவிட்டு நகரத்துக் வந்து பல வருடங் களாகிவிட்டன. சினிமாவிலே ரொம்ப பிரபலம் ஆகி யாச்சு. இருந்தாலும், இப்போதுதான் கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்த மனிதன் மாதிரி உங்களை எப்போதும் ஒரு கிராமத்து மனிதராக வைத்துக்கொள்ள முடிகிறதே எப்படி? ஒரு கிராமத்தானின் குழறலை இப்போதும் உங்களிடம் உணர முடிகிறதே...

சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகளாகளான பிறகும் கிராமத்து மக்களின் வாழ்க்கை இன்னும் அப்படியேதான் இருக்கு. கீரிப்பட்டி, பாப்பாரப்பட்டி மக்களின் துயரத்திற்கு, தின்னியத்தின் அவமானத்துக்கு நாம் என்ன செய்யப் போகிறோம். அரசாங்கம் நினைத்தால் இதற்குத் தீர்வு காண முடியாதா? இந்தக் கொடுமை யைப் பார்த்து எந்தக் கிராமத்தானால்தான் கோபப்படாமல் இருக்க முடியும்? கிராமங்களின் வழியே எப்போது பயணம் செய்தாலும் அந்த மக்களின் நிலையைப் பார்த்து அழாமல் இருக்க முடிந்த தில்லை. அவர்களின் வலியும், துயரமும், சோகமும், கோபமும் எனக்குள் இருப்பதால் என்னிலிருந்து எப்போதும் கிராமத்துக் கோபம் வெளிப்பட்டுக் கொண்டுதானிருக்கிறது.

இறுதியாக ஒரு கேள்வி, நீங்கள் இலக்கியவாதியாக இல்லாமல் ஒரு திரைப்படக் கலைஞனாக மட்டுமே இருந் திருந்தால் இப்போது எப்படி இருந்திருப்பீர்கள்?

ஒரு தொழில்நுட்பக் கலைஞருக்குரிய மரியாதைதான் எனக்குக் கிடைத்திருக்கும். அதையும் தாண்டி ஒரு மரியாதை இருக்கிறது. அது மண் சார்ந்த மரியாதை. நீங்கள் பாராட்டிக் கொண்டிருக்கிற திரைப்படக் கலைஞனான தங்கர்பச்சான், இலக்கியவாதி தங்கர்பச்சான் கொடுத்த கொடை.

சந்திப்பு : சூரியசந்திரன்

புதிய புத்தகம் பேசுது 
ஜூலை 2005

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சங்க இலக்கியம் முதல் பெண் கவிஞர்கள் : பத்மாவதி விவேகானந்தன் நேர்காணல்

எனது கதைகள் வரலாற்று ஆவணங்கள்: மேலாண்மை பொன்னுச்சாமி நேர்காணல்

கவிஞர் அறிவுமதி பாடலாசிரியரான கதை