அடுத்த ஆண்டும் வசந்தம் ஆர்ப்பாட்டமாய் வரும் - அ.வெண்ணிலா
நாமிருக்க மாட்டோம்...’’ எனும் பாடல் வரிகள் எவ்வளவு வலியையும் ஆற்றாமையையும் தரக்கூடியதோ, அத்தகையதொரு வலியும் ஆற்றமையும் நிரம்பியது அ.வெண்ணிலா முதல் கவிதை.
“அடுத்த ஆண்டும்
கொல்லையில்
தேன்சிட்டு முட்டையிடும்...
முட்டையை நேசப்பார்வையில்
அடைக்காக்க நானிருக்க மாட்டேன்.
அருவருத்தாலும்
நினைவில்
அசையாமல் நின்றுபோன
அட்டையைக் கண்டலற
நானிருக்க மாட்டேன்.
வாழ்வின் மகிழ்ச்சியனைத்தையும்
மழைநாள் இரவில்
பேசித் தீர்க்க நானிருக்க மாட்டேன்...
அடுத்த ஆண்டும்
வசந்தம் ஆர்ப்பாட்டமாய் வரும்
நான் மட்டும் மணமாகிப் போயிருப்பேன்...’’
திருமண வயதிலிருக்கும் எல்லா பெண்களுக்கும் தன் பிறந்த வீட்டைப் பிரிந்துபோகிற துயரம் இருக்கத்தான் செய்கிறது. அந்தத் துயரத்தை ஒரு கவிதையாக எழுதியிருக்கிறார் வெண்ணிலா. இக்கவிதை ‘தீக்கதிர்’ இதழில் வெளிவந்தது.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி - அம்மையம்பட்டில் 1971ல் பிறந்தவர் அ.வெண்ணிலா.
அப்பா ஒரு பகுத்தறிவுச் சிந்தனையாளர். பெரியாரின் ‘திராவிடர் கழக’த் திலிருந்து அண்ணாவின் ‘திராவிட முன்னேற்றக் கழக’த்திற்கு மாறியவர். அம்மாவோ தெய்வபக்தி மிக்கவர். இவர்களின் ஒரே செல்லக்குழந்தை வெண்ணிலா.
அப்பாவுக்கு வரும் பத்திரிகைகளையும் இதழ்களையும் படித்து, சிறுகச் சிறுக எழுதத் தொடங்கியுள்ளார்.
வந்தவாசியிலிருந்து ‘பூங்குயில்’ இதழ் வந்து கொண்டிருந்தது. அவ்விதழின் ஆசிரியர் டி.எல்.சிவக்குமார். இணையாசிரியர் அ.வெண்ணிலா.
அதில் ‘நதி ஒன்று, கரை இரண்டு’ என்றொரு பகுதி. சுவாரஸ்யமாக இருக்கும் ஏதாவது ஒரு தலைப்பை மையமாகக் கொண்டு (நாற்காலி, தூக்கம், இரவு) இரண்டு பார்வையில் வெண்ணிலாவும் சிவக்குமாரும் எழுதுவார்கள். எல்லாம் கற்பனைக் கவிதைகள்தான். இந்தப் பகுதிக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இது ஒரு நல்ல பயிற்சிக்களமாக அமைந்தது என்கிறார் வெண்ணிலா.
சிறுவயதிலேயே மகளுக்கு பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகளை அறிமுகப்படுத்தி அப்பா விவாதிப்பார். அம்மாவோ, “வாசற்படியில் உட்காராதே அது லட்சுமி’’ என்று பழமைவாதம் பேசி, மகளை பழக்குவார். இப்படி இருவேறு கருத்து முரண்களுடன்தான் வளர்ந்தார் வெண்ணிலா. என்றாலும், அப்பாவின் கருத்துகளே அவரைப் பெரிதும் கவர்ந்தது.
பின்னாளில் எழுதுகிறார்,
“எதைக் காட்டிலும்
வாசற்படி மேல் உட்கார்வது
பிடித்திருக்கிறது.
முதுகு அழுந்த
இதமாய் சாய்ந்து
வானம் பார்ப்பது
விச்ராந்தியாயிருக்கிறது.
சின்ன வயதில்...
“லட்சுமி அது
சாமி மேல உட்காரலாமா?’’
என்பாள் அம்மா.
இப்பொழுதெல்லாம்
“படிச்ச பொண்ணு... நல்லாவாயிருக்கு’’ன்னு
அங்கலாய்க்கிறாள்.
படித்ததா?
பெண்ணாயிருப்பதா?
தவறு எதுவோ?’’
என கேள்வி எழுப்பி, அம்மாவின் பழமைத்தனமான
“வார்த்தைகளை அடியில் போட்டு
உட்கார்வது மட்டும்
அதிக சுகமாயிருக்கிறது’’ என்கிறார்.
“ஆரம்பத்திலிருந்தே எனக்குள்ளே ஒரு கலகக்குரல் இருந்து கொண்டிருப்பதாக உணர்கிறேன். சொன்ன பேச்சை அப்படியே கேட்டு நடக்கிற குணம் எப்பவும் எனக்கு இருந்ததே கிடையாது குறிப்பாக அம்மா பழமைத்தனமாக சொல்லும் எதையும் நான் கேட்கவே மாட்டேன். அதிலும், பெண்களுக்கென்று வரையறுக் கப்பட்ட எந்த ஒரு விசயத்தையும் நான் செய்ததே கிடையாது.’’ என்கிறார்.
“பூ வைத்துக் கொள்வதா
பிடிக்காமல் போகிறது
என்கிறார்கள்...
சுவரில் சாயாமல்
எதிலும் தலை அழுந்தாமல்
தூங்கப் போனாலும் மல்லாந்து படுக்காமல்
எப்போதும் கவனம் அதிலேயே.
பார்த்துக் கொண்டிருக்கலாம்
செடியில் மலர்வதை
வாடி வேருக்கடியில் உதிர்வதை.’’
குட்டைச் சைக்கிளில் வரும் நெட்டைப் பெண்ணாக, பூங்குயில் இதழாளராக, பள்ளி ஆசிரியையாக, இப்படியாக... வந்தவாசி பகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமானார் வெண்ணிலா.
திருமண வயதில், எல்லா பெண்களும் எதிர்கொள்ளும் கேள்வியையும், அதனடிப்படையில் தனக்குள் இயல்பாக எழும் எண்ணங்களையும் ஒரு கவிதையாக்கியுள்ளார்.
“எட்டாம் வகுப்பு படிக்கையிலேயே
சுமதிக்குக் கல்யாணம் நடந்திருச்சு.
படித்துக்கொண்டே கோயிலில் குறி சொன்ன
பச்சையம்மா அக்காவுக்கு
பத்தாம் வகுப்பிலேயே கல்யாணம்.
இறுதி வகுப்பு முடிந்து
மேல்வகுப்புக்குப் போனதே
நாங்க நாலைஞ்சி பேர்தான்
அப்பவே சுமதியோட பையன்
எல்.கே.ஜி.யிலே சேர்ந்துட்டான்.
வேலைக்குப் போயும்
இன்னும் ஏன் இப்படியே...
பார்வையாலேயே கழுத்தைத்
துளாவுகிறார்கள் தோழிகள்.
எனக்கும் ஆகிப் போகலாம்
இன்னும் சீக்கிரத்தில்.
கணக்குத் தீர்த்துக்
கடந்து போகும் வாழ்க்கை
அடுத்த சந்திப்பில்...
அவரவர் முகங்களை
அவரவர் குழந்தைகளில்
தேடிக் கொண்டிருப்போம்.’’
திருமணத்திற்குப் பிறகும், வெண்ணிலாவின் கழுத்தைப் பார்வையாலே துளாவுபவர்களுக்குத் தாலி தென்பட்டிருக்காது. காரணம், வெண்ணிலா செய்துகொண்டது சீர்திருத்தக் காதல் திருமணம்.
கவிஞர் மு.முருகேஷ் நாடறிந்த நல்ல கவிஞர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முன்னணி ஊழியர்; புதுக்கோட்டைக்காரர். வெண்ணிலாவின் நண்பர்.
‘பூங்குயில்’ இதழில் ‘ஹைகூ அந்தாதி' தொடரை எழுதிக் கொண்டிருந்தார்.
வெண்ணிலா நடத்தும் ‘பூங்குயில்’ விழாக்களுக்காக முருகேஷ் வந்தவாசிக்கு வருவதும், மு.முருகேஷ் முன்னின்று நடத்தும் ‘தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க' கூட்டங்களுக்காக அழைக்கப்பட்டு புதுக்கேட்டைக்கு வெண்ணிலா போவதும் என அடிக்கடி அவர்களின் பயணங்கள் நிகழ்ந்தன.
அப்போது வெண்ணிலாவுக்குத் தனித்து இயங்குவதைவிட ஓர் இயக்கத்துடன் இணைந்து இயங்கினால் நிறைய சாதிக்கலாம் என்ற எண்ணம் தோன்ற மு,முருகேஷின் தூண்டுதலினாலும் த.மு.எ.சவில் இணைகிறார். இருவரின் நட்பு தொடர்ந்தது.
“எங்களது நட்டை அறிந்துகொண்ட தமுஎச தோழர்கள், எங்களிடம் ‘நீங்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டால், உங்களுக்கும் நல்லது; இயக்கத்துக்கும் நல்லது என்று கருத்து சொல்லி, திருமணத்தை நோக்கி எங்களை நகர்த்தினார்கள். இருவரும் மனந் திறந்து பேசினோம். ஆறு வருட நட்பு, ஆறு மாதத்தில் கணவன் - மனைவி ஆனோம்’’.
1998ல் வந்தவாசியில், ஒரு திருமண மண்டபத்தில் திருமணம். பந்தல் கிடையாது, தாலி கிடையாது. உறுதிமொழி ஏற்று மிக எளிமையாக நடந்தது.

வெண்ணிலாவின் 20 கவிதைகளையும் முருகேஷின் சில கவிதைகளையும் தொகுத்து, ‘என் மனதை உன் தூரிகைத் தொட்டு' எனும் ஒரு நூலாக்கி, திருமணத்துக்கு முதல்நாள் நிகழ்ச்சியாக கவிஞர் கந்தர்வன் அந்நூலை வெளியிட்டார்.
திருமணத்துக்குப் பிறகு இரண்டாண்டுகள் வெண்ணிலாவின் எந்தக் கவிதையையும் எந்த இதழிலிலும் பார்க்கமுடியவில்லை.
2000ல் சில கவிதைகள் ‘ஆனந்த விகடன்’ இதழில் வெளிவந்தன. அந்தக் கவிதைகளில் அதிக கவனிப்பைப் பெற்றது ‘தாயின் வாசம்’ எனும் கவிதை.
“மணமிக்க
பூச்சூடிக் கொள்கிறேன்
கூடுதலாய்
முகப்பவுடரும்.
புடவைகளுக்குக்கூட
வாசனை திரவியம்
பூசி வைத்துள்ளேன்.
அத்தனையும் மீறி
ஆடைக்குள்ளிருந்து
தாயின் வாசம்
சொட்டுச் சொட்டாய்
கோப்புகளில் இறங்குகிறது.
அவசரமாய்
அலுவலகக் கழிப்பறையில் நுழைந்து
பீச்சிவிடப்படும் பாலில் தெறிக்கிறது
பசியைத் தின்று அலறும்
குழந்தையின் அழுகுரல்.’’
திருமணத்துக்கு முன்பு மு.முருகேசுக்கு வெண்ணிலா எழுதிய காதல் கடிதங்கள் தொகுக்கப்பட்டு ‘கனவிருந்த கூடு’ எனும் நூலாக வெளிவந்து. தமிழின் முதல் ‘பெண் காதல் கடித நூல்’ என்ற சிறப்பை பெற்றது.
2000ல் வெண்ணிலாவின் முதல் கவிதைத் தொகுதி ‘நீரிலலையும் முகம்’ வெளிவந்தது. அந்நூலுக்கு அந்த ஆண்டுக்கான சிற்பி அறக்கட்டளை, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், கவிதை உறவு, தேவமகள், லயன்ஸ் கிளப், ரோட்டரி கிளப் ஆகிய அமைப்புகளின் விருதுகள் கிடைத்தன. இந்நூலில் இடம்பெற்றுள்ள ஒரு முக்கியமான கவிதை ‘ஈரப்பிசுபிசுப்பு’.
“ஈரப் பிசுபிசுப்போடு
உட்காந்து இருப்பீர்களா?
ரத்தப் பெருக்கோடும்
உறங்கவேண்டியிருக்கு...
கட்டுகள் ஒழிந்து என்றாவது
விட முடிந்திருக்கிறதா
இந்த உடம்பை.
தளர்ந்து போனால்
தாங்க மடி வேண்டும்தானே.
அடிவயிற்றில் பிரபஞ்ச பூதத்தின்
மூலாதார அவஸ்தையோடு
பிறப்பின் வாசம்
உடலெங்கும் பரவி நிற்க
ரத்தம் தோய்ந்த ஆடைகளோடும்
நடுங்கும் கால்களோடும்
சாய்ந்து கொள்ளத் துளாவுகிறேன்
“தொடாதே... தள்ளி நில்’’
என்கிறாள் அம்மாவும்.
எறும்புக்கும் நாய்க்கும்
எப்படியோ இந்த அவஸ்தை.’’
இக்கவிதை ஓர் இதழில் வெளிவந்தபோதே படித்துவிட்டு பலர், “இதையெல்லாம் எழுதுறதுக்குக் கூச்சமா இல்லையா?’’ என்று கேட்டார்களாம்.
“எனக்கு அடிப்படையிலேயே, எதையும் வெளியில் சொல்றதிலே கூச்சம் கிடையாது. தமிழில் என்னை மிகவும் பாதித்த ஒரு கவிஞர்னா, அவர் கல்யாண்ஜி. படைப்புக்கும் படைப்பாளிக்கும் துளிகூட இடைவெளி இல்லாதவர். ரொம்ப ரசனையானவர். எனக்கும் அந்த ரசனை உண்டு. ரசனையோடு என்னுடைய அனுபவம், கணவன், குழந்தை, வீடு இவை எல்லாம் சேர்ந்து, பெண் என்கிற பார்வையோடு சொல்லும்போது, முற்றிலும் வேறொரு தளத்துக்கு கவிதை போய் விடுகிறது’’ என்கிறார்.
பெண்களுக்கு ஏற்படுகிற மாதவிடாய் பிரச்னைகள், உடலுறவு எண்ணங்கள், பேறுகால அவஸ்தைகள் ஆகியவற்றை 80களின் தொடக்கத்தில் தமிழில் அழுத்தமாக பேச ஆரம்பித்து, அவற்றைத் தொடரமுடியாமல் நிறுத்திக் கொண்டவர் சுகந்தி சுப்பிரமணியம்.
15 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த விசயங்களைத் தைரியமாகத் தொட்டவர் வெண்ணிலா.
“முத்தத்தில் தொடங்கி
முத்தத்தில் முடியும்
தாம்பத்ய உறவு
எத்தனை பேருக்கு வாய்க்கிறது?
யாரும் சொல்லாமலேயே கற்றுக்கொள்கிறார்கள்
அலுத்துத் தூங்குவதற்கான
உடற்பயிற்சியாக.’’
2003ல் ‘ஆதியில் சொற்கள் இருந்தன’ எனும் வெண்ணிலாவின் இரண்டாவது கவிதை நூல் வெளிவந்தது. இந்நூலில், குழந்தைகள், நகரங்கள் என அடுத்த தளங்களுக்கு வெண்ணிலாவின் கவிதைகள் பயணித்திருந்தன. முக்கியமாக, குழந்தைகளின் மனஉலகம் பற்றிய அற்புத சித்திரிப்புகள் இக்கவிதைகளில் காணக் கிடைக்கின்றன.
“அறைக்குள்
மெல்லியதாக நுழையும்
வெளிச்சம்
உட்கார இடம் தேடி
அலமாரி கட்டில்
அறையின் மூலைகளென
சுற்றிவிட்டு
தொட்டிலில் உறங்கும்
குழந்தையின்
நெற்றியில் முத்தமிட்டு
உடன் படுத்து உறங்கிக் போகிறது’’.
வெண்ணிலா கவிதை மட்டுமல்ல, சிறுகதை, குறுநாவல் என பல வடிவங்களிலும் இயங்குபவர். இவரது சிறுகதைகளும் தமிழ்ச்சூழலில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத் தியவைதான்.
‘பட்டுப்பூச்சிகளைத் தொலைத்த ஒரு பொழுதில்’ என்றொரு கதை மாதவிலக்குக் கால அவஸ்தை பற்றியது. அந்தக் கதையை சென்னையில் நடந்த ‘சாகித்ய அகாதமி’ நிகழ்ச்சி ஒன்றில் வெண்ணிலா வாசித்தார். அப்போது பார்வையாளர்களிடமிருந்து பெரும் எதிர்ப்பு கிளம்பியது. எழுத்தாளர் பா. செயப்பிரகாசம் நீண்ட விளக்கம் சொல்லி, அவர்களை அமைதிப்படுத்த வேண்டியதாகிவிட்டது. அந்தக் கதை ‘கணையாழியில் பிரசுரமாகி, அம்மாதத்திற்கான சிறந்த கதையாக ‘இலக்கியச் சிந்தனை’யினால் தேர்வுசெய்யப்பட்டது. இப்போது பாரதிதாசன் பல்கலைக் கழக பாடத்திட்டத்திலும் இடம்பெற்றுள்ளது.
வெண்ணிலா எழுதிய ஒரு குறுநாவல் ‘யாரிடம் சொல்வேனடி தோழி’ கல்கியில் வெளிவந்தது. இக்குறுநாவலுடன் ஒன்பது சிறுகதைகளையும் தொகுத்து ‘பட்டுப்பூச்சிகளை தொலைத்த ஒரு பொழுதில்’ எனும் நூலாக வெளிவந்துள்ளது.

வெண்ணிலாவின் படைப்புகள் இந்தி, மலையாளம் ஆங்கிலம் ஆகியவற்றிற்கு மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. இவரது படைப்புகளை ஐந்து மாணவிகள் எம்ஃபில் ஆய்வு செய்துள்ளனர்.
சூரியசந்திரன்
பெண்ணே நீ, செப்டம்பர் 2004
விரிவான, தெளிவான நேர்காணல். பழைய நினைவுகளைக் கிளர்த்தின... தோழரே. மகிழ்ச்சியும் நன்றியும்.
பதிலளிநீக்கு- மு.முருகேஷ்