திறனாய்வும் ஒரு படைப்புதான் : க.பஞ்சாங்கம் நேர்காணல்



திறனாய்வை ஒரு படைப்புப் பணியாக கடந்த 15 ஆண்டுகளாகச் செய்து வருபவர் முனைவர் க.பஞ்சாங்கம். கவிதை, சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு என பல தளங்களிலும் இயங்கிக் கொண்டிருப்பவர். 14 நூல்களின் ஆசிரியர். புதுச்சேரி காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத்தில் 32 ஆண்டுகளாகப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். ‘கதைசொல்லி’ காலாண்டு இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவர். சாகித்ய அகாதமியின் பொதுக்குழு உறுப்பினர்.

புதுவையில் உள்ள அவரது இல்லத்தில் ஒரு மாலைப் பொழுதில் அவரைச் சந்தித்து உரையாடினோம்...

‘இனிவரும் இலக்கியமானது பெண்களின் எழுத்தாகவும், தலித்துகளின் எழுத்துகளாகவும்தான் அமையும்’ என்று சொல்லியிருக்கிறீர்கள். எந்த அடிப்படையில்?

சமூகத்தில் ஓரங்கட்டப்பட்ட மக்களுக்கான குலராகத்தான் எப்போதும் உலக இலக்கியங்கள் இருந்து கொண்டிருக்கின்றன. நமது சமூகத்தில் பெண்கள், இந்த ஆணாதிக்க சமூகத்தில் தாங்கள் ஓரங்கட்டப்பட்டிருக்கிறோம்; தங்களுடைய இருப்பு இல்லாமலாக்கப்பட்டிருக்கிறது; எல்லாவிதமான சொந்த நடவடிக்கைகளும் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது என்கிற புரிதலை ஒரு நூற்றாண்டு காலமாக அவர்களுக்குக் கொடுத்த கல்வியின் மூலமாகவும், இடதுசாரி மற்றும் சீர்திருத்த இயக்கங்கள் மூலமாகவும் பெற்றிருக்கிறார்கள். இப்படிப்பட்ட புரிதல் யார் பக்கம் நிகழ்கிறதோ, இலக்கியம் தன்னை அறியாமலேயே அவர்கள் பக்கம் போய் நிற்கும்.

இன்றைக்கு தலித்தியமும் அப்படித்தான். ஒரு நூற்றாண்டு காலமாக தலித்துகள் சார்பாக பேசப்பட்ட சொல்லாடல்கள் எல்லாம் சேர்ந்து, இரண்டாயிரம் ஆண்டு காலமாக தாம் மேல் சாதிக்காரர்களால் கொடூரமாக வஞ்சிக்கப்பட்டிருக்கிறோம் என்கிற புரிதலை அவர்களுக்கு ஏற்படுத்தி இருக்கிறது.

ஆக, இலக்கியம் அங்குதான் போக வேண்டியிருக்கிறது. இதுதான் இலக்கியத்தின் தர்மம். இதற்கு எதிர்நிலை எடுக்க முடியாது. ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும். தலித்தியம் மற்ற சாதி அமைப்புகள்போல ஒரு சாதி இயக்கம் அல்ல. இது சாதியை ஒழித்து கட்டப் போராடுகிறது. அதற்கான இந்த அறம் மற்ற சாதி அமைப்புகளுக்குக் கிடையாது.

பெண்ணிய, தலித்தியப் படைப்புகள் தமிழில் எந்த அளவுக்கு வீச்சோடு வந்திருக்கின்றன?

தலித் உலகத்தைப் பல எழுத்தாளர்கள் சிறப்பாகப் படைத்திருக்கிறார்கள். ஆனால், தலித் போராட்டங்கள் இன்னும் இலக்கியமாக வரவில்லை. பெரும்பாலும் சயசரிதைகள்தான் எழுதுகிறார்கள். பலவிதமான வன்கொடுமைகளுக்கு தலித்துகள் உள்ளா கிறார்கள். திண்ணியத்தில் மலம் தின்ன வைத்தார்கள். அதைப் பற்றி ‘படார்’ ‘படார்’ என்று கவிதைகள் வந்தனவே தவிர, ஒரு சிறுகதையாகவோ, நாவலாகவோ புனைவில் வரவில்லை. புனைவுகளைக் கட்டுவதன் மூலம்தான் தலித்தியம் சார்ந்த விசயங்களை உணர்வுரீதியாக மக்கள் மத்தியில் கொண்டு செல்லமுடியும். கட்டுரைகள் அறிவுக்குத்தான் போய்ச் சேரும். மனம் எப்பொழுதும் புனைவுகளுக்கு ஆட்பட்டது.

பல ஆண் படைப்பாளிகள் பயந்து, இடத்தைக் காலி பண்ண வேண்டிவருமோ என்று தூக்கத்தை இழக்கிற அளவிற்குப் பெண் படைப்பாளிகளின் தீவிரம் வெளிப்படுகிறது. குறைந்தது ஒரு தொகுப்பாவது வெளியிட்ட பெண் கவிஞர்கள் 50 பேருக்கு மேல் தமிழில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சங்க காலத்திற்குப் பிறகு இரண்டாயிரம் ஆண்டுகள் கழித்து இந்த அளவிற்குப் பெண்கள் எழுத வாய்ப்புப் பெற்றுள்ளது இப்பொழுதுதான்.

பெண்கள் பார்வையில், தமது வாழ்க்கை இங்கே என்னவாக இருக்கிறது என்பது அழுத்தமாக வெளிப்படுகிறது. ஒரு வகைப்பட்ட பன்முகத் தன்மை நமது அணுகுமுறையில் அரும்புகிறது. இது நல்ல அம்சம். இங்கேயும் புனைகதைகள் குறைவாகத்தான் எழுதப்படுகின்றன.

நீங்கள் எதிர்பார்க்கிற பெண்ணிய, தலித்திய புனைவுகள் பெருமளவில் வருவதற்கான வாய்ப்புகள் எந்த அளவுக்கு இருக்கின்றன?

போராட்டங்களும் அவர்களுக்கான அரசியலும் வலுப்பட வலுப்பட அவையெல்லாம் சாத்தியமாகும். அவர்கள் தங்களை நிலைநிறுத்திக் கொள்ளும் காலகட்டத்தில் இப்போது இருக்கிறார்கள். புத்தகங்கள் வெளியிடுவதில் வேகமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பிரச்சினையை எடுத்துக்கொண்டு அங்கிருக்கும் முரண்களை விஞ்ஞானபூர்வமாக ஆராய்ந்து, அதை ஒரு புனைவாகக் கட்டுவது இனி நடக்கும்.

கதாபாத்திரங்களை உருவாக்குவதுதான் மிகமுக்கியம். திராவிட இயக்கம் வெற்றி பெற்றிருப்பதற்கு முக்கியமான ஒரு காரணம், அவர்கள் பல கதாபாத்திரங்களை உருவாக்கினார்கள், ‘ராஜராஜன்’ மாதிரி. ‘கல்கி’யின் எல்லா கதாபாத்திரங்களும் திராவிட இயக்கத்துக்கு ரொம்ப பயன்பட்டன.

தமிழ் இன உணர்ச்சியை ஊட்ட அவர்கள் அந்தப் பாத்திரங்களை பயன்படுத்திக் கொண்டார்கள். தலித்துகளும் பெண்களும் தங்களுக்கான கதாபாத்திரங்களை அவசியம் உருவாக்கவேண்டும். நிச்சயம் உருவாக்குவார்கள் -  பாமாவின் ‘சண்முகக்கிழவி’ப் போல...

தமிழ் இலக்கியத்துக்குத் திராவிட, பொதுவுடைமை இயக்கங்களின் பங்களிப்பு?

20ஆம் நூற்றாண்டுத் தமிழ் மனஅமைப்பைக் கட்டமைப்பதில் இவ்விரு இயக்கங்களின் வழிப்பிறந்த இலக்கியங்களுக்குப் பெரும் பங்கு உண்டு என்பதில் எள்ளளவும் ஐயங்கொள்ள முடியாது.
அரசியல் இலக்கியம், தூய இலக்கியம் என்கிற இரண்டையும் முரணாகப் பார்க்கிற ஓர் இலக்கிய அரசியல் இங்கே தொடர்ந்து ஒரு நிகழ்கலை போல நிகழ்த்தப்பட்டு வந்திருக்கிறது. இந்த இலக்கிய அரசியல் இன்னும் தொடர்ந்துகொண்டிருப்பதுதான் அவலம்.

வாழ்க்கையின் பன்முகத் தன்மைகளின் நியாயங்களை உணர்ந்து கொள்ளுகிற சிலரும்கூட இந்த வலையில் சிக்கிக் கொள்கிறார்கள். மனித நடவடிக்கையில் அரசியல் கலவாத ஒன்றுண்டா? புனைவு கலவாத உண்மை என ஒன்றுண்டா? மனிதர்கள், அந்நியமான வர்கள் என எதைத்தான் விலக்கி வைத்துவிட முடியும்? இந்த வாழ்வை, எல்லாவற்றையும் போட்டுத்தான் நிரப்ப வேண்டிய திருக்கிறது. இந்த வேறுபாடுகளுக்கு நடுவில்தான் யாருக்கும் தொல்லை இல்லாத ஓர் அமைப்பை வடிவமைக்க, மானுடம் - சமூகம்  தொடர்ந்து போராடி வருகிறது. அந்தப் போராட்டத்தில் ஒரு வளர்ச்சிமுகம் இருப்பதாகத்தான் நான் உணர்கிறேன். இந்த வளர்ச்சிமுகம் நோக்கிய பயணத்தில் இடதுசாரி இலக்கியங்களும், திராவிட இயக்க இலக்கியங்களும் பெரும் பங்களிப்பு செய்துள்ளதாகவே எனக்குத் தோன்றுகிறது.

‘திறனாய்வும் ஒரு படைப்புத்தான்’ என்பது தொடர்ந்து வலியுறுத்தி வருகிறீர்கள். எந்த வகையில்?

எந்தப் படைப்பாளியாலும் தான் சிந்தித்த எல்லாவற்றையும் மொழியில் பிடித்துவிட முடியாது. மொழிக்கென்று ஒரு ‘கன்ட்ரோல் கெப்பாசிட்டி’ இருக்கிறது. அவரது எல்லா எண்ணவோட்டங்களும் அவரது மொழிக்குள்ளே சிக்குமா என்பது சந்தேகம்தான். ஆக, படைப்பாளியின் எண்ணவோட்டத்துக்கும் படைப்புக்குமான இடைவெளியை திறனாய்வாளன் நிரப்புகிறான். அப்படி நிரப்பும்போதுதான் படைப்பும் முழுமை அடைகிறது. ஆகவே, திறனாய்வும் ஒரு படைப்பாகிறது.

என்னுடைய ‘மறுவாசிப்பில் கி.ராஜநாராயணன்’ என்ற நூலில் இந்த இடை வெளியை நிரப்புகிற வேலையைத்தான் நான் செய்திருக்கிறேன்.

தெ.பொ-.மீயின் ‘கானல் வரி’யைப் படித்திருப்பீர்களானால், சிலப்பதிகாரம் எந்த அளவுக்கு படைப்பிலக் கியமோ, அந்த அளவுக்கு கானல்வரியும் அற்புதமான படைப்பிலக்கியமாக இருக்கும்.

தமிழில் திறனாய்வுக் கலை செழுமையடைந்திருக்கிறதா? இல்லையென்றால், அதற்கான காரணம் என்ன?

மேலை நாடுகளில் திறனாய்வுக் கலைக்கான கருவிகள் (கோட்பாடுகள்) நிறைய இருக்கின்றன. அதன் மூலமாக ஒரு படைப்பை அழகாகத் திறந்து, அதற்குள்ளே இருக்கிற உலகத்தை எல்லாம் காட்டுகிறார்கள்.

இங்கே தமிழ்ச் சூழலில் கருவிகள் கிடையாது. இருக்கிற கருவிகளைப் பயன்படுத்துவதும் கிடையாது. க.நா.சு.விலிருந்து ஜெயமோகன் வரைக்கும் வெறும் அபிப்ராயங்கள் சொல்பவர்களாகவே இருக்கிறார்கள்.


திறனாய்வுக் கோட்பாடுகள் என்பவை வாழ்க்கைத் தொடர்பானவை. நாம் வாழும் சமூகத்தின் தேவைகளிலிருந்து அக்கோட் பாடுகள் பிறக்கின்றன. அந்தக் கோட்பாடுகளை உள்வாங்காத பட்சத்தில் நீங்கள் மொன்னையான அபிப்ராயங்களை மட்டும்தான் சொல்லிக்கொண்டு போகமுடியும். அதுதான் தமிழ்ச் சூழலில் நடந்து கொண்டிருக்கிறது.

கோட்பாடுகளின் அடிப்படையில் இலக்கியத்தில் வினைபுரிவது கடினமான பணி. அபிப்பிராயங்களை உதிர்த்துக் கொண்டு போவது மிக எளிது. இவ்வாறு எளிமையாக உதிர்த்த அபிப்பிராயங்களைப் பிறகு நிலைநிறுத்தியே தீர்வது என்கிற தன்முனைப்பில் வேலை தீவிரமாக நடக்கிறது.
உண்மையில், நாம் பல நேரங்களில் என்ன சிந்திக்கிறோமோ அதைச் சொல்வதற்குப் பதிலாக, என்ன சொல்கிறோமோ அதற்கேற்ப சிந்திக்கிறோம்.

திறனாய்வு குறித்து ஆழமாகச் சிந்திக்கிற பல கல்வியாளர்கள் இருக்கிறார்கள். க.பூரணசந்திரன், தொ.பரமசிவம், தமிழவன், ப.மருதநாயகம், கே.செல்லப்பன், பாலா போன்றவர்கள் சிற்றிதழ்களில் சி.மோகன், பிரம்மராஜன், ரமேஷ்-பிரேம் போன்ற சிலரிடமிருந்து குறிப்பிடும்படியான திறனாய்வுக் கட்டுரைகள் வந்து கொண்டிருக்கின்றன.


சிற்றிதழாளர்களுக்கும், கல்வியாளர்களுக்குமான இடைவெளி கூடிக்கொண்டேதான் இருக்கிறது. சிற்றிதழாளர்கள் இலக்கியத் திறனாய்வில் பணியாற்றுகிற கல்வியாளர்களை அடையாளங்கண்டு பயன்படுத்திக் கொண்டால், தமிழ்த் திறனாய்வில் இன்னொரு கட்டத்தை நோக்கி வளர்ச்சியடைய முடியும் என்று நினைக்கிறோம்.

‘பயணம்’ என்றொரு கவிதைத் தொகுதியை சமீபத்தில் வெளியிட்டிருக்கிறீர்கள்.‘சிலப்பதிகாரம் சில பயணங்கள்’ எனும் ஓர் ஆய்வு நூலையும் எழுதியிருக்கிறீர்கள். பயணம் செய்வதில் உங்களுக்கு ஓர் ஈர்ப்பு இருப்பதாகத் தெரிகிறதே?

பயணம் என்பது ஆதிமனதின் ஆழமான இருப்பு என்றுதான் நினைக்கிறேன். எனக்குப் பயணம் செய்வது மிகவும் பிடிக்கும். சின்ன வாய்ப்பு கிடைத்தால்கூட பஸ் ஏறிவிடுவேன். பயணம் மேற்கொள்ளும்போது மனம் ஒரு தவநிலைக்குப் போவது மாதிரியான உணர்வு ஏற்படும். எல்லா பிரச்சினைகளையும் விட்டு விட்டு பஸ்ஸில் ஓரத்துச் சீட்டில் உட்கார்ந்து அந்தக் காற்று முகத்திலே வீச பயணம் செய்யும்போது வேறொரு தளத்திலே வாழ்வதுபோல உணர்ந்திருக்கிறேன்.

சிலப்பதிகாரம் பற்றி இதுவரை வந்துள்ள எல்லா சிந்தனைகளும் எனக்குத் தெரியும். மதுரைப் பல்கலைக் கழகத்தில் சந்திரகாந்தம் கோதண்டராமன் அறக்கட்டளைக்காக சு.வேங்கட்ராமன், சிலப்பதிகாரம் பற்றி சொற்பொழிவு நிகழ்த்தச் சொன்னார். யாரும் இதுவரை செய்யாத திறனாய்வு ஒன்றை செய்ய வேண்டுமென்று தோன்றியது. அப்போதுதான் சிலப்பதிகாரத்தில் நிறைய கதாபாத்திரங்கள் பயணம் செய்கிறதல்லவா என்கிற யோசனை வந்தது. இந்தத் தன்மையில் சிலப்பதிகாரத்தை இதுவரை யாராவது ஆய்வு செய்திருக்கிறார்களா என்று பார்த்தேன். அப்படி யாரும் செய்யவில்லை. அதன்பிறகு, சிலப்பதிகாரத்தில் எத்தனை கதாபாத்திரங்கள் பயணம் செய்கின்றன என்று கவனித்தேன்.
கோவலன், கண்ணகி, கவுந்தியடிகள், மாடலன் மறையோன், மாங்காட்டு மறையோன், செங்குட்டுவன் போன்றோர் பயணம் செய்கிறார்கள். அதைப் பற்றி கருத்தரங்கில் காலையில் இரண்டு மணி நேரம், மாலையில் இரண்டு மணி நேரம் பேசினேன். எல்லாரும் மிகவும் வித்தியாசமான பார்வை, அற்புதமாக வந்திருக்கிறது. இதைப் புத்தகமாக வெளியிடலாம் என்று உற்சாகப்படுத்தினார்கள். அதற்குப் பிறகுதான் அது புத்தகமாக வந்தது.
நல்ல வரவேற்பையும் பெற்றது.

நீங்கள், தமிழின் முக்கியமான திறனாய்வாளராக இருக் கிறீர்கள். சில திறனாய்வு நூல்களையும் வெளியிட்டிருக் கிறீர்கள். என்றாலும், உங்களின் முதல் நூலாக ‘ஒட்டுப் புல்’ என்கிற கவிதைத் தொகுதிதான் வந்திருக்கிறது. நீங்கள் ஒரு படைப்பிலக்கியவாதியாக கவிதைகள் எழுத நேர்ந்த சூழலையும், உங்கள் குடும்பப் பின்னணியையும் சொல்லுங்கள்...

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் வட்டம், புத்தூர் எனும் சின்னஞ்சிறு கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். இரண்டு அக்காக்கள். இரண்டு அண்ணன்கள். நான்தான் கடைசி. நான் ரொம்ப சின்னப் பிள்ளையாக இருக்கும்போதே அப்பா இறந்து விட்டார். அதனால், எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்தே அம்மாவை வெள்ளைப் புடவையில்தான் பார்த்திருக்கிறேன். அம்மா அடிக்கடி அப்பாவை நினைத்து அழுவார். அதனால் எங்கள் வீடு எப்போதும் ஒரே சோகமயமான சூழலில்தான் இருந்தது.

வீட்டுக்குக் கடைசிப் பிள்ளை என்பதாலே எனக்கு ஊர்ச் சுற்றுவதற்கான சுதந்திரம் கிடைத்தது. ஊரைச் சுற்றி நிறைய மலைகள், மரங்கள், ஆறுகள் இருந்தன. பள்ளிக்கூடம் போகிற நேரம் போக, மற்ற நேரமெல்லாம் கூட்டாளிகளோடு அங்குதான் சுற்றித் திரிந்து கொண்டிருப்பேன்.

என்னுடைய மூத்த அக்காவை ஒரு ‘பனையேறி’க்கு மணம் முடித்து கொடுத்திருந்தார்கள். அந்தக் குடும்பத்தில் கருப்பட்டி காய்ச்சுவார்கள். கருப்பட்டிக் காய்ச்சும்போது அடுப்பு கொழுந்துவிட்டு பயங்கரமாக எரியும். விளையாடிக் கொண்டிருக்கிற குழந்தைகள் அதிலே விழுந்து இறந்து போவதற்கான வாய்ப்பு அதிகம். அதனால், அக்கா குழந்தையை கவனித்துக் கொள்வதற்காக என்னை அனுப்பி வைத்தார்கள். அங்கே, குழந்தையைத் தாலாட்டி தூங்க வைப்பதற்காக நிறைய தாலாட்டுப் பாடல்களை நான் கற்றிருந்தேன். மேலும், ஏற்றப் பாடல்கள், நடவுப் பாடல்கள் எல்லாம் எனக்கு அத்துப்படியாகி இருந்தன. இப்படியான சூழல்தான் எனக்குள்ளே இலக்கியத்தின் மீது ஒரு ஈடுபாட்டை ஏற்படுத்தி இருக்குமென்று இப்போது நினைக்கிறேன்.

தமிழ் இலக்கியத்தில் முதுகலை முடித்துவிட்டு கொஞ்ச காலம் வேலை கிடைக்காமல் இருந்தேன். “என்ன மெட்ராசுக்குப் போய் படிச்சிட்டு, வேலை இல்லாம இருக்கே’’ன்னு மனசைத் துன்புறுத்துற மாதிரி கேட்டார்கள். அந்த மனநிலையில் ‘நான்’ என்றொரு கவிதையை எழுதினேன். வசனக் கவிதைதான்.
1973 இருக்கும். ஜெயகாந்தனும் சித்திரபாரதியும் நடத்திய ‘ஞானரதம்’ இதழில் வெளிவந்தது. அந்தப் பத்திரிகையில் படைப்பு வருவது மிகப்பெரிய விஷயம்.

என்னுடைய படைப்பை முதல் முதலாக ஒரு சீரியஸான பத்திரிகையில் பார்த்தபோது கிடைத்த மகிழ்ச்சி அது. இன்னமும் அழியாமல் எனக்குள் இருந்து கொண்டிருக்கிறது. அதன்பிறகு தொடர்ந்து டைரிகளில் எழுதிவைத்தேன்.

ஒட்டுப்புல் | Buy Tamil & English Books Online ...

அவற்றையெல்லாம் தொகுத்து 1978ல் ‘ஒட்டுப்புல்’ எனும் கவிதைத் தொகுதியாக ‘அன்னம்’ மீரா வெளியிட்டார். என் இலக்கியப் பயணத்தில் மீரா முக்கியமானவர்.

‘ஒட்டுப்புல்’ கவிதைத் தொகுப்பில் பெரும்பாலும் சோகமான கவிதைகள்தான் இருந்தன. காரணம், என்னுடைய திருமண வாழ்க்கை ஓராண்டுதான். ஏழு மாதக் கர்ப்பிணியான என் மனைவி திடீரென்று இரத்தவாந்தி எடுத்து இறந்துவிட்டார். அதன்பிறகு மூன்றாண்டுகள் சும்மா சுற்றிக்கொண்டு திரிந்தேன். என்னுடைய சோகத்தை கடந்து போவதற்கான ஊடகமாகத்தான் அந்தக் கவிதைகள் அமைந்தன. வாசகர்களிடம் நல்ல கவனிப்பைப் பெற்றன. பல கவிதைகள் பலரால் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. ஒரு கவிதையை காண்டேகரின் மேற்கோளைப் பயன்படுத்தி

‘ஒரு முறைகூட காதலிக்காதவன்,
பன்றிப்பால் குடித்துத்தான்
வளர்ந் திருக்க வேண்டும்.
அய்யோ, நான்
அந்தப் பாலைக் குடித்து
வளர்ந் திருக்கக் கூடாதா’

என்று எழுதியிருந்தேன். இது ஓர் அழுத்தமான பதிவு என்று பலரும் சொல்லியிருக்கிறார்கள்.

அந்தக் காலகட்ட நண்பர்கள் “ஒட்டுப்புல் பஞ்சுதானே’’ என்று இப்போதும் அந்தப் புத்தகத்தை ஞாபகப்படுத்துகிறார்கள்.

மீரா, அப்துல் ரகுமான், சிற்பி, பாலா, ஞானி, ஜே.பி., எனப் பலரையும் எனக்கு அந்தக் கவிதைப் புத்தகம்தான் அறிமுகப்படுத்தியது. பிறகு 1982ல் ‘மத்தியிலுள்ள மனிதர்கள்’ நாவலை எழுதினேன். அதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன்பிறகு 1990ல் ‘நூற்றாண்டுக் கவலைகள்’ கவிதைத் தொகுப்பைக் கொண்டு வந்தேன். இப்படி படைப்பிலக்கியவாதியாகத்தான் முதலில் அறிமுகமானேன்.

திறனாய்வாளராக எப்போது அறியப்பட்டீர்கள்?

என்னுடைய முனைவர் பட்டத்திற்கான ஒரு பகுதியாக ‘தமிழ் இலக்கிய திறனாய்வு’ என்கிற ஆய்வைச் செய்தேன். அதை 1990ல் நூலாக வெளியிட்டேன்.

தமிழ் இலக்கியத் திறனாய்வு வரலாறு ...

சுந்தர ராமசாமி ‘சுபமங்களா’ பேட்டியில், “க.பஞ்சாங்கத்தின் ‘தமிழ்
இலக்கிய திறனாய்வு வரலாறு’ சமீபத்தில் நான் மிகுந்த சந்தோஷத்துடன் படித்த புத்தகம்’’ என்று குறிப்பிட்டிருந்தார்.
அவரிடமிருந்து இப்படி ஒரு கருத்து வந்ததென்றால், அதை தேடிப் படிக்கவேண்டும் என்கிற ஆர்வத்தில் ஏராளமானவர்கள் அந்நூலை வாங்கிப் படித்தார்கள். கல்வியாளர்கள் மத்தியிலும் அந்த நூலுக்கு பெரிதும் வரவேற்பு கிடைத்தது.

உங்களுக்குள் இருக்கும் ஒரு திறனாய்வாளர் உங்கள் படைப்பை இயக்குகிறாரா? அல்லது உங்களுக்குள் இருக்கும் ஒரு படைப்பாளி உங்கள் திறனாய்வை இருக்குகிறாரா?

படைப்புக்கும் திறனாய்வுக்கும் செயல்படும் மனநிலை ஒன்றுதான். சமூக நிகழ்வுகள் குறித்து தங்களுக்குள்ளே ஒரு திறனாய்வு இல்லாவிட்டால் அது ஒரு படைப்பாகிவிட முடியாது. அதனால் திறனாய்வு செய்யும்போதோ படைப்பில் ஈடுபடும்போதோ செயல்படுகிற மனோநிலை ஒன்றுதான். சமூகம் குறித்த நம்முடைய பார்வையை பதிவு செய்வதுதான். திறனாய்வு செய்யும்போது மற்றவரின் படைப்பை முன்வைத்து நம்முடைய கருத்தை அதில் கொண்டு போகிறோம். படைப்பை செய்யும்போது நாம் சந்தித்த வாழ்க்கை அனுபவங்களை முன்வைத்து நம்முடைய திறனாய்வைக் கொண்டுபோகிறோம். ஆக, தளங்கள்தான் வேறுபடுகின்றனவே தவிர செயல்படுகிற படைப்பு மனநிலை ஒன்றுதான்.

சந்திப்பு: சூரியசந்ரன்

புதிய புத்தகம் பேசுது, 
செப்டம்பர் 2004 
(புதுவைச் சிறப்பிதழ்)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சங்க இலக்கியம் முதல் பெண் கவிஞர்கள் : பத்மாவதி விவேகானந்தன் நேர்காணல்

எனது கதைகள் வரலாற்று ஆவணங்கள்: மேலாண்மை பொன்னுச்சாமி நேர்காணல்

கவிஞர் அறிவுமதி பாடலாசிரியரான கதை