இரத்தக்கறை படிந்த வாழ்க்கை : வேல.இராமமூர்த்தி நேர்காணல்


ராமநாதபுரம் பூமியில் தலைமுறை தலைமுறையாக ரத்த வெறியோடு ஆயுதமேந்திய ஒரு சமூகக் குடும்பத்தில் பிறந்து, லட்சிய  வெறியோடு எழுதுகோலேந்தி எழுத்தாளர் ஆனவர் வேல.இராமமூர்த்தி.

இவரது பெரும்பாலான கதைகள் சாதியப் பிரச்னைகளை மையமாகக் கொண்டவை; மனிதநேயத்தை வலியுறுத்துபவை. தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, சிறுபான்மை மக்களின் பக்கமாக நின்று அவர்களுக்காக வாதாடக் கூடியவை. எழுத்து மட்டுமல்லாமல் பேசியும், நாடகம் நடத்திக்கொண்டும் இருக்கிறார்.

ராணுவத்தில் பணியாற்றிவர். இப்போது தபால் துறையில் பணிபுரிகிறார். சமீபத்தில்  அவர்  சென்னைக்கு வந்திருந்தபோது சந்தித்தோம்.

உங்கள் இலக்கிய வாழ்க்கையின் தொடக்க காலம் பற்றி...?

ராமநாதபுரம் மாவட்டத்தில், பெருநாழி கிராமம்தான் நான் பிறந்த ஊர். சின்ன கிராமம். ஒரு முரட்டு ஜாதியிலே பிறந்தேன். எங்க அய்யாதான் பிரசிடென்ட். சுத்தி பதினெட்டுப் பட்டியும் கட்டுப்படும். சொந்தமா டூரிங் டாக்கீஸ் வச்சு இருந்தோம். வருசம் ஒரு கொலை பண்ணலைன்னா எங்க வீட்டு ஆளுகளுக்கு தூக்கம் வராது. படிப்பு ரொம்ப அபூர்வமா இருந்தது. அஞ்சு முடிச்சு ஆறாம் வகுப்புக்கு நான் போகமாட்டேன்னுட்டேன். அடிச்சு பிடிச்சுக் கொண்டுபோய் பள்ளிக்கூடத்திலே விட்டாங்க.

ஊருலே ஒரு லைப்ரரி இருந்தது. அங்கே நான் என்னை அறியாமலேயே நல்ல புத்தகங்களைத் தேர்வு செஞ்சு படிச்சேன். சின்ன வயசுலேயே மாபசான், புஷ்கின், நா.பார்த்தசாரதி, ஜெயகாந் தனைப் படிச்சேன். வகுப்பிலே எல்லா பாடங்களையும் விட தமிழில் கூடுதலா மார்க் வாங்கினேன்.

jeyakanthan-2 – சொல்வனம் | இதழ் 222


முழுக்க முழுக்க ஜெயகாந்தனை ஊன்றிப் படிச்சேன். அவரோட ஒரு சிறுகதையை முழுசா என்னாலே படிச்சு முடிக்க முடியாது. புத்தகத்தை மூடி வச்சுட்டு எதையாவது எழுத நினைப்பேன்.\

அப்போ எழுதுற பழக்கம் எனக்கு இல்லே. பதினாறு வயசுலேயே ராணுவத்துக்குப் போயிட்டேன். ராணுவத்தை விட்டு வந்து ரெண்டு வருசம் வேலை கிடைக்கலே. ஊர்லே கடும் பஞ்சம். எல்லாரும் கண்மாய் மரங்களை திருட்டுத்தனமா வெட்டி வித்தாங்க. நானும் விளையாட்டுப் போக்கிலே அஞ்சாறு ஆளுகளை விட்டு வெட்டினேன்.

போலீஸ், என்னை விட்டுட்டு, கூலிக்கு வந்த ஆளுகளையும் வண்டிக்காரனையும் பிடிச்சு கேஸ் போட்டது. இந்தச் சம்பவத்தை மையமா வச்சு எழுதினதுதான் எனது முதல் சிறுகதை ‘கழுதை விற்ற பணம்’. 1974இல் செம்மலரில் வந்தது.

எனது முதல் கதை பிரசுரமானதில் ஒரு மகிழ்ச்சியான அனுபவம் உண்டு. செம்மலருக்குக் கதையை அனுப்பி பத்து நாளாச்சு. கதை என்னாச்சுன்னு நேரில் பார்த்து வர மதுரை செம்மலர் ஆபீசுக்குப் போனேன். அங்கே ஒருத்தர் உட்கார்ந்திருந்தார். செவந்த முகம். முத்து முத்தா பல் வரிசை. வழுக்கைத் தலை. மண்டையிலே ஒளி அடிக்குது. கண்ணாடி போட்டிருந்தார். அவர் என்னிடம் வந்த விசயம் கேட்டார். கதையைச் சொல்லச் சொன்னார். அவர¤ன¢ நேசிக்கத் தோன்றும் முகத்தைக் கண்டு நான் பதறிப் போய், கதையை உளறிட்டேன். உளறியது எனக்கே தெரிந்தது. “என்ன எழுதி இருக்கேன்னு சொல்லத் தெரியலே சார்’’ என்றேன்.

வி.பி.சிந்தன் - ஒரு அறிமுகம் - The Social ...

அவர் என்னை ஆழ்ந்து பார்க்கிறார். நெஞ்சுக்குள்ளே ஊடுருவும் பார்வை. “கதையை ஆசிரியர் குழுவிலே படிச்சு பரிசீலனைப் பண்ணி தகவல் கொடுப்பாங்க’’ என்றவர், “நான் வி.பி.சிந்தன்’’ என்றார். எனக்குக் கண்ணு கலங்கிப் போச்சு. அப்புறம் ஒரு வாரத்திலே கதை பிரசுரமாவதாகக் கடிதம் வந்தது.

அதன் பிறகு 12 வருசம் கதை எழுதலே. தபால் ஊழியர் தொழிற்சங்கப் பொறுப்புகளில் தீவிரமானதால எழுத முடியலே. அப்புறம் 1986லிருந்து தொடர்ந்து எழுதுறேன்.

நான் ராணுவத்தில் இருந்தபோது ஏறக்குறைய இந்தியாவில் உள்ள எல்லா பகுதிகளிலும் சுற்றி இருக்கிறேன். விருந்தாளியாக சிங்கப்பூர், மலேசியா, கொழும்பு, இந்தோனேசியா, தாய்லாந்து இப்படியான நாடுகளுக்கும் போய் வந்திருக்கேன். என் சமகால எழுத்தாளர்களுக்குக் கிடைக்காத நிறைய வாய்ப்புகள் எனக்குக் கிடைத்திருக்கு. அந்த எனது ராணுவ, வெளிநாட்டு அனுபவங் களை என்னால எழுத முடியும். ஆனா, நான் எனது பிரதேச மக்களைப் பற்றி மட்டுமே எழுதிகிட்டிருக்கேன். அந்த மக்களுக்கு கடமைப்பட்டிருக்கிறேன்.

ரத்தக்கறை படிஞ்ச வாழ்க்கை எங்களுடையது. அங்கே மிகப் பெரிய சோகம் கிடக்குது. அதை இலக்கியத்திலே முழுசா கொண்டுவர விரும்புறேன்.

தாமிரபரணிக்கு, தஞ்சைக்கு, கரிசலுக்கு, கொங்கு நாட்டுக்கு நிறைய எழுத்தாளர்கள் இருக்காங்க. எங்க மண்ணுக்கு முன்னோடிப் படைப்பாளிகள் யாரும் இல்லே. என்னுடைய மண்ணைச் சேர்ந்தவர்தான் கந்தர்வன். அவர் ஒரு பகுதியை மட்டும் தொட்டிருக்கிறார்.

என் கதைகளில் வட்டார வழக்குகள்தான் வரும். வட்டார மொழி ரொம்பக் குறைவு. பெரும்பாலும் பொதுமொழியிலேயே கதை சொல்கிறேன். மற்ற பிரதேச வாழ்க்கையை எழுத வேண்டிய அவசியம் எனக்கு நேரவில்லை என நினைக்கிறேன்.

உங்களின் பல படைப்புகளில், நீங்களே சொன்ன மாதிரி முரட்டுத்தனமான கலகம், வெட்டு, குத்து, போலீஸ் போன்ற அம்சங்களே வருகின்றன. அவர்களுக்கிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த அல்லது அவர்களை விடுவிக்க வேண்டுமென்கிற சூழலோ அதற்கான முயற்சியோ காணப்படுகிறதா?

அவர்களின் கலாச்சார ரீதியான மீட்சிக்கு யாரும் எந்த முயற்சியும் இதுவரை பண்ணலே. உறவைச் சொல்லி ஓட்டு வாங்குகிற வேலைதான் நடக்குது.

எனக்குக் கிடைத்த ஆதாரங்களை வச்சு, அந்தப் பகுதி மக்களின் பூர்வீகத்தைப் பார்க்க முயலுகிறபோது, அவர்கள் எல்லோரும் ஆந்திரா பக்கமுள்ள ஒரு காட்டுப் பகுதியில் வாழ்ந்த மக்கள். இவர்களுக்குள் சமூகக் கட்டுப்பாடு அதிகம் உண்டு.

ஓர் அந்நிய ராஜாவின் படையெடுப்புக்கு மற்ற இனத்தவர்கள் மடங்கி விடுகிறார்கள். இவர்கள் பணிய மறுத்து தப்பித்துத் தெற்கே வருகிறார்கள். இங்கே வந்தவர்களுக்குக் குடியிருக்க வீடு இல்லே. நிலபுலன் இல்லே. காடுகளில் தங்குகிறார்கள். வயிற்றுப் பாட்டுக்காக வழிப்பறி, கொள்ளை, களவு செய்கிறார்கள். பின்னர் அதுவே தொழிலாகிவிடுகிறது. பின்னாளில் வந்த பிரிட்டிஷ் அரசாங்கம் இவர்கள் மீது Criminal Tribes Act (C.T.Act) கொண்டு வருகிறது.

இந்தியாவிலேயே கொண்டையங்கோட்டை மறவர், உசிலம் பட்டிப் பக்கம் வாழும் பிரான்மலைக் கள்ளர், மலைக்குறவர் ஆகிய மூன்று இனத்தவருக்காக மட்டும்தான் இந்த சி.ஜி. கிநீt போடப் பட்டது. இதன்படி, ஆண்கள் எல்லாம் தினமும் மாலை ஆறு மணிக்குப் போலீஸ் ஸ்டேசனுக்குப் போய் கைரேகை வைத்து விட்டு போலீஸ் ஸ்டேசனிலேயே தூங்கவேண்டும். காலையில்தான் வீட்டுக்கு விடுவார்கள். பெண்கள் மட்டுமே இருக்கும் இரவு நேரங்களில் ஊருக்குள் போலீஸ் புகுந்து சீரழிக்கும்.

தப்பு செய்தவன், செய்யாதவன் எல்லாரையும் போலீஸ் தண்டித்தது. லேசான தண்டனை இல்லே. கம்பியைக் காயவைத்து உடம்பு முழுவதும் சூடுபோடும். இந்த மக்களுக்கு அரசாங்கம் என்றாலே காக்கி உடுப்பும், கருப்புக் கோட்டும்தான் தெரியும். வேறு அரசுத் துறையோ, அதிகாரிகளோ தெரியாது. சாலை வசதியோ, பஸ் வசதியோ, பள்ளிக்கூடமோ கிடையாது.

சுதந்திரம் வாங்கிய பின்னால் C.T. Act--ஐ காங்கிரஸ்காரர்கள் நீக்கி இருக்கிறார்கள்-. மன்னர் ஆட்சியிலும் சரி, அப்புறம் பிரிட்டிஷ் காரன் காலத்திலிருந்து அடுத்து வந்த சுதந்திர இந்தியாவின் கட்சி அரசு முறைகளிலும் சரி, எல்லா வகையிலுமே இந்தப் பகுதி புறக்கணிக்கப்பட்டு வருகிறது. தாங்கள் ஏமாற்றப் படுகிறோம் என்பதை அறியாமலேயே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

சாராயம் காய்ச்சுகிறார்கள். போலீஸ் ‘ரைடு’ பண்ணி  சாராயப் பானையை 50, 60 பெண்கள் தலையில் ஏற்றி ஊர்வலமாக விட்டு லத்தியாலே அடித்துக்கொண்டே போலீஸ்காரன் போகிறான். கொஞ்சம்கூட அலுங்காமல் நடந்து போகிறார்கள்.

கால் பவுன் தங்கத்தினாலே பிரச்னை. ஒரே நேரத்தில் ஒன்பது கொலை நடக்குது. எங்களின் சுவாசக் காற்றெல்லாம் ரத்த வாடை அடிக்குது.

அந்தப் பகுதி மக்களிடம் இன்னும் பண்பாட்டு ரீதியான வளர்ச்சி ஏற்படவில்லையா?

ஒருத்தன் ரெண்டு பேரு படிச்சுட்டான்னா வெள்ளை வேட்டி சட்டையோடு சம்பாத்திய வழியைத் தேடிக்கிட்டு செட்டில் ஆயிடு றான். கல்வி, பொருளாதார மேம்பாடு இல்லாமல் பண்பாட்டு வளர்ச்சி என்பது சமீபத்தில் இல்லை.

நீங்கள் எப்படி முற்றிலும் மாற்றமடைந்து ஒரு சமூகநலம் கருதும் இலக்கியவாதியாக மாறினீர்கள்?

தலைமுறை தலைமுறையா எங்க வீட்டு ஆயுதங்களிலே ரத்தக் கறை படிஞ்சிருக்கு, அதைக் கழுவணும். எங்க வம்சத்து வாழ்க்கைப் போக்கு எனக்குப் பிடிக்கலே. அடிக்கடி கலகம் பண்ணிட்டுப் பிடிபடும் உறவினர்களுக்காக எங்க அய்யாவை நடுராத்திரியிலே போலீஸ் எழுப்பும்.

எனக்கு 13 வயசாகும்போது ஒரு கலகம் நடக்குது. பொம்பளைகள்கூட கத்தி கம்போடு போகிறார்கள். தெருவிலே கோலிக்குண்டு விளையாடிக் கொண்டிருந்த நானும் கம்போடு ஓடுகிறேன். கலகம் பொருந்தி நடக்குது. நான் சின்னப்பையன் என்பதாலே எனக்கு மறைக்குது. குனிஞ்சு கால் இடுக்குகளுக்கு ஊடாகப் பார்க்கிறேன். ‘சதக்’ ‘சதக்’ன்னு வெட்டு விழுகுது. வெட்டுப்பட்ட ஆளுக கீழே விழுகுறான்ங்க. ரத்தம் ஓடுது. எங்க மதினி, தொரட்டிக் கம்பை கால்களுக்குள்ளே கொடுத்து குதிகாலை வெட்டுறாள்.

இப்படி சின்ன வயசுலேயே கலகங்களையும் கொலைகளையும் பார்த்தவன். இது எனக்குள்ளே வெறுப்பையும் ஒதுங்கும் போக் கையும் விதைச்சு இருக்கும்னு நெனைக்கிறேன். ஒதுங்கினது ஒரு வகையிலே தப்பா போச்சு. பழைய அந்நியோன்யம் இல்லே. எனக்கு அவங்க கொடுக்கிற மரியாதை பிடிக்கலே.

நான் இப்போ ஊருக்குப் போனா முளைக்கொட்டுத் திண்ணை, விறகு அடுப்பில் புகையிற ஆட்டுப்பால் டீக்கடை, கால் ஒடிஞ்ச பெஞ்ச் பலகையிலேதான் உக்காருவேன். வலிய வலிய பேச்சுக் குடுப்பேன். இருளப்பசாமி கோயில் வேப்பமரம், நிறைகுளத்தம்மன் கோயில் ஆலமரம், எங்க அய்யாவோட புதை குழி மேடு, கோட்டைக் கிணறு இதை எல்லாம் பார்க்கிறபோது என் உயிரு துள்ளுது.

மனிதகுல வரலாறுபடி நாம் எல்லோருமே ஆதிமனிதர்கள் தான். மற்ற இனத்தவரெல்லாம் கல்வி, தொழில், வியாபாரம் என மாறிப் போய்விட்டார்கள். இன்னும் அந்த ‘வேட்டைச் சமூக’த்தின் மிச்ச சொச்சங்களோடு, சண்டையிடுவதையே குலத் தொழிலாய்க் கொண்டவர்கள்தான் என் கதை மாந்தர்கள். கதைக்கான சுவாரஸ் யமும் சமூக அவலமும் அங்குதான் உள்ளன.

என்னுடைய கதைகளில் பெரும்பாலானவை தாழ்த்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களைப் பற்றியதே. அதனாலேயே என் நெஞ்சுக்கு நேராக வேல்க்கம்புகள் நீண்ட சம்பவங்கள் உண்டு.

என் எழுத்தை வேறொரு இடத்துக்குக் கொண்டு போக வேண்டி உள்ளது. வேருக்குள்ளே போய்க்கொண்டே இருக்கிறேன். ஏய்ப்புக் காட்டிக்கொண்டு போகும் அந்த ‘இடம்’ பிடிபட்டு விட்டால் உலகத் தரத்தில் வைக்கப்படும்.

என் தாத்தா வாழ்ந்த வாழ்க்கை எனக்குத் தெரியலே. எனது வாழ்க்கை என் சந்ததிக்குத் தெரியாமல் போகக்கூடாது. ஆயிர மாயிரம் காலத்து வாழ்க்கை முகம் அழிஞ்சு போச்சு. அதெல்லாம் என் மூலமா வெளியேறணும். எழுத எழுதத் தீராது. அவ்வளவு கெடக்கு.

ஒரு சிறுகதையை எழுதி முடிக்குமுன்னே நாலஞ்சு தடவை அழுதுருவேன். என் உயிர் கரையும் நேரமும் அதுதான். நெஞ்சும் சுவாசப் பாதையும் சுத்தமாகிப் போகுது.

உங்கள் பகுதியில் நடந்த உண்மைச் சம்பவங்கள்தான் பெரும்பாலும் உங்களின் சிறுகதைகளாகின்றன. உங்கள் கதைகளைப் படித்த அவர்களின் உணர்வுகள் எப்படி இருந்தன?

வேல ராமமூர்த்தி கதைகள் - Vela Ramamurthy ...

என் கதை வந்ததும் புத்தகத்தை வாங்கி ஊருக்குள் சுற்றுக்கு விடுவார்கள். யார் யார் எந்தப் பாத்திரம் என்று அடையாளம் கண்டுபிடிக்க முயலுவார்கள். முடியாததைக் கண்டுபிடிக்கத் தீவிரமாக யோசிப்பார்கள்.

கதை, பெரும்பாலும் அவர்களுக்கு எதிராய் இருக்கும். இதையே வேறு சாதிக்காரன் எழுதியிருந்தால் ரெண்டாவது கதையைக்கூட எழுத விட்டிருக்க மாட்டாங்க, என்னையே வெட்டு வதற்கு ஒரு முறை முடிவு பண்ணினாங்க.

‘ரைட் போகலாம்’ என்கிற கதை, செம்மலரில் வந்தது. அப்போ நான் சென்னையில் இருந்தேன். எங்க ஊரிலிருந்து மூணு கிலோ மீட்டர் தூரத்தில் ‘காடமங்குளம்’ என்கிற ஒரு கிராமம் இருக்கு. நான் பெண் எடுத்த ஊர். அங்கே உள்ள எல்லாருமே எனது உறவினர்கள். அந்த ஊரைப் பற்றியது அந்தக் கதை.

செம்மலர் எப்படியோ காடமங்குளம் போய்ச் சேர்ந்திருக்கு. ஊரைக் கூட்டி விளக்கு வெளிச்சத்தில எல்லாரையும் உட்கார வச்சு ஒரு படிச்ச பையன் கையிலே செம்மலரைக் குடுத்து படிக்கச் சொல்லிக் கேட்டிருக்கிறாங்க. பிறகு, நான் மெட்ராஸில் இருந்து ஊருக்கு வந்ததுமே என்னை வெட்டிவிடுவது, ஊர்ப் பொதுவில் வசூல் பண்ணி செலவழிச்சு கேஸை பார்த்துக் கொள்ளுவது என்று முடிவாகி இருக்கு.

இது சம்பந்தமா சென்னையிலிருக்கும் எனக்கு கடிதாசி வந்தது. நான் தாமதிக்காம லீவு போட்டுட்டு சூட்டோடு சூடா ஊருக்குப் போனேன். எல்லாரும் எப்பவும்போல குசலம் விசாரிச்சாங்க. நான் யாரைக் கருவாய் வைத்து எழுதினேனோ அவரு எனக்கு மச்சான் முறை. அவரை மட்டும் சந்திக்க முடியலே.

ஒரு நாள் மதியம். உச்சி வெயில். டீக்கடைக்குள்ளே உட்கார்ந் திருந்தேன். அவர் நுழைகிறார். நான் கடை இருட்டுக்குள்ளே இருந்ததனாலே வெளிச்சத்திலேயிருந்து வந்தவருக்கு என்னைத் தெரியலே. என் பக்கத்திலேயே உட்காந்து “ஒரு டீ போடுப்பா’’ என்றவர், கண்ணைக் கசக்கி விட்டபடி என்னைப் பார்த்தார். உடனே, “மாப்ளே, எப்போ வந்தீக? சவுக்கியந்தானா?’’ என்றார். கதையைப் பத்தி வாயே தெறக்கலே. அப்புறம் என்ன, டீ காசை நான் குடுத்தேன்.

இப்படி நிறைய சம்பவங்கள் இருக்குது. ஆரம்பத்திலேதான் இப்பிடி. இப்போ என்னை ஓரளவு புரிஞ்சுக்கிட்டாங்க. நம்மாளு கதை எழுதறார்’ என்கிற மாதிரி போகிறது.

ஊரே கூடி எடுத்த ஒரு முடிவை நீங்கள் தனி ஆளாய் மாற்றி விட்டதாகக் கூறுகிறீர்கள். இது எப்படி சாத்திய மாயிற்று?

நான் தனி மனுசன் இல்லே. என் மூளைக்குள்ளே ஒரு தத்துவார்த்த அறிவு இயங்குது. என் கோபம் எல்லாம் எந்த மக்களுக்கும் எதிரானது அல்ல. என் எல்லா கதைகளுக்கு அடி யிலேயும் ஒரு சோகம் தங்கிக் கிடக்கும். அந்தச் சோகம் எல்லாருக்கும் பொதுவானது. புரிந்துகொள்ளக் கூடியது. எனவே என் மீது பிரியமே காட்டுகிறார்கள்.

வேட்டைச் சமூகத்தின் மிச்ச சொச்சங்கள் அவர்களிடம் தங்கி இருப்பதாக எப்படி சொல்கிறீர்கள்?

பல்வேறு ஆட்டங்களை நாம் பார்க்கிறோம். எல்லா ஆட்டங் களுக்கும் அழகும், ஒழுங்குபடுத்தப்பட்ட தன்மையும் இருக்கு.
எங்க ஊரிலே ‘வீரபாகு’ ஆட்டம் என்று ஆடுகிறார்கள்.  அது 2,000 வருசத்துக்கு முந்தின மனிதன் ஆடுகிற ஆட்டமாய் இருக்கிறது. அந்த ஆட்டம் ஆடும்போது மனுசனுக்கும் மிருகத்துக்கும் இடையேயான உயிரினமாக இருக்கிறான்.

பொது மேடையிலே, அத்தனை சனத்துக்கு மத்தியிலே,
“காலயிலே கள்ளுக் குடிப்பேன்
 சாயங்காலம் கஞ்சா அடிப்பேன்
 எனக்கு ரெண்டு பொண்டாட்டி
 ஒருத்தி குட்டச்சி, ஒருத்தி நெட்டச்சி’’

இப்படி, தனக்குன்னு ஒரு பிரமை இல்லாமல் பச்சையாக தன்னை  உடைச்சுப் போட்டுக்கொண்டு வரிகள் வருகின்றன. சிலம்பம் ஆடிக்கொண்டே பாட்டு. அதிலே இலக்கிய ஒழுங்கு கிடையாது. மற்ற ஆட்டங்களெல்லாம் சமகாலத்தை நெருங்கி இருக்கிறபோது இந்த ‘வீரபாகு ஆட்டம்’ எங்கேயோ நிற்குது. அந்த ஆட்டத்திலே தாயின் மடிப்பால் மணக்குது. இந்த ஆட்டத்தை நான் வேறு எங்கேயும், எந்த மேடையிலேயும், எந்த சினிமாவிலேயும் பார்த்ததில்லே. அப்படி ஒரு ஆட்டம். காட்டுமிராண்டித்தனமாக அந்த ஆட்டத்தை மத்தவனுக்கு கத்துக் கொடுக்க அவனால் முடியாது. நாமும் பார்த்து ரசிக்கலாமே தவிர கத்துக்கொள்ள முடியுமா என்பது சந்தேகமே. இந்த மாதிரியான ஆட்டத்தையும், பாடல்களையும் கேட்கிறபோது அதன் வேர்தான் என்னை இழுத்துக்கொண்டே போகுது. அதைத் தொடணும்.

செம்மலரில் நீங்கள் எழுதிய ‘கொம்பு முளைத்த எருமை’ என்கிற சிறுகதை வந்த தடம் தெரியாமல் போனதேன்?

‘கொம்பு முளைத்த எருமை’ கதையில் நான் சொல்ல வந்தது சகல செல்வாக்கும் படைத்த ஒருவரின் நிழலில் வாழ்கிற அத்தனை பேருக்கும் - அவர் வீட்டு எருமை மாட்டுக்குக்கூட ஆதிக்க குணம் வந்துவிடுகிறது என்பதுதான்.

அந்த எருமை, பாண்டி ஆசாரி வீட்டில் நின்றபோது எலும்பும் தோலுமாய், முட்டித் தட்டி, கண் நிறைய பீழை தள்ளி நின்றது. 300 ரூபாய் கடனுக்காக எங்க வீட்டுக்கு வந்து சேர்ந்தது. இங்கே வந்த பிறகு பருத்தி விதை, புண்ணாக்கு, கம்பங்கஞ்சி, நாத்துக்கூளம் தின்னு கொழுத்துப் போகுது. உருவத்திலே எங்க அய்யா ஜாடை வந்திருச்சு. எங்க அய்யா மாதிரியே கம்பீரமாய் நடக்கும். ஒரு முறை அடுத்தவங்க புஞ்சையிலே மேய்ந்தது என்பதற்காக பவுண்டுத் தொழுவத்திலே அடைச்சுட்டாங்க. ஆட்டுக்கு நாலணா, மாட்டுக்கு எட்டணா அபராதம் கட்டுனாதான் வெளியே விடுவாங்க.

மாட்டைத் தேடி நான் போனேன். உள்ளே கிடந்த மற்ற ஆடு மாடுகள் ‘எனக்கென்ன’ என்கிற மாதிரி படுத்து அசை போட்டுகிட்டு இருக்குங்க. எங்க எருமை மட்டும் படுக்காம நிக்குது. என்னைப் பார்த்ததும் லேசாக ரெண்டு சத்தம் கொடுத்துவிட்டு, ஒரே முட்டு முட்டி, பவுண்டுத் தொழுவுக் கதவை கொம்பிலே தூக்கிட்டு வீட்டுக்கு வந்துருச்சு. எங்க எருமையால உள்ளே கிடந்த எல்லா ஆடு மாடுகளுக்கும் விடுதலை.

இது உண்மையிலேயே நடந்த சம்பவம். இதைத்தான் ‘கொம்பு  முளைத்த எருமை’ கதையா எழுதினேன். அதிலே கொம்பு முளைத்த எங்க எருமையை நான் சொல்ல வரலே. கொம்பு முளைத்த எங்க அய்யாவோட நிலப்பிரபுத்துவ குணத்துக்கு எதிரான சமாச்சாரம் உள்ளே கெடக்கு.

பொதுவாக என் கதைகளுக்கான உயிரை சூட்சுமமாய் சில இடங்களில் வைத்திருப்பேன். ஏதோ காரணத்தால் அந்தக் கதையில் அந்த இடம் அடிபட்டுப் போச்சு.

உங்களின் ‘கறி’ கதையை, “என்ன முற்போக்கு எழுத் தாளரான வேல.இராமமூர்த்தி மூடநம்பிக்கை கதை எழுதி இருக்கிறார்’’ என்கிற மாதிரி புரிந்து கொண் டார்கள். அப்படிப் புரிந்து கொள்ள வாய்ப்பு உள்ளதே?

ஒரு மாதப் பத்திரிகையில் வந்த நூல் விமர்சனத்தை வைத்துக் கேட்கிறீர்கள் என நினைக்கிறேன். ஒரு சராசரி வாசகன் படித்துப் புரிந்துகொண்ட கதை அது. அந்த விமர்சகருக்குப் புரியாமல் போயிருக்கிறது. கோயிலில் தப்பு செய்துவிட்டால் கை, கால் போகும், வாந்தி மயக்கம் வரும் என்கிற மூடநம்பிக்கைக்கு எதிரான கதை அது. பஸ் டிக்கெட்டுக்குக் காசு இல்லாமல் இருக்கைக்கு அடியிலே ஒளிந்து படுத்து வரும் சிறுவன் வாந்தி எடுக்கிறான். வாந்தி எடுப்ப தற்கான காரணம் அவனுக்கும், அவனுடைய தாயாருக்கும் மட்டுமே தெரியும். அந்தத் தாய் மகனுக்கு இடையே உள்ள மௌன மொழிதான் கதையே. சரியாக வெளிப்பட்டிருப்பதாகவே நினைக்கிறேன்.

பரிசோதனை முயற்சி என்று சொல்லிக்கொண்டு ஒரு சிறு குழுவினர் செயல்படுகிறார்கள். நவீன இலக்கியம் என்ற பெயரிலே அவர்கள் செய்து வருகிறார்கள். இது பற்றிக் கருத்து கூற முடியுமா?

நவீனத்துவமும் பரிசோதனை முயற்சிகளும் அவசியமே. ஆனால், இங்கு இவையெல்லாம் ஒரு வித்தையாக நடக்கிறது. புரியாமல் சிலர் எழுதுவதும், ‘இது எனக்குப் புரியவில்லை’ என சிலர் ஒத்துக் கொள்வதுமான வெட்டி வேலை நடக்குது. எழுத்து, இலக்கியம் என்பது யாருக்கு? எதற்கு? என்பது மாதிரியான எந்த அக்கறையும் இல்லாமல் எழுதித் திரிவது ஒரு வகையான இலக்கிய விளையாட்டாகவே படுகிறது. மக்களுக்குப் புரியாமல் எழுதி, சக படைப்பாளிகளின் அங்கீகாரத்துக்காக அலையும் சிலரால் இலக்கித்துக்கும் வாழ்க்கைக்கும் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. காலடியிலே பிரச்னைக் கெடக்குது. அதைப் பார்க் காமல் விட்டுட்டு, தலையைச் சிங்காரிக்கும் மினுக்கு வேலைகள் ஒரு வகை கிறுக்குத்தனம்தான். என்றாலும், இவைகளுக்குள் ஏதோ சில சமாச்சாரங்கள் கிடக்குது. ஊடே நாம் புகுந்து அதைப் பிடிக்கணும்.

முற்போக்கு இலக்கியங்களிலும் தற்போது பரிசோதனை முயற்சி காணப்படுகிறது. அது சம்பந்தமான உங்கள் கருத்து என்ன?

ச.தமிழ்ச்செல்வன்: தொலைத்த வாழ்வினை ...

பரிசோதனை முயற்சி அதிகம் தேவை. அதிலும் முற்போக்கு எழுத்தாளர்கள் நிறைய செய்யணும். ச.தமிழ்ச்செல்வன் ‘வாளின் தனிமை’யில் செய்திருக்கிறார். இது ஒரு பெரிய முயற்சி. இந்த முயற்சியை ஒரு கூட்டமே திட்டம் போட்டு தகர்க்கிறார்கள். சமீபத்தில் வந்த வண்ணநிலவன், விட்டல்ராவ் விமர்சனங்கள் எல்லாம் திட்டம் போட்டுச் செய்த விமர்சனங்கள்தான். ஒரு படைப்பை யார் வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம். ஆனால், ஒரு படைப்பாளியை விமர்சனம் செய்வது ஒரு வகையான வக்கிரத்தனம். தமிழ்ச்செல்வனைத் தவிர வேறு ஒருவனாய் இருந்தால் அத்தோடு எழுதுவதையே விட்டு விடுவான். எனக்குத் தெரிந்த ஒரு கவிஞருடைய கவிதை நூலுக்கு இது மாதிரியான விமர்சனம் வந்ததோடு அவர் கவிதை எழுதுவதையே விட்டுவிட்டார். இது தமிழ்ச்செல்வனிடம் நடக்காது. ‘1995 மார்ச் மாதத்துக்குள் அடுத்தத் தொகுப்பு கொண்டு வருகிறேன் பார்’ என்று சவால் விட்டிருக்கிறார். இந்தப் பரிசோதனை முயற்சிகளை நாம் நிறைய செய்யணும். ரொம்ப சுலபமான விசயந்தான். நானும் செய்யப் போகிறேன்.

இன்றைய வாழ்வின் உளவியல் சிக்கல்களைச் சொல்ல, இன்றைக்கு நாம் பயன்படுத்தும் மொழி இனி பயன்படாது என்கிற மாதிரி ஒரு குரல் மெல்ல எழுந்து வருகிறதே...?

பத்திரிகை, சினிமா, அச்சகம் எல்லாமே சென்னையில் இருக்கிறது. கிராமத்தில் இருந்து வந்தவனுக்கு இங்கு ஓர் இருக்கை கிடைத்த உடனே எல்லா தத்துவமும் பேச ஆரம்பித்து விடுகிறான். இந்த டீசல் காற்றைக் குடிச்சுட்டு ஒட்டுமொத்தத் தமிழகத்தின் தலைவிதியை தீர்மானமா பேசுறான். ஃபிலிம் சேம்பர்லே ரெண்டு வெளிநாட்டுப் படம் பார்க்கிறான். மொழிபெயர்ப்புப் புத்தகம் ரெண்டைப் படிக்கிறான். உடனே “உனக்கு அது தெரியுமா? இது தெரியுமா?’’ன்னு மிரட்டுறான். வெளிநாட்டு முகமூடி போட்டுக் கொண்டு திரியிறான். உன்னோட தமிழ் முகம் எங்கே? இது ஒருவகையான பித்தலாட்டம். மொழியின் பயன்பாட்டைத் தெரிஞ்சுக்க சனங்ககிட்டே போ. சனங்களோட கையைப் பிடிச்சுக் கிட்டே கலை இலக்கியம் வளரணும்.

சிறுகதைகளில் தீர்வு சொல்வது, தீர்வு சொல்லாமல் விடுவது என்று இருவகைப் போக்கு உண்டு. உங்கள் கதை களில் தீர்வு சொல்லப்படுவது இல்லை. முற்போக்கு இலக் கியங்களில தீர்வு சொல்லப்பட வேண்டும் என்கிற எதிர் பார்ப்பு உள்ளதே.

சிறுகதைகளில் தீர்வு சொல்லப்பட வேண்டும் என நினைக்க வில்லை. இலக்கியம் முற்றிலும் வேறு விசயம். அது மூளைக் குள்ளேயும் இதயத்துக்குள்ளேயும் தானாக இயங்க வேண்டும். இலக்கியம் அறிவுத்தளத்தைக் காட்டிலும் உணர்வுத்தளத்தைப் பெரிதும் சார்ந்திருப்பதால் பட்டறைகளிலும் வகுப்புகளிலும் மனித மனங்களை இலக்கியத்துக்காகப் பழக்கப்படுத்த முடியாது என நம்புகிறேன்.

இன்றைய கவிதைகள் பற்றி...?

ஆயுத வலிமையோடும் சமூகப் பிரக்ஞையோடும் கவிதை வர வேண்டும். கவிதையில் தன்னை இழக்கவேண்டும். உயிரைக் கரைக்க வேண்டும். 70களில் கவிதையை வலிமை மிக்க ஆயுத மாய்ப் பயன்படுத்தினார்கள். இப்போது எல்லா பேனாக்காரர் களையும்விட கவிதை எழுதுபவர்களே பெரிய வித்தைக்காரர் களாகிப் போனார்கள். முதல் இரண்டு வரிகளுக்கு மூன்றாவது வரியில் விடை சொல்லும் விடுகதைகளே இன்றைய ‘ஹைக்கூ’.

நல்ல கவிதைகளை எழுதியவர்களும் எழுத முடிந்தவர்களும் இருக்கிறார்கள். அவர்களிடமிருந்து கவிதைதான் வரமாட்டேன் என்கிறது. இவர்கள் ‘தன் ஒதுக்கம்’, ‘தன்மிரட்சி’ கொண்டிருப்பதாகப் படுகிறது.

கவிதை எழுதும்போது தன்னை இழக்கவும், உயிரைக் கரைக்கவும் வேண்டி உள்ளது என்கிறீர்கள். நீங்கள் முதலில் கவிதை எழுதினீர்கள். அப்புறம் சிறுகதை, குறுநாவல் என்று வந்துள்ளீர்கள். உயிரைக் கரைக்கவும் தன்னை இழக்கவும் மாட்டாமல் கவிதையை விட்டுவிட்டு, சிறுகதை, குறுநாவல், நாவல் என்று பண்ணிக்கொண்டே போகலாம் என மாறினீர்களா? அல்லது கவிதை, சிறு கதை, குறுநாவல், நாவல் என்று போவதை ஒரு படைப் பாளியின் வளர்ச்சி என்று எடுத்துக் கொள்ளலாமா?

அப்படியெல்லாம் எதுவுமில்லை. நிறைய விசயங்கள் சொல்வதற்கு இருக்கும்போது, கவிதை போதுமான வடிவமாய் இல்லை.
ஒரு படைப்பாளி முளைக்கிறபோதே, முதல் படைப்பை எழுதும்போதே அதன் கூறுகள் அதில் தெரிந்துவிடும். ஒரு பதினைந்து கதை எழுதிவிட்டான். அதனாலே வளர்ந்து கொண்டே வருகிறான் என்பதெல்லாம் நிஜமல்ல. இன்றைய இலக்கிய நடப்பு என்ன? அரசியல், சமூக நடப்பு என்ன? என்கிற உணர்வோடு வருவதுதான் படைப்பு. இன்றைய இருப்பைப் பிடிக்காமல், பின்னால் போய் நின்றுகொண்டு, நாளைக்கு நான் வந்து விடுவேன் என்றோ, ஒரே தாவலில் முன்னே போய் விழுந்து நாளை நீங்கள் என்னிடம் வந்துவிடுவீர்கள் என்று கை அசைப்பதோ தேராத விசயம். வளர்ச்சி என்பது இன்றைய இடத்தை இன்று பிடித்துவிட்டேன். நாளைய இடத்தை நாளைக்குப் பிடிப்பேன் என்பதில்தான் உள்ளது.

உங்கள் இலக்கு என்ன?

ராணுவமும் போலீசும் தேவையில்லாத ஒரு சமூக அமைப்பு உருவாகணும். அப்போது என் மக்களெல்லாம் கோரிக்கை களற்றுப் போவார்கள். என் கதைகளுக்கான தேவையும் அற்றுப் போகும். அப்படிப்பட்ட ஒரு சமூக அமைப்பை உருவாக்க பலமுனைப் போராட்டம் நடந்து வருகிறது. அதற்கான கலை இலக்கியப் பங்களிப்புகளைச் செய்துகொண்டே இருக்கவேண்டும்.

சந்திப்பு : சூரியசந்திரன்
(1994)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சங்க இலக்கியம் முதல் பெண் கவிஞர்கள் : பத்மாவதி விவேகானந்தன் நேர்காணல்

எனது கதைகள் வரலாற்று ஆவணங்கள்: மேலாண்மை பொன்னுச்சாமி நேர்காணல்

கவிஞர் அறிவுமதி பாடலாசிரியரான கதை